Search This Blog

Tuesday, March 18, 2014

அழிவுப் பாதையில் தே.மு.தி.க.?


பா.ஜ.க.விடம் அதிக எண்ணிக்கையிலும், விரும்பிய தொகுதிகளையும் பெறுவதற்காக, அவ்வப்போது தி.மு.க.வுக்கும், காங்கிரஸுக்கும் தூதுவிட்டு, தமது ‘பேர’ பலத்தை அதிகரித்துக் கொண்டிருந்தார் விஜயகாந்த். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரு கூட்டணிக் கட்சியாக மட்டும் இருந்த அனுபவம் பெற்ற பா.ஜ.க.வுக்கு கூட்டணி தலைமைப் பொறுப்பில் இருந்து இடங்களைப் பிரித்து, தொகுதிகளை ஒதுக்குவது புது அனுபவம். 

எனவே அந்த வகையில் தே.மு.தி.க. படுத்திய பாட்டை நினைத்து தமிழக பா.ஜ.க. தலைவர்கள் ரத்தக் கண்ணீர்விட்டு, விரக்தியின் எல்லைக்கே போய்விட்டார்கள். ஆனால் வலுவான கூட்டணி என்ற நோக்கத்தில் இருந்ததால் அவர்களுக்குப் பொறுமை காப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் தே.மு.தி.க. நடந்து கொண்ட விதம் தொகுதிகளைத் தவிர அது பேரம் பேசிய ‘விவகாரங்கள்’ என்று மீடியா அரசல் புரசலாக அப்டேட் செய்து வந்ததால் அந்தக் கட்சியின் மீதான மக்கள் மதிப்பீடு சரசரவென்று இறங்கிக் கொண்டு வந்தது என்பது மட்டும் நிஜம்.இந்தச் சூழலில் பா.ஜ.க. அணியில் இணைந்து, நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க விஜயகாந்த் முடிவு செய்தது அவருடைய கட்சியின் எதிர்கால நிலைமையைக் கணக்கில் கொண்டு பார்க்கும்போது சரிதானா என்ற கேள்வி எழுகிறது. மத்திய அரசில் தே.மு.தி.க.வின் பங்களிப்பு என்பது ஒரு முக்கியத்துவம் இல்லாத அளவில் பரிசீலிக்கப்படும் நிலையில் இப்போது பா.ஜ.க.வோடு அது ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கூட்டணியால் தமிழ்நாட்டில் தே.மு.தி.க. தன்னைப் பலப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பிருக்கிறதா? தேர்தலுக்குப் பின் 2016 சட்டமன்றத் தேர்தலின் போது மற்ற கட்சிகள் கூட்டணி அமைத்துக் கொள்ள விரும்பும் வகையில் கட்டுக்கோப்பாகவும் மக்கள் ஆதரவு பெற்ற சக்தியாகவும் தே.மு.தி.க. இருக்குமா? இப்படிப் பல கேள்விகளுக்கான பதில்களை அலசும் முன் தே.மு.தி.க.வின் தற்போதைய நிலையைப் பார்ப்போம்.

தி.மு.க.வுக்கும் அ.இ.அ.தி.மு.க.வுக்கும் மாற்றாக அரசியலில் குதித்த விஜயகாந்த், 2009 நாடாளுமன்றத் தேர்தல் வரை, இந்த இரு கட்சிகளுக்கும் தே.மு.தி.க. தான் மாற்று என்ற எண்ணத்தை மக்களிடையே மிக அழுத்தமாகவே பதித்தார். அந்தத் தேர்தலில் 39 இடங்களிலும் போட்டியிட்டு பத்து சதவிகித வாக்குகளைப் பெற்றார். ஒன்பது தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கு மேல் வாக்குகள் பெற்றார். அந்தத் தேர்தல் வரை அவரது கட்சியில் அவரது மனைவி ஆதிக்கமோ, மைத்துனர் ஆதிக்கமோ, கட்சியினர் வெறுக்கும், கோபப்படும் அளவுக்கு இல்லை. ஆனால் அதற்குப் பிறகு அவர்களது தலையீடு, கட்சிப் பொறுப்பாளர்கள் சிலரின் ஆதிக்கம், கட்சிக்காரர்களிடம் விஜயகாந்தின் ‘கைநீளும்’ செயல்பாடுகள் ஆகியவற்றின் காரணமாக நம்பிக்கையுடன் கட்சியில் இணைந்த பல முக்கியப் பிரமுகர்கள் கட்சியை விட்டு விலகினார்கள்.  

