Search This Blog

Friday, July 11, 2014

உடலினை உறுதிசெய் - ஆரோக்கியம்


உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் முதலில் சத்துள்ள உணவைச் சாப்பிட வேண்டும். அடுத்து சரியான உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஒரு புதிய சைக்கிளை வாங்குகிறீர்கள். அதை ஓட்டாமல் வீட்டிலேயே வைத்துக்கொண்டால், என்ன ஆகும்? நாளாக ஆக சைக்கிள் துருப்பிடித்து, கிரீச் என்று சத்தம் போடும். அந்த சைக்கிளைத் தினமும் துடைத்து மசகு போட்டு ஓட்டி வந்தால் எப்படி இருக்கும்? அந்த சைக்கிள் பயணமே ஓர் அலாதியான ஆனந்தம் தரும். அதுபோலவே 206 எலும்புகள், 600க்கும் மேற்பட்ட தசைகள், தசைநார்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட உள்ளுறுப்புகளால் பிணைக்கப்பட்டுள்ள நம் உடல், உடற்பயிற்சிகளைச் செய்யச் செய்யத்தான் ஆரோக்கியத்துடன் இருக்கிறது. எலும்பும் தசையும் வலுப்பெற்று, மூட்டுகள் நெகிழ்வுத் தன்மை அடைந்து, அவற்றின் இயக்கங்கள் எளிதாகி, நலம் காக்கும் உடற்தகுதியை நமக்குத் தருகிறது. இதற்குத்தான் உடற்பயிற்சி தேவைப்படுகிறது.

உடற்பயிற்சிகளில் முக்கியமானது, ஏரோபிக்ஸ் பயிற்சிகள். இவை காற்றில் உள்ள ஆக்ஸிஜனை நுரையீரலும் இதயமும் அதிகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் பயிற்சிகள். நடப்பது, ஓடுவது, நீச்சலடிப்பது, சைக்கிள் ஓட்டுவது, கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து, இறகுப்பந்து, ஹாக்கி, கோகோ, டென்னிஸ், டேபிள்டென்னிஸ், ஸ்கிப்பிங் போன்ற விளையாட்டுகள் எல்லாமே ஏரோ பிக்ஸ் பயிற்சிகள்தான்.

இந்தப் பயிற்சிகளை மேற்கொள்ளும்போது நம் உடலில் என்ன மாற்றங்கள் நடக்கின்றன? முதலில் நாம் வேகமாகவும் ஆழமாகவும் சுவாசிக்கிறோம். அப்போது அதிக அளவு ஆக்ஸிஜன் உடலுக்குள் சென்று ரத்தத்தில் கலக்கிறது. ரத்தம் சுத்தமாகிறது. அடுத்ததாக இதயத்துடிப்பு அதிகரிக்கிறது. இதன் பலனால் உடலில் ரத்தம் வேகமாகவும் அதிகமாகவும் சுற்றி வருகிறது. அப்போது சிறு ரத்தக் குழாய்கள் கூட அளவில் பெரிதாகின்றன. உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் ரத்தம் செல்வது அதிகரிக்கிறது. சாதாரணமாக ஒரு நிமிடத்தில் ஐந்து லிட்டர் ரத்தம் நம் உடல் முழுவதும் சுற்றிவரும். நாம் விளையாடும்போது ஐந்து மடங்கு ரத்தம் (25 லிட்டர்) அதிகமாகச் சுற்றிவரும். இதனால் உடலில் உருவாகும் கழிவுகள் விரைவில் வெளியேறிவிடுகின்றன. சீக்கிரமே ரத்தம் சுத்தமாகிறது. உடலின் வெப்பம் குறைகிறது. உடலும் மனமும் புத்துணர்வு பெறுகின்றன.

தொடர்ந்து தினமும் விளையாடுவதை வழக்கமாக்கிக் கொண்டால் பல நோய்கள் நம்மை அண்டுவதற்கு அஞ்சும். காரணம், விளையாட்டுப் பயிற்சிகள் இதய நோயைத் தடுக்கும். நுரையீரல்களைக் காக்கும். சர்க்கரை நோயைக் குறைக்கும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். ரத்தக் கொழுப்பைக் கரைக்கும். பக்கவாத நோயைத் தடுக்கும். உடல் எடையைக் கட்டுப்படுத்தும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். மன அழுத்தத்தைக் குறைக்கும். சோர்வை நீக்கும். உடலின் ஆற்றலையும் நினைவாற்றலையும் அதிகரிக்கும். ஆக மொத்தத்தில் ஆரோக்கிய வாழ்வுக்கு வழி அமைக்கும்.

தொலைக்காட்சியையே பார்த்துக் கொண்டிருந்தால் உடலுழைப்பு குறைகிறது. இளம் வயதிலேயே நோய்கள் வந்துவிடுகின்றன. ஆரோக்கியமாக வளர, உடற்பயிற்சி அவசியம்.

1 comment:

  1. வணக்கம்
    நல்ல அறிவுரை சொல்லும் பதிவு பகிர்வுக்கு நன்றி
    என்பக்கம் கவிதையாக
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை???:  

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete