Search This Blog

Saturday, December 06, 2014

நம்பிக்கை தரும் 10 இந்தியர்கள்!

இந்தியாவின் நம்பிக்கை மனிதர்களின் பட்டியலில் தவிர்க்க முடியாத இடத்தில் இருப்பவர் பிரதமர் மோடி! 1950-ல் வட் நகரில் பிறந்த மோடி, கடந்த மே மாதம் இந்தியாவின் 15-வது பிரதமராகப் பதவியேற்றார். தேர்தலுக்குமுன் இவர் பேசிய மேடை பேச்சுகளும், டிஜிட்டல் புரட்சியும்தான் இவரது வெற்றிக்கு வழிவகுத்தன. பல வாக்குறுதிகளைத் தந்த மோடி, பதவியேற்றதும் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆயத்தமானார். தற்போது இந்தியாவையும், இந்திய பொருளாதாரத்தையும் அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்ல மேக் இன் இந்தியா, க்ளீன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா என பல புதுமையான திட்டங்களை உருவாக்கி மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இவரது தலைமையில் இந்தியா நவீனமயமாகும் என்ற நம்பிக்கையை உருவாக்கி இருக்கிறார்.  இந்தியா இதுவரை கண்ட பிரதமர்களில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வரக்கூடியவராக மோடி இருப்பார். 65 வயதான அவரது  செயல்பாடுகளும், வெளிநாடுகளில் அவர் செய்யும் பொருளாதார ஒப்பந்தங்களும் இந்தியாவை வல்லரசாக்க உதவும். பல நாடுகள் அவரது வருகைக்காக காத்திருக்கின்றன என்பது சர்வதேச அளவில் அவர் சக்தி வாய்ந்தவராக வளர்கிறார் என்பதைக் காட்டுகிறது!

இன்று சமூக வலைதளங்களுக்குப் போட்டியாக மாறிவரும் உடனடித் தகவல் ஆப்ஸ்களில் முக்கியத்துவம் வாய்ந்தது வாட்ஸ் அப். இதன் பின்னணியில் இருப்பவர் நீரஜ் அரோரா என்கிற இந்தியர்தான். ஐஐடி டெல்லியில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்கும், இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் எம்பிஏ-வும் படித்த நீரஜ் அரோரா, நான்கு வருடம் கூகுளின் தயாரிப்புப் பிரிவில் பணிபுரிந்தார். அதன்பின் வாட்ஸ் அப்பில் தன் பணியைத் துவங்கிய நீரஜ், தற்போது சர்வதேச வர்த்தக மேம்பாட்டுப் பிரிவின் துணைத் தலைவராக உள்ளார். இவரது செயல்பாடுகள் வாட்ஸ் அப்பின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றுகிறது.
ரிலையன்ஸ் போனில் மாதாந்திர வாட்ஸ் அப் சேவையை 16 ரூபாய்க்கு விற்றது இவரது மிகப் பெரிய சாதனைகளில் ஒன்று. 35 வயதாகும் இவர், வாட்ஸ் அப்பை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்வார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. எதிர்காலத்தில் சமூக வலைதளங்கள் பிஸினசில் இவர் முக்கிய இடத்தைப் பிடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

