Search This Blog

Monday, February 03, 2014

அழகிரி விவகாரம் - குழப்பம்

ஒரு வலுவான கூட்டணியை அமைத்து நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் தி.மு.க.வுக்கு அழகிரி விவகாரம் பெரிய பின்னடைவாக வந்திருக்கிறது. அதிரடி நடவடிக்கையாக அழகிரியை கட்சியை விட்டுத் தாற்காலிகமாக நீக்கியிருந்தாலும் அவரால் பல சங்கடங்களைக் கழகம் சந்திக்கும் என்று மீடியாக்கள் பீதியைக் கிளப்பி வருகின்றன. அவ்வப்போது தி.மு.க.வைக் கலக்கும் அழகிரி விவகாரத்தை எவ்வாறு கையாண்டால், கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது என்று அலசுகிறது இந்தக் கட்டுரை.

தென்மண்டல அமைப்புச் செயலாளரான மு.க.அழகிரி முறையற்ற விவாதங்களில் நேரடியாக ஈடுபட்டும் கழகச் செயல் வீரர்களைப் பணியாற்ற வேண்டாம் என்றும் குழப்பம் விளைவித்த காரணத்தால், சாதாரண உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் அவர் தாற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்," என்று பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.ஸ்டாலின் ஆதரவு பிரமுகர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் புகார் கொடுத்து வழக்கைப் பதிவுசெய்யக் காரணமாக இருந்த மதுரைப் புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த அழகிரி ஆதரவாளர்கள் ஐந்து பேரை கட்சியை விட்டு இடைநீக்கம் செய்தார் கருணாநிதி. இதுகுறித்து காலை ஏழு மணிக்கே கருணாநிதியிடம் குமுறப்போன அழகிரி நான்கு மணி நேரத்துக்குள்ளேயே தம்மைக் கட்சியை விட்டு தாற்காலிகமாக நீக்குவார்கள் என்று எதிர்பார்த்து இருக்கமாட்டார்.கருணாநிதியை அழகிரி நேரடியாகச் சந்தித்தபோது ஆவேசமான வார்த்தைகளையும் மீறிய செயல்கள் அரங்கேற்றப்பட்டதாகவும் இனியும் பொறுப்பதில்லை" என்றே அழகிரியைத் தாற்காலிகமாக நீக்கும் முடிவு எடுக்கப்பட்டதாகவும் கழகப் பிரமுகர்கள் சொல்கிறார்கள். தேர்தல் நெருங்கும் இந்தச் சூழலில் இதுபோன்ற சர்ச்சை வந்துவிட்டதே என்று படபடக்கிறார்கள் அவர்கள்.இதுபோன்ற கொந்தளிப்புகளை இனியும் கழகத்தை உலுக்க அனுமதிக்கக்கூடாது என்று புலம்புகிறார்கள். அவ்வப்போது தலைதூக்கும் இந்தப் பிரச்னையில் ஒரு நிரந்தரத் தீர்வாக, உச்சகட்ட நடவடிக்கை எடுக்க தலைவர் தயங்கக்கூடாது என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.

ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கும் அழகிரி ஆதரவாளர்களுக்கும் மதுரையில் நடக்கும் தொடர் மோதலில் இந்த சீஸனின் தொடக்கமாக அழகிரி ஆதரவாளர்களைக் கொண்ட மதுரை மாநகர தி.மு.க. கலைக்கப்பட்டது. ஸ்டாலின் ஆதரவாளர்களைக் கொண்ட புதிய பொறுப்புக் குழு போடப் பட்டது. அழகிரி ஆதரவாளர்கள் அடித்த பரபரப்புப் போஸ்டரைத் தொடர்ந்து அவர்கள் கட்சியை விட்டு இடைநீக்கம் செய்யப்பட்டார்கள்.கொதித்துப் போன அழகிரி, அவரது ஆதரவாளர்களை நீக்கியதைக் கண்டித்து பேட்டி கொடுத்தது மட்டுமல்லாமல் தே.மு.தி.க.வை வளைத்துப் போடும் முயற்சியில் இருந்த தி.மு.க.வுக்கு ஸ்பீடு பிரேக்கர் போடும்வகையில் விஜயகாந்தையும் விமர்சித்தார். இதைவிட மிக முக்கியமாக, ஸ்டாலினை ஒருபோதும் தலைவராக ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று அழகிரி சொன்னது குறிப்பிடத்தக்கது.இந்தப் பேட்டியைக் கண்டு அதிர்ச்சியடைந்த கட்சித் தலைமை என்ன நடவடிக்கை எடுப்பது என்று தெரியாமல் விழித்தது. பிறகு வெளிநாடு சென்று விட்டார் அழகிரி. இதற்கு இடையில்தான் வன்கொடுமை சட்டத்தின் கீழ் ஸ்டாலின் ஆதரவாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து கருணாநிதியுடன் அழகிரி சந்திப்பு, தாற்காலிக நீக்கம் என்று பல திருப்பங்கள் நடந்தன.தி.மு.க.வில் ஜனநாயகமில்லை; தேர்தலில் தி.மு.க. தோற்றுப் போகும்; தி.மு.க.வின் சொத்துக்களை அபகரிக்கப் பார்க்கிறார்கள்," என்று அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுக்களை வீசி, கழக வட்டாரத்தைக் கலக்கினார் அழகிரி.

அதுமட்டுமல்லாமல் தமிழகம் முழுதுமுள்ள கழகப் பிரமுகர்களைத் தொடர்பு கொண்டு தமது தரப்பு நியாயத்தைச் சொல்லி ஆதரவைத் தேடி வருகிறார். அழகிரியால் கழகத்துக்கு ஏற்பட்டுள்ள இந்தத் தலைவலி, திருகுவலியாக மாறாமல் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கவேண்டிய நிலைக்குத் தி.மு.க. தள்ளப்பட்டு இருக்கிறது.ஆனால், அழகிரி மேல் கடுமையான நடவடிக்கை எடுத்தால், தென்மாவட்டத்தில் தி.மு.க.வுக்கு ஏதேனும் பாதிப்பு வருமா என்ற சந்தேகமும் ஊசலாடிக் கொண்டு இருக்கிறது.மிசா கால சிறைவாசம் முதல் கழகத்துக்காகப் பாடுபட்டு, படிப்படியாக கழக ஏணியில் உயர்ந்தவர் ஸ்டாலின். காலவோட்டத்தில் கழகம் ஸ்டாலினை எதிர்காலத் தலைவராக ஏற்றுக்கொண்டு இருக்கிறது என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஆனால், அதேசமயம், அழகிரி கழகப் பணிக்காகத் தமது வாழ்வை அர்ப்பணித்தவர் கிடையாது. மதுரையில் முரசொலி பதிப்பைக் கவனித்துக்கொள்ள அனுபப்பட்டவர்தான் அவர். பல வருடங்கள் தமது வியாபாரம், வர்த்தகம் என்று ஈடுபட்டு இருந்தவர்தான் அவர்.ஆனால், 1992 -93ல் வைகோ விவகாரம் வெடித்தபோது தென் மாவட்டங்களில் தி.மு.க.வுக்கு ஏற்படவிருந்த பாதிப்பைக் குறைக்கும்விதமாக பலவித முயற்சிகளில் இறங்கினார் என்பது உண்மை. இருந்தும் அதற்குப் பின் அமைந்த அவரது சில நடவடிக்கைகள் எல்லாம் கழகத்துக்குப் பாதகமாகவே அமைந்துவிட்டன.2000ஆம் வருடத்தில் கட்சி விரோத நடவடிக்கைக்காக இதே போன்று தாற்காலிகமாக நீக்கப்பட்டார் அழகிரி. அதனால் கடுப்படைந்த அவர் 2001ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் மூன்று தொகுதிகளில் தி.மு.க.வைத் தோற்கடிக்கப் பாடுபட்டார் என்பது மதுரை கழகத் தொண்டர்களுக்குத் தெரிந்த விஷயம்.தலைமையுடன் உரசல் தொடர்ந்த நிலையில், 2003 தா.கிருஷ்ணன் கொலை வழக்கில், அழகிரி கைதாக, கலைஞரின் தந்தைப் பாசம், மகனை அரவணைத்துவிட்டது. அழகிரி மீண்டும் தென்பகுதி தி.மு. க.வின் முக்கிய அங்கமாகச் செயல்படத் தொடங்கினார். மதுரையில் அழகிரியின் ஆட்கள், ரவுடி ராஜ்ஜியம் நடத்துகிறார்கள் என்று பெயர்களைக் குறிப்பிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதா வெளிப்படையாகவே பேசினார்.அழகிரி ஆதரவாளர்களின் செயல்பாடுகளால், கழகத்தின் மீது மக்களுக்கு வெறுப்புதான் வளர்ந்தது. பணம் கொடுத்து வோட்டு வாங்கும் திருமங்கலம் ஃபார்முலாவை அறிமுகப்படுத்தி, தேர்தல் ஜனநாயகத்தை கேவலப்படுத்தியது அழகிரி தரப்பு தான். மாறன் சகோதரர்களுடன் மோதல் ஏற்பட்டபோது, பத்திரிகை அலுவலகத்தைக் கொளுத்தியதுடன், மூன்று பேர் இறக்கக் காரணமாக இருந்தது இந்த வன்முறைக் கும்பலே என்பதை மாறன் சகோதரர்கள் மறந் திருந்தாலும் மதுரை மக்கள் மறக்க மாட்டார்கள்.

