Search This Blog

Friday, December 13, 2013

ஓ பக்கங்கள் - வோட்டுக்கு வேட்டு நோட்டா! ஞாநி


பழைய பாணியிலேயே இருந்து கொண்டிருக்கும் இந்திய அரசியலில் அண்மை சட்டமன்றத் தேர்தல்களில் நடந்திருக்கும் இரு புதுமைகள் மட்டுமே நம் கவனத்துக்குரியவை. ஒன்று நோட்டா. இன்னொன்று ஆம் ஆத்மி.

எல்லா வேட்பாளரையும் நிராகரிக்கும் உரிமையை ரகசியமாக வாக்குப்பதிவு இயந்திரத்தின் வழியாகவே பதிவு செய்யும் நோட்டா உரிமை இந்தத் தேர்தல்களில் தான் முதன்முறையாகச் செயல்படுத்தப்பட்டது. ‘நன் ஆஃப் தி அபவ்’ என்ற ஆங்கிலச் சொற்களின் சுருக்கமே நோட்டா. சுமார் பத்து வருடப் போராட்டத்துக்குப் பின்னர்தான் இது சாத்தியமாயிற்று. இந்தியாவில் அண்மை வருடங்களில் நடக்கும் ஒவ்வொரு தேர்தல் சீர்திருத்தமும் உச்ச நீதிமன்ற உத்தரவின் விளைவாகவே நடப்பது போலவே நோட்டாவும் நீதிமன்றத் தீர்ப்பினால்தான் செயலுக்கு வந்தது.

இதுவரை ‘49 ஓ’ என்ற பிரிவினால் அடையாளப்படுத்தப்பட்ட இந்த உரிமையைப் பயன்படுத்த வாக்குச்சீட்டில் வழி இருக்கவில்லை. வாக்குச் சாவடியில் பகிரங்கமாக எல்லா கட்சி ஏஜன்ட்டுகள் முன்னாலும் இதைச் சொல்லிக் கையெழுத்திட வேண்டியிருந்தது. பீ.யூ.சி.எல். எனப்படும் ‘மக்கள் சிவில் உரிமைக் கழகம்’ உச்ச நீதிமன்றத்தில் போட்ட வழக்கின் முடிவிலேயே இது ரகசிய நோட்டாவாக மலர்ந்தது. வேட்பாளரின் சொத்துக் கணக்கைத் தெரிவிக்கவும் அரசியல் கட்சிகள் முதலில் ஒப்புக் கொள்ளவில்லை. நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னரே ஏற்றுக் கொண்டன. அதே நிலைதான் இதிலும் இருந்தது.

இந்த முறை நோட்டாவை எத்தனை வாக்காளர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம். தமிழ்நாட்டில் நடந்த ஏற்காடு இடைத்தேர்தலில் மொத்தம் சுமார் 90 சதவிகித வாக்குப்பதிவு நடந்தது. இது வழக்கத்துக்கு மாறானது. நேரடிப் போட்டியில் இருந்த தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் என்ன செய்தேனும் வாக்காளரை வோட்டுப்போட அழைத்து வருவதில் காட்டிய தீவிரமே இதற்குக் காரணம். இதற்கு ‘நோட்டு விநியோகம்’ செய்த திருமங்கலம் பார்முலா இங்கேயும் பின்பற்றப்பட்டது தான் காரணம் என்று ம.தி.மு.க. போன்ற கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இங்கே மொத்தமாகப் பதிவான நோட்டா எண்ணிக்கை 4,431. அங்கே பல சுயேச்சைகள் வாங்கிய வாக்குகளை விட இது அதிகம்.

