Search This Blog

Friday, April 26, 2013

ஓ பக்கங்கள் - பாதகம் செய்பவரைக் கண்டால்... ஞாநி


அண்மையில் ‘கார்டியன்’ ஆங்கில இதழில் வந்த ஒரு கட்டுரையை ஃபேஸ்புக் நண்பர் ஐகாரஸ் பிரகாஷ் பகிர்ந்திருந்தார். தினசரி செய்திகளைப் படிக்காமல், பார்க்காமல், கேட்காமல் இருந்தால் வாழ்க்கையில் மேலும் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று வாதாடுகிற கட்டுரை அது. ஏனென்றால் பெரும்பாலான செய்திகள் எந்த விதத்திலும் நம் வாழ்க்கையை மேம்படுத்த உதவக் கூடியவையே அல்ல. மேலும் குழப்பக் கூடியவையே என்பதே அந்தக் கட்டுரையாளர் ரோல்ஃப் டெபெல்லியின் வாதம்.

அறியாமையே ஆனந்தம் (ignorance is bliss) என்பது ரொம்பப் பழமையான ஒரு கருத்து. அறியத் தொடங்கினால் பல சந்தோஷங்கள் அடிபட்டுப் போய்விடுகின்றன. நாம் சந்தோஷம் என்று அதுவரை அறிந்திருந்த பலவும் அப்படி ஒன்றும் மகிழ்ச்சியானவை அல்ல என்று புரியத் தொடங்கிவிடுகிறது. எனவே எதையும் அறியாமலே ஆனந்தமாக இரு என்று அந்தப் பழமொழி சொல்கிறது.

அறியத் தொடங்கத் தொடங்க ஆனந்தம் குறைவது உண்மைதான். ஆனால் மெய்யான மகிழ்ச்சியை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற ஆர்வமும் கூடுகிறது. கடந்த ஒரு வாரமாக தினசரி செய்தித்தாட்களைப் பார்க்காமல் இருந்திருந்தால் நானும் நிச்சயம் சந்தோஷமாக இருந்திருக்கக்கூடும். பார்த்ததில் நிச்சயம் மகிழ்ச்சி குறைந்துவிட்டது. கவலையும் கோபமும் வேதனையும் கேள்விகளுமாக மனம் நிரம்பியிருக்கிறது.

தில்லியில் காந்தி நகரில் ஐந்து வயது சிறுமியை அண்டை வீட்டுக்காரர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதில் அந்தச் சிறுமி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாள். அவள் பிறப்புறுப்புக்குள் மெழுகுவர்த்தி, எண்ணெய் புட்டியை எல்லாம் நுழைத்து அவளைக் கொடுமைப்படுத்தினார்கள் என்று படிக்கும் போதே அழாமல் இருக்க முடியவில்லை. பிடிபட்டவன், ‘நான் செய்யவில்லை. நானும் என் நண்பனுமாக மது குடித்தோம். அவன் தான் எல்லாம் செய்தான்’ என்று சொன்னதையடுத்து நண்பனை பீகாரில் போய் கைது செய்திருக்கிறார்கள். குழந்தையை இரண்டு நாட்களாக வீட்டில் தேடியிருக்கிறார்கள். அதே கட்டடத்தில் இன்னொரு அறையில் அந்தச் சிறுமி அடைத்து வைக்கப் பட்டிருந்திருக்கிறாள்.

இதே வாரம் அலிகாரில் ஆறு வயதுச் சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு இறந்து போய் அவள் உடல் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டிருக்கிறது.

‘அமைதிப் பூங்கா’வான நம் தமிழ்நாட்டில் திருப்பூரில் எட்டு வயதுச் சிறுமி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாள். பக்கத்து வீட்டு 23 வயது இளைஞர் அவளிடம் வந்து சோறு கேட்டு, அவள் சோறு பரிமாறுகையில் அறையைப் பூட்டி விட்டு அவளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியிருக்கிறார். கோவையில் பிப்ரவரி மாதத்தில் காணாமல் போன 13 வயதுச் சிறுமியை பெங்களூருக்குக் கடத்திச் சென்றவன் திரும்ப அழைத்து வந்தபோது கண்டறியப்பட்டு மீட்கப்பட்டிருக்கிறாள். இரு மாதங்களாக பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட அந்தச் சிறுமியும் மருத்துவமனையில் இருக்கிறாள்.

