Search This Blog

Friday, September 06, 2013

ஓ பக்கங்கள் - வரலாறு சொல்லும் வெர்செய்ல்ஸ் அரண்மனை! ஞாநி


பாரீசிலும் ரோமிலும் பிக்பாக்கெட் பயம் அதிகம் என்ற கருத்து டூரிஸ்ட்டுகளிடையே பரவலாக இருக்கிறது. கமல்ஹாசன் இதை ‘மன்மதன் அம்பு’ படத்தில் ஒரு காட்சியின் மூலம் பிரதிபலித்திருப்பார். இப்படி பிக்பாக்கெட் அடிப்பவர்கள் அகதிகள்தான் என்பதே பொது நம்பிக்கை.எந்தச் சமூகத்திலும் ‘வந்தேறிகள்’ என்று சிலர் அடையாளப் படுத்தப்படுவார்கள். சமூகத்தின் முன்னேற்றத்துக்கு இவர்களுடைய பங்களிப்பு அங்கீகரிக்கப்படாவிட்டாலும் கூட, சமூகத்தில் இவர்களால் ஏற்பட்ட தீங்குகள் எப்போதும் நினைவுபடுத்தப் பட்டுக் கொண்டே இருக்கும். இது உலகம் முழுவதும் எல்லா கலாசாரங்களிலும் சமூகங்களிலும் நிலவும் மனித இயல்பு.ஐரோப்பா நெடுக இதன் வெளிப்பாடுகளைப் பார்க்க முடியும். பிரான்சிலும் இத்தாலியிலும் டூரிஸ்ட்டுகளிடம் பிக்பாக்கெட்டுகள் ஜாக்கிரதை என்று சொல்லப்படுவதற்குப் பின்னணியில் இந்த அகதி அரசியலும் கலந்திருக்கிறது.பிற நாடுகளிலிருந்து அகதிகளாக வந்து தஞ்சம் பெற்று அரசு உதவிகளை அடைந்து வாழ்க்கை நடத்துவோரில் சிலர் குற்றங்களில் ஈடுபடுவது என்பது ஆச்சர்யமானதல்ல. உள்ளூர் சமூகத்தில் எப்படி ஒரு சதவிகிதத்தினர் குற்றவாளிகளாக இருப்பார்களோ அதேபோல அகதிகளாக வருவோரிலும் சிலர் இருக்கத்தான் செய்வார்கள். ஆனால் நடக்கும் குற்றங்களுக்கெல்லாம் இந்த அகதிகள் மீது பழி போடுவது என்பது உள்ளூர் அரசியலுக்கு வசதியானதாகும்.

