Search This Blog

Tuesday, March 18, 2014

ஓ பக்கங்கள் - ஏன் ‘ஆம் ஆத்மி’யில் நான் சேர்கிறேன்? ஞாநி


ஆம் ஆத்மி கட்சியில் நான் சேர்ந்துவிட்டேன்! என் 44 வருடப் பொதுவாழ்க்கையில் நான் உறுப்பினராகச் சேரும் முதல் கட்சி இதுதான்.

இதுவரை கட்சிகளில் சேராவிட்டாலும், நான் எப்போதும் அரசியலில் இருந்து வருகிறேன் என்றுதான் சொல்ல வேண்டும். அரசியல் என்றால் கட்சி, அமைப்பு, இயக்கம் ஒன்றில் சேர்ந்து பணியாற்றுவது என்று மட்டுமாகப் புரிந்துகொள்வதே பொதுவழக்கம். நான் அந்த அரசியலைக் குறிப்பிடவில்லை. எனக்கு அரசியல் என்றால், சமூகத்தில் கட்சி அரசியல், தேர்தல் அரசியல், குடும்ப அரசியல், கலாசார அரசியல் என்று பல தளங்களில் அரசியல் செயல்படுகிறது.சமூகம் பற்றிய பார்வை, சமூகத்துக்கான மதிப்பீடுகள், சமூகத்துக்கான செயல்கள் எல்லாம் அரசியல்தான். அப்படி எல்லா தளங்களிலும், துறைகளிலும் நடப்பவை, நடந்தவை, நடக்கவேண்டியவை பற்றி எல்லாம் கருத்துகளை மக்கள் முன்னால் தொடர்ந்து வைப்பதும் ஓர் அரசியல் செயல்பாடுதான். எழுத்தாளனாக நான் எப்போதும் அதைத்தான் செய்து வந்திருக்கிறேன்.அரசு, அரசியல், தேர்தல், பொது வாழ்க்கையில் செயல்படுதல் முதலியவை பற்றியெல்லாம் எனக்கு முதலில் ஈடுபாடு ஏற்பட்டது என் அப்பா வேம்புசாமியால்தான். ஆங்கிலப் பத்திரிகையாளராக இருந்த அவர் (1907-1997), அறுபதுகளில் நான் சிறுவனாக இருந்தபோது ராஜாஜி, நேரு, காமராஜர் பற்றியெல்லாம் அவ்வப்போது சொல்லக் கேட்டிருக்கிறேன். ராஜாஜி, காமராஜர் இருவரோடும் அவருக்கு நெருக்கமான பழக்கம் இருந்தது. ஆனால் அவருக்கு அதில் ராஜாஜியைப் பிடிக்காது. காமராஜரைத்தான் பிடிக்கும். அண்ணா அவருடைய கல்லூரி தோழர். நேருவோடு பழக்கம் இல்லாதபோதும் நேருதான் அப்பாவுக்கு நவீன இந்தியாவுக்கான ஆதர்சம். சாதி, மத, கடவுள், சடங்குகள் எல்லாம் அப்பாவின் பார்வையில், அவரது வாழ்க்கை முறையில் முக்கிய இடத்தை ஒருபோதும் பெறவே இல்லை. அறுபதுகளில் அப்பா நிறைய பொது வேலைகளில் செங்கல்பட்டில் ஈடுபட்டிருந்தார். ‘வரி கொடுப்போர் சங்கம்’ என்ற ஒன்றை அவரும் நண்பர்களும் நடத்தினார்கள். அறுபதுகளில் அது ஓர் அபூர்வமான முயற்சி. நுகர்வோர் உரிமை, சிவிக் ரைட்ஸ் எல்லாம் பரவலாகப் பேசப்படாத காலம். அந்தச் சங்கத்தில் தொடர்ந்து நகராட்சியுடனும் அரசுடனும் சாலை, விளக்கு, சாக்கடை, குடிநீர்ப் பிரச்னைகளுக்காக அவர்கள் கடிதங்கள், மனுக்கள், கூட்டங்கள், அதிகாரிகளுடன் சந்திப்புகள் என்று பலவிதங்களில் தீர்வுகளுக்கு முயற்சித்துக் கொண்டே இருந்தார்கள். 

