Search This Blog

Sunday, June 16, 2013

எனது இந்தியா! - யவனர்கள் - - எஸ். ரா...

சங்க இலக்கியங்களிலும் தமிழக வரலாற்றிலும் யவனர்கள் என்ற பெயர் இடம்பெற்று இருப்பதை அறிவோம். யவனர்கள் என்பவர்கள் கிரேக்கர்கள் என்று ஒரு சாராரும், ரோமானியர் என்று மற்றொரு பிரிவினரும், இரண்டுமே அல்ல கிரேக்கர், இந்தோ கிரேக்கர் மற்றும் ரோமானியர் ஆகிய மூவரையும் குறிக்கும் பொதுப் பெயர்தான் யவனர்கள் என்ற கருத்துக்கள் வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் இருக்கின்றன. யோனா என்ற பிராகிருத சொல்லில் இருந்தே யவன என்ற சொல் தோன்றியது. பாரசீக மொழியில் யவன் என்ற சொல், பழைய கிரேக்கர்களைக் குறிக்கிறது. ஆகவே, கிரேக்கர்களைக் குறிக்க தமிழில் யவனர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர் கே.கே.பிள்ளை கூறுகிறார்.
 
''ரோமானியர்கள் வருவதற்கு முன்பே கிரேக்கர்களுடன் தமிழகத்துக்குத் தொடர்பு இருந்தது. கிரேக்க அரசன் பிலடெல்பியாஸ் காலத்தில் தமிழகத்துடன் கிரேக்கம் நெருங்கிய வணிகத் தொடர்பு கொண்டிருந்தது'' என்று,  ஜானாஸின் குறிப்பை சுட்டிக்காட்டுகிறார் ஆய்வாளர் நடன.காசிநாதன். இதை மெய்ப்பிக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அரிக்கமேட்டில் மட்கல ஓடுகள், நாணயங்கள் கிடைத்திருக்கின்றன. திரேசில் இருந்து வெளியிடப்பட்ட காசுகள் அமராவதி ஆற்றின் அருகே நடத்திய அகழ்வாய்வில் கிடைத்துள்ளன. இது, கி.மு. 200-ம் ஆண்டு காலகட்டத்தை சேர்ந்தவை என்கின்றனர். சங்க காலத் தமிழகம் ரோமானியப் பேரரசுடன் வாணிபத் தொடர்புகொண்டிருந்ததை உறுதிசெய்யும் ரோமானியத் தங்க, வெள்ளிக் காசுகள் பல இடங்களில் கிடைத்துள்ளன. இவை பெரும்பாலும் கி.பி. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த அகஸ்டஸ், டைபீரியஸ், கிளாடியல், மார்கஸ், அரேலியஸ் என்ற ரோமானிய சீசர் மன்னர்களின் காசுகளாகும்.


யவனர் என்ற சொல் முதலில் கிரேக்கரையும் பிறகு ரோமானியரையும் குறித்தது. காலமாற்றத்தில் மேற்கு ஆசியாவில் இருந்தும் மத்திய தரைக்கடல் நாடுகளில் இருந்தும் தமிழகத்துக்கு வணிகம் செய்யவந்த அனைத்து வணிகர்களையும் யவனர்கள் என்றே குறிப்பிட்டனர். இந்த நேரத்தில், பொதுவாகவே வெளிநாட்டினரைக் குறிக்க மிலேச்சர் என்ற சொல் இன்று வரை பயன்படுத்தப்படுவதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். ''பட்டினப்பாலை, அகநானூறு மற்றும் புறநானூறு ஆகியவற்றிலும், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றிலும் கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்களைக் குறிக்கவே யவனர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது'' என்கிறார் முனைவர் தில்லைவனம்.

யவனரை, மிலேச்சர் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அரசரின் மெய்க்காவலர்களாகவும் பணியாளர்​களாகவும் கப்பலில் வேலையாட்களாகவும் இருந்தவர்களை மிலேச்சர் என்று குறிப்பிடுவது வழக்கம். காம்போஜ நாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்த மக்கள் மிலேச்ச மொழி பேசியதால், அவர்கள் மிலேச்சர் என அழைக்கப்பட்டதாக உ.வே.சாமிநாதய்யரின் முல்லைப்பாட்டு உரை சுட்டிக்காட்டுகிறது. யவனர்கள் என்பவர்கள் காந்தாரத்துக்கு அப்பால் வாழ்ந்தவர்கள் என்றே அன்றைய இந்திய இலக்கியங்கள் கூறுகின்றன. இந்து புராணங்களில் யவனதேசம் தனி நாடாகக் குறிப்பிடப்படுகிறது. மகாபாரதத்தில் நடைபெறும் ராஜசூய யாகத்தில் கலந்துகொள்ள வந்தவர்களில் யவன அரசரும் ஒருவர் எனக் குறிப்பிடப்படுவது இதன் தொடர்ச்சியே. பாலி இலக்கியத்திலும் யவனர்களைப் பற்றிய பதிவுகள் உண்டு.


