Search This Blog

Saturday, May 04, 2013

எனது இந்தியா (இரண்டு புகைப்படக் கலைஞர்கள்!) - எஸ். ரா

முதல் பயணம் தந்த உத்வேகம் காரணமாக காஷ்மீரின் இயற்கைக் காட்சிகளை படமாக்க அடுத்த பயணத்தைத் தொடங்கினார் சாமுவேல். அவரது கேமராவில் குலுமணாலி பகுதிகள் பதிவாகின. 18 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து அவர் எடுத்த புகைப்படங்கள், காஷ்மீர் பகுதியின் இயற்கை செழிப்புக்கு உன்னத அடையாளமாக விளங்கின. 

கங்கையின் முகத்துவாரத்தை தேடிச்​சென்றது, மூன்றாவது பயணம். அந்தப் பயணத்தில் சாமுவேல் மிகுந்த சிரமம் அடைந்தார். மலையேற்றத்தின்போது, பனிச்​சரிவு ஏற்பட்டு சுமை தூக்கிகளில் இருவர் இறந்தனர். சாமுவேலுக்கும் இரண்டு முறை அடிபட்டது. ஆனாலும், கங்கையைப் படமாக்​குவது என்ற எண்ணத்தை அவர் கைவிடவில்லை. கங்கோத்ரியின் அழகிய காட்சிகளைப் புகைப்படமாக எடுத்துக்கொண்டு ஊர் திரும்​பினார். அத்துடன், கங்கையைத் தேடிச்சென்ற தனது பயணம் குறித்து ஓர் புத்தகமும் எழுதி வெளியிட்டார். மூன்று பயணங்​களில் கிடைத்த 2,200 புகைப்படங்களுடன் லண்டன் கிளம்பினார் சாமுவேல் பெர்ன். அங்கே, இந்தியா குறித்த சிறப்புப் புகைப்படக் கண்காட்சி ஒன்றை நடத்தினார். அதற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. அந்த புகைப்​படங்கள் இன்றும் பிரிட்டிஷ் மியூசியத்தில் பாதுகாக்கப்​படுகின்றன.


இங்கிலாந்தில் தனது புகைப்படங்களுக்காகக் கிடைத்த பணத்தைக்கொண்டு பருத்தி விற்பனையில் ஈடுபட்டார் சாமுவேல். அதிலும் லாபம் கொட்டியது. சில காலம் உள்ளூர் நீதிபதி​யாகப் பணியாற்றியவர் தனது ஓய்வுக் காலத்தில் தைல வண்ண ஓவியங்கள் தீட்டுவதில் ஆர்வமாக இருந்தார். பெர்ன் எடுத்த இந்தியப் புகைப்படங்களில் காணப்படும் தனித்துவம் வியந்து போற்றக்கூடியது. குறிப்பாக, நைனிடால் ஏரியை ஒட்டிய இயற்கைக் காட்சியை அவர் படம்​பிடித்துள்ள விதம் அருமை. அடர்ந்து பாதி இருளில் ஒளிரும் மரம் முன்புறமாகவும் பின்பகுதியில் ஒளிரும் வெளிச்சத்தில் தெறிக்கும் இயற்கை வனப்பும், ஒற்றையடிப் பாதையில் சந்தித்துக்கொள்ளும் இரண்டு இந்தியர்​களும் ஏதோ கனவின் பகுதி​யைப் போலவே இருக்கின்றனர். இம்பிரசனிஷ ஓவியங்களின் தனித்தன்மையை தனது புகைப்படக்கலையில் சாதித்துள்ள சாமுவேல் பெர்ன், 1912-ல் நாட்டிங்ஹாம் நகரில் இறந்தார்.


பெர்னைப் போலவே தீன் தயாளும் ஒரு அமெச்சூர் புகைப்படக்கலைஞர். இந்தூரில் நிலஅளவியல் துறையில் வேலை செய்த தீன் தயாள், தனது சொந்த விருப்பம் காரணமாகவே புகைப்படக்கலையைக் கற்றுக்​கொண்டார். பின்னாளில், ஹை​தரா​பாத் நிஜாமின் ஆஸ்தான புகைப்படக்காரராகப் பணியாற்றி​யவரை, விக்டோரியா மகாராணி தனது அதிகாரப்​பூர்வமான புகைப்படக்கலைஞராக அங்கீகாரம் செய்திருக்கிறார். இந்தூர் சமஸ்தானத்தின் நிலஅளவியல் துறையில் பணி​யாற்றிய தீன்தயாள், புகைப்படக்கலையைக் கற்றுக்கொள்ளவும் தேர்ச்சிபெறவும் இந்தூர் மன்னர் துகோஜி ராவ் பெருமளவு உதவிசெய்தார்.  பிரிட்டிஷ் ஏஜென்டான ஹென்றி டேலிடம் அறிமுகம் செய்துவைத்து புகைப்படக்கலையின் நுட்பங்களைக் கற்றுத்தரச் செய்தார்.