செங்கல்பட்டில் பெண்களுக்கான கல்லூரிக்குப் போராடிப் போராடி கடைசியில் ஓர் அரசுப் பெண்கள் கல்லூரியும் ஓர் அரசு மருத்துவக் கல்லூரியும் ஏற்பட, அப்பாவும் நண்பர்களும் உழைத்த உழைப்பே காரணம். அப்பா ஏற்படுத்திய இன்னொரு சங்கமும் அந்தக் காலகட்டத்தில் இந்தியாவிலேயே அபூர்வமானது. தினசரி செங்கல்பட்டிலிருந்து 35 மைல் தொலைவில் இருக்கும் சென்னைக்கு படிக்கவும் வேலை பார்க்கவும் சென்று திரும்பும் ஆயிரக்கணக்கான ரயில் பயணிகளுக்கான சங்கம் அது. அப்போது காலையில் இரு ரயில்கள் மட்டுமே காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டு வழியாகச் சென்னைக்கு இருந்தன.  இந்தச் சங்கம்தான் போராடி மூன்றாவது ரயிலைக் கொண்டு வந்தது. சென்னை விழுப்புரம் ரயில்பாதையை மின்தடமாக்கியதும் அவர்களின் தொடர்ந்த போராட்டம்தான். அடுத்து சென்னைக்கும் செங்கல்பட்டுக்கும் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கவும் அவர்களே போராடி வரவழைத்தார்கள். இந்தப் போராட்டங்களெல்லாம் சுமார் 15 ஆண்டுகள் தொடர்ந்து நடந்து பின்னர் பயன் கொடுத்தவை. அப்பா விளையாட்டு வீரரும் கூட. எனவே அவர்தான் செங்கல்பட்டு மாவட்டத்துக்கான பால் பாட்மின்ட்டன் சங்கத்தையும் கால்பந்து சங்கத்தையும் நண்பர்களுடன் சேர்ந்து உருவாக்கினார்.இவற்றையெல்லாம் பள்ளி மாணவனாகவும் கல்லூரி மாணவனாகவும் உடன் இருந்து பார்த்த அனுபவங்கள் எனக்கு முக்கியமானவை. இயக்கம், அமைப்பு, உள்அரசியல், வெளி அரசியல் பற்றியெல்லாம் என் புரிதலுக்கான ஆரம்பப் பாடங்கள் அவை.அதன்பின் நான் நேரடியாக அரசியல் செயல்பாட்டில் இறங்கியபோது எனக்கு வயது 17. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். என் பள்ளித் தோழன் ரவீந்திரன் தீவிர தி.மு.க அனுதாபி. அப்போது 1971ம் வருட மக்களவைத் தேர்தலும் மாநில சட்டப்பேரவை தேர்தலும் ஒன்றாக நடந்தன. இந்திரா காந்தி வங்கிகளை நாட்டுடைமையாக்கி ராஜமான்யத்தை ஒழித்து சோஷலிச சிற்பியாக இருந்தார். அவருடன் கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க கூட்டணி சேர்ந்தது. இந்திய தமிழகப் பிற்போக்காளர்களின் தமிழகத் தலைவராக காமராஜரும் ராஜாஜியும் என் அப்பாவின் நண்பர் ஆத்தூர் சீனிவாசயரின் மகன் சோ ராமசாமியும் ஓரணியில் இருந்தனர். அப்பா இந்திரா- கருணாநிதி அணியையே ஆதரித்தார். நானும்தான். ரவீந்திரன் கேட்டுக்கொண்டபடி நான் அந்த அணிக்காக செங்கல்பட்டிலும் தாம்பரத்திலும் (என் கல்லூரி இருந்த இடம்) பொதுக் கூட்டங்களில் பேசினேன். லாரியில் மேலே நின்றுகொண்டு மைக்கில் முழக்கங்களும் உரையும் நிகழ்த்தியபடி சுற்றுப்பயணப் பிரசாரம் செய்தேன். அப்பாவுக்கும் எனக்கும் மிக நெருக்கமாக இருந்த பல குடும்பத்தினர் எதிர் அணி ஆதரவாளர்கள். கறுப்பு - சிவப்பு கொடியின் கீழ் நின்று பேச உனக்குக் கூச்சமாக இல்லையா, வெட்கமாக இல்லையா என்றெல்லாம் என் நண்பர்களின் பெற்றோர் அப்போது என்னைக் கேட்டிருக்கிறார்கள்.அந்தத் தேர்தலின் வாக்குப்பதிவு தினத்துடன் நான் அரசியல் பணிகளிலிருந்து சட்டென்று முறித்துக் கொண்டு விலகிவிட்டேன். அதன்பிறகு நான் மறுபடியும் நேரடியாகக் கட்சிசார்ந்த அரசியலில் தேர்தலையொட்டி ஈடுபட்டது 16 வருடம் கழித்து 1987லிருந்து 1990 வரையில்தான். இப்போது ராஜீவ் காந்தி ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அதன் ஊழலை எதிர்த்து வி.பி.சிங் ஜன் மோர்ச்சா தொடங்கியிருந்தார். அடுத்த கட்டத்தில் அவருடன் தி.மு.க.வும் இன்னும் பல மாநிலக் கட்சிகளும் சேர்ந்து தேசிய முன்னணியை உருவாக்கினர். நான் ராஜீவின் ஊழல் எதிர்ப்பு, மாநிலக் கட்சிகளின் கூட்டமைப்பாக இந்திய அரசியல் ஃபெடரல் முறையை நோக்கிப் போவதற்கான ஆதரவு என்ற அடிப்படைகளில் இதில் வேலை செய்தேன். வி.பி.சிங்கின் மொழிபெயர்ப்பாளனாக சுமார் 70 கூட் டங்களில் பேசினேன். முரசோலியில் ஒரு வருட காலம் வாராந்தர இணைப்பாக ‘புதையல்’ பகுதியை காங்கிரஸ் எதிர்ப்புப் பிரசாரத்துக்காகத் தயாரித்து வந்தேன். 

