Search This Blog

Friday, November 01, 2013

அருள் வாக்கு - மருந்தை விட பத்தியம் முக்கியம்!

குழந்தைப் பருவத்திலேயே ஒழுங்கில் கொண்டு வந்து விடவேண்டும். ஒழுக்கத்திற்கு முதல் அங்கமாக என்ன வேண்டும்? பணிவு, அடக்கம், விநயம். கட்டுப்பாடு இருந்தால்தான் ஒழுக்கத்தோடு முன்னேற முடியும். கட்டுப்பட்டு நடப்பதற்கு அடக்கம் முதலில் வேண்டும். அஹங்காரம் போனால்தான் அடக்கம் வரும். ஸகல சீலங்களுக்கும் அடிப்படையாக இருக்க வேண்டியது விநயம்தான்.

மருந்தைவிட பத்தியம் முக்கியம். கல்வி என்கிற மருந்தைவிட விநயம் என்ற பத்தியம் மாணாக்கனின் பிரதான லக்ஷணமாக வைத்தார்கள். ‘விநயமுடையவன்’ என்ற பொருள் கொண்டதான ‘விநேயன்’ என்றே மாணாக்கனுக்குப் பேர். இந்த விநயகுணம் வருவதற்காகவேதான் முக்கியமாக அவனை குருகுலவாஸம் என்று ஒரு ஆசார்யனிடத்திலேயே வாழும் படியாகக் கொண்டு விட்டார்கள். எட்டு வயசுக்குள் உபநயனம் (பூணூல் கல்யாணம்) பண்ணி குருகுலத்துக்கு அனுப்பினார்கள்.  உபநயனம் என்றால் என்ன? ‘நயனம்’ என்றால் ‘அழைத்துப் போவது’. கண்ணில்லாதவனை இன்னொருத்தன்தான் அழைத்துப்போக வேண்டியிருக்கிறது. இதிலிருந்து கண்தான் நம்மை அழைத்துப் போகிற தென்று தெரிகிறது. எனவேதான் அதற்கு நயனம் என்று பேர். ‘உப’ என்றால் ‘ஸமீபத்தில்’ என்று ஒரு அர்த்தம். ‘உபநயனம்’ என்றால் ‘ஸமீபத்தில் அழைத்துப் போகிறது’. எதற்கு, அல்லது யாருக்கு ஸமீபத்தில்? குருவுக்கு ஸமீபத்தில்தான்.இதுவரை குழந்தையாக மனம் போனபடி விளையாடிக் கொண்டு இருந்தவன் இப்போதுதான் ஒரு பொறுப்போடு கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதான ஒரு ஆச்ரமத்தை ஏற்கிறான். இங்கே ஆச்ரமம் என்றால் பர்ணசாலை என்று அர்த்தமில்லை. வாழ்க்கையில் ஒரு நிலை என்று Stage of life என்று அர்த்தம். இந்த முதல் ஆச்ரமத்துக்கு பிரம்மசர்ய ஆச்ரமம் என்று பெயர். இங்கே குருதான் முக்கியம்.

முதல் ஆச்ரமத்தில் இவனுக்கு ஸகலமுமாக இருப்பது குருதான். கடைசியில் ஸந்தியாஸ ஆச்ரமத்திலும் இன்னொரு குரு வருகிறார். இப்போது போட்ட பூணூலைக் கத்தரித்துப் போடுவதற்கு அந்த குரு வந்தாக வேண்டும். முதல் குரு சொல்லிக்கொடுத்த உபநிஷத் லக்ஷ்யமான பிரம்மத்தை இவன் ஸாக்ஷாத்காரம் பண்ணுவதற்கு ஸஹாயம் செய்வதற்காக அந்தத் துறவியான குரு வருகிறார். ‘குரு பரம்பரை’ என்று நாம் நமஸ்காரம் பண்ணுவதெல்லாம் அந்த ஸந்நியாஸி குருமார்களைத்தான்.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

No comments:

Post a Comment