இந்தியாவின் அரிய கட்டடக்கலைச் சின்னங்களைப் புகைப்படம் எடுக்க விரும்பிய சர் லேபில் கிரிபின் துரை, அந்தப் பணியை தீன் தயாளுக்கு வழங்கினார். அதற்காக கஜுரோகுவா, அஜந்தா, கோனார்க் உள்ளிட்ட பல்வேறு கட்டடக்கலைச் சின்னங்களைப் பார்வையிட்டு 86 அரிய புகைப்படங்களை எடுத்துத் தந்திருக்கிறார் தீன் தயாள். அந்தப் புகைப்படங்களுக்குக் கிடைத்த புகழ் காரணமாக, கவர்னர் ஜெனரலின் சுற்றுப்பயணத்தின்போது புகைப்படக்காரராகப் பணியாற்றும் வாய்ப்பு தீன் தயாளுக்குக் கிடைத்தது. அந்த வாய்ப்பில் நல்ல பெயரைப் பெற்ற தீன் தயாள் தனக்கென சொந்தமாக லாலா தீன் தயாள் அண்ட் சன்ஸ் என்ற ஒரு ஸ்டுடியோவை நிறுவினார். கோயில் விழாக்கள், சிற்பங்கள் மற்றும் அரண்மனையில் நடக்கும் நிகழ்ச்சிகளைப் படமாக்குவதில் ஆர்வம் காட்டினார். தீன் தயாளின் திறமையை அறிந்த ஹைதராபாத் நவாப், தனது அரச சபையின் புகைப்படக்கலைஞராகப் பணியாற்றும்படி அழைப்பு விடுத்தார்.

 இதனால், இந்தூரில் இருந்து செகந்திராபாத் நகருக்குச் சென்ற  தீன் தயாள், அங்கே ஒரு ஸ்டுடியோ நிறுவினார். வேல்ஸ் இளவரசர் இந்தியா வந்தபோது கூடவே பயணம் செய்து அவரது வேட்டை நிகழ்ச்சிகளையும், ஊர்வலத்தையும் மிக அழகாகப் படமாக்கினார். அந்தப் புகைப்படங்களின் காரணமாக அவருக்கு இங்கிலாந்து ராஜ குடும்பத்துடன் நல்ல உறவு ஏற்பட்டது. அவரிடம் புகைப்படம் எடுத்துக்கொள்ள அரச வம்சத்தினர் தயாராக இருந்தனர். அவர் எடுத்த அரச குடும்பத்துப் புகைப்படங்கள் மிகப் பெரிய விலை கொடுத்து வாங்கப்பட்டன.

தீன் தயாள், கர்சன் பிரபுவை எடுத்த புகைப்படம் மிகவும் பிரபலமானது. அதில், தனது மனைவியுடன் கர்சன் பிரபு துப்பாக்கி ஏந்தியபடி நிற்கிறார். அவரது காலடியில் அவர் கொன்ற புலியின் உடல் கிடக்கிறது. பிரிட்டிஷ்காரர்களால் நூற்றுக்கணக்கான புலிகள் வேட்டையாடி அழிக்கப்பட்டதற்கு தீன் தயாளின் புகைப்படமும் ஒரு சாட்சி.

தர்பார் நிகழ்ச்சிகள், மன்னர்களின் குடும்ப உறுப்பினர்கள், திருமணம் மற்றும் கோயில் விழாக்கள் ஆகியவற்றை நிறையப் படம்பிடித்திருக்கிறார் தீன் தயாள். 33 ஆயிரத்துக்கும் மேலான புகைப்படங்களை அவர் எடுத்திருக்கிறார் என்கின்றனர். நில ஆய்வாளராக இருந்த காரணத்தால் அவருக்கு ஒரு பொருளை எந்தக் கோணத்தில் வைத்துப் பார்க்க வேண்டும் என்பது துல்லியமாகத் தெரியும். அத்துடன், ஓவியம் வரைவதிலும் ஆர்வம் இருந்த காரணத்தால் தான் எடுத்த புகைப்படங்களை பிரின்ட் போடும்போது தேவையான டச்சப் செய்து மேம்படுத்தினார்.