பிரான்சில் நான் உரையாடிய பலரிடம் இந்தத் தாக்கம் தெரிந்தது. கிழக்கு ஐரோப்பாவிலிருந்தும் முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளிலிருந்தும் புலம்பெயர்ந்து வந்தோர்தான் பல பிக்பாக்கெட், வழிப்பறிக் குற்றங்களுக்குக் காரணம் என்றும், இலங்கையிலிருந்து அகதிகளாக வந்த புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள்தான் போதைப் பொருள் கடத்தல், குழுச் சண்டைகள் போன்ற குற்றங்களுக்குப் பொறுப்பு என்றும் கருத்துகள் நிலவுகின்றன. இப்படிப்பட்ட அரை உண்மைகள்தான் சமூக மனத்தில் எந்த இனத்தைப் பற்றியும் ஒரு பிம்பத்தைக் கட்டமைப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன. தமிழ் நாட்டில் கூட அண்மைக் காலங்களில் பீஹார், ஜார்கண்ட், நேபாளம் ஆகிய இடங்களிலிருந்து ஏராளமான உடல் உழைப்பாளிகள் பணிபுரிய புலம் பெயர்ந்து வந்த நிலையில், கொலை, கொள்ளைக் குற்றங்கள் பலவற்றுக்கும் வடவர்களே பொறுப்பு என்ற பிம்பத்தை போலீசும் மீடியாவும் உருவாக்கத் தொடங்கியது நினைவிருக்கலாம்.  என்னுடைய 30 நாள் ஐரோப்பா சுற்றுப் பயணத்தில் எந்த இடத்திலும் எனக்கு பிக்பாக்கெட் வழிப்பறிச் சிக்கல்கள் எதுவும் ஏற்படவில்லை.பொதுவாக இந்தியாவோடு ஒப்பிடும்போது மேலைநாடுகளில் மக்கள்தொகை குறைவு என்பதும் அதனால் பொது இடங்களில் நெரிசல் குறைவு என்பதும் உண்மையானாலும், டூரிஸ்ட்டுகள் வரும் இடங்கள் அப்படி இல்லை. மியூசியங்களைப் பார்க்க, பெரிய கியூ வரிசைகள் இருக்கின்றன. வெர்செல்ஸ் அரண்மனையைக் காணவும் வாடிகன் ஆலய வாசலிலும் கிலோமீட்டர் கணக்கில் கியூ நிற்கிறது. பல டூரிஸ்ட் இடங்களில் உணவகங்களில் உட்கார இடம் கிடைக்கக் காத்திருக்க வேண்டும். மிக முக்கியமாக ஐரோப்பாவைச் சுற்றிப் பார்க்க விரும்பும் யாரும் மைல் கணக்கில் நடக்கத் தயாராக இருக்க வேண்டும். டிராம், மெட்ரோ, சப்வே, புறநகர் ரயில், பேருந்துகள் என்று போக்குவரத்து வசதிகள் மிகச் சிறப்பாக இங்கே உள்ளன. சைக்கிளையோ பைக்கையோ கூட வாடகைக்கு எடுத்துக் கொண்டு சுற்றும் வசதிகள் பல நாடுகளில் இருக்கின்றன. ஆனால் டிராம் ஸ்டேஷனிலிருந்து, ரயிலடிக்கு, அங்கிருந்து பஸ்சுக்கு, ரயில் நிலையத்தில் பலவிதமான மாடிப்படிகள், நகரும் படிகள், லிப்டுகள், சுரங்கப் பாதைகள் என்று கடந்து சென்று வண்டி மாறுவதற்கெல்லாம் கணிசமாக நடக்கத்தான் வேண்டும். பின்னர் முக்கியமான வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களைப் பார்க்கச் செல்லும்போது அங்கேயும் நிறைய நடக்க வேண்டியிருக்கும்.