எனினும் ஏற்காடு தொகுதியில் யார் நோட்டாவைப் பயன்படுத்தியிருக்கக்கூடும் என்பது மர்மம் தான். இந்தத் தேர்தலில் பங்கேற்காத தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய கட்சிகளின் தலைவர்கள் யாரும் ‘நோட்டாவைப் பயன்படுத்துங்கள்’ என்று தங்கள் ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் வைக்கவில்லை. பா.ம.க. தலைவர் ராமதாஸ் மட்டும் ‘தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளையும் ஆதரிக்க வேண்டாம்’ என்று சொல்லியிருந்தார். இந்த இரு கட்சிகளும் கடந்த முறை இந்தத் தொகுதியில் பெற்ற வாக்குகள் சுமாராக 35 ஆயிரம். அத்தனை பேரும் நோட்டாவுக்குப் போடவில்லை என்பது வெளிப்படை. அவரவர் விரும்பியபடி ஏதோ ஒரு வேட்பாளருக்கே வாக்களித்திருக்கின்றனர் என்பதும் தெரிகிறது.

ராஜஸ்தானிலும் மத்தியப்பிரதேசத்திலும் நோட்டாவைப் பயன்படுத்தியவர்கள் குறைவுதான். ராஜஸ்தானில் மொத்தம் பதிவான வாக்குகளில் 1.5 சதவிகிதமும், மத்தியப் பிரதேசத்தில் 1.4 சதவிகிதமும் மட்டுமே நோட்டா வாக்குகள். நோட்டா குறைவாக விழுவதற்கான பல காரணங்களில் முதல் காரணம், ‘அதற்கென்று தனிப் பிரசார அமைப்போ, பலமோ இல்லை’ என்பதாகும். கட்சிகளின் வேட்பாளருக்குப் பிரசாரம் செய்ய அமைப்பும் பணமும் இருப்பது போல, நோட்டாவுக்குக் கிடையாது. அப்படி ஒன்று இருப்பதைத் தெரிந்து வைத்திருக்கக்கூடிய மக்கள் எண்ணிக்கையே குறைவுதான். எல்லா தொகுதிகளிலும் நோட்டா என்ற ஒரு வேட்பாளர் இருப்பதை யாரேனும் இயக்கரீதியாகப் பிரசாரம் செய்தால் மட்டுமே நோட்டாவுக்கு அதிக ஆதரவு கிடைக்க முடியும்.

சத்தீஸ்கர் மாநிலம் இதற்குச் சரியான எடுத்துக்காட்டு. அங்கே பழங்குடியினர் பகுதிகளில் இருக்கும் மாவோயிஸ்ட்டுகள் தேர்தலைப் புறக்கணிப்பதைத் தங்கள் வழக்கமான பிரசாரமாக வைத்திருப்பர். ஆனால் இந்த முறை தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்புகள் எதுவும் பெரிதாகச் செய்யப்படவில்லை. ‘வாக்குச் சாவடிகள் தாக்கப்படும்’ என்ற போலிஸ் தரப்பு எதிர்பார்ப்புகளும் பொய்யாகிவிட்டன. ஆனால் மிக அதிக அளவில் நோட்டா வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் பதிவான வாக்குகளில் 4.6 சதவிகிதம் நோட்டா வாக்குகள்.

பழங்குடி மக்கள் இருக்கும் தொகுதிகள் அனைத்திலும் சராசரியாக ஒவ்வொரு தொகுதியிலும் 4,000 நோட்டா வாக்குகள் விழுந்துள்ளன. சித்திரகூட் தொகுதியில் பத்தாயிரம் நோட்டா வாக்குகள். கொண்டே காவ்ன் தொகுதியில் மாநில பி.ஜே.பி. அமைச்சர் லதா உசேண்டி காங்கிரஸ் வேட்பாளர் மோகனை விட 5,135 வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வியடைந்திருக்கிறார். இந்தத் தொகுதியில் நோட்டா பெற்ற வாக்குகள் 6,773.