அசோகர் கல்வெட்டில் யவனநாடு பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. அதாவது, அசோகரின் கல்வெட்டு ஒன்றில், 'காருண்​யமுள்ள தேவனாம்பிரியராகிய அரச பெரு​மானுடைய ஆட்சிக்குட்பட்ட எல்லா விடங்களிலும் இவ்வெல்லைக்கு அப்பாற்பட்ட சோழ, பாண்டிய, சத்தியபுத்திர, கேரளபுத்திர தேசங்களிலும், யவன அரசனாகிய அண்டியகஸ் ஆட்சிசெய்யும் தேசத்திலும், அதற்கப்பாற்பட்ட தேசங்களிலும் காருண்யமும் மேன்மையும் பொருந்திய அரசரால் இரண்டுவித மருத்துவ சிகிச்சைகள் ஏற்படுத்தப்பட்டன. அவை, மக்களுக்கு மருத்துவம், கால்நடைகளுக்கு மருத்துவம் என்னும் இரு வகை மருத்துவ நிலையங்களாம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கல்வெட்டின் தொடர்ச்சியில், 'தரும விஜயம் என்னும் அற வெற்றியே மாட்சி மிக்க அசோக மன்னரால் முதல் தரமான வெற்றியென்று கருதப்படுகின்றது. இந்த வெற்றி இந்த இராச்சியத்திலும், இதற்கப்பாற்பட்ட அறுநூறு யோசனை தூரத்திலுள்ள அண்டியகஸ் என்னும் யவன அரசனுடைய தேசத்திலும், அதற்கும் அப்பால் டாலமி, அண்டிகொனஸ், மகஸ், அலெக்ஸாந்தர் என்னும் பெயருள்ள நான்கு அரசர்களின் தேசங்களிலும், இப்பால் தெற்கேயுள்ள சோழ, பாண்டிய,  தாம்பிரபரணி (இலங்கை) வரையிலும் இந்த அற வெற்றி நாட்டப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கல்வெட்டு கி.மு. 258-ல் எழுதப்பட்டது. அந்தக் காலத்தில் யோன தேசம் எனும் யவன நாடு இந்திய தேசத்துக்கப்பால் வட மேற்குப் பக்கத்தில் உள்ள தேசமாக அறியப்பட்டிருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள மதுரா மற்றும் உஜ்ஜைனியில் நடந்த அகழ்வாய்வுகளில் யவனப் பெண்கள் அணியும் பல்வேறு அணிகலன்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வட மொழி இலக்கணம் வகுத்த பாணினி, யவனன் என்பதன் பெண்பாலாக யவனாணி என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறார். யவனர்கள் சிற்பக் கலையில் மிகவும் சிறந்தவர்கள். சங்க காலத்தில் யவனச் சிற்பிகளைத் தமிழகம் பெரிதும் போற்றியுள்ளது. யவனத் தச்சர் என்று இவர்கள் பண்டைய தமிழ் நூல்களில் குறிக்கப்பட்டுள்ளனர்.

''மகத வினைஞரும் மராட்டக் கம்மரும்
அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும்
தண்டமிழ் வினைஞர் தம்மொடு கூடி
கொண்டினி தியற்றிய கண்கவர் செய்வினை''
என மணிமேகலை கூறுவது யவனத் தச்சர்களின் சிறப்பை வெளிக்காட்டுகிறது.

''கிரேக்கர், ரோமானியர், எகிப்தியர், பாரசீகர், அராபியர் ஆகிய அனைவரையும் 'யவனர்’ என அழைக்கும் வழக்கம் இருந்தாலும் பெரும்பாலும் ரோமானியரே அதிக அளவில் தமிழகத்துக்கு வந்திருக்கின்றனர்'' என்கிறார் புலவர் செ.இராசு. இவரது ஆய்வுப்படி மேற்குக் கடற்கரைக்கு மிளகு, சந்தனம், தந்தம், ஏலம், அகில், தேக்கு, இலவங்கம், சில விலங்குகள், பறவைகள் ஆகியவற்றுக்காக வந்த ரோமானியர்கள் பாலக்காடு, போளுவாம்பட்டிக் கணவாய் வழியாகக் கொங்கு நாட்டுக்கு வந்து பல வண்ணக் கல்மணிகளை விரும்பி வாங்கிச்சென்றனராம். சோழநாடு மற்றும் பாண்டிய நாட்டின் துறைமுக நகரங்கள் வரை சென்றவர்கள், கிழக்குக் கரை முத்துக்களையும் வாங்கி​யிருக்கின்றனர். ரோம் நாட்டவரின் ரௌலடெட், அரிட்டைன் ஆகிய உயர்வகைப் பானை ஓடுகள், அம்போரா என்னும் கூர்முனை மதுக்குடங்கள், ரோமானிய சுடுமண் பொம்மைகள், ரோம அரசரின் பொன், வெள்ளி, செம்பு நாணயங்கள் தமிழ்நாட்டில் நடந்த அகழ்வாய்வில் கிடைத்துள்ளன. யவனர்களுக்கு மிகவும் பிடித்தது மிளகு. அதை 'யவனப்பிரியா’ என அழைத்தனர். யவனர்கள் கப்பல்களில் முசிறிக்கு வந்து தாங்கள் கொண்டுவந்த பொன்னைக் கொடுத்துவிட்டு மிளகு வாங்கிச் சென்றுள்ளனர்.