அப்படி மிக அதிக தூரம் ரயிலடியிலிருந்து நடந்து போய் நான் பார்த்த ஒரு இடம் பிரான்சின் வெர்செல்ஸ் அரண்மனை.  வெர்செல்ஸ் அரண்மனை பிரம்மாண்டமானது. அதன் தோட்டம் இன்னும் பிரம்மாண்டமானது. இத்தனை பெரிய அரண்மனை இந்தியாவில் எங்கேயும் இல்லை. மன்னன் பதிமூன்றாம் லூயி காலத்தில் வெர்செல்ஸ் ஒரு சின்ன கிராமம். சுற்றிலும் பெரும்காடு. வேட்டையாட வரும்போது தங்குவதற்காகக் கட்டிய குடில்தான் பின்னாளில் கிராமத்தையே அழித்து அரண்மனையாயிற்று. பதினான்காம் லூயி காலத்தில் பெரும் அரண்மனையாக உருவெடுத்தது. அரச தர்பாரே இங்கேதான் நடக்கும் என்ற நிலை 1682ல் ஏற்பட்டது. பிரெஞ்சு புரட்சிக்குப் பின்னர் அரண்மனைக்கு ஆபத்து வந்தது. அதுவரை ராஜ குடும்பம், பிரபுக்களின் குடியிருப்பாகவும் அரச சொத்துகளின் கண்காட்சிக் கூடமாகவும் இருந்த வெர்செல்ஸ் பூட்டி வைக்கப்பட்டது. அதிலிருக்கும் தங்கம், வெள்ளி, ஆடம்பரப் பொருட்கள், நாற்காலி மேசைகள், கட்டில்கள் எல்லாவற்றையும் ஏலம் போட்டு விடலாம் என்று புதிய அரசு யோசிக்க ஆரம்பித்தது. ஓரளவு ஏலமும் விடப்பட்டது. பின்னர் நெப்போலியன் ஆட்சியில் அரண்மனை மறுபடியும் தர்பார் மண்டபமாகவும் காட்சியகமாகவும் மாறியது.வெர்செல்ஸ் அரண்மனையைக் கட்ட எவ்வளவு செலவாகியிருக்கும் என்ற மதிப்பீடுகள் இன்றும் நடந்த வண்ணம் உள்ளன. இன்றைய கணக்கில் சுமார் இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகியிருக்கலாம் என்பது ஒரு மதிப்பீடு. இதுவே குறைவான மதிப்பீடுதான். பதிமூன்றாம் லூயி தொடங்கி அடுத்தடுத்து நான்கைந்து மன்னர்கள் ஆட்சியில் விரிவுபடுத்தப்பட்டு வந்த அரண்மனையில் 100 நூலகங்கள் இருந்துள்ளன. அவற்றில் இரண்டு லட்சம் புத்தகங்கள் இருந்தன. அரண்மனையை அலங்கரிக்கத் தேவையான பட்டுத்துணியைத் தயாரிக்க தனி நெசவாலை நடத்தப்பட்டது. கண்ணாடிப் பொருட்களை உருவாக்க வெனிசிலிருந்து கைவினைக் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு இருக்கிறார்கள். தங்கள் கண்ணாடி தயாரிப்பு ரகசிய உத்திகள் வெளியே இப்படித் தெரியக்கூடாது என்பதற்காக வெனிசில் பல கலைஞர்கள் வேலை செய்து முடித்ததும் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.வெர்செல்ஸ் அரண்மனை பற்றி எழுதும்போது அரசிமேரி அந்தோணியே பற்றி எழுதாமல் விடமுடியாது. பிரெஞ்சுப் புரட்சியின்போது கொல்லப்பட்ட பதினாறாம் லூயியின் மனைவியான ராணி மேரி பற்றிப் பல கதைகள் உலவுகின்றன. தம் தாய்நாடான ஆஸ்திரியாவுக்கு விசுவாசமாக பிரான்சின் செல்வங்களைச் சுரண்டி அங்கே அனுப்பினார் மேரி என்பது ஒரு குற்றச்சாட்டு. மக்கள் பசியில் வாடி ரொட்டிக்கு ஏங்கியபோது ரொட்டி இல்லாவிட்டால் கேக் சாப்பிடலாமே என்று சொன்னார் என்பது இன்னொரு குற்றச்சாட்டு. வெவ்வேறு பிரபுக்களுடன் கூட்டாக பாலியல் கேளிக்கைக் கூடாரமாக அரண்மனையை மாற்றிவிட்டார் என்பது இன்னொரு குற்றச்சாட்டு. மரணதண்டனைக்கு முன்னால் அவர் மீது வைக்கப்பட்ட கடைசி குற்றச்சாட்டு தம் இளம் மகனுடன் பாலுறவு வைத்தார் என்பதாகும். இந்தக் குற்றச்சாட்டுகளில் பலவும் கற்பனையானவை, சில அரை உண்மைகள், சில முழு உண்மைகள் என்பது இன்றைய ஆய்வாளர்கள் சிலரின் கருத்து.மேரி, ராணியாக இருந்தபோது சந்தித்த பிரமுகர்களில் முக்கியமானவர்கள் நம்ம ஊர் திப்பு சுல்தானின் தூதர்கள். இந்தத் தூதர்கள் ராணிக்கு அளித்த பரிசுகளும் ராணி, திப்புவுக்கு அனுப்பி வைத்த பரிசுகளும் இன்னமும் மியூசியங்களில் உள்ளன. பிரிட்டிஷாருக்கு எதிராக திப்பு, பிரெஞ்சு உதவியை நாடியதும் பிரிட்டிஷுக்கு எதிராக திப்புவைப் பயன்படுத்த முடியுமா என்று பிரெஞ்சு முயற்சித்ததும் வரலாறுகள்.