தீன் தயாள், மத்தியப் பிரதேசத்தில் பயணம்செய்தபோது அவரது வண்டியை வழிப்பறிக் கொள்ளையர் மடக்கினர். பொருட்கள் யாவும் கொள்ளை போகப்போவதை அறிந்து தீன் தயாள் பதறியபோது கொள்ளைக் கூட்டத்தலைவன், அவர் தங்களை ஒரு புகைப்படம் எடுத்துத் தந்தால் உயிரோடு விட்டுவிடுவதாகக் கூறியிருக்கிறான்.

கொள்ளையரை ஒன்றாக நிறுத்திவைத்து ஒரு புகைப்படம் எடுத்திருக்கிறார் தயாள். அந்த நிகழ்ச்சியைப் பற்றி கேள்விப்பட்ட பிரிட்டிஷ் நிர்வாகம், கொள்ளையரைப் புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தி அதன் மூலம் மக்களை எச்சரிக்கை செய்யலாமே என்று முடிவு செய்ததோடு, அன்று முதல் திருடர்கள், கொள்ளையர் எங்கே பிடிபட்டாலும் அவர்களைப் புகைப்படம் எடுக்கும் முறையை நடை​முறைப்படுத்தியது. பழங்குடி மக்களின் வாழ்க்கை மற்றும் சடங்குகளைப் பற்றி ஆராய்ச்சிசெய்யத் திட்டமிட்ட பிரிட்டிஷ் ஆய்​வாளர்கள், தீன் தயாளையே துணைக்கு அழைத்துச்சென்றனர். இந்தியாவின் பல்வேறு வகையான பழங்குடி மக்களை அவர் புகைப்படம் எடுத்திருக்கிறார்.  ஒருமுறை காட்டில் பழங்குடி குடும்பம் ஒன்றை அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது, கரடி தாக்கியதில் அவரது முதுகில் பெரிய காயம்... கேமராவும் சேதமானது.

தீன் தயாளின் ஸ்டுடியோவில் 50 பேர் வேலை செய்திருக்கின்றனர். ஒருவர் வெள்ளைக்கார மேனேஜர், இரண்டு பேர் ஜெர்மனிய ஓவியர்கள், ரீ டச் செய்வதற்கு 4 பேர், பிரின்ட் போட 16 பேர். புகைப்படங்கள் எடுக்கச் சென்றுவருவதற்கு நான்கு சாரட் வண்டிகள், இரண்டு மாட்டு வண்டிகள், ஆறு குதிரைகளும் அவரிடம் இருந்தன. ஹைதராபாத் நவாப் வீட்டுப் பெண்கள் யாவரும் முகத்திரை அணிந்தவர்கள் என்பதால், அவர்களைப் புகைப்படம் எடுக்க மிசஸ் கென்னடி லெவிக் என்ற பெண்ணுக்குப் புகைப்படம் எடுக்கக் கற்றுத்தந்து துணைக்கு வைத்திருந்தார். 1885 முதல் 1900 வரையான 15 ஆண்டுகள் இந்தியாவின் மிக உயரிய புகைப்படக்கலைஞராகப் பேரும் புகழும் பெற்று விளங்கிய தீன் தயாள், 1905-ல் தனது மனைவி இறந்துபோனதைத் தாங்க முடியாமல் சோகமாக இருந்து, சில மாதங்களிலேயே அவரும் இறந்துவிட்டார். புகைப்படக்கலையில் பிரிட்டிஷ்காரர்கள் மட்டுமே கோ​லோச்சிய காலத்தில் இந்தியர்கள் எவரும் அடைய முடியாத உயரத்தை அடைந்த தீன் தயாளின் புகைப்படங்கள் இன்றைக்கும் வியப்பூட்டுகின்றன. ஒரே வருத்தம் அந்தப் புகைப்படங்கள் யாவற்றையும் நாம் முறையாகப் பாதுகாத்துவைக்கவில்லை. தீன் தயாள் போல பலரும் எடுத்த பல ஆயிரம் அரிய புகைப்படங்கள் நமது கவனமின்மையால் அழிந்துபோய்விட்டன. மீதம் இருப்​பதை இன்றுள்ள தொழில்நுட்ப வசதியைக்கொண்டு மீள்உருவாக்கம் செய்து ஆவணப்படுத்த வேண்டியதே நம் முன் இருக்கும் முக்கியப் பணி.

No comments:

Post a Comment