Search This Blog

Sunday, June 16, 2013

எனது இந்தியா (காந்திக்கு முந்தைய மகாத்மா !) - எஸ். ரா...

இந்திய சமூகத்தின் தீராத பிரச்னைகளில் ஒன்றாக இருப்பது சாதி. அதன் அடிப்படையாக இருக்கும் வர்ணாசிரமக் கோட்பாடு மற்றும் அதன் வழியாக உருவான தீண்டாமை ஆகியவற்றை, கல்வியும் பொருளாதார மேம்பாடும் ஒழித்துவிட்டன என்று ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், சாதித் துவேசமும் பகைமையும் மக்கள் மனதில் ஆழமாகப் புரையோடிக்கிடக்கிறது. குறிப்பாக இன்று, கிராமங்களைவிட நகரங்களில் சாதி தீவிரமாக எழுச்சிகொண்டு வருகிறது. சாதியத் துவேசமும் வன்முறையும் தொடர்ந்து அரசியல் லாபங்களுக்காக உருவாக்கப்படுகின்றன. கட்டவிழ்த்துவிடப்படுகின்றன.

தீண்டாமைக்கு எதிரான போராட்டங்கள் என்பது, இந்திய வரலாற்றில் மிக முக்கியமான எதிர்ப்பு இயக்கங்கள். புத்தர் தொடங்கி ஜோதிராவ் புலே, அயோத்தி தாசர், அம்பேத்கர், பெரியார் என சமூக நீதிக்காகக் குரல் கொடுத்தவர்களின் அரும்பணி நாம் பின்பற்றவும் முன்னெடுத்துச் செல்லவும் வேண்டிய முக்கியமான சமூக நீதி.

மகாத்மா என்றாலே நமக்கு காந்திதான் நினைவுக்கு வருவார். ஆனால், காந்திக்கு அந்தப் பட்டம் கிடைப்பதற்கு முன், 1888-ம் ஆண்டு மே மாதம் 11-ம் தேதி புனேயில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஜோதிராவ் புலேயின் சமூக சீர்திருத்த நடவடிக்கைகளைப் பாராட்டி மக்கள் அவருக்கு 'மகாத்மா’ என்ற பட்டம் சூட்டினர். அதன் பிறகு, அவரை மகாத்மா புலே என்றே மக்கள் அழைத்தனர்.


தீண்டாமையின் உச்சபட்சக் கொடுமைகளை அனுபவித்த மாநிலம் மராட்டியம். அங்கே ஆதிக்க சாதியினரின் ஒடுக்குமுறைகளால் தாழ்த்தப்பட்ட மக்கள், சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்தனர். அம்பேத்கர் தோன்றிய அதே மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்த மகாத்மா ஜோதிராவ் , 20-ம் நூற்றாண்டின் சமூகப் புரட்சியாளர்களுக்கு முன்னோடியாகச் செயல்பட்டவர். ஜோதிராவ் புலே, 1827-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள சதாரா மாவட்டத்தில் உள்ள லால்கன் என்ற கிராமத்தில் பிறந்தவர். தாழ்த்தப்பட்ட சாதிகளில் ஒன்றான மாலி என்ற பிரிவைச் சேர்ந்தவர். அவரது தந்தை கோவிந்த ராவ், காய்கறி விற்பனைசெய்தார். புலே என்பதன் பொருள், பூ விற்பவர் என்பதாகும். புலேயின் குடும்பம், மராட்டிய பேஷ்வாக்களுக்கு வாடிக்கையாக பூ விற்பனை செய்யும் குடும்பம். ஆகவே, அந்தப் பெயராலேயே அவர்கள் அழைக்கப்பட்டனர்.

