Search This Blog

Saturday, March 28, 2015

ஞானியும் ஜீவனும்


மாயை என்பது ஞானிக்குப் பூஜியம் (Zero) தான். ஆனால் ஞானம் வராத நிலையில் உள்ள ஜீவன் தன்னை ஒரு தனி எண்ணாக வைத்துக்கொண்டு பக்கத்தில் இந்த பூஜ்ஜியத்தைச் சேர்த்துக் கொள்கிறான். ஓர் இலக்கத்துக்குப் பக்கத்தில் வருகிற பூஜ்யம் அதைப் பத்து, இருபது, நூறு, ஆயிரம் என்று ஆக்குவது போல் இந்த அஞ்ஞானிக்கு மாயையே பலவாக விரிந்து சத்திய வஸ்துக்களாக — உலகமாகத் தோன்றுகிறது.

ஞானியே உள்ளது உள்ளபடி பார்க்கிறான். ஒரே சர்க்கரையினால் பல பொம்மைகள் செய்திருக்கிறது போல் ஒரே பிரம்மம் இத்தனையையும் ஆகியிருக்கிறது. 

சர்க்கரையினால் பாகற்காய் பொம்மை செய்து வைத்திருந்தால், விஷயம் தெரியாத குழந்தை, அது கசக்கும் என்று ஓடிப்போயிருக்கும். கசப்பு வஸ்துவாகத் தோன்றுகின்ற அதுவும் உண்மையில் மதுரமான சர்க்கரைதான்.
‘உலகம் எல்லாம் ஆனந்த மயமான பிரம்மம்’ ஒன்றே என்று ஞானி அறிவான். ‘நமக்குக் கசப்பு அவனுக்கு இனிப்பு. நமக்குக் கருப்பு அவனுக்கு வெளுப்பு; நமக்குப் பகல் அவனுக்கு இருட்டு’ என்று கிருஷ்ண பகவான் சொல்கிறார். 

பிரம்மம் என்கிற வெளிச்சமே நமக்கு இருட்டாக இருக்கிறது. இருட்டான மாயைதான் நமக்கு வெளிச்சமாகத் தெரிகிறது. இதெப்படி முடியும் என்று கேட்கலாம். மாயையும் பிரம்மையைச் சார்ந்து அதனிடமிருந்து சிறிது பிரதிபலிப்பான ஒளி பெறுகிறது. இந்தக் குறைந்த ஒளிதான் நம் குறைந்த அறிவுக்கு எட்டுகிறது. சுமாரான வெளிச்சத்தில்தான் புஸ்தகத்தின் கறுப்பு எழுத்துக்கள் தெரியும். 

ஜொலிக்கிற சூரிய வெளிச்சத்தில் நேரே புஸ்தகத்தைப் பிரித்தால் எழுத்தே தெரியாது. நமக்கு மாயையின் அற்பப் பிரகாசத்தில் உலக காரியங்கள் தெரிகின்றன. ஞானியின் ஆத்ம பிரகாசத்தில் அவை மறைந்து போகின்றன. ஞானியின் பகல் நமக்கு இரவு என்பதன் அர்த்தம் இதுவே.

1 comment:

  1. ஞானிகள் விளக்க கஷ்டபடும் இருள் என்ன என்பதன் எளிய விளக்கம்.
    " பிரம்மம் என்கிற வெளிச்சமே நமக்கு இருட்டாக இருக்கிறது. இருட்டான மாயைதான் நமக்கு வெளிச்சமாகத் தெரிகிறது. இதெப்படி முடியும் என்று கேட்கலாம். மாயையும் பிரம்மையைச் சார்ந்து அதனிடமிருந்து சிறிது பிரதிபலிப்பான ஒளி பெறுகிறது. இந்தக் குறைந்த ஒளிதான் நம் குறைந்த அறிவுக்கு எட்டுகிறது. "
    ஆசியருக்கு வாழ்த்துகள்.
    உங்கள் விவரம் குறிப்பிடாதது ஏன் ?

    ReplyDelete