இந்த நிகழ்ச்சிகள் எதையும் காவல்துறையால் நடக்காமல் தடுக்க முடியாது என்பது உண்மைதான். தில்லி காவல்துறை தலைவர் நீரஜ் குமார் அப்படித் தான் சொல்லியிருக்கிறார். பொது இடங்களில் எந்த நேரத்திலும் பயமின்றி நடமாட முடியக்கூடிய சூழலை ஏற்படுத்துவதுதான் காவல் துறையின் பொறுப்பு. (அதை அது சரியாகச் செய்வதில்லை என்பதைத்தான் பல்வேறு நிகழ்ச்சிகள் அடுத்தடுத்துக் காட்டியுள்ளன.) தனியே அவரவர் வீடுகளில், அறைகளில் நடக்கும் கொடுமைகளை காவல்துறை முன் கூட்டி என்ன செய்தும் தடுக்கமுடியாது. சரி.

ஆனால் புகாருடன் போலீசிடம் பொதுமக்கள் வரும்போது போலீஸ் எப்படி நடந்து கொள்கிறது என்பதுதான் முக்கியம். தில்லிச் சிறுமி விஷயம் தொடர்பாக அவள் குடியிருப்பைச் சேர்ந்த பொது மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதில் பங்கேற்ற ஒரு பெண்ணை, காவல்துறை துணை ஆணையர் கன்னத்தில் அறைந்தார். சிறுமிக்கு ஏற்பட்ட கொடுமை பற்றி முதலில் புகாரைப் பதிவு செய்யவே போலீஸ் விரும்பவில்லை. சிறுமி வீட்டாரிடம் 2 ஆயிரம் ரூபாய் கொடுத்து அவளைக் கவனித்துக் கொள்ளும்படியும் விஷயத்தை வெளியில் சொல்ல வேண்டாமென்றும் காவலர்கள் சொன்னதாக சிறுமியின் அப்பாவான கட்டடத் தொழிலாளி புகார் கூறியிருக்கிறார். இவையெல்லாம் மீடியாவில் வந்ததால் தவறு செய்த அதிகாரி இடைநீக்கமேனும் செய்யப்பட்டிருக்கிறார்.

இந்தியாவில் காவல்துறையை அடியோடு சீர்திருத்தி அமைத்தால் ஒழிய அது தடுக்கக்கூடிய குற்றங்களைக் கூட அதனால் தடுக்க முடியப் போவதுமில்லை. மக்களின் நம்பிக்கையை அது அடையப் போவதுமில்லை. என்ன சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று ஏராளமான பரிந்துரைகள் பல்லாண்டுகளாக அரசுக் கோப்புகளில் தூங்கிக் கொண்டிருக்கின்றன.
பொது இடத்தில் குழந்தைகளுக்கு நடக்கும் வன்முறைகளைத் தடுக்கவும் குறைக்கவும்தான் போலீஸ் தேவை. ஆனால் வீட்டுக்குள், குடும்பத்துக்குள் நடக்கும் வன்முறைகளை எப்படித் தடுப்பது? யார் தடுப்பது?

நாம்தான் தடுக்க வேண்டும். ஏனென்றால் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்முறைகளில் சுமார் 90 சதவிகிதம் அவர்களுக்குத் தெரிந்தவர்களால் தான் செய்யப்படுகிறது. அன்னியர்கள் பத்து சதவிகிதம்தான். பாலியல் வன்முறைக்கு உள்ளாவோர் பற்றிப் பொதுபுத்தியில் பல தவறான கருத்துகள் இருக்கின்றன. அதில் ஒன்று பெண் குழந்தைகளுக்கு மட்டுமே பாலியல் வன்முறை நடக்கிறது என்பதாகும். ஆறு வருடங்களுக்கு முன்னர் மத்திய அரசின் குழந்தைகள் நலத்துறை நடத்திய ஆய்வில் மொத்தக் குழந்தைகளில் 53 சதவிகிதம் பேர் ஏதோ ஒருவித பாலியல் வன்முறைக்கு உள்ளாகியிருக்கின்றனர் என்று தெரியவந்தது. இவர்களில் பாதிக்கு மேற்பட்டோர் ஆண் குழந்தைகள். பாதிக்கப்பட்டோரில் பெண் குழந்தைகள் 47 சதவிகிதம்.