மேரி கடைசியில் கில்லட்டின் பொறியில் தலை துண்டிக்கப்படும் முன்பாக முடிவெட்டப்பட்டு திறந்த வண்டியில் தெருக்களில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். கில்லட்டின் இயந்திரத்தின் முன்னால் தலையை வைக்கும்போது, மேரியின் கால் தவறுதலாக கில்லட்டின் இயக்குபவரின் கால் மீது பட்டதாகவும், உடனே அவரிடம் அதற்கு மன்னிப்பு கேட்டதாகவும் அவையே அவருடைய கடைசி சொற்கள் என்றும் ஒரு கதை இருக்கிறது.கடைசியில் தெருத்தெருவாக அலங்கோலமாக இழுத்துச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்ட ராணியும் அரச குடும்பத்தினரும் ஆட்சி செய்த காலங்களில் எப்படி வாழ்ந்தார்கள் என்பதற்கு அரண்மனை அறைகள் சாட்சியமாக இருக்கின்றன. அறை சுவர் முழுக்க அற்புதமான ஓவியங்கள், நுட்பமான வேலைப்பாடுகள் செய்யப்பட்ட மேசைகள், கட்டில்கள், உபயோகப் பொருட்கள், கண்ணாடி விளக்குகள், பட்டு மெத்தைகள் எல்லாம் இதுபோன்ற அரச வாழ்க்கை இந்தியாவிலோ தமிழகத்திலோ இருந்திருக்க முடியுமா என்ற ஐயத்தையே எனக்கு எழுப்பு கின்றன. இன்று வெர்செல்ஸ் அரண்மனைக்கு தினசரி ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் உலகின் பல பகுதிகளிலிருந்து வருகிறார்கள். அவர்களுக்கு அங்கே நுழைவிடமருகே சுத்தமான கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.ஆனால் வெர்செல்ஸ் அரண்மனையில் அரசர்களும் பிரபுக்களும் வசித்து வாழ்ந்த காலத்தில் கழிப்பறைகள் கிடையாது! அங்கே உள்ளே எப்போது போய் வந்தாலும் எல்லோர் துணியிலும் மோசமான வாடை அடிக்கும் என்று ஒரு வரலாற்றுப் பதிவு இருக்கிறது. நூற்றுக்கணக்கான செல்வக் குடும்பங்கள் வசித்த வெர்செல்ஸ் அரண்மனையில் மன்னன், ராணி குடும்பத்தினர் உபயோகிப்பதற்கு மொத்தமாக ஏழே ஏழு கழிப்பிடங்கள் இருந்தனவாம். அவையும் உலர் கழிப்பறைகள். மீதி அறைகளில் எல்லாம் மலச்சட்டிகள் இருக்கும். பலரும் அவற்றை ஜன்னல் வழியே வெளியே கொட்டிக் கொண்டிருந்தார்கள், அதனால்தான் அரண்மனையில் எப்போதும் வாடை என்று ஓர் ஆவணம் சொல்கிறது!இப்படி அருவருப்பான வாடை வீசிய வெர்செல்ஸ் அரண்மனை, ஒரு நாட்டைப் பொறுத்த மட்டில் மறக்க முடியாத கசப்புணர்ச்சியையே எழுப்பும். அதுதான் ஜெர்மனி. முதல் உலக யுத்தத்தில் ஜெர்மனி தோற்றதும் அது இதர நாடுகளுக்கு நஷ்டஈடாக 31.4 பில்லியன் மார்க்குகள் (இன்றைய மதிப்பில் 442 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) கொடுக்க வேண்டுமென்று பிரான்சும் பிரிட்டனும் அமெரிக்காவும் போட்ட வெர்செல்ஸ் ஒப்பந்தம் கையெழுத்தானது இந்த அரண்மனையில்தான். ஒப்பந்தப்படி ஜெர்மனி பணமும் கொடுத்தது! பிரான்சின் தலைநகரான பாரீசுக்குப் போனால் தவறவிடக் கூடாத வரலாற்று இடங்கள் தலைநகரின் மையத்தில் இருக்கும் லூவ்ரு மியூசியமும் 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் வெர்செல்ஸ் அரண்மனையும்தான். ஈபெல் டவரை விட இவையே முக்கியமானவை.

No comments:

Post a Comment