Search This Blog

Friday, August 01, 2014

'டெம்பிள் ரன்’

கொஞ்ச நாட்களுக்கு முன்பு வரை, 'ஆங்ரி பேர்டு... ஆங்ரி பேர்டு’ எனப் பறவையின் பின்னால் ஓடிக்கொண்டிருந்த வீடியோ கேம் பிரியர்களைத் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது, 'டெம்பிள் ரன்’ என்ற தங்கச் சுரங்கம்.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து, சீனா, ஆஸ்திரேலியா என்று  உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் செல்போன்களில் டவுண்லோடு செய்திருக்கிறார்கள். ரயில், பஸ், பூங்கா, ஷாப்பிங் மால் என எங்கு பார்த்தாலும் தங்க ஓட்டம் ஓடுகிறார்கள். இந்த டெம்பிள் ரன் உருவானது எப்படி?

கெயித் ஷெப்பர்ட் (Keith Shepherd), நடாலியா லக்கியனோவா (Natalia Luckyanova) இருவரும் வாஷிங்டனில் உள்ள ஒரு நிறுவனத்தில் சாஃப்ட்வேர்  துறையில் பணியாற்றிவந்தனர். ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டு, திருமணம் செய்துகொண்டனர்.    குடும்பச் செலவுகள் அதிகரித்ததால், வருமானம் போதவில்லை. செலவைச் சமாளிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார்கள்.

 

வீடியோ கேம் உருவாக்குவதில் ஆர்வமாக இருந்தார் கீத். இந்த நேரத்தில், வீடியோ கேம் ஆப்ஸ் உருவாக்குவதற்காக 'ஆப் ஸ்டோர்ஸை’ ஆரம்பித்தது ஆப்பிள் நிறுவனம். இது, கீத்துக்கு மிகவும் பிடித்திருந்தது. தானும் சொந்தமாக ஆப்ஸை உருவாக்க நினைத்தார். தனது வேலையை விட்டுவிட்டு, 2008-ல் 'இமாங்’ பெயரில் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தார். நடாலியா வேலைக்குச் சென்றபடியே கணவருக்கு உறுதுணையாக நின்றார்.

வீடே அலுவலகமானது. முதலில், குறுக்கெழுத்து ஆப்ஸ் ஒன்றைத் தயார் செய்தார் கீத். இதன் மூலம் 5,000 டாலர்களைச் சம்பாதித்ததும் நம்பிக்கை பிறந்தது.

அடுத்த முயற்சிக்கு நடாலியாவையும் சேர்த்துக் கொண்டார். இருவரும் சேர்ந்து, 'ஹார்பர் மாஸ்டர், ஹிப்போ ஹை டைவ்’ போன்ற வீடியோ கேம்களை உருவாக்கினார்கள். அது, பெரிய அளவில் சக்சஸ் ஆகாவிட்டாலும், கையைக் கடிக்கவில்லை. அப்போது, அவர்களுடன் கிரில் என்ற ஓவியர் இணைந்தார்.

மூவரும் சேர்ந்து 2011 ஆகஸ்ட் 4-ம் தேதி, 'இன்டியானா ஜோன்ஸ்’ படத்தின் தீம் அடிப்படையில், 'டெம்பிள் ரன்’ வீடியோ கேமை உருவாக்கினார்கள். அது பெரிய அளவில் ஹிட் அடித்தது.

ஐஓஎஸ், ஆன்ட்ராய்டு, விண்டோஸ் 8, விண்டோஸ் போன் 8, பிளாக்பெர்ரி 10 போன்றவற்றில் இந்த விளையாட்டை மக்கள் போட்டி போட்டு டவுண்லோடு செய்துகொண்டார்கள். இப்போது, இலவசமாகவே கிடைக்கும் இந்த விளையாட்டை விளையாடுவோரின் எண்ணிக்கை இப்போது 100 கோடியைத் தாண்டிவிட்டது.

ஒரு திருடன், கோயிலில் இருந்து பணத்தைத் திருடிச் செல்லும்போது, அவனைப் பிடித்து விழுங்குவதற்கு குரங்குகள் துரத்துகின்றன. அவற்றிடம் இருந்து எதிர்ப்படும் சவால்களைச் சமாளித்து, எல்லையை அடைய வேண்டும். விளையாடும்போது அக்கம் பக்கம் என்ன நடக்கிறது என்றே தெரியாமல், விறுவிறுப்பாகச் சுண்டி இழுக்கிறது. இதற்குப் போட்டியாக டெம்பிள் கன்ஸ், டெம்பிள் ஜம்ப்ஸ் என்று பல வீடியோ கேம்ஸ் உருவாக்கப்பட்டன. எதுவுமே டெம்பிள் ரன் ஓட்டத்தைத் தொட முடியவில்லை.

''குடும்பச் செலவை சமாளிப்பதற்காக உருவாக்கிய இந்த வீடியோ கேம், எங்களை மில்லியனர்களாக ஆக்கிவிடும் என்று கனவிலும் நினைக்கவில்லை. எங்கள் இருவரின் உள்ளமும் ஒன்றாக இருப்பதுதான் இந்த வெற்றிக்குக் காரணம்'' என்கிறார்கள், கீத் மற்றும் நடாலியா.

டெம்பிள் ரன் வெற்றியைத் தொடர்ந்து வெளியான, 'டெம்பிள் ரன் 2’ சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் ஈர்த்து, சாதனை படைத்துக்கொண்டிருக்கிறது.


No comments:

Post a Comment