Search This Blog

Friday, September 06, 2013

சச்சினும் - சேப்பாக்கம் - ஸ்ரீனிவாசன்

 
திடீரென்று நவம்பரில், மேற்கு இந்தியத் தீவுக்கு எதிரான இரண்டு டெஸ்டுகள் ஏற்பாடாகி இருக்கின்றன. இதன்மூலம் தன் சொந்த மண்ணில், மும்பையில், 200வது டெஸ்டை ஆடவிருக்கிறார் சச்சின். இதோடு சச்சின் ஓய்வு பெற்றுவிடுவார் என்று யூகங்கள் பறக்கின்றன. அடுத்த ஒரு வருடத்துக்கு இந்திய அணி வெளிநாடுகளில் மட்டுமே டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதால், அதற்கு முன்பே சச்சின் ஓய்வு பெற்று விடுவதற்கு இது நல்ல தருணம். (வெளிநாடுகளில் ஆடும் போது பேட்டிங் ஆர்டரை அடிக்கடி மாற்ற தோனி விரும்புவதில்லை.) 
 
சச்சினின் இறுதி டெஸ்டுகளை ஏன் சென்னையில் நடத்தக்கூடாது? சச்சினின் டெஸ்ட் வாழ்க்கையில் எப்படி மும்பை மிக முக்கியமான மைதானமோ, அதுபோல சென்னைச் சேப்பாக்கமும் அவர் மிகவும் விரும்பும் ஒரு மைதானம். சேப்பாக்கத்தில்தான் அதிக செஞ்சுரிகளை மட்டுமல்லாமல் மறக்கமுடியாத ஆட்டங்களையும் சச்சின் ஆடியிருக்கிறார். இந்தப் பெருமை வேறெந்த மைதானத்துக்கும் கிடையாது. தமக்கு மிகவும் பிடித்தது, சேப்பாக்கம்தான் என்று பல பேட்டிகளில் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். சச்சின் சென்னையில் ஆடிய 10 டெஸ்ட் மேட்சுகளில் 5 செஞ்சுரிகள் அடித்திருக்கிறார். அதுவும் முதல் நான்கு டெஸ்டுகளிலும், சச்சின்தான் மேன் ஆஃப் தி மேட்ச். அதனால் சச்சினின் கடைசி இரண்டு டெஸ்டுகள் சென்னை, மும்பையில் நடப்பதுதான் மிகவும் பொருத்தமாக இருக்கும். என். ஸ்ரீனிவாசன், ஆவன செய்வீர்களா?

No comments:

Post a Comment