Search This Blog

Monday, February 03, 2014

7 ஓவர் கிரிக்கெட்!

 
டெஸ்ட், 50 ஓவர், டி20க்கு அடுத்ததாக கிரிக்கெட்டுக்கு ஏழு ஓவர் மேட்ச் என்ற புதிய போட்டி அறிமுகமாகவுள்ளது. 7பிஎல் என்றழைக்கப்படும் இந்தப் போட்டி துபாயில் மார்ச் மாதத்தில் நடக்கவுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி, அஜ்மன், துபை, ஃபுஜைரா, ஷார்ஜா, ரஸ் அல்-கைமா, உம் அல்-கைவைன் ஆகிய ஏழு அணிகள் போட்டியில் பங்கேற்கின்றன. ஐபில் போல எல்லா நாட்டு வீரர்களும் பங்கேற்று ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல்-லில் தேர்வாகாத வீரர்களுக்கு 7பிஎல் நல்ல வாய்ப்பாக அமையும். ஏற்கெனவே டி20யில் சிக்ஸர்களும் ஃபோர்களுமாகப் பறக்கின்றன. ஏழு ஓவர் கிரிக்கெட்டில் கேட்கவே வேண்டாம். ஏழு ஓவர் கிரிக்கெட்டால் ஒரே பலன், மேட்ச் ஒன்றரை மணி நேரத்துக்குள் முடிந்துவிடும்.
 
2015 உலகக் கோப்பையில் தோனிதான் கேப்டனாக இருப்பார் என்று ஒருவர் சொல்லியிருகிறார். வேறு யார், தோனியேதான்! ‘அடுத்த ஒரு ஆண்டுக்குள் உலகக் கோப்பை போட்டி தொடங்கவுள்ளது. இந்திய அணியின் கேப்டனாக புதிதாக ஒருவர் தலைமை ஏற்க இது சரியான நேரம் அல்ல. உலகக் கோப்பைத் தொடருக்கு முன் 70 முதல் 90 ஆட்டங்களில் தலைமையேற்ற அனுபவம் இருந்தால்தான் கோப்பையை வெல்ல முடியும். மற்றவர்களை விட ஒரு கேப்டன் அனுபவம் நிறைந்தவராக இருக்க வேண்டும். ஓராண்டு இடைவெளிக்குள், புதிதாக ஒருவரை கேப்டனாக நியமித்து, அவர் தலையில் பொறுப்பைச் சுமத்துவது நியாயமற்றது’ என்று கூறியிருக்கிறார் தோனி. இதன்படி பார்த்தால் உலகக் கோப்பையில் தோனிதான் இந்திய கேப்டனாக இருக்கமுடியும்!ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா அணி வெல்லும் என்று எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் ஐந்து டெஸ்ட் மேட்சுகளிலும் ஜெயிப்பார்கள் என்று யாராவது நினைத்திருக்க முடியுமா? இதற்கு முந்தைய ஆஷஸ் தொடரை இழந்த ஆஸ்திரேலியா இந்தமுறை சொந்த மண்ணில் இங்கிலாந்தைப் பழிக்குப் பழி வாங்கிவிட்டது. இந்தத் தொடரில் 37 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜான்சன், தொடர் நாயகன் விருதை வென்றார். பலம் வாய்ந்த அணியான இங்கிலாந்துக்கு இது மிகப் பெரிய நெருக்கடி.

No comments:

Post a Comment