Search This Blog

Sunday, March 24, 2013

குருவே சரணம்... திருவே சரணம் -1


'குரு’ என்றால் 'கனமானது’, 'பெரிது’ என்று அர்த்தம். அதாவது, பெருமை உடையவர், மகிமை பொருந்தியவர் என்று அர்த்தம். 'கு’ என்பது இருட்டு; 'ரு’ என்றால் போக்குவது. ரொம்பவும் இருட்டாக இருப்பதை கும்மிருட்டு என்போம். இதில் உள்ள 'கு’ இருட்டைக் குறிப்பதுதான். ஆக, இருட்டைப் போக்கடிப்பவர் என்பதே 'குரு’வுக்கான அர்த்தமாகிறது. ஒரு மஹானை குரு என்று ஒருவன் நாடிப்போய் அவரின் சிஷ்யனாகிவிட்டானேயானால், அவர் அவனுடைய உள் இருட்டைப் போக்கி ஞானம் தந்துவிடுவார்!’

'குரு’ என்ற பதத்துக்கு காஞ்சி மகாபெரியவா தந்த மிக அற்புதமான விளக்கம் இது. இதற்கு மிகச் சிறந்த உதாரணமும் அவரேதான்! தமது திருவடி நிழல் தேடி வந்த எத்தனையோ பக்தர்களுக்கு நிழல் தந்திருக்கிறது அந்தக் கருணாவிருட்சம். அவர்களது வாழ்க்கையில் துன்ப இருள் அகற்றி இன்ப ஒளியேற்றியிருக்கிறது அந்தச் சுடர் விளக்கு. அப்படியான சம்பவங்களும், காஞ்சி மகா பெரியவாளின் அணுக்கத் தொண்டர்களுக்கு மட்டுமே தெரிந்த அருளாடல்களும் ஏராளம் உண்டு.

காஞ்சி காமாட்சியம்மன் கோயில் பிரதான அர்ச்சகரும், மகா பெரியவாளின் அன்புக்கு உரிய அடியார்களில் ஒருவருமான நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகள், மகாபெரியவாளின் கருணைப் பிரவாகத்தை இந்த இதழ் முதல் நம்மோடு பகிந்துகொள்கிறார்.


'மகா பெரியவாளிடம் சில வருடங்கள் பாடம் கற்றுக்கொண்டது என் பாக்கியம். அவருடைய ஞானம் ஆழமானது. அவரிடம் படித்த நாட்கள் எனக்கு இன்னமும் நன்றாக நினைவு இருக்கிறது. 'நீதி சதகம்’ எல்லாம் அவர் நேரிடையாக எங்களுக்குச் சொல்லித் தந்ததுதான்.

அவர் ஈஸ்வர அவதாரம். நாங்கள் பரம்பரையாக காமாட்சி அம்மன் கோயிலில் பூஜை செய்து வருகிறோம். பெரியவா என்னைப் பொறுப்பு ஏற்றுக்கொள்ளச் சொன்னது, எனக்குக் கிடைத்த பெரும்பேறு!'' என்று பழைய நினைவுகளில் மூழ்கிய நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகள், தொடர்ந்து பேசினார்...

'பெரியவாளுக்குக் கர்னாடக சங்கீதத்தில் மிகுந்த விருப்பம் உண்டு. நல்ல சங்கீதத்தைக் கேட்டால், நேரம் போவது தெரியாமல் ரசித்துக் கேட்பார்' என்றவர், அந்த நாட்களில் பெரியவாளை வந்து சந்தித்த பிரபல சங்கீத வித்வான்கள் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

'தன்னைச் சந்திக்க வருகிற வித்வான்களிடம் அவர்களுக்கே தெரியாத விஷயங்களை எல்லாம் எடுத்துச் சொல்வார் பெரியவா. சில பாடல்களுக்கு அவர் தரும் விளக்கத்தை வித்வான்களே வியந்து கேட்பார்கள்.

திருவையாற்றில் பகுள பஞ்சமி அன்றைக்குத் தியாகராஜரின் சமாதியில் எல்லா வித்வான்களும் கூடி பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடுவார்கள் அல்லவா? அதேபோன்று, காஞ்சிபுரத்திலும் தமிழ் வருடப்பிறப்பு அன்று விடியற்காலையில் ஆரம்பித்து பஞ்ச ரத்ன கீர்த்தனைகளைப் பாடச்
 சொல்லிக் கேட்க வேண்டும் என்று பெரியவாளுக்கு ஆசை. அதற்குக் காரணம் இருந்தது. பெரியவா ஒரு தடவை சென்னைக்கு வந்திருந்தபோது, கோடம்பாக்கத்தில் தத்தாஜி என்பவர் வீட்டில் தங்கியிருந்தார். அப்போதுதான் திருவையாற்றில் தியாகராஜ ஆராதனை உத்ஸவம் நடந்து கொண்டிருந்தது. அதை ரேடியோவிலும் ஒலிபரப்பினர். காஞ்சிபுரத்திலும் அதுபோன்று நடத்தவேண்டும் என்கிற ஆசை அப்போதுதான் பெரியவாளுக்கு உண்டாயிற்று. 
 
செம்மங்குடி சீனிவாச அய்யர் பெரியவாளை தரிசனம் பண்ண அடிக்கடி மடத்துக்கு வருவார். அவரிடம் தன் ஆசையைச் சொன்னார் மகா பெரியவா. பிறகென்ன... செம்மங்குடிக்கு ரொம்ப சந்தோஷம். அவர் உடனே அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், மகாராஜபுரம் விசுவநாத அய்யர் போன்றோரிடம் சொல்லி, அதற்கு ஏற்பாடு செய்து, காஞ்சிபுரத்தில் பிரமாதமாக நடத்தினார். அதை ரேடியோவில் ஒலி பரப்பவும் ஏற்பாடு செய்தார்.