சண்டிகரில் பிறந்த சச்சின் பன்சால், டெல்லி ஐஐடியில் பட்டம் பெற்றவர். அவரது ஐஐடி நண்பரான பென்னி பன்சாலுடன் இணைந்துதான் ஃப்ளிப்கார்ட் என்னும் ஆன்லைன் இணையதளத்தை அமைக்கும் வேலையில் ஈடுபட்டார். சச்சினும் பென்னியும் பள்ளியில் ஒன்றாகப் படித்தாலும், ஐஐடியில் இணையும்வரை ஒருவரையொருவர் அறியாமலே இருந்தனர். பட்டம் பெற்றபிறகு இருவரும் வெவ்வேறு பணிகளில் ஈடுபட்டு அமேசானில் கிடைத்த வேலை மூலம் மீண்டும் இணைந்தனர். இதன்பின்  ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தை இருவரும் ஆளுக்கு ரூ.2 லட்சம்  முதலீடு செய்து ஆரம்பித்தனர்.
2007-ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனத்தை அடுத்த ஏழு ஆண்டுகளில், அதாவது 2014-லேயே பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் செய்யும் நிறுவனமாக மாற்றினர். இனிவரும் காலத்தில் சர்வதேச நிறுவனங்களுக்கு சவால் விடும் அளவுக்கு உயர்ந்துள்ளது. அமெரிக்க பங்குச் சந்தையில் அலிபாபா பட்டியலிட்டு சாதனை புரிந்த மாதிரி, ஃப்ளிப்கார்ட்டும் விரைவில் இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிட்டு சாதனை புரியும் என்கிற நம்பிக்கையை இந்த நண்பர்கள் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

இந்தியாவின் வணிக மற்றும் தொழிற்துறை அமைச்சர் பொறுப்பில் உள்ள நிர்மலா சீதாராமன் 1959-ம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். பாரதிய ஜனதா கட்சியில் முக்கியப் பங்காற்றிய இவர், தனது இளங்கலை படிப்பை திருச்சியிலும், முதுகலைப் படிப்பை டெல்லியிலும் பயின்றார். தேசிய பெண்கள் ஆணையத்தில் உறுப்பினராக இருந்த இவர், தற்போது நாட்டின் வணிகத் துறை அமைச்சராக மோடியின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.
இந்திய அரசின் தொழிற்துறை ஊக்குவிப்புத் திட்டங்களான மேக் இன் இந்தியாவில் இவரது பங்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அந்நிய முதலீடுகளை வரவேற்கும் அரசில் இவரது பங்களிப்பு அதிகம் இருக்கும் என்ற நம்பிக்கை தொழிற்துறையில் நிலவி வருகிறது. இந்த ஆட்சியில் தொழிற்துறைக்கு நம்பிக்கையாக இருக்கும் இந்தியர்களில் இவர் அதிகம் கவனிக்கப்படுவார்.

1972-ல் சென்னையில் பிறந்த சுந்தர் பிச்சை, ஐஐடி கரக்பூரில் தொழில்நுட்பவியல் படித்தவர். ஸ்டான்ட்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் மேற்படிப்பும் வார்டன் ஸ்கூலில் எம்பிஏ பட்டமும் பெற்ற இவர், 2004-ம் ஆண்டு கூகுளில் சேர்ந்தார். புதுமைகளை அறிமுகப்படுத்தும் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார் சுந்தர். கூகுள் குரோம், கூகுள் டிரைவ் ஆகியவற்றைத் தயாரித்த பெருமை இவரையேச் சாரும். அடுத்ததாக, ஆப்ஸ் மேம்பாட்டு துறைக்குத் தலைமை தாங்கினார். ஜி-மெயில் ஆப்ஸ் மற்றும் கூகுள் மேப்ஸ்களை உருவாக்கியதில் இவரது பணி அளப்பறியது.
இதற்கிடையில் மைக்ரோசாஃப்டின் சிஇஓ பதவிக்கு இவரைத்தான் பரிந்துரை செய்திருப்பதாக பலமான வதந்தி கிளம்பியது. ஆனால், கூகுள் இவரைத் தனது ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் ஆண்ட்ராய்டு ஒன் செல்போன்களை உருவாக்கும் பொறுப்பை வழங்கியது. உலகமே தன் சந்தேகங்களை கூகுளில் தேட, கூகுள் தேடிய பொக்கிஷமாக இருக்கிறார் சுந்தர் பிச்சை. அவரது பெயரை வருங்காலத்தில் கூகுளின் முக்கிய தலைமை பதவிகளில் எதிர்பார்க்கலாம்.

