Search This Blog

Friday, August 02, 2013

மொபைல் பேட்டரி - ஏன் ஸ்மார்ட்போன்கள் மின்சாரத்தைக் குடிக்கின்றன?

நாளொரு போனும் பொழுதொரு அப்ளிகேஷனுமாக வாடிக்கையாளர்களைத் திணறடிக்கும் மொபைல் போன் துறை, சார்ஜ் போதாமல் நொண்டிக் கொண்டிருப்பது பேட்டரியில்தான். எந்த ஸ்மார்ட் போனாக இருந்தாலும், ஆண்ட்ராய்ட் போனாக இருந்தாலும், சார்ஜ் நிற்பதே இல்லை. குழந்தைகளை மறக்காமல் தூக்கிக் கொள்கிறார்களோ இல்லையோ, சார்ஜரை எல்லா இடங்களுக்கும் மூட்டை கட்டுவது தவிர்க்கவே முடியாதது. பல போன்களில் சார்ஜ் எட்டு மணிநேரம் தங்கினால் அதிகம். வீட்டில் சார்ஜ் போட்டு அலுவலகம் போனால், மாலைக்குள் சிவப்பு தெரியத் தொடங்கிவிடும். 
 
புதுசு புதுசாக மொபைல் போன்கள் வாங்கப் போவோர் கூட, பேட்டரி விஷயத்தில் தயங்கித் தயங்கியே முடிவு எடுப்பர். பேட்டரி எத்தனை மணிநேரம் தாங்கும் என்ற கேள்வி எழாமல் எந்த போன் விற்பனையும் ஆவதில்லை. போனுக்குள் புதுப்புது முன்னேற்றங்களைச் சேர்த்து வெளியிடும் நிறுவனங்கள் கூட, பேட்டரி விஷயத்தில் ஜகா வாங்கிவிடும்.சரி, ஏன் ஸ்மார்ட்போன்கள் இவ்வளவு மின்சாரத்தைக் குடிக்கின்றன? அதில் இருக்கும் இயங்குதளம், எண்ணற்ற அப்ளிகேஷன்கள், அபரிமிதமான வசதிகள் ஆகியவை மிக விரைவாக பேட்டரியின் ஆற்றலை உறிஞ்சிவிடுகின்றன. பேட்டரிகளுக்குள் போதுமான மின்சாரத்தைச் சேமிக்க முடியாததே முக்கிய காரணம். 
 
இணையம் முழுக்க எப்படியெல்லாம் பேட்டரி சார்ஜை மிச்சப்படுத்தலாம் என்றுதான் ஆலோசனைகள் கொட்டிக்கிடக்கின்றன. முக்கியமாக, செல்போன் ஸ்கிரீன்களின் வெளிச்சத்தைக் குறைப்பதில் தொடங்கி, தேவையற்ற அப்ளிகேஷன்களை மூடிவிடச் சொல்வது வரை ஒரே அட்வைஸ் மழை. ஆனால், இதெல்லாம் பிரச்னைக்குத் தீர்வே இல்லை. சொல்லப் போனால், இப்போதைக்குச் சரியான தீர்வு கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.

மொபைல்போன் துறையின் சவலைப் பிள்ளை பேட்டரிகள்தானோ என்ற எண்ணமே பலருக்கும் ஏற்படும்.அப்படி இல்லை என்கின்றன இத்துறையில் நடக்கும் ஆய்வுகள். லித்தியம்-ஐயான் பேட்டரிகளே இன்று புழக்கத்தில் இருக்கும் பேட்டரிகள். இதனுள் கிராஃபைட் அனோட்தான் அதிகபட்ச இடத்தை எடுத்துக் கொள்கிறது. இதற்கு மாற்றாக வேறு என்ன வைத்து மின்சாரத்தைச் சேமிக்க முடியும் என்று ஆய்வுகள் நடக்கின்றன. சிலிக்கான அனோடுகளைப் பயன்படுத்தினால், இப்போதிருப்பது போல் பத்து மடங்கு மின்சாரத்தைச் சேமிக்க வாய்ப்புண்டு. அதேபோல், லித்தியம்-சல்ஃபர், லித்தியம்- கடல்நீர், லித்தியம்-காற்று ஆகிய இணைப்புகளின் மூலம், கூடுதல் திறனைப் பெற முடியும் என்றும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இவை மக்கள் பயன்பாட்டுக்கு வருவதற்கு இன்னும் பல காலமாகும்.
 