புலே பிறந்து ஒன்பதாவது மாதத்தில் அவரது அம்மா இறந்துபோனார். திண்ணைப் பள்ளியில் சில ஆண்டுகள் படித்தார். அதிகம் படித்தால் மூளை கெட்டுப்போய்விடும், பிறகு தோட்ட வேலைகள் செய்யக்கூட பயன்பட மாட்டான் என்று புலேயின் அப்பாவிடம் அவரது நண்பர்கள் சொன்ன காரணத்தால், ஜோதிராவின் பள்ளிப் படிப்புக்கு முட்டுக்கட்டை விழுந்தது. அப்பாவுக்கு உதவியாக காய்கறிக் கடையில் வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினார். ஆனால், ஜோதிராவ் புலேயின் பக்கத்து வீட்டுக்காரராக இருந்த மிஸ்டர் லெஜிட் மற்றும் பூலேயின் தோட்டத்துக்குப் பக்கத்தில் குடியிருந்த கஃபார் பய்க் முன்ஷி என்ற இஸ்லாமிய ஆசிரியர் ஆகிய இருவரும் கோவிந்த ராவைச் சந்தித்து, 'உங்கள் மகன் கட்டாயம் மேற்கொண்டு படிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினர். ஸ்காட்டிஷ் மிஷன் உயர்நிலைப் பள்ளியில் ஜோதிராவ் புலேவைச் சேர்க்க உதவி செய்தனர். தொடர்ந்து படித்த புலேவுக்கு சமூக விழிப்புஉணர்வு ஏற்பட்டது.


இதற்கிடையே, தனது நண்பரான பிராமணர் ஒருவரின் திருமண ஊர்வலம் ஒன்றில் புலே கலந்துகொண்டார். சாலையில் தங்களுக்கு சமமாக ஒரு தீண்டத்தகாதவன் நடந்து வருகிறானே என்று கோபம் அடைந்த பிராமணர்கள், 'எங்களுக்குச் சமமாக நடந்து வர உனக்கு என்ன துணிச்சல்? சாதிக்கட்டுப்பாடுகளை மறந்துவிட்டாயா? ஆங்கிலப் பள்ளியில் படித்துவிட்டால், நீ மேலானவன் ஆகிவிட முடியுமா? பிரிட்டிஷ்காரர்கள் உன்னைப் போன்ற சூத்திரர்களை மனம்போன போக்கில் நடக்கவிடுவதை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்’ என்று அவமானப்படுத்தி, ஊர்வலத்தில் இருந்து துரத்தினர். இதைத் தாங்கிக்கொள்ள முடியாத ஜோதிராவ், தனது நண்பர்களிடம் இதைச் சொல்லிக் குமுறினார். அவர்களோ, 'நாம் தாழ்ந்த சாதிக்காரர்கள், அவர்களுக்குச் சமமாக நாம் எப்படி நடந்துகொள்ள முடியும்?’ என்று கூறினர். அதில் ஒருவன், 'உனது நல்ல காலம் உன்னை அடித்து உதைக்காமல் விட்டுவிட்டனர்’ என்றான். இன்னொருவன், 'பேஷ்வா ஆட்சிக் காலத்தில் இது நடந்திருந்தால் உன்னை கலகக்காரன் என்று சொல்லி கடும் தண்டனை கொடுத்திருப்பார்கள், நல்லவேளை பிரிட்டிஷ் ஆட்சி நடக்கிறது நீ தப்பித்தாய்’ என்றான். இப்படி நடுரோட்டில் அவமானப்படுவதற்கு சாதிதான் காரணம் என்றால், இந்த கொடுமைகளை ஏன் சகித்துக்கொண்டிருக்கிறோம்? இந்த மாதிரியான அநீதியை என்னால் பொறுத்துக்கொண்டு போக முடியாது, இதை எதிர்க்கவில்லை என்றால், நாம் நடைபிணங்கள்தான் என்று மனம் குமுறினார்.

இந்தச் சம்பவம் அவருக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. சாதியப் பிரிவினை குறித்தும் சமூக ஏற்றத்தாழ்வுகள் குறித்தும் நிறையப் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினார். கபீர், துக்காராம், தியானேஷ்வர் போன்ற ஞானிகளின் கவிதைகளை வாசித்தார். மார்ட்டின் லூதரைப் படித்தார். புத்தர், பசவண்ணா பற்றி ஆழ்ந்து வாசித்தார். சாதிப் பிரிவுகளை யார் உருவாக்கியது? அது எப்படி வளர்ந்தது? என்று ஆய்வுசெய்தார். சாதியப் பிரிவினையை உருவாக்கியது மனிதனின் சுயநலம். அது சாதாரண மக்களின் வாழ்க்கையை நூற்றாண்டு காலமாகப் பாழாக்கி வருகிறது. சாதிய ஒடுக்குமுறை மராட்டிய பேஷ்வாக்களின் காலத்தில் அதிகரித்தது. கல்வியால் மட்டுமே இந்தக் கொடுமையில் இருந்து விடுபட முடியும் என்று ஜோதிராவ்  உறுதியாக நம்பினார்.

