Search This Blog

Saturday, October 10, 2015

தோனி - ‘புகழ்’ உதிர்காலம்


தோனி தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இரு ஆட்டங்களில் தோற்று டி-20 தொடரை இழந்தது. அடுத்த ஆறு மாதங்களில் தோனி தன்னைப் புதுப்பித்துக் கொள்ளாத நிலையில் மேலும் பல ஒருநாள் ஆட்டங்களையும் இந்தியா இழக்கும். இரண்டு தலைவர்களைக் கொண்டுள்ளது இந்திய அணித் தலைமையின் அதிகாரச் சமநிலையைக் குலைக்கிறது. 

தோனி ஆதரிக்கும் ஜடேஜா, மோஹித், ராயுடு, புவனேஷ்வர் போன்றோருக்கு கோலியின் அணியில் இடமிருக்காது. கோலி கொண்டாடும் உமேஷ் யாதவ், அமித் மிஷ்ரா, ரஹானே போன்றோரை தோனி ஏற்பதில்லை. அணி வீரர்களுக்குள் குழப்பமும் பிரிவினையும் தோன்றுகிறது.

தோனிக்குத் தோல்வியைத் தவிர்ப்பது முதல் நோக்கம் என்றால் கோலி வெற்றி பெறுவதை பிரதானமாய் நினைக்கிறார். தோனி ஒரே அணியுடன் தொடர்ந்து ஆட்டங்களை இழப்பதைப் பொருட்படுத்தமாட்டார். வீரர்கள் தன்னம்பிக்கை குலையாமல் இருப்பதே அணி வெற்றியைவிட அவருக்கு முக்கியம். கோலி எவ்வளவு வீரர்களை மாற்றினாலும் பரவாயில்லை, வெற்றி பெறுவதே முக்கியம் என நினைப்பவர். இரு வேறுபட்ட தேர்வுகள், இரு மாறுபட்ட அணுகுமுறைகள் வீரர்களைக் குழப்புகின்றன.

தோனியின் மட்டையாட்டம் சரிந்து வருவதால் அவர் ஆறாவது எண்ணில் ஆல்ரவுண்டரை பயன்படுத்த தயங்குகிறார். தனது சரிவுக்கு ஈடுகட்ட ஒரு முழுநேர மட்டையாளனை 6ல் இறக்க விரும்புகிறார். தனது மட்டையாட்டம் சார்ந்த பாதுகாப்பின்மை உணர்வால் அவர் இப்போதெல்லாம் தடுத்தாடுவதையே அதிகம் விரும்புகிறார். குறைவான ஸ்டிரைக் ரேட்டில் இருபது முப்பது ஓட்டங்களில் அவர் ஆட்டமிழப்பதால் 6 ஆம் எண்ணில் வரும் மட்டையாளர் மட்டும் பிற ஆல்ரவுண்டர்கள் மீது நெருக்கடி அதிகமாகிறது.

முன்பு தோனி எந்த நிலையிலும் நிதானமாய் இருப்பார். தோல்விகள் அவரை அச்சுறுத்தாது. ஆனால் இப்போது வாரியத்தில் அவருக்கு ஸ்ரீனிவாசனை போல் காட்பாதர் ஆதரவு இல்லை. அணியும் முழுக்க அவர் கட்டுப்பாட்டில் இல்லை. ஒவ்வொரு முறை கோலி தலைமையில் அணி வெல்லும்போதும் தோனி மீதான அழுத்தம் இரட்டிப்பாகிறது. ஒப்பீடுகள் உருவாகின்றன. அடுத்து வரும் ஒருநாள் தொடர் மற்றும் ஆஸ்திரேலியப் பயணத்தில் உள்ள தொடர்களுடன் தோனியின் கவுன்டவுன் தொடங்குகிறது. ஒவ்வொரு தோல்வியும் அவரை அதிகத் தனிமையிலும் குழப்பத்திலும் நெருக்கடியிலும் ஆழ்த்தும்.

இப்போதைக்கு இப்பிரச்னைக்கு இரண்டு தீர்வுகள் உள்ளன. முதல் தீர்வு, டெஸ்ட் அணிக்கு சம்பந்தமில்லாத முழுக்க புதிதான 11 பேரை கொண்ட அணியை உருவாக்கி தோனி தலைமை தாங்குவது. அதை ஒரு சவாலாய் தோனி எடுத்துக்கொள்ள வேண்டும். புது அணி என்பதால் ஒப்பீடும் இருக்காது. வீரர்களும் சுறுசுறுப்பாய் ஆடுவார்கள். ஆனால் இதற்கு வீரர்கள் ஒப்ப மாட்டார்கள். வணிகரீதி யாகவும் புது அணி அதிக விளம்பரங்களைப் பெற்றுத் தராது.

இரண்டாவது தீர்வு நடைமுறை சாத்தியமுள்ளது. தோனி பதவி விலகுவது. ஆனால் அவர் அதை அடுத்த டி-20 உலகக்கோப்பை வரை செய்யமாட்டார். நம் தேர்வாளர்களும் நட்சத்திர வீரர்களைப் பதவி நீக்க மாட்டார்கள்.

இந்த டி-20 தொடர் மட்டுமல்ல, கடந்த சில வருடங்களாகவே இந்தியாவின் டி-20 ஆட்டம் சொதப்பலாக உள்ளது. பிற நாட்டு அணிகள் டி-20க்கு புது இளம் வீரர்களை அறிமுகப்படுத்தும்போது இந்தியா அநேகமாய் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிக்கான அதே அணியைத்தான் இதற்கும் களமிறக்குகிறது. டி-20 ஆட்டத்துக்குப் புதுமையான மனநிலையும் துணிச்சலும் தயக்கமின்றி அடித்தாடும் அணுகுமுறையும் வேண்டும். அவ்விதத்தில் அனுபவம் என்பது டி-20யில் ஒரு பாரமாக மாறுகிறது.

அனுபவமிக்கவர்கள் அதிகமாய் யோசித்து திட்டமிட்டு ஆடுகையில் சரளம் இல்லாமல் ஆகும். இதே அணியில் மாயங்க் அகர்வால், சாம்ஸன், கேதார் ஜாதவ், சூர்யகுமார் யாதவ், மனீஷ் பாண்டே, உமேஷ் யாதவ், மிஷ்ரா, நமன் ஓஜா, குல்தீப் யாதவ் போன்ற வீரர்கள் ஆடினால் இன்னும் செயலூக்கமும் ஆவேசமும் தோன்றும்.

இந்திய அணி தேர்வாளர்களின் பிற்போக்கான, பழமையான அணுகுமுறைதான் நமது டி-20 சொதப்பல்களுக்குப் பிரதான காரணம். பிற அணிகளைப் போல் நாமும் டி-20க்கு ஒரு தனி அணித் தலைவரை நியமிப்பது நிச்சயம் பலன் தரும். ரோஹித் ஷர்மா டி-20 தலைவர் பதவிக்கு ஏற்றவர்.

ஆர்.அபிலாஷ்

No comments:

Post a Comment