இந்த நிலையில் 2011 சட்டமன்றத் தேர்தல் நெருங்கியது. அலைக்கற்றை ஊழல், குடும்ப ஆட்சி என்று கொண்டாட்டம் போட்டுக் கொண்டிருந்த தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்ப ஒரு வலுவான கூட்டணியை அமைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தார் ஜெயலலிதா. அதே சமயம் கைக்காசையும், உழைப்பையும் செலவிட்டு சலிப்பில் இருந்த கட்சித் தொண்டர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் இடம்பிடித்து புத்துணர்வு ஊட்ட வேண்டிய அவசியம் விஜயகாந்துக்கு இருந்தது. தனித்துப் போட்டியிட்டால், 2006 போல ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றால் என்னாவது என்ற பயமும் அவருக்கு இருந்தது. அதே சமயம் அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தால், இரு கழகங்களையும் எதிர்த்து தான் தொடங்கிய கட்சியின் நோக்கத்துக்கு கறை படிந்து விடுமே என்ற குழப்பமும் விஜயகாந்துக்கு இருந்தது. ஆனால் ஜெயலலிதாவின் நிரந்தர ஆலோசர்கள் பலர் ‘இப்போது கருணாநிதியைத் துரத்த வேண்டுமென்றால் நீங்கள் இருவரும் இணைந்தால்தான் சரி’ என்று விஜயகாந்தின் மனதை மாற்ற அ.இ.அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி அமைய தி.மு.க. படுதோல்வி அடைந்தது.2011 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஆறேழு மாதத்திலேயே ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்துக்கும் மோதல் வருமென்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதுமட்டுமல்ல, விஜயகாந்தின்மீது ஏகப்பட்ட வழக்குகளைப் போட்டு அவரை மாநிலம் முழுக்க நீதிமன்றங்களுக்கு அலைக்கழித்தார் ஜெயலலிதா. போதாததற்கு தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள், வரிசையாக விஜயகாந்தைக் கடுப்பேற்றும் வகையில் அ.தி.மு.க. ஆதரவு நிலையை எடுத்து வருகிறார்கள். 

தேர்தலுக்குப் பிறகு இப்படி அணி மாறும் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை ஏறிக் கொண்டே போகும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. இப்படிப்பட்ட சூழலில்தான் தே.மு.தி.க., இப்போது பா.ஜ.க.வோடு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நெருக்கத்தால் எதிர்காலத்தில் தே.மு.தி.க.வை ஒடுக்க நினைக்கும் ஜெயலலிதாவிடமிருந்து தப்பிக்க முடியுமா என்ற கேள்வியை எழுப்ப வேண்டியிருக்கிறது.அடிப்படையில் நல்ல மனிதராக மற்றவர்களை மதிக்கும் பண்பு உடையவராக இருக்கும் விஜயகாந்தின் பெரிய பலவீனம் பக்குமில்லாத தகவல் பரிமாற்றம்தான். நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வோடு விஜயகாந்த் கூட்டணி அமைத்திடக் கூடாது என்று ஜெ. தரப்பு ஆலோசகர்கள் திரும்பத் திரும்ப அவரிடம் வற்புறுத்தி வந்தார்கள். தே.மு.தி.க.- தி.மு.க. கூட்டணி அமைந்தால், 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு முன், ஸ்டாலினுக்கு நீங்கள் போட்டியாக வருவீர்கள் என்றும் உங்கள் கட்சியை தி.மு.க. கபளீகரம் செய்துவிடும் என்றும் தி.மு.க. வுடன் சேர்ந்தால் உங்கள் வோட்டு வங்கியிலும் மேலும் ஓட்டை விழும்" என்றும் விஜயகாந்த்தை பயமுறுத்தினார்கள் ஆலோசகர்கள். ஆனால் உண்மையில் தே.மு.தி.க. - தி.மு.க. கூட்டணி அமைந்தால் ஜெயலலிதாவின் நாற்பதுக்கு நாற்பது கனவு சின்னாபின்னமாகிவிடும் என்பதுதான் ஜெயலலிதா ஆலோசகர்களின் கவலையாக இருந்தது. எனவேதான் ஏதேதோ காரணங்களை விஜயகாந்திடம் சொல்லி தே.மு.தி.க.- தி.மு.க. கூட்டணி வராமல் தடுத்து விட்டார்கள். தேர்தலுக்குப்பின் தி.மு.க. நமது கட்சியை அழிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும்; 2011ல் ஆட்சியேற துணைபுரிந்த நம்மையே ஜெயலலிதா அழிக்க நினைக்கிறாரே" என்ற எண்ணம் விஜயகாந்துக்கு இப்போது தோன்றாமலிருக்க முடியாது. 

2011 சட்டமன்றத் தேர்தலின்போது, ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் முதல் குறி உங்களுக்குத்தான்" என்று எந்த ஆலோசகரும் விஜயகாந்துக்குச் சொல்லவில்லை போலிருக்கிறது. இப்போது விஜயகாந்த் தி.மு.க.வோடு கூட்டணி அமைத்திருந்தால் கணிசமான சீட்டுகளை வென்று பலமாகும் வாய்ப்பு இருந்தது என்பது மட்டுமல்லாமல் அதன் காரணமாக தே.மு.தி.க.வை பழிவாங்கும் போக்கு ஜெ.விடம் குறையவும் வாய்ப்பிருக்கிறது.  ஒரு அரசியல் தலைவன் தன்னை அழிக்க நினைக்கும் கட்சியிடமிருந்து தப்பிக்கும் யுக்தியாக முதலில் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள நினைப்பதே விவேகம் ஆகும். இந்த வகையில் தே.மு.தி.க.வை அ.இ.அ.தி.மு.க.வின் தாக்குதல்களிலிருந்து காப்பாற்றிக் கொள்ள ஜெ.வை பலவீனப்படுத்த இந்தத் தேர்தலை விஜயகாந்த் பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். பா.ஜ.க.வுடன் இணைந்ததால் இந்த வகையில் விஜயகாந்துக்கு எந்தப் பாதுகாப்புமில்லை. காரணம், ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக அ.இ.அ.தி.மு.க.வையும், பா.ஜ.க. வையும் (குறிப்பாக மோடியை) பார்க்கும் கண்ணோட்டம் மக்களிடம் இருக்கிறது. அது ஓரளவு உண்மையுங்கூட. நாளை தேர்தலுக்குப் பின்பு எழும் சூழலில் பா.ஜ.க.வின் நெருங்கிய தோழராக ஜெ. இருப்பாரே தவிர விஜயகாந்த் ஒதுக்கப்படுவார். தே.மு.தி.க.வை அழிக்க ஜெ. தமது முயற்சிகளைத் தொடரும்போது பா.ஜ.க. எந்தவிதத்திலும் விஜயகாந்துக்கு ஆதரவாக நிற்காது. அதே சமயம் தி.மு.க.வோடு கூட்டணி அமைத்திருந்தால் அ.தி.மு.க.வை துணிந்து எதிர்க்க ஒரு தோழமை கிடைத்திருக்கும். கட்சியை வளர்க்க சக்தியைச் செலவழிக்கலாம். 2016 சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க. நெருக்கத்திலிருந்து விலகி தனியாகவே களம் காணும் முயற்சியில் இறங்கியிருக்கலாம். ஸ்டாலினா - விஜயகாந்தா என்று வரும்போது மக்கள் விருப்பம் விஜயகாந்துக்கு ஆதரவாகத் திரும்பக்கூடும். ஜெயலலிதாவைச் சந்திக்க ஒரு பலமான சக்தியாக விஜயகாந்த் உருவாகியிருக்கலாம். 