சிவாஜி கணேசன் தலைமையில் இருந்த தமிழக ஜனதா தளம் சார்பில் மண்டல் கமிஷனை ஆதரித்தும் மந்திர் கிளர்ச்சியை எதிர்த்தும் பிரசாரப் பிரசுரங்கள், கேசட்டுகள் உருவாக்கி வெளியிட்டேன். தமிழகத்தில் 1989ல் தி.மு.க. ஆட்சியைப் பிடித்ததும் மறுநாள் முரசொலி வேலையை விட்டு விலகினேன். தில்லியில் வி.பி.சிங் ஆட்சி கவிழ்ந்தபின்னர் அந்தத் தொடர்புகளிலிருந்தும் நீங்கினேன்.  இப்படி ஓரிரு முறை நேரடி அரசியலில் களப்பணி செய்தபோதும் நான் எந்தக் கட்சியிலும் உறுப்பினராகவில்லை. அதே சமயம் எழுபதுகளின் கடைசியில் கல்லூரிப் படிப்பு முடித்ததிலிருந்து இன்று வரை, பல்வேறு இடதுசாரி கட்சிகளின், குழுக்களின் மேடைகளில், முன்னணி இயக்கங்களின் கூட்டங்களில் பொதுப் பிரச்னைகள், சிவில் உரிமைகள், கலாசார உரிமைகள், மனித உரிமைகள், மகளிர் உரிமைகள் போன்றவற்றுக்காகத் தொடர்ந்து அவ்வப்போது பேச்சாளனாக இருந்து வருகிறேன். இவை தவிர எண்பதுகளிலிருந்து போபால் கொடூரம் முதல் இன்று கூடங்குளம் அணு உலை வரை வெவ்வேறு சுற்றுச்சூழல் இயக்கங்களில் பங்களிப்பவனாக இருந்து வருகிறேன்.

இப்படிப்பட்ட நான் ஏன் இப்போது ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தேன்?  

