Search This Blog

Monday, May 19, 2014

பிரதமர் மோடி

இந்திய தேர்தல் வரலாற்றில், ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்குப்பின், தனிப் பெரும்பான்மையோடு ஜெயித்து ஆட்சி அமைக்கும் பெருமையைப் பெற உள்ளது பாரதிய ஜனதா கட்சி.
 
1984-ல் ராஜீவ்காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய வெற்றி கண்டது. அதன்பிறகு இப்போது பாரதிய ஜனதா கட்சிதான் 272 இடங்களுக்கு மேல் வெற்றி வாகை சூடும் நிலையில் உள்ளது. வாஜ்பாய் தலைமையில் பாரதிய ஜனதா தேர்தலை எதிர்கொண்டபோதுகூட இப்படி ஒரு வெற்றியை அந்தக் கட்சி கண்டதில்லை.

இந்த மாபெரும் வெற்றிக்கு காரணம், நரேந்திர மோடி என்பதைச் சொல்லவேண்டியதே இல்லை. மோடியின் இந்த வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது, இந்தியா முழுக்க உள்ள சாதாரண மனிதனின் ஒரே ஒரு எதிர்பார்ப்புதான்.

'காங்கிரஸின் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் ஊழல், பொருளாதார வளர்ச்சியின்மை, விலைவாசி ஏற்றம், வேலைவாய்ப்பின்மை எனப் பல பிரச்னைகள். மேலும், தொழில் வளர்ச்சி பெரிய சரிவில் சிக்கியது. இனி, மோடி இதை மாற்றட்டும்’ என்கிற எதிர்பார்ப்பில்தான் பெருவாரியான மக்கள் அவருக்கு வாக்களித்திருக்கிறார்கள்.

'குஜராத் மாடல்’ என்கிற உதாரணத்தை உருவாக்கி, அதை இந்தியா முழுவதுக்கும் உரைகல்லாக மாற்றிக் காட்டிய மோடி, இனி இந்தியா முழுக்க சிறப்பானதொரு வளர்ச்சி காண வைப்பதன் மூலம் 'இந்தியா மாடல்’ என்கிற உண்மையை உலகுக்கு உணர்த்த வேண்டும். இந்த 'இந்தியா மாடல்’, சீனா மாடல்’ என்கிற கருத்தையே தூக்கிச் சாப்பிடுகிற மாதிரி இருக்க வேண்டும். அப்போதுதான் இந்தியா ஒரு வல்லரசாக மாற முடியும்.

 

இதற்கு அடிப்படைத் தேவையாக இருப்பது ஊழலற்ற அரசாங்கம். மக்கள் நலனில் அக்கறைகாட்டும் அரசாங்கம் அமைந்துவிட்டாலே போதும், தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்துவிடும்.

இதுநாள்வரை நாட்டின் வளர்ச்சியில் கடைப்பிடித்து வந்த கட்டுப்பெட்டித்தனமான நடைமுறைகளை பாரதூரமாக மாற்றுவதன் மூலமே இதையெல்லாம் மோடி செய்துகாட்ட முடியும். 

மக்கள் தங்களது அபிலாஷையை தெளிவாக எடுத்துச் சொல்லிவிட்டார்கள். மக்களின் இந்த அபிலாஷைகளை இனி மோடி எப்படி நிறைவேற்றப் போகிறார் என்பதுதான் முக்கியமான விஷயம்.

அடுத்துவரும் ஐந்து ஆண்டு கால ஆட்சியில் அவர் எப்படி செயல்படப் போகிறார் என்பதைப் பொறுத்தே மோடியின் எதிர்காலம் மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலமும் இருக்கிறது!

No comments:

Post a Comment