2011ல் தி.மு.க. தோற்ற பிறகு, இந்த இரண்டரை வருட காலம் எங்கே இருந்தார் என்று தேடவேண்டிய நிலையில்தான் அஞ்சாநெஞ்சனான அழகிரி இருந்தார். இந்தக் காலகட் டத்தில்தான், அவரது ஆதரவாளர்கள் பலர் ‘இனியும் இவரை நம்பிப் பயனில்லை’ என்று ஸ்டாலின் ஆதரவாளர்களாக மாறிவிட்டனர்.  இப்போதைய நிலையில், கழகத் தொண்டர்களிடம் மத்தியில் மட்டுமல்லாமல், சாதாரண பொதுமக்கள் கூட அழகிரியின் பெயரைச் சொன்னால், தங்களது கடுப்பைக் காட்டுகிறார்கள் என்பதுதான் யதார்த்தம். இந்தச் சூழலில்தான் கழகக் குடும்பத்தில் குழப்பத்தைக் கிளப்பியிருக்கிறார் அழகிரி.தி.மு.க. தேர்தலில் தோற்றுப்போகும் என்று எப்போது அழகிரி சொன்னாரோ இந்த மோதல், அழகிரிக்கும் கட்சிக்குமான மோதலாக மாறிவிட்டது (அப்படிச் சொல்லவில்லை என்று மறுத்திருக்கிறார் அழகிரி). கட்சி தோற்கும் என்று அவர் சொன்னபோது தொண்டர்கள் கொதித்துப் போய்விட்டார்கள். இப்போது அவர் என்ன செய்கிறார் என்றால், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருக்கும் அதிருப்தியாளர்களைத் தொடர்புகொண்டு, ஆதரவு தேடி வருகிறார். அப்படி அவர் தொடர்புகொள்ளும் ஆதரவாளர்கள், கட்சிக்குத் துரோகம் செய்பவர்களாகவும் கிரிமினல் குற்றவாளிகளாகவும்தான் இருக்கிறார்கள். தலைவர் தமது மகனை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டார் என்றும் கூடியவிரைவில் சமரசம் ஏற்படும் பட்சத்தில் அழகிரி தமது ஆதரவு பிரமுகர்களுக்கு கட்சிப் பொறுப்பு மற்றும் தேர்தலில் போட்டியிட வாய்ப்புப் பெற்றுத்தருவார் என்றும் அழகிரி ஆதரவாளர்கள் கருதுகிறார்கள்.

No comments:

Post a Comment