Search This Blog

Saturday, September 21, 2013

அசாருதீன், ஹான்ஸி குரோனியே - வீணாகிப் போன திறமை!

 
‘40 லட்சத்துக்காக ஏன் சூதாட்டத்தில் ஈடுபட வேண்டும்? ஒரு டெஸ்ட் தொடரில் அந்தப் பணத்தைச் சம்பாதித்துவிடலாம். மூன்று டெஸ்ட் மேட்சுகளில், 20 விக்கெட்டுகள் எடுத்தால் பணம் இரட்டிப்பாகக் கிடைக்கும். ஒரு ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக பந்து வீசினால் பத்து மடங்கு பணம் கிடைத்திருக்குமே! ஸ்ரீசாந்த் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தால் அதைவிடவும் ஒரு முட்டாள்தனம் இல்லை’ என்று சமீபத்தில் ஸ்ரீசாந்தின் சூதாட்ட வழக்கு தொடர்பாக மிகவும் மனம் வருந்திப் பேசினார் கௌரவ் கங்குலி.
 
அசாருதீன், ஹான்ஸி குரோனியேவுக்கு ஆயுட்காலத் தடை விதிக்கப்பட்டபோது, இனிமேல் கிரிக்கெட்டில் ஃபிக்ஸிங்கே இருக்காது என்கிற நம்பிக்கை வந்தது. சமீபத்தில், 3 பாகிஸ்தான் வீரர்கள் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டுச் சிறைத்தண்டனை பெற்றபோதும்கூட, ஃபிக்ஸிங் என்கிற நச்சுக்கிருமி முற்றிலும் ஒழிந்துவிடும், இனி வீரர்கள் தவறு செய்யப் பயப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தண்டனையை எவ்வளவு கடுமையாக்கினாலும் ஃபிக்ஸிங்கை ஒழிக்க முடியாதோ என்கிற கேள்வி ஸ்ரீசாந்த்தின் வாழ்நாள் தடைக்குப் பின் தோன்றுகிறது. கிரிக்கெட்டிலிருந்து மேட்ச் ஃபிக்ஸிங், ஸ்பாட் ஃபிக்ஸிங் போன்ற அபாயங்களை ஒழிப்பது அவ்வளவு சுலபமல்ல என்பதுதான் நாளுக்கு நாள் கிடைக்கும் சான்றுகளிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.ஐ.பி.எல். போட்டியின்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக (பணம் பெற்றுக் கொண்டு குறிப்பிட்ட ஓவரில் ரன்களை வழங்க ஒப்புதல் அளித்ததற்காக), ஐ.பி.எல்.-லின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் ஆகியோருக்கு வாழ்நாள் தடையும் அமீத் சிங்குக்கு 5 ஆண்டுகள் மற்றும் சித்தார்த் திரிவேதிக்கு ஒரு ஆண்டும் தடை விதித்துள்ளது, பி.சி.சி.ஐ. பி.சி.சி.ஐ.-யின் ஊழல் தடுப்புப் பிரிவுத் தலைவர் ரவி சவானி தலைமையிலான ஒரு நபர் குழு முன் வைத்த முடிவுகளைக் கொண்டு இந்தத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. 
 
மனோஜ் பிரபாகர் கொடுத்த ஒரு தகவலிலிருந்து இந்தியாவின் மேட்ச் ஃபிக்ஸிங் அத்தியாயம் தொடங்குகிறது.1997ல், இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகர், 1994ல் பாகிஸ்தானுக்கு எதிராக மோசமாக விளையாடுவதற்காக சக வீரர் ஒருவர் தமக்கு 25 லட்சம் ரூபாய் தந்ததாக ஒரு பத்திரிகையில் தெரிவித்திருந்தார். பிறகு, அந்த வீரரின் பெயர், கபில் தேவ் என்று அறிவித்தபோது, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரிய அதிர்ச்சி அடைந்தார்கள்.  அடுத்த பேரதிர்ச்சியைக் கொடுத்தவர் ஹான்ஸி குரோனியே. இந்திய சூதாட்டக்காரர்களிடம் தொடர்பு கொண்டதாக ஹான்ஸி குரோனியேமீது வழக்குப் பதிவு செய்தது தில்லி காவல்துறை. உண்மையைக் கண்டறிய தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம், கிங்ஸ் கமிஷனை நியமித்தது. அப்போது, ‘1996 கான்பூர் டெஸ்ட் நடந்த சமயத்தில், இந்திய அணியின் கேப்டன் முஹமது அசாருதீன், முகேஷ் குப்தா என்கிற சூதாட்டக்காரரை அறிமுகம் செய்து வைத்தார். சூதாட்டத்துக்காக சில மேட்சுகளில் மோசமாக ஆடினேன், என் அணியிலுள்ள சில வீரர்களையும் மோசமாக ஆட நிர்ப்பந்தித்தேன்’ என்று வாக்குமூலம் அளித்து கிரிக்கெட் உலகையே கிடுகிடுக்கவைத்தார் குரோனியே. பிறகு, 2002ல், விமானத்தில் செல்லும்போது, விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்தார். 
 