சர்வதேச நிதி ஆணையத்தில் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த ராஜன், 2012-ல் இந்திய பிரதமரின் பொருளாதார ஆலோசகராக ஆனார். கடந்த ஆண்டு செப்டம்பர் 4-ம் தேதி ரிசர்வ் வங்கியின் கவர்னராகப் பதவியேற்றார். குறுகிய காலக் கடனுக்கான வட்டி விகிதம், சிஆர்ஆர், எஸ்எல்ஆர் ஆகியவற்றைக் குறைக்க வேண்டும் என மத்திய அரசு பலமுறை கோரிக்கை வைத்தும், எந்த விதத்திலும் வளைந்து தராமல் நாட்டின் வளர்ச்சிக்காகத் தனக்கு சரியென்று பட்டதையே செய்தார்.
பணவீக்கத்தைக் குறைத்தே ஆகவேண்டும் என்ற நோக்கத்தில் குறியாக இருக்கும் ரகுராம் ராஜனின் பதவிக்காலம் 2016-ம் ஆண்டில் முடிவுக்கு வருகிறது. பிரிக்ஸ் வங்கியின் தலைமைப் பொறுப்பை ஏற்கக்கூடிய தகுதிகள் அனைத்தும் ரகுராம் ராஜனுக்கு இருப்பதால், அவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது. பிரிக்ஸ் நாடுகளில் அதிகம் கவனிக்கப்படும் ரகுராம் ராஜன், இந்த நாடுகளின் வளர்ச்சிக்கு நிச்சயம் உதவுவார் என்று நம்பலாம்.

கர்நாடகாவின் மணிபால் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலி கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங் படித்தவர் ராஜீவ் சூரி. முதுகலைப் பட்டம் ஏதும் படிக்காமல் நோக்கியாவின் வளர்ச்சியில் பல சாதனைகளைப் படைத்தவர். கால்காம் நிறுவனத்தில் 1989-ம் ஆண்டு உற்பத்திப் பிரிவில் தன் பணியைத் தொடங்கிய சூரி, 1995-ல் நோக்கியாவில் மார்க்கெட்டிங் மேனேஜராக பணியில் சேர்ந்தார். 19 வருடங்களாக நோக்கியாவில் பல உயர் பொறுப்புகளில் தன் பணியைத் தொடர்ந்துவந்த சூரி, செல்போன் விற்பனையில் நீண்ட காலமாக லாபமின்றி இயங்கிக் கொண்டிருந்த நோக்கியா நெட்வொர்க் யூனிட்டின் செலவுகளைக் குறைத்து, கடந்த 2012-ல் மீண்டும் லாபப் பாதைக்கு கொண்டு வந்தார்.
நோக்கியாவின் செல்போன் தயாரிப்புப் பிரிவை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வாங்கியபோதும், நோக்கியா நிறுவனம் நெட்வொர்க் மற்றும் மேப்பிங் தொழில்நுட்பத் துறையில் தொடரும் என்று சொல்லப்பட்டது. அந்தப் பிரிவுகளுக்காக நோக்கியாவின் புதிய தலைமை நிர்வாகியாக இந்தியாவைச் சேர்ந்த ராஜீவ் சூரி நியமிக்கப்பட்டார். தொழில்நுட்ப உலகை ஆளுகிற இந்தியர்களின் பட்டியலில் இவரது பெயரும் முக்கிய இடம்பிடித்துள்ளது.