உறவினர்களால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கையே அதிகம். சுமார் 60 சதவிகிதம் கொடூரர்கள் நெருங்கிய உறவினர்கள்தான். அண்மைக் காலமாக ஃபேஸ்புக்கில் ஒரு சினிமா விளம்பர வாசகத்தைப் பலரும் புல்லரித்துப் போய் லைக் போட்டுப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும், ‘முத்தம்’ காமத்தில் சேர்ந்தது இல்லையென்று," என்ற இந்த வாசகம் படத்தில் வரும் அப்பா பாத்திரத்துக்கு வேண்டுமானால் பொருந்தக்கூடும். ஆனால் அசல் வாழ்க்கையில் எல்லா அப்பாக்களுக்கும் பொருந்தாது. கடந்த சில மாதங்களுக்குள்ளேயே மூன்று சம்பவங்கள் தமிழ்நாட்டில் செய்தியாக வெளியிடப்பட்டன. மூன்றும் அப்பாக்கள் தங்கள் மகள்களான சிறுமிகளிடம் பாலியல் வன்முறை செய்தது தொடர்பானவைதான். இதேபோல அம்மா - மகன் தகாத உறவுப் பிரச்னைகள், பாலியல் வன்முறைகள் எல்லாம் நம் சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றன.

நாம் கண்ணை மூடிக்கொண்டுவிடுவதால் இவை இல்லாமல் போய்விடுவதில்லை. கார்டியன் கட்டுரையாளர் நம்மைக் கண்ணை மூடிக்கொள்ளச் சொல்கிறாரா? இல்லை. திறக்கவேண்டியதற்கு மட்டும் கண்ணைத் திறக்கக் கற்றுக் கொள்ளச் சொல்கிறார்.

ஒரு சிறுமி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதும் நம் மீடியா, பத்திரிகைகள் பெரும்பாலும் எழுப்பும் கூக்குரல் எல்லாம் ஆளுங்கட்சி, அரசு, போலீஸ் சார்ந்த எதிர்ப்பாக மட்டுமே முடிந்துவிடுகின்றன. ஒவ்வொரு கட்சியும் அதைத் தனக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ள முடியுமா என்று பார்க்கிறது.

ஆனால் அசல் பிரச்னை இன்னும் ஆழமானது. அதில் எல்லா கட்சிகளுக்கும் இயக்கங்களுக்கும் அமைப்புகளுக்கும் பொறுப்பு இருக்கிறது. அந்த அசல் பிரச்னையின் வேர்களைத்தான் நாம் பார்க்க வேண்டும். அதைப் பார்க்கச் செய்வதுதான் இதழியலின் நியாயமான பணி.

ஒவ்வொரு குழந்தைக்கும் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்வது எப்படி என்பதைச் சொல்லித் தர வேண்டியிருக்கிறது. குழந்தையிடம் நிஜமான அன்பு உடையவர்களிடம் இதைக் கற்பிப்பதை பிரசவம் முடிந்ததும் மருத்துவமனையிலிருந்தே தொடங்க வேண்டியிருக்கிறது. தன்னிடம் பேட்டச் செய்பவர் உறவினரானால் வீட்டுக்கு வேண்டியவர், நெருக்கமானவர், ஆசிரியரானால் அதிகாரம் உடையவர் என்பதெல்லாம் குழந்தையை பயப்படுத்தும் அம்சங்கள். அச்சம் தவிர் என்று குழந்தைக்குச் சொல்லித் தரவேண்டியிருக்கிறது. நம்முடைய குடும்ப அமைப்பிலும் கல்வி அமைப்பிலும் இப்போது இதற்கெல்லாம் இடமே இல்லை. அதைப் பற்றித் தான் மீடியா விவாதிக்க வேண்டும். காவலர் பயிற்சித் திட்டத்தில் இதைப் பற்றிச் சொல்லித் தர வேண்டியிருக்கிறது.