எல்லோரும் பஞ்சரத்ன கிருதிகள் பாடி முடித்ததும், பக்கத்தில் இருந்த மகாராஜபுரம் விசுவநாதய்யரிடம், 'ஆரத்தியின்போது
 நீங்கள் பாடணும்' என்று கேட்டுக் கொண்டார் பெரியவா. விசுவநாதய்யருக் குச் சந்தோஷம் தாளலை! அதுவும், பெரியவா முன்னால் பாடறதுங்கறது எவ்வளவு பெரிய விஷயம்! பக்திப் பரவசத்துடன், 'நி பஜன கான’ பாட்டை அருமையா பாடினார். பெரியவா, கண்கள் மூடி பாடலைக் கேட்டு ரசித்தார். 
 
'உன் பஜனையாகிற சங்கீதத்தில் ஈடுபடுகிறவர்களை இந்த உலகில் நான் எங்கே பார்ப்பேன்? லட்சுமி, சிவன், பிரம்மன், சசிதேவியின் பதியாகிய இந்திரன் முதலானவர்களால் வணங்கப் படுகிறவனே! சகுண- நிர்க்குண உபாசனை களின் உண்மை, பொய்களையும்... சைவம், சாக்தம் முதலான ஆறு சமயங்களின் ரகசியங்களையும், அணிமா முதலான அஷ்டஸித்திகளின் பகட்டையும் நீ விளக்க... நான் மகிழ்ச்சியுடன் அறிந்து கொண்டேன். நல்ல முகம் உடையவனே... உமது பஜனை என்னும் கானத்தில் லயித்து ரசிப்பவர்களை நான் எங்கே காண்பேன்?’ என்பது அந்தப் பாடலுக்கு அர்த்தம். மகா பெரியவாளுக்கும் ரொம்ப சந்தோஷம்! 

ஒருமுறை, என்.சி.வசந்தகோகிலம் என்ற புகழ்பெற்ற பாடகி, மகா பெரியவாளைத் தரிசிக்க வந்திருந்தார். ஒரு கச்சேரிக்குப் போய்ப் பாடிய கையோடு, அங்கிருந்து நேராகக் காஞ்சி புரம் வந்திருந்தார் அவர். கச்சேரி செய்ததற்குக் கிடைத்த ஆயிரம் ரூபாயை அப்படியே பெரியவா முன்னால் வைத்து விட்டு, நமஸ்காரம் செய்தார். ஆயிரம் ரூபாய் என்பது அந்தக் காலத்தில் ரொம்பப் பெரிய தொகை. அவருக்கு ஆசி வழங்கிய பெரியவா அந்தப் பணத்தை என்ன செய்தார் தெரியுமா?

அங்கே பக்கத்து நிலத்தில் உழுது கொண்டிருந்த அத்தனை குடியானவர் களையும் வரச் சொன்னார். ஆயிரம் ரூபாயையும் அவர்களுக்குச் சமமாகப் பிரித்துக் கொடுத்து விட்டார். குடியான வர்களுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி! பணம் கிடைத்தது மட்டுமல்ல... மகா பெரியவாளின் ஆசியோடு கிடைத்த பணம் என்பதே அதற்குக் காரணம்.

இன்னொரு சம்பவம்... மகா பெரியவா இளையாத்தங்குடியில் முகாமிட்டிருந்தார். பக்கத்து ஊரில் அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் தங்கியிருப்பது பெரியவாளுக்குத் தெரிய வந்தது. அவரை, தான் இருக்கும் இடத்துக்கு வருமாறு தகவல் அனுப்பினார் மகா பெரியவா. அவரும் உடனே புறப்பட்டு வந்தார்.

'நீங்கள் ஸ்ரீசுப்ரமண்யாய நமஸ்தே கீர்த்தனையைப் பாடி, நான் கேட்கணும்னு எனக்கு ஒரு சின்ன ஆசை வந்துடுத்து. பாட முடியுமா?’ என்று பெரியவா கேட்டதும், ராமானுஜ அய்யங்கார் கண்ணில் நீர் ததும்பிடுச்சு. எப்பேர்ப்பட்ட பாக்கியம் அவருக்கு?!  

'நான் கொடுத்து வைத்திருக்கிறேன் சுவாமி, பெரியவா முன்னால் பாடுவதற்கு' என்று பணி வுடன் சொல்லிவிட்டு, முத்துசாமி தீட்சிதரின் பிரபலமான
கிருதியான 'ஸ்ரீசுப்ரமண்யாய நமஸ்தே’ பாடலைப் பாடினார். அதை ரசித்துக் கேட்டதுடன், அந்தப் பாட்டுக்கு பெரியவா விசேஷ அர்த்தமும் சொன் னதைக் கேட்டு ராமானுஜ அய்யங்கார் சிலிர்த்துப் போயிட்டார். 'நீங்க ஆயிரம் பத்தாயிரம் பேர் இருக்கிற சபையில் பாடி, கைத்தட்டல் எல்லாம் வாங்கிருப்பீங்க. இங்கே நான் ஒரே ஒருத்தன் உங்கள் பாட்டைக் கேட்டது உங்களுக்கு எப்படியோ இருக்கோ?!' என்று பெரியவா தமாஷாக கேட்க, நெகிழ்ந்து போய்விட்டார் அரியக்குடி.


No comments:

Post a Comment