லித்தியத்தை மட்டும் ஏன் கட்டிக் கொண்டு அழவேண்டும்? வேறு ஏதேனும் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆவல், பேட்டரி நிறுவனங்களிடம் ஏற்பட்டிருக்கிறது. விளைவு, கார்பனின் மற்றொரு வடிவமான கிராபைனைக் கொண்டு பேட்டரி உருவாக்கும் திட்டம். இதனை சில நிமிடங்களிலேயே சார்ஜ் செய்து விட முடியும். இதற்காக இங்கிலாந்து அரசு பல மில்லியன் பவுண்டுகளை ஒதுக்கி இருக்கிறது. பேட்டரிக்குள் இருக்கும் எலக்ட்ரோடுகளின் ஆற்றலை எவ்வளவு உயர்த்த முடியும் என்பதிலேயே கவனம் செலுத்தப்படுகிறது.  மைக்ரோ பாட்டரிகளை உருவாக்குவது மற்றொரு திட்டம். இல்லினாஸ் பல்கலைக்கழகம் இதைச் செய்திருக்கிறது. இப்போதிருக்கும் பேட்டரிகளின் அளவில் பதிமூன்றில் ஒரு பங்கு மட்டுமே இருக்கும் புதிய மைக்ரோ பாட்டரி, ஆயிரம் மடங்கு வேகமாக சார்ஜ் ஆகுமாம்.இதெல்லாம் ஆய்வு நிலையில் இருக்க, இன்னொரு திட்டம் கொஞ்சம் முன்னேறி இருக்கிறது. வைசிப் கிரிஸ்டல் (Wysips Crystal)என்ற பிலிம், சூரியனில் இருந்து மின்சாரத்தை சார்ஜ் செய்து கொள்ளும் வசதியை ஏற்படுத்தி இருக்கிறது. செல்போன் ஸ்கிரீனுக்குக் கீழே பொருத்தப்படும் இந்த மிகமெல்லிய பிலிம், எந்த ஒளியிலிருந்தும் மின்சாரத்தை உருவாக்கிக் கொள்ளும்; சூரியஒளியில் இருந்து கூடுதலாக மின்சாரம் உற்பத்தி செய்து கொள்ளும். இன்றைய தேதியில் இது உற்பத்தி செய்யும் மின்சார ஆற்றல் போதுமானதாக இல்லை; 2014க்குள் இதனைப் பன்மடங்கு உயர்த்திவிட முடியும் என்கிறார்கள்.இன்னும் சில ஆய்வுகள் வித்தியாசமானவை. சிறுநீரில் இருந்து மின்சார பேட்டரி, சோடியம் ஐயானைக் கொண்டு மரத்தில் இருந்து மின்சார சார்ஜ் என்றெல்லாம் ஆய்வுகள் நடக்கின்றன.பேட்டரியின் மற்றொரு பிரச்னை, அதனை சார்ஜ் செய்யும் நேரம். பல போன்களுக்கு சார்ஜ் ஏற பல மணி நேரம் ஆகும். பொறுமையைச் சோதிக்கும். எப்படி விரைவாக சார்ஜ் செய்ய முடியும் என்ற ஆய்வும் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பதினெட்டே வயதான இஷா கார்ரே கண்டுபிடித்திருக்கும் சூப்பர்கபாசிட்டர், இந்தப் பிரச்னையைத் தீர்த்துவிடக் கூடும். கலிஃபோர்னியாவைச் சேர்ந்த டீன்ஏஜ் பெண்ணான இஷா, இந்தக் கண்டுபிடிப்புக்காக ஐம்பதாயிரம் டாலரைப் பரிசாகப் பெற்றுள்ளார். இந்த சூப்பர்கபாசிட்டர் மூலம் இருபது நொடிகளில் செல்போனை சார்ஜ் செய்துவிட முடியுமாம். இப்போதே, கூகுளும் இன்டெல்லும் இப்பெண்ணோடு பேசி, சூப்பர்கபாசிட்டர் தொழில் நுட்பத்துக்கு ஆதரவளித்துள்ளன.

No comments:

Post a Comment