Search This Blog

Tuesday, November 04, 2014

‘ஆன்லைன் ஷாப்பிங்’ - ‘இ காமர்ஸ்’


உலகம் முழுவதும் வேகமாகப் பரவிக் கொண்டிருப்பது ‘இ காமர்ஸ்’ என்று அறிமுகமாகி இன்று ‘ஆன்லைன் ஷாப்பிங்’ என்ற விஷயம்தான். இந்தத் துறையின் வளர்ச்சி கடந்த ஆண்டில் மட்டும் 300 சதவிகிதத்துக்கு மேல். வரும் ஆண்டுகளில் இன்னும் வேகமாக வளரும் எனக் கணித்திருக்கிறார்கள்.

அபரிமிதமான அன்னிய முதலீடுகளால் உலகின் பொருளாதார தரவரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கும் சீனாவில் இந்த வர்த்தகம் இருக்கிறது. இதில் முன்னணி நிறுவனமான அலிபாபா நிறுவனம் அன்னிய நேரடி முதலீட்டுச் சந்தையில் பங்குகளை வெளியிட அனுமதி பெற்று நியுயார்க் பங்குச் சந்தையில் தனது டாலர் பங்குகளை கடந்த மாதம் வெளியிட்டது. 

IPOˆவின் (முதலில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் விலை) தொடக்க விலையாக 40 டாலர்களாகப் பட்டியலிடப்பட்டிருந்தது. மார்க்கெட் தொடங்கிய சில நிமிடங்களில் ஜிவ்வென்று விலை ஏறி 93.8 டாலர்களில் நாளின் விற்பனை முடிந்தது. மொத்தம் விற்ற பங்குகளின் மதிப்பு 25 பில்லியன் டாலர்கள். இது பங்கு மார்க்கெட்டில் ஒரு உலக சாதனை. இதுவரை எந்த கம்பெனியின் பங்கும் இந்த வேகத்தில் உயர்ந்ததில்லை. விற்றதில்லை. 

இதன் மூலம் அலிபாபா நிறுவனத்தின் நிகர மதிப்பு ஒரே நாளில் 231 பில்லியன் டாலர்கள் உயர்ந்தது. அதன் நிறுவனர் ஜாக் மாவின் பங்குகளின் மதிப்பு 26.5 பில்லியன் டாலர்கள். (ஒரு பில்லியன் என்பது 100 கோடிகள்). இந்தப் பங்கு வெளியீடு மூலம் ஜாக் மா ஆசியப் பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்திலிருக்கும் முகேஷ் அம்பானியையும், இரண்டாவது இடத்திலிருக்கும் சீனாவின் லீஷா கீ என்ற தொழிலதிபரையும் ஒரே பாய்ச்சலில் தாண்டி ஆசியாவின் முதல் பணக்காரர் என்ற இடத்துக்கு வந்துவிட்டார். 

ஒரு சீன நிறுவனம் முதன்முதலில் அமெரிக்கப் பங்குச் சந்தையில் இறங்கும் போது எப்படி இத்தகைய வரவேற்பு என்பதை உலகப் பொருளாதாரம் மற்றும் பங்குச் சந்தை ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆராயத் தொடங்கிவிட்டன. 

உலகில் அதிகமான இன்டர்நெட் இணைப்புகள் கொண்ட சீனாவில் ஆன்லைன் வர்த்தகத்தை அறிமுகப்படுத்தி அதை மிக வேகமாக வளர்த்து பல சாதனைகளைப் படைத்தவர்கள் இந்த அலிபாபாதான். 40க்கும்மேற்பட்டபொருட்களை 140க்கும்மேற்பட்ட நாடுகளில் விற்கிறார்கள். நாளொன்றுக்கு ஒரு லட்சம் பேர் இவர்கள் தளத்தைப் பார்வையிடுகிறார்கள். ஆன்லைன் ஷாப்பிங்கில் சில புதிய முறைகளை அறிமுகப்படுத்தியவர்கள். இன்டர்நெட்டில் பொருளைப் பார்த்து பணம் செலுத்தியபின் உங்கள் பகுதியிலிருக்கும் கடையில் அதைப் பெறலாம். இதன் விலை கடையில் வாங்குவதைவிட குறைவாக இருக்கும் (சில பொருட்கள் 50 சதவிகிதம் விலை குறைவு). 

கடையில் பொருளைப் பார்த்தபின் பிடிக்காவிட்டால் பணம் வாபஸ். விழாக் காலங்களில் கடைக்கே போக வேண்டாம். கல்லூரி, பள்ளி, அலுவலகக் கட்டடங்களில் கொட்டிக் குவித்து வைக்கிறார்கள். வீட்டுக்குப் போகும்போது பொருளை எடுத்துச் செல்லலாம். இப்படி பல புதிய ஐடியாக்களுடன் இப்போது இவர்கள் சீனாவின் கிராமங்களை குறிவைத்திருக்கிறார்கள். 

‘அடுத்த இரண்டாண்டில் 1000 நகரங்களில் 10,000 கிராமங்களிலும் எங்களது பொருள் வழங்கும் சென்டர்கள் (கடைகள் இல்லை) தொடக்கப்படும்’ என அறிவித்திருக்கிறார்கள். இதன் மூலம் அலிபாபா நிறுவனம் ஆன்லைன் ஷாப்பிங்கில் உலகின் முதல் நிறுவனமாக உயரும் என்கிறது ஒரு கணிப்பு. அமேசான், இபே போன்ற ஆன்லைன் நிறுவனங்களைவிட இவர்கள் மலிவான விலைக்குப் பொருட்களைத் தருவதுதான் இத்தனை வளர்ச்சிக்கு காரணம் என்பதும் ஒரு கணிப்பு.

இந்திய மார்க்கெட்டின் மதிப்பை உணர்ந்திருக்கும் இவர்கள் விரைவில் இந்தியாவுக்கு வரப்போகிறார்கள்.

No comments:

Post a Comment