நோட்டா வாக்குகள் மிகக் குறைவாக விழுந்திருக்கும் மாநிலம் தில்லி. மொத்தப் பதிவான வாக்குகளில் 0.63 சதவிகிதம் மட்டுமே நோட்டா. இதற்கு முக்கியக் காரணம், இங்கே புதிதாக வந்திருக்கும் ‘ஆம் ஆத்மி கட்சி’ என்றே சொல்லலாம். ‘காங்கிரசும் வேண்டாம், பி.ஜே.பி.யும் வேண்டாம்’ என்று கருதக் கூடியவர்களின் வோட்டுகள் ஆம் ஆத்மி கட்சிப் போட்டியில் இருந்திராவிட்டால், நோட்டாவுக்கே போயிருக்கக் கூடியவை. ஆனால் ஒரு மாற்றாக ஆம் ஆத்மி கட்சி களத்தில் வந்து விட்டதால், இங்கே நோட்டா அதிகம் பயன்படுத்தப்படவில்லை. தில்லி மாநிலத்தில் நோட்டாவை விட குறைவான வோட்டுகளைப் பெற்றது தே.மு.தி.க வேட்பாளர்கள்தான்.

நோட்டா மேலும் அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் ஒரு சக்தியாக மாறவேண்டுமானால் இரு விஷயங்கள் முக்கியமானவை. நோட்டாவை மக்களிடையே பிரசாரம் செய்து தெரியப்படுத்த இயக்கங்களும் அமைப்புகளும் பிரசார பலமும் இருக்க வேண்டும். இரண்டாவதாக நோட்டாவுக்குப் போடும் வோட்டை, தேர்தல் ஆணையம் செல்லாத வோட்டாகக் கணக்கிடுவதை நிறுத்த வேண்டும். வேட்பாளர்களை நிராகரிப்பது உரிமை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து நோட்டா வந்த பின்னர், அந்த உரிமையைச் செல்லாத வோட்டாகக் கருதுவது தவறானது. வேட்பாளர்களில் அதிக வோட்டு பெறுபவர் வெற்றி பெறும் வேட்பாளராகச் சொல்லப்படும்போது, அவரைவிட அதிகம் வோட்டு நோட்டாவுக்கு விழுந்தால், அந்த வேட்பாளரும் நிராகரிக்கப்பட்டவராகவே கருதப்பட வேண்டுமே தவிர வெற்றி பெற்றவராகமாட்டார். இப்படிச் சில திருத்தங்கள் இருந்தால் மட்டுமே நோட்டாவின் அசல் பலம் பயன்படும். முதல் இரு இடம்பெறும் வேட்பாளர்களுக்கிடையே உள்ள வோட்டு வித்தியாசத்தை விட அதிகமாக நோட்டாவுக்கு விழும்போது, இன்னும் சரியான வேட்பாளர் களை நிறுத்தியாக வேண்டிய அவசியத்தை கட்சிகள் உணர்வார்கள்.

மக்கள் பொதுவாக எல்லா கட்சிகளும் கோளாறாக இருந்தால்கூட மொத்தமாக நிராகரிக்க விரும்புவதில்லை. இருப்பதில் ஒருவரைத் தேர்வு செய்வது அலுப்பாக இருந்தாலும், அதையே செய்து வருகிறார்கள். அப்படிப்பட்ட சூழலில் புதிதாக ஒரு மாற்று முன்வைக்கப்பட்டால், உற்சாகமாக ஆதரிக்கவும் முன்வருகிறார்கள் என்பதையே தில்லியில் ஆம் அத்மி கட்சியின் வெற்றி காட்டுகிறது.

காங்கிரசுடனும் பி.ஜே.பி.யுடனும் மக்களுக்கு இருக்கும் அலுப்பு மட்டுமே ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்கு முழு காரணமல்ல. தமிழ்நாட்டிலும் தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளுடனும் அயர்வாக இருந்தாலும், புதிதாக வருகிற மாற்றுகள் சரியாகவும் நம்பிக்கைக்கு உகந்தனவாகவும் இல்லாதபோது பழைய கொள்ளிகளே மேல் என்ற மன நிலைக்கு வந்துவிடுகிறார்கள். ஆம் ஆத்மி கட்சி இன்னும் ஒரு தேர்தலில் பங்கேற்று, அங்கே காங்கிரசுடனோ, பி.ஜே.பி.யுடனோ கூட்டணி வைக்கும் நிலைக்குச் சென்றால், அதுவும் மக்களிடையே செல்வாக்கை இழந்துவிடும். மாற்று என்றால் முழுமையான மாற்றாகத் தோன்றினால் மட்டுமே மக்கள் ஆதரிப்பார்கள்.

