Search This Blog

Friday, October 11, 2013

சுஜாதாவின் கற்பனையில் பிறந்த ‘எந்திரன்’


எழுத்தாளர் சுஜாதாவின் கற்பனையில் பிறந்த, இயக்குனர் ஷங்கரின் கைவண்ணத்தில் எழுந்த ‘எந்திரன்’ படத்தில் வந்த ‘சிட்டி’யை நினைவிருக்கிறதா? அந்த ‘சிந்திக்கும் எந்திரனை’ நிஜமாகவே உருவாக்கியிருக்கிறார் ஒரு விஞ்ஞானி. அவர்தான் ஜெகன்நாதன் சாரங்கபாணி. தமிழ்நாட்டுக்காரர். அமெரிக்க மிஸ்சோரி பல்கலைக்கழகத்தில் நீண்ட நாட்களாக ஆராய்ச்சிப் பணியிலிருப்பவர். ரோபோக்களை வடிவமைப்பதிலும், அதை மேம்படுத்துவதிலும் உலகின் பல இடங்களில் ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் அந்த ஆராய்ச்சியில் முன்னணியில் இருப்பது இவர்தான். சொன்னதைச் செய்வது ரோபோ. ஆனால் அது சொல்லாமலேயே ‘மனிதனைப் போல தன்னிச்சையாகச் சிந்தித்து செயல்பட வைக்கமுடியுமா?’ என்பது தான் இவரது ஆராய்ச்சி. நீண்ட காலத் தொடர் முயற்சிகளுக்குப் பின்னர் இவரது தலைமையிலான குழுவினர் உருவாக்கியிருக்கிறார்கள் ரோபோக்களுக்கான மூளையை. மனித மூளையில் இருக்கும் கட்டுப்பாட்டுக் கேந்திரத்தைப்போல வடிவமைக்கப்பட்ட ஒரு ‘குட்டி கம்ப்யூட்டர் மூளை’ பொருத்தப்பட்ட ரோபோ மனிதனைப் போலவே சிந்தித்து, தேவையானதைப் புரிந்து கொண்டு வேலைகளைச் செய்யும். இவரது தலைமையில் இயங்கும் 14 ‘ரோபோடிக்ஸ்’ விஞ்ஞானிகளின் குழுதான் இதைச் சாதித்திருக்கிறது. இந்த வகை ரோபோக்களுக்குச் செய்ய வேண்டிய பணிகளையும் இலக்குகளையும் சொல்லி விட்டால் அதைப் புரிந்து கொண்டு தேவையானதைச் செய்து கொள்ளும். 

ரோபோக்களின் இந்த அலசும், சிந்திக்கும் திறன்களைப் படிப்படியாக உயர்த்துவதற்கான ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து கொண்டிருக்கும் ஜெகன்நாதன், வரும் காலங்களில் ரோபோக்களால் மனிதனைப் போலச் சிரிக்க முடியும், கோபப்பட முடியும், செயற்கையாக அமைக்கப்பட்ட ‘ஃபைபர் முக’த்தில் உணர்வுகளைக் கூடக் காட்டமுடியும்" என்கிறார். சொல்லாதவற்றையும் புரிந்து கொண்டு செயலாற்றும் ரோபோக்களை உருவாக்குவதுதான் எங்கள் ஆராய்ச்சியின் இலக்கு" என்று சொல்லும் ஜெகன்நாதன் சாரங்கபாணி அமெரிக்கவாழ் தமிழர். முதல் டாக்டரேட் பெற்றவுடனேயே முழுநேர ஆராய்ச்சிப் பணிகளை விரும்பி ஏற்ற இவர் கம்ப்யூட்டர் சயின்ஸை தொடர்ந்து ‘ரோபோடிக்ஸ்’ஸில் ஆர்வம் அதிகமாகி புதிய படைப்புகளை உருவாக்கி அதற்கான காப்புரிமைகள் பெற ஆரம்பித்தார். இப்படி இதுவரை இவர் பெற்றிருப்பது 20 காப்புரிமைகள். போயிங் போன்ற பல பெரிய நிறுவனங்களிலும், அமெரிக்க ராணுவத் துறையிலும் அவை பயன்படுத்தப்படுகின்றன. 109 ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், பல புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். இவரிடம் ஆராய்ச்சி மாணவராக இருப்பதே மிகப்பெரிய கௌவரமாகக் கருதப்படுவதால் உலகின் பல நாடுகளின் ஆராய்ச்சி மாணவர்கள் இவரிடம் சேரக் காத்திருக்கின்றனர். ‘இந்தத் துறையில் சாதிக்க இன்னும் பல வாய்ப்புகள் இருக்கின்றன, வாருங்கள்’ என ஆர்வமுள்ளவர்களை அழைக்கிறார். 

ரமணன்

No comments:

Post a Comment