இந்தியாவில் காங்கிரஸ், பா.ஜ.க., தமிழகத்தில் தி.மு.க, அ.இ.அ.தி.மு.க. ஆகிய நான்கு கட்சிகளுக்கு எதிராக மாற்று உருவானால்தான் இந்திய, தமிழக அரசியலில் ஆரோக்கியமான மாற்றங்கள் வரமுடியும் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. இந்த மாற்றத்தை இடதுசாரி அமைப்புகள் ஏற்படுத்தியிருக்க முடியும். ஆனால் தாற்காலிக அரசியல் சிக்கல்களைச் சந்திக்கும் போக்கால், அது நடக்காமலே போய்விட்டது. தவிர ஒற்றைச் சித்தாந்த அடிப்படையில் இயங்கி மக்களைத் திரட்டுவது ஒரு பற்றாக்குறையோ என்று எனக்குத் தோன்றுகிறது.நமக்கு காந்தி, அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ், விவேகானந்தர், நாராயண குரு, பாரதி, நேரு, பகத்சிங் என்று பலரிடமிருந்தும் எடுத்துக்கொள்ள நிறைய உள்ளன என்று எப்போதும் நான் நம்புகிறேன். ஒருவரிடமிருந்து எடுக்கும்போது இன்னொருவரை நிராகரிக்கும் போக்கும், ஒருவரிடமிருந்து மட்டுமே எல்லாம் கிடைத்துவிடும் என்று பிடிவாதமாக நம்பும் மூர்க்கமும் எனக்கு உடன்பாடில்லை. எனவே ஒற்றைச் சித்தாந்த அடிப்படை இல்லாமல், திறந்த மனதுடன் அரசியலை அணுகும் வாய்ப்பு இருக்கும் கட்சியாக இன்று ஆம் ஆத்மி உருவாகியிருப்பதால், பல ஆரோக்கியமான அரசியல் அம்சங்களின் தொகுப்பாக அது வளரும் வாய்ப்பு இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது. தில்லியில் காங்கிரசுக்கும் பி.ஜே.பி.க்கும் மாற்றாக இன்னொரு சக்தி இருக்க முடியும் என்று மக்கள் நம்பிக்கையைத் தூண்டியதால் இன்று நாடு முழுவதும் ஆம் ஆத்மி மீது ஆங்காங்கே எதிர்பார்ப்பு இளைய தலைமுறையிடம் மலர்ந்திருக்கிறது. அதேபோல தமிழ்நாட்டிலும், தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக ஒரு சக்தியாக வரவேண்டியவை எதுவும் இன்னும் வளரவில்லை. வந்தவையெல்லாம் அவற்றின் குளோன்களாகவே இருப்பவை. அந்த இடத்தையும் ஆம் ஆத்மி என்ற ‘எளிய மக்கள் கட்சி’ பூர்த்தி செய்யும் வாய்ப்பிருக்கிறது. ஆம் ஆத்மியின் செயல்பாடுகள் பற்றி கடும் விமர்சனங்களை பல நண்பர்கள் என்னிடம் சொல்கிறார்கள். அதன் வருகையால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் பி.ஜே.பி. கடும் எதிர்பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறது. எனக்கும் விமர்சனங்கள் உண்டு. ஆனால் அவை ஆம் ஆத்மி வளர வேண்டும் என்ற அக்கறையினால் சொல்பவை. அது அழிய வேண்டும் என்ற ஆசையில் முன்வைப்போருடையவை அல்ல. காங்கிரஸ் கட்சிக்கு 129 வயது. பி.ஜே.பி.க்கு ஆர்.எஸ்.எஸ். தோன்றிய நாளிலிருந்து கணக்கிட்டால் 89 வயது. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 94 வயது. திராவிட இயக்கக் கட்சிகளுக்கு வயதை நீதிக்கட்சியிலிருந்து கணக்கிட்டால், 97 வயது. ஆம் ஆத்மி உருவாகி ஒரே ஒரு வருடம்தான் ஆகிறது. துடிப்பான குழந்தை இது. நல்ல போஷாக்கான உணவு தரும் பெற்றோரும் நல்ல கல்வி தரும் ஆசிரியர்களும்தான் குழந்தையைச் சிறந்த மனிதனாக உருவாக்க முடியும். அப்படிப்பட்ட அக்கறையுள்ள பெற்றோர்களாக, ஆசிரியர்களாக நாடு முழுவதும் பல துறை அனுபவம் உடையவர்களும் அங்கே இன்று இணைகிறார்கள். அதில் நானும் ஒருவன். ‘இந்தக் குழந்தை எங்கே உருப்படப் போகுது’ என்று கரித்துக்கொட்டும் எதிர்வீட்டுக்காரரின் அசல் பிரச்னை அவர் குழந்தைகள் உருப்படாமல் போய்விட்டதுதான். 

1967, 1977, 1987 என்று தேர்தல் அரசியலில் மாற்றத்துக்கான அறிகுறிகள் தோன்றிய வரிசையில் இது அடுத்த மாற்றம் தென்படும் காலம். முந்தைய மாற்றங்கள் எல்லாம் வீணானது போல இதுவும் ஆகிவிடக் கூடாது என்ற கவலையில், இதற்கான என் பங்களிப்பாக, அந்த மாற்றத்தை நோக்கி இன்னும் பலரையும் உந்த உற்சாகப்படுத்தும் சக்தியாக இருப்பதற்காகவே நான் கட்சி, தேர்தல் அரசியலில் இறங்கியிருக்கிறேன்.  இதற்கு என் தற்போதைய உடல்நிலை இடம் தருமா என்ற ஒரு கேள்விதான் என் மீது பெரும் அன்பு வைத்திருக்கும் நண்பர்கள் முன் இருக்கும் முக்கியமான கேள்வி. உண்மையில் நான் இப்போது களத்தில் இறங்குவதற்கு முக்கியக் காரணமே என் உடல்நிலைதான். அறுபது வயதாகும் நான் இப்போதைய நிலையில் இன்னும் அதிகபட்சம் பத்தாண்டுகள் இருக்கலாம். எஞ்சியிருக்கும் இந்த ஆண்டுகளில், எஞ்சியிருக்கும் என் சக்தியை, கடந்த 40 வருடங்களாக நான் அவாவிய பல்வேறு மதிப்பீடுகளுக்கான சூழல் உருவாக என்னால் இயன்றதைச் செய்துவிட்டுப் போய்விட வேண்டும் என்றே விரும்புகிறேன். நமக்குத் தொழில் எழுத்து, எழுத்துக்கு அப்பாலும் நாட்டுக்கு உழைத்தல், இமைத்திருக்கும் பொழுது வரை சோராதிருத்தல்...

1 comment:

  1. வாழ்த்துக்கள் ஐயா! உங்கள் நம்பிக்கை ஜெயிக்கட்டும்! நன்றி!

    ReplyDelete