தில்லியில் ஆம் ஆத்மி கட்சி செய்திருக்கும் சாதனைக்கான பல காரணங்களில் பிரதானமானது, ‘அதன் தலைமை முதல் வேட்பாளர்கள் வரை’ புதியவர்கள் என்பதாகும். ஏற்கெனவே இருக்கும் அரசியல் கட்சிகளில் ஊறித் திளைத்து இன்னொரு வாய்ப்புக்காக இங்கே வரும் சந்தர்ப்பவாதிகளான பழைய முகங்கள் இதில் இல்லை என்பது மக்களால் முக்கியமாகக் கவனிக்கப்படும் அம்சங்களில் ஒன்று.

ஆம் ஆத்மி கட்சி தில்லியை அடுத்து இதர மாநிலங்களிலோ, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலிலோ இதே போல மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா என்பது சந்தேகம்தான். ஒவ்வொரு மாநிலத்திலும் மக்களை உற்சாகப்படுத்தி நம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய புதிய இளம் நேர்மையான தலைவர்கள் தேவை. ‘இந்திய அரசியல் மத்தியில் கூட்டணி இல்லாமல் முடியாது’ என்ற கட்டத்துக்கு எப்போதோ வந்துவிட்டது. அப்படியானால் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆம் ஆத்மியாருடன் கூட்டு சேர்வது என்பது முக்கியமான பிரச்னை. யாருடனும் கூட்டு சேராமல் ஒவ்வொரு மாநிலத்திலும் முற்றாகத் தனியாகவும் புதிதாகவும் மாற்று அரசியல் அமைப்பைக் கட்டி எழுப்புவது என்பது ஒரு தேர்தல் காலத்துக்குள் முடியும் செயலே அல்ல.

எல்லாவற்றுக்கும் மேலாக ஆம் ஆத்மி கட்சியின் சமூக, பொருளாதார, உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கைகள், திட்டங்கள் என்ன என்று எதுவும் தெளிவாக இன்னும் மக்கள் முன்வைக்கப்படவில்லை. இடஒதுக்கீடு, மொழிக் கொள்கை, பாகிஸ்தான், சீனா, இலங்கை தொடர்பான உறவுகள், மற்றும் அமெரிக்கா சார்பான பொருளாதாரக் கொள்கையா, சோஷலிசமா, விவசாயக் கொள்கை, அணுசக்தி, நலத்திட்டங்கள், இலவச திட்டங்கள் இவற்றைப் பற்றியெல்லாம் தெளிவான, வெளிப்படையான நிலைகளை அறிவிக்காமல் அடுத்தகட்ட அரசியல் கட்சியாக ஆம் ஆத்மி வளரவே முடியாது. இளைஞர்களின் அதிருப்தி, கோபம், மக்களின் விரக்தி ஆகியவற்றுக்கு வடிகாலாக மட்டுமே இப்போதைக்கு தில்லியில் அது உருவாகியிருக்கிறது.

ஆம் ஆத்மி வளராவிட்டாலும், அதன் வருகை இதர கட்சிகளுக்கு அளித்திருக்கும் எச்சரிக்கையினால் இதரக் கட்சிகள் கொஞ்சமேனும் சுயவிமர்சனமும் திருத்தங்களும் செய்தால் கூட இந்திய அரசியலுக்கும் மக்களுக்கும் லாபம்தான். இந்தச் சட்டமன்றத் தேர்தல்களில் நடந்திருக்கும் இரு புதுமைகளும்- நோட்டா, ஆம் ஆத்மி கட்சி - சரியான திசை நோக்கிய ஆக்கபூர்வமான வரவுகள்தான். ஆனால் முழுமையான தீர்வுகள் அல்ல.



No comments:

Post a Comment