Search This Blog

Monday, May 26, 2014

மேகத்தில் சேமித்து வைக்கலாம்! - கிளவுட் தொழில்நுட்பம்

 
என் நண்பன் ஒருவன் தம் கணினியில் இருந்த பத்து வருட பேக்கப்பும் (காப்புநகல்) வைரஸ் பிரச்னையால் அம்பேல் ஆகிவிட்டது என்று அழுது புலம்பினான். மூன்று மாதத்துக்கு மேல் பிரயத்தனப் பட்டு லோலோவென்று அலைந்து தம் கணினியிலிருந்த டாக்குமென்டுகளை மீட்டெடுத்தான். அதற்காக ஆயிரக்கணக்கில் தண்டச்செலவு. இந்த மாதிரியான சூழ்நிலையை நம்மில் பலர் எதிர்கொண்டிருப்போம்.
 
தொழில்நுட்ப உலகில் கிளவுட் எனப்படும் ‘மேகம்’ என்ற தொழில்நுட்பம் பற்றி கேள்விப்பட்ட துண்டா? சாமானிய மொழியில் இப்படிச் சொல்லலாம். உங்கள் வீட்டுக் கணினியில், ஐபேடில் உங்கள் குடும்ப ஃபோட்டோக்கள், வீடியோ, பிற டாக்குமெண்டுகள், இப்படி பல ஜீபி பேக்கப் வைத்திருப்பீர்கள். வைரஸ், திருட்டு இப்படி ஏதாவது ஒரு காரணத்தால் இந்த பேக்கப்புகள் தொலைந்துவிட்டால் என்ன ஆகும்? சிடி பேக்கப், எக்ஸ்டர்னல் ஹார்ட் ட்ரைவ் என்று சில விஷயங்கள் உள்ளபோதிலும், இந்தப் பிரச்னைக்கான தீர்வுகளில் முக்கியமானது ‘கிளவுட்’ தொழில்நுட்பம்.
 
விண்டோஸ் 8-ல் இந்தச் சிறப்பம்சம் ஓ.எஸ்ஸுடன் (onedrive) கூடவே தரப்படுகிறது. இது தவிர, (www.dropbox.com) மாதிரியான இணையதளங்களும் கிளவுட் சேமிப்புக்கிடங்கைத் தருகின்றன. வெப்சைட்டுகளுக்கு வருடத்துக்குப் பராமரிப்புத் தொகை வழங்குவதுபோல், இந்த ட்ராப்பாக்ஸுக்கும் வழங்க வேண்டும். நமது கணினி, ஐபேடுகளில் இருக்கும் முக்கிய ஆவணங்கள் அவ்வளவு பத்திரம் கிடையாது. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால் இந்த மேக சேமிப்புக்கிடங்கில் பதிவேற்றி வைத்தால் அந்தக் குறிப்பிட்ட நிறுவனத்தின் வழங்கியில் (செர்வர்) பத்திரமாக இருக்கும். எப்பொழுது வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் (செல்பேசி, ஐபேட்) அதை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 
சரி, நிறுவனங்களுக்கும் இதே பிரச்னை இருக்குமல்லவா? ஒரு நிறுவனத்தில் மென்பொருள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், இன்னபிற முக்கிய டேட்டாக்கள் எல்லாவற்றையும் அந்த நிறுவன வழங்கியிலேயே வைத்திருப்பது பாதுகாப்பானதாக இருக்காது. அதற்கான சிறந்த தீர்வாக இந்த மேகத் தொழில்நுட்பம் இருக்கும் என்றும் கூறுகின்றனர். மைக்ரோசாப்ட், அமேசான், ஐ.பி.எம். போன்ற முன்னணி நிறுவனங்கள் கிளவுட்டில் வேகமாக முன்னேறி பல விஷயங்களை அறிமுகம் செய்தவாறு உள்ளன.  

இந்த மேகத்தொழில்நுட்பத்தை ஆதாரமாகக் கொண்டு, ஆரக்கிள் மாதிரி நிறுவனங்கள் ஒருபடி மேலே போய் சேமிப்புக் கிடங்கைத் தாண்டி, மென்பொருட்களை எப்படி மேகத்தில் பராமரிக்கலாம் என்று ஆராய்ந்து சில யுக்திகளை வழங்கிய வண்ணம் உள்ளன. இனி வருங்காலம் மேகத்தோடுதான் பயணிக் கும்!!!
 
இன்னொரு விஷயம், இந்த மேகத்தொழில்நுட்பம் நன்றாகச் சூடுபிடிக்க ஆரம்பித்தால் கிட்டத்தட்ட பாதிப்பேருக்கு மேல் வேலை கிடையாது. ஆமாம், சர்வர் பராமரிப்பு, மென்பொருள் பராமரிப்பு இவையனைத்தும் மேகத்துக்கு சென்றுவிடும்.
 
அது சரி, இந்த மேகத்தைப் பராமரிக்கும் நிறுவனத்திலிருக்கும் சர்வரில் ஏதாவது வைரஸ் பிரச்னை, இல்லை அந்த நிறுவன கட்டடத்தில் தீ ஏற்பட்டால் என்ன செய்வது என்று கேட்கிறீர்களா? இந்த நிறுவனங்கள் நல்ல கட்டமைப்பு வசதிகளுடன்தான் இருக்கும். எளிதில் எந்தப் பிரச்னையும் வராது. அதையும் மீறி வந்தால் என்ன செய்வது என்று குதர்க்கமாகக் கேட்கிறீர்களா? ‘பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்கற வைத்தியருக்கு.....’

தி.சு.பா.

No comments:

Post a Comment