இந்தச் சூழ்நிலையில் அவருக்கு தாமஸ் பெய்ன் எழுதிய 'ரைட்ஸ் ஆஃப் மேன்’ என்ற புத்தகம் கிடைத்தது. மனிதனின் அடிப்படை உரிமைகளையும் கடமைகளையும் பற்றிப் பேசும் மிக முக்கியமான புத்தகம் இது.

தாமஸ் பெய்ன் புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர். இவர் பிரித்தானியக் குடியேற்ற ஆதிக்கத்தை எதிர்த்து அமெரிக்கா போராடி, சுதந்திரம் அடைய வேண்டும் என்னும் கருத்தை முன்வைத்து பேசியும் எழுதியும் வந்தவர். அமெரிக்க விடுதலைக்கு இவரே முன்னோடி என்கிறார்கள். பிரெஞ்சுப் புரட்சியை ஆதரித்து, அதில் தீவிரமாகப் பங்கேற்றார் பெய்ன். பிரெஞ்சுப் புரட்சியை எதிர்த்தவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் 1791-ல் அவர் எழுதியதே 'மனிதனின் உரிமைகள்’ என்ற புத்தகம். இதில் மனிதனின் அடிப்படை உரிமைகளையும் பகுத்தறிவின் வலிமையைப் பற்றியும் எழுதியிருந்தார். இந்தப் புத்தகம் ஜோதிராவ் புலேயின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்திய சமூகம் சாதியின் பெயரால் தொடர்ந்து மனிதனைப் பல்வேறு விதங்களில் அவமானப்படுத்துகிறது. இந்த அநியாயங்களுக்கு எதிராகப் போராடுவதையே தனது முக்கிய வேலை என்று முடிவுசெய்தா£ர். இதுவே அவரை ஓர் சமூகப் புரட்சியாளராக மாற்றியது. தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி அறிவு பெற வேண்டும். அவர்கள் புரோகிதர்களைக்கொண்டு சடங்குகள் செய்வதை முற்றிலும் கைவிட வேண்டும். பிறப்பைக் காரணமாகக் காட்டி ஒரு மனிதனை அவமானப்படுத்தும் செயல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். பெண்கள் கல்வி அறிவு பெறுவதன் மூலம் மட்டுமே இந்த உண்மையான சமூக மாறுதலை அடைய முடியும் எனப் பல்வேறு சீர்திருத்தக் கருத்துக்களை முன்வைத்து தொடர்ந்து போராடத் தொடங்கினார்.

புனே, பிராமணர்கள் அதிகம் வசிக்கும் நகரம். அது பழமையான கருத்துக்களாலும் சடங்கு சம்பிரதாயங்களாலும் நிரம்பியது. அங்கே தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் குடிநீர் தரக் கூடாது, கோயிலுக்குள் நுழைய அனுமதி கிடையாது, பொது விருந்துகளில் அவர்கள் கலந்துகொள்ள முடியாது, கல்வி நிலையங்களில் படிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள், காலில் செருப்பு அணியக் கூடாது என பல்வேறு அவமதிப்புகள் நடைமுறையில் இருந்தன.

1873-ம் ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதியன்று 'சத்ய சோதக் சமாஜ்’ என்ற சங்கத்தை, புலே தொடங்கினார். இதன் பொருள் 'உண்மை தேடுவோர் சங்கம்’ என்பது. அனைவருக்கும் கல்வி, விதவைத் திருமணத்தை ஊக்குவித்தல், புரோகிதர் இல்லாமல் திருமணங்களை நடத்துதல், சமூக ஏற்றத்தாழ்வுகளைப் போக்கி சமநிலையை ஏற்படுத்துவது, உழவுத் தொழிலில் தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளை மீட்பது ஆகியவையே இந்த சங்கத்தின் நோக்கம். இவற்றை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தியது.


No comments:

Post a Comment