இன்னொரு பக்கம், கைதான கொடூரர்களில் பலர் திரும்பத் திரும்பச் சொல்வது - நான் மது குடித்திருந்தேன் என்பதாகும். அப்படியானால் மதுவைப் பற்றி நம் சமூகத்தின் பார்வை என்ன, அரசின் கொள்கை என்ன என்று நாம் தெளிவுக்கு வர வேண்டும். பக்குவமற்ற நம் சமூகத்தில் பூரண மதுவிலக்கே தீர்வு என்று கோரும் என் போன்றோரின் கருத்தை ஏற்காதவர்கள், மதுவின் ஆபத்திலிருந்து நம் குழந்தைகளையும் அவர்களுக்குக் கொடுமை செய்யப் போவோரையும் காப்பாற்ற வழிகள் என்ன என்றாவது கண்டறிந்து விவாதிக்க வேண்டும்.

உயிருக்கே ஆபத்து என்ற அளவுக்கு பாலியல் வன்முறை செய்யப்பட்ட குழந்தைகள் பற்றிய செய்திகள் மட்டுமே நம் கவனத்துக்கு வருகின்றன. ஆனால் சின்னச் சின்னதாகத் தொடர்ந்து பல பாலியல் அத்துமீறல்களுக்கு உள்ளாகும் பல குழந்தைகள் அதைப் பற்றிப் பேச பயப்பட்டுச் சொல்வதில்லை. ஆனால் அவர்கள் அடிமனத்தில் இருக்கும் பயமும் வேதனையும் அவர்கள் நடத்தையில் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. அந்த அறிகுறிகளைப் புரிந்து கொண்டு குழந்தைக்கு உதவ குழந்தையிடம் மெய்யான அன்புடைய ஆசிரியர்களுக்கோ பெற்றோருக்கோ கற்பிக்க வேண்டியிருக்கிறது. அதை எப்படிச் செய்வது என்று மீடியா விவாதிக்க வேண்டும். நடைமுறைக்குத் தோதான செயல்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு குடியிருப்புப் பகுதியிலும் இந்தக் கல்வி நடக்க வேண்டும்.

இந்தியாவில் இப்போது மொத்த மக்கள் தொகையில் சுமார் 30 சதவிகிதம் பேர் குழந்தைகள். அதாவது 40 கோடி குழந்தைகள். அத்தனை குழந்தைகளும் உள்ளுக்குள் பயத்துடன் வாழும் நிலையை ஏற்படுத்தப் போகிறோமா? அல்லது அச்சமின்றி தன்னால் தனக்கு வரும் சவால்களைச் சந்திக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்தப் போகிறோமா?


ஒரு திருத்தம்: சென்ற வாரக் கட்டுரையில் : கடந்த 4 வருடங்களில் மட்டும் சுமார் 900 கோடி இலங்கைப் பணம் (சுமார் 1800 கோடி இந்திய ரூபாய்) கண்ணி வெடி அகற்ற செலவிடப்பட்டிருக்கிறது என்கிறார்கள்" என்பதை 400 கோடி இந்திய ரூபாய் என்று திருத்திப் படிக்கவும். கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் தமிழர் விதவைப் பெண்கள் அதிகமாக ஈடுபடுகிறார்கள். மாதக் கூலி 200 டாலர் (சுமார் 2500 இலங்கை ரூபாய்)" என்பதை 25 ஆயிரம் இலங்கை ரூபாய் அல்லது 12500 இந்திய ரூபாய்" என்று திருத்திப் படிக்கவும். இலங்கை ரூபாயைப் போல இரு மடங்கு அதிக மதிப்புள்ளது இந்திய ரூபாய்.



No comments:

Post a Comment