ஐஐஎம் அஹமதாபாத்தில் பட்டம் பெற்ற இவர், இன்டர்நேஷனல் இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங்கில் கிடைத்த வேலையை எழுத்தின் மீது உள்ள ஆர்வம் காரணமாக புறக்கணித்துவிட்டு புத்தகம் எழுதுவதைத் தொடர்ந்தார். இவரது புத்தகங்கள் எளிய நடையிலும், இளைஞர்களைக் கவரும் விதமாகவும், கல்லூரி வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாகவும் இருந்து வருகிறது. அதனால் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை சேத்தன் பகத் பெற்றுள்ளார்.
இவர் எழுதிய ஏழு புத்தகங்களுமே ஹிட் ஆனதுடன், மூன்று புத்தகங்கள் படமாக எடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் அதிகம் விற்கும் இந்திய எழுத்தாளர்களில் இவரது புத்தகங்கள் முதலிடம் பிடித்துள்ளன. இவரது கடைசிப் புத்தகமான ஹாஃப் கேர்ள் ஃப்ரெண்ட் புத்தகம்  ஆன்லைனில் ஹிட் அடித்து விற்பனைக்கு வருவதற்கு முன்பே முன்பதிவில் விற்றுத் தீர்ந்தது. விரைவில் உலகின் முக்கிய ஆங்கில எழுத்தாளர்களின் வரிசையில் சேத்தன் பகத் இடம் பிடிப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாகப் பதவியேற்றுள்ள விஷால் சிக்கா, அமெரிக்காவின் ஸ்டான்ட்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் டாக்டர் பட்டம் பெற்றவர். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் அல்லாத ஒருவர் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார் என்றால் அது விஷால் சிக்காதான். இன்ஃபோசிஸின் நிறுவனர்களில் ஒருவரான நாராயணமூர்த்தி நிர்வாகப் பொறுப்பைத் திரும்ப ஏற்றபின் ஓராண்டுக்குள் இன்ஃபோசிஸின் புதிய சிஇஓ அறிவிக்கப்படுவார் என்று அறிவித்தப்படி சிக்காவின் பெயரை நம்பிக்கையோடு அறிவித்தார்.
தற்போது விஷால் சிக்காவின் பணி வர்த்தகரீதியாக மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும், போட்டியைச் சமாளிக்க புதிய நடவடிக்கைகளைக் கையாள்வதும், புதுமைகளை அறிமுகப்படுத்தும் விதமாக இருக்கிறது. இதனால் இந்தியாவில் இன்ஃபோசிஸின் தாக்கத்தை அதிகப்படுத்தவும், சர்வதேச அளவில் முன்னிறுத்தவும் விஷால் சிக்காவால் முடியும் என்றால், நிச்சயம் இன்ஃபோசிஸின் வளர்ச்சிக்கு இவர் பெரிய பங்களிப்பை அளிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கும். அதோடு இந்தியாவின் ஐ.டி துறை வளர்ச்சியிலும் இவரது பிரதிபலிப்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் பிறந்த கைலாஷ் சத்யார்த்தி அடிப்படையில் ஒரு எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயர். இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை  பாகிஸ்தானைச் சேர்ந்த அமைதிப் போராளி மலாலாவுடன் இணைந்து பெற்றிருக்கிறார் கைலாஷ் சத்யார்த்தி. குழந்தை தொழிலாளர் முறை இந்தியாவில் அதிகம் காணப்படுகிறது. அதுவும், மத்தியப்பிரதேசத்தில் மிக அதிகம். இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுத்து தனது 26 வயதில் ‘பச்பன் பசாவோ அந்தலன்’ (குழந்தைப் பருவத்தைக் காப்போம்) என்ற அமைப்பை ஏற்படுத்தி அறவழிப் போராட்டத்தைத் தொடங்கினார். இவரது தீவிர முயற்சியால் இதுவரை 83,000 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இவரது சேவை இந்தியாவின் ஒரு சில மாநிலங்கள் என்ற அளவிலேயே இருந்து வந்திருக்கிறது. இந்தியாவில் கொத்தடிமைகளாக சிக்கித்தவிக்கும் குழந்தை தொழிலாளர்கள் அதிகம். அவர்களை மீட்கும் நடவடிக்கையில் சத்யார்த்தி இறங்கினால், கோடிக்கணக்கான குழந்தைகளை மீட்டு குழந்தை தொழிலாளர் இல்லா இந்தியாவை உருவாக்குவார் என நம்பலாம்.

ச.ஸ்ரீராம்

No comments:

Post a Comment