Search This Blog

Monday, March 16, 2015

தோனியின் தலைமை


இந்திய அணி ரஜினி போல. ரஜினி படத்தில் அவர் இடைவேளைக்கு சற்று முன்பாக ஆரம்பித்து உறவினர், நண்பர்கள், குட்டி வில்லன்கள், மெயின் வில்லன் என ஒவ்வொருவரிடமாக அடி வாங்கிக்கொண்டே வருவார். ஆனால், கிளைமேக்ஸில் மிக முக்கியமான கட்டத்தில் திரும்ப அடித்து சாகசங்கள் செய்து வென்றுவிடுவார்.

இந்தியா உலகக்கோப்பைக்கு சற்றுமுன்புவரை கிட்டத் தட்ட ஐ.சி.யு.வில் அட்மிட் ஆகிற நிலையில் இருந்தது. இரண்டு மாதங்களுக்கு மேலாக ஆஸ்திரேலியாவில் ஒரு ஆட்டம் கூட வெற்றி பெறாமல் ஆடி வந்தது. அதற்கு முன்பு இங்கிலாந்தில் துவண்டு டெஸ்ட் தொடரை இழந்தது.

உலகக்கோப்பைக்கு முன்பு இவ்வளவு நீளமான தொடர் தேவைதானா என நிபுணர்கள் வியந்தனர். தொடர் தோல்விகள் தாங்க முடியாதது போல் தோனி டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கும் அடுத்த தலைவரான கோலிக்கும் உள்மோதல் என பேசிக் கொண்டார்கள். அணியின் இயக்குநராக புதுப் பொறுப்பேற்ற ரவி சாஸ்திரி கோலியின் அணியைச் சேர்ந்தவர் என்றும், பிளட்சரின் அதிகாரத்தை குறைத்து, பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு பயிற்சியாளர்களை நீக்கினது தோனிக்கு அதிருப்தி அளித்தது என்றார்கள்.

இதுபோக தோனியின் காட்பாதரான ஸ்ரீனிவாசன் ஊழல் வழக்குகளில் மாட்டிக்கொண்டு அதிகாரபூர்வமாய் தன் நாற்காலியை இழந்தேவிட்டார். ஐ.பி.எல்.லில் தோனியின் அணியான சென்னை சூப்பர் கிங்ஸின் சூதாட்ட குற்றத்துக்கும் தோனிக்கும் எப்படி சம்பந்தமே இல்லாமல் இருக்க முடியும் என கேட்டார்கள்.

தோனியின் தலைமீது சனிபகவான் ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தார். இதேபோன்ற ஒரு சூழல் சேம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு சற்றுமுன் நிலவியபோது தோனி எந்தக் குற்றச்சாட்டுக்கும் பதில் அளிக்காமல் அணியைத் திறமையாக அணிவகுத்து சிறப்பாக வழிநடத்தி தொடரை வென்றார். இப்போது சூடு உச்சத்தில் இருக்கும் போது அவர் மிக கூலாக உலகக்கோப்பை இறுதிப் போட்டியை நோக்கி இந்தியாவை அணிவகுத்து நடத்திக் கொண்டிருக்கிறார். உலகக்கோப்பையை வெல்ல சாத்தியம் கொண்ட அணியாக இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு வெகு பக்கத்தில் வந்திருக்கிறது.

எப்போதெல்லாம் பிரச்னைகள் அதிகமாகிறதோ அப்போதெல்லாம் தன் ஆட்டத்திறனை, தலைமைத்திறனை பலமடங்கு உயர்த்தி செயல்பட தோனிக்கு வருகிறது. கங்குலி இது போன்ற நிலைமையில் தொடர்ந்து தோல்விகளைத் தழுவி, அணியை கிரெக் சாப்பல் வசம் இழந்துவிட்டு அணியில் இருந்து வெளியே தள்ளப்பட்டார். திராவிட்டும் சச்சினும் பதவியை ராஜினாமா செய்தனர். ஆனால் தோனி நெருக்கடி மிகும்போதுதான் மிகச்சிறப்பாக ஆடுகிறார். அவருக்கு நன்கு தெரியும். கிரிக்கெட்டுக்கு புறம்பான குற்றச்சாட்டுகளுக்கு சிறந்த பதிலை கிரிக்கெட்டுக்குள் இருந்தபடிதான் அளிக்க முடியும் என.

தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற அணிகள் பொதுவாக ஒரு பெருந்தொடருக்கு மிக கறாராக அறிவியல்பூர்வமாக தயாராவார்கள். எப்படியும் உலகக்கோப்பைக்கு முன்பாக இரண்டு குட்டித்தொடர்களையாவது அபாரமாக வென்றுவிடுவார்கள். அனைத்து வீரர்களும் சிறந்த ஆட்டநிலையில் இருக்கும்படி பார்த்துக்கொள்வார்கள். அனைத்துத் திறன்களையும் சோதித்து, பயன்படுத்தி உச்சகட்டம் வரும்போது மிக லாகவமாய் முழு திறமையுடன் செயல்படலாம் என்பது அவ்வணிகளின் நம்பிக்கை. இறுதிபரீட்சைக்கு மாணவர்கள் தயாராவது போன்ற பாணி இது.

