Search This Blog

Monday, January 27, 2014

அருள்வாக்கு - வாழ்க்கை என்கிறது என்ன?


பல தினுஸான சலனங்கள்தான் வாழ்க்கை. இப்போது இருப்பது நாளைக்கு இல்லை என்று மனஸாலேயும், வாக்காலேயும், சரீரத்தாலேயும், புத்தியாலேயும், பணத்தாலேயும் பல தினுஸான காரியங்களைப் பண்ணி மாறிக்கொண்டே இருப்பதுதான். ஆலோசித்துப் பார்த்தால் தெரியும், Life என்பது – Movementதான் என்று. இதிலே சரீரத்தினால் தெரியும் மூவ்மென்டுகள்தான் பளிச்சென்று தெரிவது. அதிலேயும் சரீரம் முழுவதையும், ஓரிடத்திலிருந்து இன்னொன்றுக்கு மாற்றிப் பிரயாணம் பண்ணுகின்றோமே, அதுதான் முக்கியமான ‘மூவ்மென்டாக’ த் தெரிகிறது. அதைத்தான் ‘ப்ரவேசே நிர்கமே ததா’ என்று சொல்லியிருக்கிறது. ‘ப்ரவேஸம்’ ஒரு இடத்துக்குள்ளே போவது. ‘நிர்கமம்’ ஓரிடத்திலிருந்து புறப்பட்டு வெளியில் போவது.இப்படியே எந்தவிதமான மூவ்மென்டாலும் ஏதோ ஒரு விஷயத்துக்குள் ப்ரவேச்சிக்கிறோம்; ஏதோ ஒன்றை விட்டுவிட்டுப் புறப்படவும் செய்கிறோம். இவை எல்லாவற்றிலும் ஒருத்தனுக்கு இடைஞ்சல் வராது. வாழ்க்கையைச் சலனம் என்று சொன்னேன். இன்னொரு ‘டெஃபனிஷன்’ (இலக்கணமும்) சொல்லுகிறதுண்டு. பத்திரிகைகளில் அந்த ‘டெஃபனிஷன்’தான் ரொம்பவும் அடிபடுகிறது. வாழ்க்கைப் போராட்டம், வாழ்க்கைப் போராட்டம் என்றே நிறைய கேட்கிறோம். டார்வின் தியரி, ஹெர்பர்ட் ஸ்பென்ஸர் தியரி எல்லாமே போராடிப் போராடித் தான் ஜீவகுலம் உருவாயிருக்கிறது என்றே சொல்கின்றன.யோசனை பண்ணிப் பார்த்தால் சலனமும், போராட்டமும் ஒன்றுக் கொன்று ‘கனெக்ஷன்’ உள்ளவை என்று தெரியும். யாரோ ஒரு ஜீவனுக்கு மட்டும் சலனம். மற்றதெல்லாம் சலனமில்லாமல் இருக்கிறது என்றால்தான் இந்த ஒருத்தன் தன் இஷ்டப்படி ஸுமூகமாக ஸஞ்சாரம் பண்ண முடியும். (எல்லா தினுஸு ஸஞ்சாரங்களையும்தான் சொல்கிறேன்.) ஆனால் வாஸ்தவத்தில் அப்படியா இருக்கிறது? அத்தனை ஜீவராசிகளுக்கும்தான் ஓயாத சலனமாக இருக்கிறது. அசேதன வஸ்துகளிலுங்கூட ஒரே சலனம்! ஒரு அணுவுக்குள்ளே எலெக்ட்ரிஸிடியின் வேகத்தோடு ஸதா ஸஞ்சாரம் நடந்துகொண்டே இருக்கிறது. இப்படிப் பல உயிர்களும், ஜட வஸ்துக்களும் ஒரே ஸமயத்தில் ஸஞ்சரித்துக் கொண்டிருந்தால் அவற்றுக்கிடையே மோதல்களும் உண்டானபடிதானே இருக்கும்.

No comments:

Post a Comment