Search This Blog

Friday, November 08, 2013

விராத் கோலி - ரோஹித் சர்மா


உங்களுடைய 100 சதங்கள் சாதனை, யாரால் முறியடிக்கப்படும் என்று நினைக்கிறீர்கள்?’ என்று கேட்டதற்கு சச்சின் அளித்த பதில் : ‘என் சாதனையை விராத் கோலி, ரோஹித் சர்மா முறியடிக்க வாய்ப்புள்ளது.’ ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சச்சின் இல்லையே என்று ஒரு நிமிடமாவது யோசித்தீர்களா? ஒருநாள் போட்டியில், சச்சின் இல்லாத குறையை கோலி, ரோஹித் போன்ற இளம் வீரர்கள்தான் தீர்த்து வைக்கிறார்கள். இந்திய கிரிக்கெட் அணி அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கு இவ்விருவரின் பங்களிப்பு மிக அவசியமாக இருக்கிறது. 2008ம் வருடம், விராத் கோலிக்குப் பல கதவுகளைத் திறந்தது. அவர் தலைமையிலான U19 அணி உலகக் கோப்பையை வென்றது. அந்த வருடம்தான் இலங்கைத் தொடருக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் தொடரில் ஓரளவு சிறப்பாகவே ஆடினார். நம்பிக்கை அளிக்கும் விதத்தில் இருந்தது. ஆனால் அடுத்த தொடர்களில் இடம் பெறவில்லை. ஒரு வருடம் இந்திய அணியில் கோலி இல்லை. கம்பீருக்கு காயம் ஏற்பட்டபோது மீண்டும் அணிக்குள் நுழைந்தார். பிறகு, கோலியை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஐ.பி.எல்., கோலியின் திறமையைக் கொண்டுவந்த மாதிரி அவருடைய ஆக்ரோஷமான பக்கத்தையும் காண்பித்தது. இளமைத் துடிப்பு, கோபம், பொறுப்பற்றத்தன்மை போன்றவற்றால் திறமை வீணாகிவிடுமோ என்று பலரும் பயந்தார்கள். ‘கிரிக்கெட்டை விடவும் தான் பெரிய ஆள் என்று கோலி நினைத்துக் கொண்டிருக்கிறார்,’ என்று ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜென்னிங்ஸ் ஒருமுறை சொன்னது கோலியிடம் மனமாற்றத்தை ஏற்படுத்தியது. விமர்சனங்களைப் பக்குவமாகக் கையாண்டார். ‘நான் செய்தது தவறுதான். திருந்திவிட்டேன்’ என்று பேட்டி கொடுத்தார். நியூசிலாந்துடனான ஒருநாள் தொடரில் மிகச் சிறப்பாக ஆடி ரோஹித் சர்மாவை முந்திக்கொண்டு 2011 உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்தார். இறுதி ஆட்டத்தில் சச்சினும் ஷேவாக்கும் முதலிலேயே அவுட் ஆனபின்பு, கம்பீருடன் ஜோடி சேர்ந்த கோலி, மேலும் விக்கெட்டுகள் இழக்காமல் பார்த்துக் கொண்டது, இந்தியா கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக அமைந்தது. இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் சென்று மிக மோசமாக டெஸ்டுகளில் தோற்றபோது, செஞ்சுரி அடித்த ஒரே பேட்ஸ்மேன், கோலி. 

சிபி முத்தரப்புத் தொடரில் அடித்த செஞ்சுரிகளால் அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்தார். தமக்கு முன்னால் ஆடவந்த ரைனா, ரோஹித் சர்மாவை கடந்து சென்றது இந்தத் தருணத்தில்தான். இலங்கையுடனான 3 ஒருநாள் ஆட்டங்களில் தொடர்ந்து செஞ்சுரிகள் அடித்தார். (அந்தச் சமயத்தில் 5 ஆட்டங்களில் 4 செஞ்சுரிகள் அடித்தார்.) இப்போது ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் தொடரில், அதிரடியாக அடித்த 2 செஞ்சுரிகளும் கோலியை உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக மாற்றிவிட்டது. ஐ.சி.சி. தரவரிசைப் பட்டியலில் கோலிதான் நெ.1.சச்சினின் டெஸ்ட் சாதனைகளை இங்கிலாந்தின் குக் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘கோலியால் சச்சினின் ஒருநாள் செஞ்சுரி சாதனைகளைத் தாண்ட வாய்ப்புண்டு’ என்று மதிப்பிடுகிறார் கவாஸ்கர். ‘சச்சின் ஓய்வு பெறுகிறார் என்று ஆஸ்திரேலியர்கள் சந்தோஷப்பட வேண்டாம். அவருடைய வாரிசான கோலி அந்த இடத்தை நிரப்பிவிட்டார். சமீபத்திய இரண்டு செஞ்சுரிகளும் ஷார்ஜா செஞ்சுரிகளுக்குச் சமம்’ என்கிறார் ஐயன் சாப்பல். இது கோலியின் காலம்.