இந்த வாய்ப்புகளைத் தமது தவறான நகர்த்தலின் மூலம் கெடுத்துக் கொண்டு விட்டார் விஜயகாந்த். தவிர கட்சியை ஜெ. தொடர்ந்து அழிப்பதற்கான வாய்ப்பையும் கொடுத்து விட்டார். அ.இ.அ.தி.மு.க.வின் ’ஆ’ டீம்தான் பா.ஜ.க.அணி என்பதை உணரத் தவறிவிட்டார்.பா.ஜ.க.கூட்டணியில் இணைந்ததால் விஜயகாந்துக்கு எந்த ஆதாயமும் இல்லை. தே.மு.தி.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகள், அ.தி.மு.க. வோடு மோதும் தொகுதிகளில் பா.ஜ.க. மற்றும் மோடி அலை வாக்குகள் கணிசமாக அ.தி.மு.க.வுக்குத்தான் விழுமே தவிர தே.மு.தி.க. உட்பட பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகளுக்கு விழாது. ஜெயலலிதாவையும் மோடியையும் ஒன்றாகப் பார்க்கும் மனநிலை வாக்காளர் மத்தியில் இருப்பதே இதற்குக் காரணம். மேலும் பா.ஜ.க. வோடு கூட்டணி அமைத்ததால் சிறுபான்மை மக்களின் ஆதரவையும் இழந்து நிற்கிறார் விஜயகாந்த். தே.மு.தி.க.வின் சொந்த வாக்கு வங்கியே கூட இப்போது ஐந்து சதவிகிதத்துக்கு இறங்கி விட்டதாகக் கணிப்புகள் சொல்லுகின்றன. பா.ஜ.க. கூட்டணியில் இருக்கும் விஜயகாந்த் ஜெ.வைத் தாக்கிப் பேசலாம். ஆனால் பா.ஜ.க. மென்மையான போக்கையே கடைப்பிடிக்கும். இந்த நிலைப்பாடு கூட்டணியை பற்றிய குழப்பத்தை மக்களிடம் உருவாக்கும். பா.ஜ.க. காங்கிரஸைத் தாக்கும் போக்கு அந்தக் கட்சியிடம் சுமூகமாக உள்ள விஜயகாந்துக்கு சங்கடத்தைக் கெடுக்கக்கூடும். பா.ஜ.க.வுக்குத் தமிழகத்தில் சில இடங்கள் கிடைத்தாலும், தே.மு.தி.க. உட்பட அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்காது. மாறாக விஜயகாந்தின் அரசியல் எதிரியான ஜெயலலிதாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்.சரி; விஜயகாந்த் தனது செயல்பாடுகளை எப்படி அமைத்துக் கொண்டிருக்க வேண்டும்? சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதாவுடன் சுமூக உறவைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலிலும் அவருடன் கூட்டணி அமைத்து, அரசியல் ஆதாயங்களைப் பெற்று பின்னர் 2016 சட்டமன்றத் தேர்தலை நோக்கி, கூடுதலான சக்தியுடன் தனித்து நடைபோட்டிருக்கலாம். கட்சியும் பாதுகாக்கப்பட்டிருக்கும். இனி ஜெ.விடமிருந்து, தேர்தலுக்குப் பிறகு கட்சியைக் காப்பாற்றிக் கொள்வது எப்படி என்று அவர் யோசிக்க வேண்டும். 

அந்த அடிப்படையில் பார்க்கப் போனால் நாடாளுமன்றத் தேர்தலில் விடுபட்டுப்போன தி.மு.க.வின் நெருக்கம், ஜெயலலிதாவை எதிர்த்து நிற்க, விஜயகாந்துக்கு தேவைப்படும். இது காலத்தின் கட்டாயம். இப்படிப்பட்ட தாற்காலிக யுக்திகளை விஜயகாந்த் வகுக்கத் தவறினால் தே.மு.தி.க. அழிவுப் பாதையில் செல்வதைத் தவிர்ப்பது மிகவும் கடினம்.

ப்ரியன்

No comments:

Post a Comment