Search This Blog

Sunday, December 07, 2014

சோனி வாக்மேன்!

உலகம் முழுக்க இன்றைக்கு இசைப் பிரியர்களது எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. இன்று செல்போனிலும் மெமரி கார்டிலும் பதுங்கிக் கிடக்கும் இசையை, ஒரு காலத்தில் மனிதன் தேடிச் சென்றுதான் கேட்க வேண்டி இருந்தது.

முதலில், பிறர் பாடுவதைக் கேட்டு மகிழ்ந்த மனிதன், பிற்பாடு இசைத்தட்டின் மூலம் கேட்டு சந்தோஷமடைந்தான்.பிற்பாடு வந்த டேப் ரிக்கார்டர் சாதாரண மனிதனும் இசையைக் கேட்டு மகிழக் காரணமாக இருந்தது.

என்றாலும், இந்தத் தொழில்நுட்பங்கள் எல்லாம், எல்லோருடைய காதுகளை யும் ஒரேநேரத்தில் சென்று சேருகிற மாதிரியே இருந்தது. இசையில் ஆயிரம் வகை உண்டு. ஒருவருக்குப் பிடித்த இசை மற்றவருக்குப் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. தனக்குப் பிடித்த இசையை மற்றவர்களுக்குத் தொல்லைதராமல், தான் மட்டுமே கேட்க முடிகிற மாதிரி ஒரு தொழில்நுட்பம் இருந்தால்..? அதுவும், நடக்கிறபோது, பஸ்ஸில் பயணிக்கிறபோது, விமானத்தில் பறக்கிறபோது மனதுக்குப் பிடித்த இசையைக் கேட்க முடிகிறமாதிரி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?


இப்படி எல்லாம் சோனி நிறுவனம் யோசித்ததன் விளைவாகப் பிறந்ததுதான் ‘வாக்மேன்’ என்னும் அற்புதம். 1978-ம் ஆண்டு சோனியின் ஆடியோ பிரிவு இன்ஜினீயர் நொபுடோஷி, சோனியின் நிறுவனர்களில் ஒருவரான மசரு இபுகாவுக்கு விமானப் பயணங்களின்போது பாடல் களைக் கேட்க ஓர் அமைப்பை வடிவமைத்தார். அதுதான் 1979-ம் ஆண்டு சோனி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கண்டுபிடிப்பான வாக்மேனாக வெளியாகியது. இதில் ஒலிநாடா அமைப்புள்ள கேசட் மூலம் சிறிய கருவியில் ஹெட்போன் வசதியுடன் பாடல்களை நடந்து கொண்டே கேட்கலாம் என்ற அளவுக்கு இந்தக் கண்டுபிடிப்பு பிரபலமா கியது.

உலகம் முழுக்க வாக்மேன் அறிமுகமான சிறிது காலத்திலேயே 20 கோடி பேர் வாங்கினர். ஆனால், சோனியின் மற்றொரு நிறுவனரான அகியோ மொரிடாவுக்கு வாக்மேன் என்ற பெயர் பிடிக்கவில்லை. இதன் பெயரை மாற்றும்படி கூறினார். ஆனால், இந்தப் பெயர் மக்கள் மனதில் நிலைத்துவிட்டது. தவிர, பெயர் மாற்றத்துக்கு நிறைய செலவு செய்ய வேண்டும் என சோனி அதிகாரிகள் சொல்ல, வாக்மேன் என்ற பெயரே வரலாற்றில் நிலைத்தது.

2010-ம் ஆண்டோடு வாக்மேன் தயாரிப்பை சோனி நிறுத்திவிட்டது. என்றாலும், மனதுக்குப் பிடித்த இசையை ரசித்துக் கேட்க, வாக்மேன் இருந்தால் மட்டுமே முடியும் என்கிற அளவுக்குப் புதுமையை ஏற்படுத்திய கண்டுபிடிப்பு அது!

ச.ஸ்ரீராம்
 

No comments:

Post a Comment