தோனிக்கு அடுத்ததாக இந்திய அணியின் கேப்டனாகப் போகிறார் கோலி. துணைத்தலைவர் பதவிக்கு ஷேவாக், கம்பீர், ரைனா போன்றோர் நியமிக்கப்பட்டபோது அவர்கள் தோனிக்கு மாற்றாக இருப்பார்கள் என்று எண்ணத் தோன்றவில்லை. ஆனால், கோலிக்கு ஒரு கேப்டனாக நிறைய அனுபவங்கள் உண்டு. ஏற்கெனவே U19 அணி, ஐ.பி.எல்., ரஞ்சி அணிகளுக்குத் தலைமை தாங்கியிருக்கிறார். இந்தியக் கிரிக்கெட்டில் கோலியை விடவும் நம்பிக்கை அளிக்கிற ஒரு கிரிக்கெட்டர் இல்லை.கடந்த ஆறேழு வருடங்களில், கொடுக்கப்பட்ட எல்லா வாய்ப்புகளையும் வீணடித்து, ஆனால் தொடர்ந்து அணியில் நீடித்தபோது, ரோஹித் சர்மாவால் எரிச்சலடையாத இந்திய ரசிகரே இல்லை என்று சொல்லலாம். ரோஹித் சர்மாவை என்ன செய்வது என்று பி.சி.சி.ஐ.யும் நீண்ட நாளாகக் கையைப் பிசைந்து கொண்டிருந்தது. வாய்ப்பு அளிக்கப்படும் போதெல்லாம் வீணடித்து விடுவார். ஆனால், அவ்வப்போது சிறிய அணிகளுடனும் ஐ.பி.எல்.லிலும் நன்றாக ஆடி தம் இருப்பை உறுதி செய்துகொள்வார். சாம்பியன்ஸ் டிராபி வரை இப்படித்தான் ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கை கழிந்தது. சாம்பியன்ஸ் டிராபியில் முதலில் விஜயும் தவானும்தான் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆடுவதாகத் திட்டம். இதை தோனியும் உறுதி செய்திருந்தார். ஆனால் விஜயின் கெட்ட நேரம், பயிற்சி ஆட்டங்களில் சரியாக ஆடவில்லை. இதனால் ஒரு பரீட்சார்த்த முயற்சியாக ரோஹித் சர்மா தொடக்க ஆட்டக்காரராக அனுப்பப்பட்டார். ஆச்சர்யமாக, முதன்முறையாக மிகப்பெரிய போட்டியில், மிகப்பெரிய அணிகளுடன் பிரமாதமாக ஆடினார். ரோஹித்தும் தவானும் அருமையான தொடக்கம் கொடுத்து இந்தியா பல மேட்சுகள் ஜெயிக்கக் காரணமாக இருந்தார்கள். இறுதியில், இத்தனை நாட்களாகத் தம்மைச் சகித்துக் கொண்டவர்களுக்காக ரோஹித் அளித்த பரிசுதான், இரட்டைச் சதம். ரோஹித் சர்மாவை ரசிகர்கள்தான் வெறுத்தார்கள். ஆனால், கிரிக்கெட் வட்டாரங்களில், ரோஹித் சர்மா என்றாலே வாயைப் பிளப்பார்கள். ஸ்டைலான ஸ்டிரோக்குகள், தொழில்நுட்பரீதியில் சரியாக ஆடுவது, எவ்வளவு மெதுவாக ஆடினாலும் பிறகு ஸ்டிரைக் ரேட்டைச் சரிசெய்துகொள்வது போன்ற பலங்கள் ரோஹித்துக்கு ஆதரவாக இருக்கின்றன. ரோஹித்தின் வெற்றியில் அதிகம் சந்தோஷப்படுகிறார் கோலி. ‘இந்திய அணியில் உள்ள இளைஞர்களிலேயே மிகவும் திறமையானவர் ரோஹித் சர்மாதான். பேட்டிங் ஆர்டரை அடிக்கடி மாற்றியதால் சரியாகத் தன் திறமையை வெளிப்படுத்தமுடியாமல் இருந்தார். இப்போது தொடர்ந்து ஓபனராக ஆடுவதால், தன் திறமையைச் சரியாகப் பயன்படுத்துகிறார்’ என்கிறார். 

தம் சாதனைகளை ரோஹித் சர்மா முறியடிப்பார் என்று சச்சின் சொன்னபோது பலருக்கும் அது வேடிக்கையாக இருந்தது. ஆனால் இன்று மூன்றாவது இந்தியராக ஒருநாள் ஆட்டத்தில் இரட்டைச் சதம் அடித்து, சச்சினின் ஒருநாள் ஸ்கோரையும் தாண்டிச் சென்றிருக்கிறார்.

1 comment: