Search This Blog

Sunday, September 21, 2014

ஸ்டீவன் ஆலன் ஸ்பீல்பெர்க்

சிறு வயதில் ஒருவரைப் பார்த்து நீ என்னவாக ஆசைப்படுகிறாய் என்றால், நான் டாக்டர் ஆவேன், இன்ஜினீயர் ஆவேன் என்று சொல்வார்கள். ஆனால், எனக்கு சினிமா பிடிக்கும். நான் சினிமா எடுக்கப் போகிறேன் என்று சொன்னால், ஆச்சர்யமாகத்தானே பார்ப்பார்கள். அந்த ஆச்சர்யத்தை நிஜமாக்கிக் காட்டியவர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். இதற்காக அவர் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல.

1946–ம் ஆண்டு ஸ்டீவன் ஆலன் ஸ்பீல்பெர்க் அமெரிக்காவில் உள்ள சின்சினாட்டி நகரில் பிறந்தார். சிறுவயதில் ஸ்பீல்பெர்க்கின் பெற்றோர் அவருக்குப் பரிசாக அளித்த உடைந்த ஸ்டில் கேமராதான் இவரது சினிமா ஆர்வத்துக்கு வித்திட்டது. பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே எட்டு சிறிய குறும்படங்களை எடுத்து அசத்தியவர். தெற்கு கலிபோர்னியாவில் உள்ள நாடகக் கல்லூரிக்குப் படிக்க விண்ணப்பித்த ஸ்பீல்பெர்க்கின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. மனம் தளராமல் கலிபோர்னியா மாகாண பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். ஆனால், சேர்ந்த கொஞ்ச நாட்களிலேயே படிப்பு பிடிக்காமல் அங்கிருந்தும் வெளியேறினார்.


சினிமா பற்றி படிக்கவே முடியாத இவன் எங்கே சினிமா எடுக்கப் போகிறான் என்று எல்லோரும் இளக்காரம் பேசினார்கள். ஆனால், ஸ்பீல்பெர்க் அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல், யுனிவர்சல் ஸ்டுடியோவில் சம்பளம் வாங்காத எடிட்டிங் துறை மாணவராகச் சேர்ந்தார். அதுவும் அந்த வேலையில் விடுமுறை என்பதே கிடையாது. கல்லூரியில் சொல்லித்தரப்படும் தியரியைவிட யுனிவர்சல் ஸ்டுடியோவில் அவர் பிராக்டிகலாக செய்து தெரிந்துகொண்டது ஏராளம்.

தான் பணிபுரிந்த யுனிவர்சல் ஸ்டுடியோவுக்காக 25 நிமிடம் ஓடக்கூடிய ஆம்ப்ளின் என்கிற குறும்படத்தை இயக்கினார். இதில் ஓர் இளைஞன் ஒரு பெண்ணோடு பாலைவனத்தைக் கடப்பதை வசனமே இல்லாமல் சொல்லியிருந்தார். இதுதான் அவரது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது. அவரது முதல் கமர்ஷியல் சினிமாவான டூயல், உலக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அடுத்து அவர் எடுத்த ஜாஸ், இண்டியானா ஜோன்ஸ், ஜுராஸிக் பார்க் போன்ற படங்கள் வசூல் சாதனை புரிந்தது. அவர் எடுத்த ஸ்ண்ட்லர் லிஸ்ட் அவருக்கு ஆஸ்கார் விருதை வாங்கித் தந்தது.

இன்றைக்கு உலகின் நம்பர் ஒன் இயக்குநராக இருக்கும் ஸ்பீல்பெர்க் நமக்குச் சொல்லும் ஒரே பாடம்:  போராடினால்தான் லட்சியம் நிறைவேறும்!

No comments:

Post a Comment