இந்தியாவில் மேட்ச் ஃபிக்ஸிங் வழக்கு, சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது.  

கே. மாதவன் தலைமையில் நடந்த விசாரணையின் முடிவில், அசாருதீன், அஜய் ஜடேஜா, மனோஜ் பிரபாகர், அஜய் சர்மா ஆகிய வீரர்கள், சூதாட்டக்காரர்களுக்கு ஆதரவாக இருந்து 3 ஒருநாள் ஆட்டங்களை மேட்ச் ஃபிக்ஸிங் செய்தார்கள் என்று தீர்ப்பு எழுதப்பட்டது. இதைத் தொடர்ந்து அசாருதீனுக்கும் அஜய் சர்மாவுக்கும் ஆயுட்காலத் தடை விதிக்கப்பட்டது. ‘அசாருதீன் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் தெளிவாக உள்ளன’ என்று பி.சி.சி.ஐ.யின் நடவடிக்கைகளுக்கு விளக்கம் கொடுத்தார் அப்போதைய பி.சி.சி.ஐ. தலைவரான ஏ.சி. முத்தையா. அஜய் ஜடேஜாவுக்கும் மனோஜ் பிரபாகருக்கும் 5 ஆண்டுகாலத் தடை கிடைத்தது. பாகிஸ்தானிலும் ஃபிக்ஸிங் புயல் கடுமையான விளைவுகளை (அப்போதே) ஏற்படுத்தியது. சலிம் மாலிக்குக்கு ஆயுட்காலத் தடை விதிக்கப்பட்டது.
 
ஆனால், நீதிமன்றத்தின் முன்பு எல்லாப் பரபரப்புகளும் ஓய்ந்துபோயின. காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தேர்தலில் ஜெயித்து மக்களவை உறுப்பினர் ஆனார் அசாருதீன். பிறகு, சென்ற வருடம், ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றம், அசாருதீன் மீதான ஆயுட்காலத் தடைக்கு வலுவான ஆதாரங்கள் இல்லை என்கிற காரணம் சொல்லி, தடையை நீக்கி உத்தரவிட்டது. ஜடேஜாவும் தில்லி உயர் நீதிமன்றத்தால் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார். பிறகு, தில்லி, ராஜஸ்தான் ரஞ்சி அணிகளின் கேப்டனாகவும் சில காலம் ஆடினார். இன்றைக்கும் அவர் ஒரு கிரிக்கெட் நிபுணராக மதிக்கப்படுகிறார்.  

இவர்களைத் தொடர்ந்து, ஸ்ரீசாந்த்துக்கு விதிக்கப்பட்டுள்ள ஆயுட்காலத் தடையும் வருங்காலத்தில் ஒன்றுமில்லாமல் போகவும் வாய்ப்பிருக்கிறது. 
 
‘ஸ்ரீசாந்துக்கும் சூதாட்டத் தரகருக்கும் இடையே உள்ளதாகக் கூறப்பட்ட தொடர்புக்கு வலுவான ஆதாரம் இல்லை என்று கூறித்தான் நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது. எனவே இந்தத் தடை நீதியின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானது. ஒரு வழக்கு தொடர்பாக, நீதிமன்றம்தான் இறுதி முடிவு எடுக்க முடியும், என்று தெரிவிக்கிறார் ஸ்ரீசாந்தின் வழக்கறிஞர் ரிபெக்கா ஜான்.  ‘யாருடைய ஆதரவும் இல்லாமல்தான் கடந்த ஒன்பது ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வந்துள்ளேன். இந்தப் பிரச்னைக்குப் பிறகாவது ஆதரவு கிடைக்குமா என்று எதிர்பார்த்தேன்; ஆனால் கிடைக்கவில்லை,’ என்று ஸ்ரீசாந்த் பேசும்போது பாவமாகத்தான் இருக்கிறது. மிகச் சிறந்த ஒரு திறமையை பணத்தாசை தின்றதா அல்லது சூழ்ச்சியால் அது வஞ்சிக்கப்பட்டதா என்கிற சந்தேகங்களுக்கு நீதிமன்றம்தான் விடை சொல்ல வேண்டும். அப்படியே கறைபடியாதவராக ஸ்ரீசாந்த் அறிவிக்கப்பட்டாலும் அவரால் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்கமுடியுமா என்பது சந்தேகம்தான். இனி அவருக்கு வெள்ளித்திரை, சின்னத் திரை, வியாபாரம் போன்றவைதான் கைகொடுக்கப் போகின்றன. ஆரம்பம் முதலே கிரிக்கெட் தவிர இதர பிரச்னைகளுக்காக மட்டுமே அதிகமாகப் பேசப்பட்டு வந்த ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் வாழ்க்கை, அதேபோலொரு கிரிக்கெட் அல்லாத ஒரு பிரச்னைக்காக முடிந்ததை எண்ணி வேதனைப்படவே முடிகிறது. இன்னமும் இதுபோன்ற எத்தனை எத்தனை திறமைகள் பேராசையால் வீணாகப் போகின்றனவோ!
 
 
ச.ந.கண்ணன்

No comments:

Post a Comment