பத்தாம் வகுப்புக்கு இவ்வாறு தயாராகிற மாணவர்கள் இறுதித் தேர்வின்போது களைத்து பதற்றமாகி சொதப்பிவிடுவார்கள். ஆனால், மெதுவாக உழைத்து தயாராகி இறுதி சில மாதங்கள் முழு உழைப்பையும் செலுத்தி படிக்கிற மாணவர்கள் யாரும் எதிர்பாராமல் முதல் இடத்தை பிடித்துவிடுவர்கள். இப்போது உலகக் கோப்பையிலும் இதுதான் நடந்து வருகிறது.

அனைவருக்கும் செல்ல அணியான தென்னாப்பிரிக்கா வெறும் சப்பாணி அணிகளாக அதுவரை தோற்றமளித்த இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் பரிதாபமாக லீக் போட்டிகளில் தோற்றது. ஆஸ்திரேலியா நியுசிலாந்திடம் தோற்றது. இரண்டு மாதங்களாக அனைத்து போட்டிகளிலும் தோற்றுவந்த இந்தியா இதுவரை அனைத்து லீக் போட்டிகளிலும் வென்று முதல் இடத்தில் இருக்கிறது.

இந்தியா முக்கியமான ஆட்டங்களில் முழு திறனையும் வெளிப்படுத்தினால் போதும் என நம்புகிறது. தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற அணிகள் தொடர்ச்சியாக நன்றாக ஆடினால்தான் முக்கியமான போட்டிகளில் வெல்ல முடியும் என நம்புகிறது. இவை இருவேறுபட்ட அணுகுமுறைகள். இப்போதைக்கு இந்திய அணுகுமுறைதான் வென்றிருக்கிறது.

இது இரண்டு கலாசாரங்கள் காலத்தை பார்க்கிற முறையில் உள்ள வேறுபாட்டையும் காட்டுகிறது. ஐரோப்பியர்கள் காலத்தை நேர்கோட்டாய் பார்க்கிறார்கள். கடந்த காலம் வளர்ந்து நிகழ்காலம் ஆகிறது. கடந்த காலம் நிகழ் காலத்தை தீர்மானிக்கிறது. இந்தியர்கள் காலத்தை சுழற்சியாய் பார்க்கிறோம். இதில் கடந்த காலம் நிகழ்காலம் எனும் வேறுபாடில்லை. ஒரே காலம்தான். நாம் தற்போது இருக்கிற, இயங்குகிற காலம்தான் முக்கியம். இந்த இந்திய மனப்பான்மையை தோனி நன்கு புரிந்து வைத்திருக்கிறார். அதனால் அவர் வீரர்களைத் தேவையின்றி நெருக்கடிக்கு உள்ளாக்காமல் அவர்கள் போக்குக்கு இயங்க அனுமதிக்கிறார். அணிக்கு வளைந்து கொடுக்கிறார். இதனால் அணியும் அவருக்கு ஏற்றபடி வளைகிறது.

காலிறுதி, அரையிறுதி, இறுதி என மூன்றே போட்டிகள் தான். அவற்றை வென்றால் உலகமே நம் காலுக்குக் கீழ். கூட்டத்தோடு கூட்டமாய் ஓடி விரைகிற ரயிலில் தொத்தி ஏறி, ஒரு மதிப்பெண் வித்தியாசத்தில் தேர்வில் யாரையோ முந்தி, அங்கே இங்கே பிடித்து வேலை வாங்கி, குழந்தை பெற்று, அதற்கு பள்ளிக்கூட சீட் வாங்கி, அதை பத்தாம் வகுப்புக்கு தயாராக்கி இவ்வளவு விஷயங்களை ஓடி முண்டியடித்து அடைந்து பழகுவதுதானே இந்திய வாழ்க்கை. ஓட்டத்தின் முடிவில் அந்தக் கடைசி நொடி, அப்போது எம்பி முன்பாய்வது தான் முக்கியம் என நன்கு உணர்ந் தவர்கள் அல்லவா நாம். காலம் என்பது அந்த நொடியில்தான் உயிர் வாழ்கிறது. இந்த இந்திய மனப்பான்மையை மிக நன்றாகப் புரிந்து கொண்டவர் என்பதால்தான் தோனி ஒவ்வொரு முறையும் ஜெயிக்கிறார்.

ஆர்.அபிலாஷ்


No comments:

Post a Comment