'சேரலர் சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியடு பெயரும்
வளம்கெழு முசிறி’ என, அகநானூறு கூறுவதை யவனர்​களைப் பற்றிய சான்றாக சுட்டிக்​காட்டுகிறார் வரலாற்று அறிஞர் இராசு.

இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் என்னும் பாண்டிய மன்னன், யவனர்கள் அன்பளிப்பாகத் தந்த பொன்னால் செய்யப்பட்டதும், அதிக வேலைப்​பாடுகள்கொண்டதுமான கிண்ணத்தில் அழகான பெண்கள் தேறல் எனும் கள்ளை ஊற்றித் தர உண்டு மகிழ்ந்தான் என்று கூறப்படுகிறது.  இதிலிருந்து யவனர் விற்பனை செய்த பொருட்களில் தங்கத்தாலான மதுக் கிண்ணமும் ஒன்று எனத் தெரிய வருகிறது. இதுபோலவே அழகாக வடிவமைக்கப்பட்ட பாவை விளக்குகளை யவனர்கள் தமிழகத்துக்கு அறி​முகம் செய்திருக்கின்றனர். இந்த பாவை விளக்குகள் மன்னரின் படுக்கை அறையில் ஒளிர்ந்துகொண்டிருந்தன என்று நக்கீரர் தனது பாடலில் குறிப்பிட்டுள்ளார். கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட மேற்சட்டை, மத்திகை என்று அழைக்கப்படும் அரைக்கச்சை ஆகியவற்றை யவனர்கள் அணிந்திருந்தனர். வலிமையான உடல்வாகு உடையவர்கள். அவர்களின் தோற்றம் முரட்டுத்தனம் மிக்கது. தென்னிந்தியாவின் பல இடங்களில் யவனக் குடியிருப்புகள் இருந்திருக்கின்றன. குறிப்​பாக, மலபார் கடற்கரைப் பகுதிகளிலும் சோழமண்டலக் கரையிலும் வணிகம் செய்யவந்த யவனர்கள் தங்களுக்கெனக் குடியிருப்புகளை உருவாக்கித் தங்கியிருந்த செய்தியை பெரும்பாணாற்றுப்படை மற்றும் நெடுநல்வாடை ஆகிய இலக்கியங்களில் பார்க்கலாம். சிலப்பதிகாரத்தில் இந்திர விழாவைப் பாடும் இளங்கோவடிகள் அங்கிருந்த யவனக் குடியிருப்பு பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இதுபோலவே, மதுரையின் புறஞ்சேரியில் ரோமானியர் குடியிருப்பு இருந்திருக்கிறது என்றும் இலக்கியங்கள் கூறுகின்றன. புதுவையின் அரிக்கமேடு, காஞ்சிபுரம், கரூர், கொடுங்கலூர் ஆகிய இடங்களில் யவனக் குடியிருப்புகள் இருந்ததற்கான சான்றுகள் இப்போது கிடைத்துள்ளன.

பாண்டி நாட்டு மன்​னர்கள் தங்களது படைப் பிரிவில் யவனர்களையும் சேர்த்திருந்தனர். பாண்டியன் நெடுஞ்செழியனின் அரண்​மனையை யவன வீரர்கள் காவல் காத்துவந்ததை
'கடிமதில் வாயில் காவலிற் சிறந்து
அடல்வாள் யவ​னர்க்கு அயிராது புக்கு’ 
 என, சிலப்ப​திகாரம் சுட்டிக்​காட்டு​கிறது.
அரசனது பாசறையில் இவர்களுக்கும் தனி இடம் இருந்தது. புலிப் படைநடத்திவர யவனர்கள் உதவி செய்திருக்​கின்றனர். படை​யெடுத்து வரும் எதிரிகள் மீது ஈட்டிகளையும் அம்புகளையும் எறிவதற்கு கோட்டை உச்சியில் யவனப் பொறிகள் இருந்​திருக்கின்றன. எதிரிகளின் தலையில் கொதிக்கும் உலோகத்தை ஊற்றவும் பலவகை உருவம் படைத்த ஆயுதங்களை வீசவும் யவனர்கள் எந்திரங்களை அமைத்தனர் என்ற குறிப்புகள் வரலாற்றில் இருக்கின்றன.
 

No comments:

Post a Comment