Search This Blog

Thursday, November 13, 2014

ஷர்மிளா!

ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கும் போராட்டக்காரர்களை நாம் பார்த்திருப்போம். சிலர் ஒருவார காலம்கூட உண்ணா விரதம் இருந்து பெரும் பரபரப்பை உருவாக்குவார்கள். ஆனால், ஒரு பெண் 14 வருடங்களாக உண்ணா விரதம் இருக்கிறார். அந்த உண்ணாவிரதத்தை முடித்து வைக்க அரசாங்கமே தலைகீழாக நின்று முயற்சி எடுத்தும் எந்த பிரயோஜனமும் இல்லை. அவர்தான் இரோம் சானு ஷர்மிளா.

1942-ம் ஆண்டு மணிப்பூரின் இம்பால் பகுதியில் பிறந்தார் ஷர்மிளா. சிறுவயதிலிருந்தே சமூகச் சிந்தனையோடும், சமுதாயம் சார்ந்த கட்டுரைகளை எழுதுவதிலும் ஆர்வம் கொண்டிருந்த இவர், 2000-ம் ஆண்டு நவம்பர் 2 அன்று மணிப்பூரின் மலோம் பகுதியில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் இருந்த பத்து பேரை ராணுவ வீரர்கள் சுட்டு கொன்றதைப் பார்த்தார். மனித உரிமைப் போராளியான ஷர்மிளா இதனைக் கடுமையாக எதிர்த்தார். ஆயுதப்படைக்கு அளித்துள்ள சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்து உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார்.

ராணுவம் அவரை கைது செய்தது. அப்போதும் அவர் உண்ணாவிரதத்தைக் கைவிடவில்லை. ஆனால், அவர் இறந்துவிடுவாரோ என்கிற பயத்தில் ராணுவம் அவரை விடுதலை செய்தது. அதன்பிறகும் அவர்  உண்ணாவிரதத்தை கைவிட்டபாடில்லை. உண்ணாவிரதம் தற்கொலைக்கான முயற்சி. எனவே, ஷர்மிளாவை சாப்பிட வைக்கும்படி உறவினர்களை மிரட்டத் தொடங்கியது அரசு. ஆனாலும் ஷர்மிளாவோ தன் கோரிக்கையைக் கைவிடவில்லை.

உடல் உபாதைகளினால் அவரது ஒவ்வொரு உறுப்பும் வலுவிழந்தது. இப்போது அவரது மூக்கின் வழியே திரவ உணவு மட்டும் செலுத்தப்படுகிறது.

14 ஆண்டுகளாகத் தொடரும் இந்த உண்ணாவிரதத்தைப் பார்த்த மணிப்பூர் மக்கள், அரசியலுக்கு வாருங்கள். உங்களுக்கு ஓட்டுப் போடுகிறோம் என்று அழைத்தனர். ‘நான் வடகிழக்கு மக்களுக்காகப் போராடும் போராளி, அரசியல்வாதி அல்ல’ என்று கூறி மறுத்துவிட்டார்.

ஷர்மிளாவின் உண்ணாவிரதம் கடந்த வாரத்தில் 15-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. என் உயிர் போனாலும்  பரவாயில்லை. என்றாவது ஒருநாள் என் பகுதி மக்களின் நிலை மாறும்’ என்கிற விடாமுயற்சியில் ஷர்மிளாவின் உண்ணாவிரதம் தொடர்கிறது. ஷர்மிளாவின் விடா முயற்சி நம்மிடமும் இருந்தால், நம் வாழ்க்கையில் அடைய முடியாததே கிடையாது!

No comments:

Post a Comment