Search This Blog

Sunday, December 02, 2012

எனது இந்தியா - எஸ். ராமகிருஷ்ணன்....

சோழர்களின் வலிமையான கடற்படை குறித்த மீள்ஆய்வுகள் இன்று நிறைய நடக்கின்றன. தெற்காசிய நாடுகளில் சோழர்களின் தடயங்கள் எங்கெங்கே இருக்கின்றன? சோழர்களுக்கும் சீனர்களுக்​குமான உறவு எப்படி இருந்தது? சோழர்கள் போரிட்டு ஜெயித்த கம்போடியா, ஸ்ரீவிஜயம் போன்ற நாடு​களில் கிடைக்கும் புதைப் பொருட்கள், கல்வெட்டுக்களின் மூலம் சோழர்களுடைய கடற் படையின் வலிமை குறித்து புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, சீனாவுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையில் நடந்த வணிகம் குறித்துத் தீவிரமான ஆய்வுகள் நடந்து வரும்போது, சீனா​வுக்கும் சோழர்களுக்கும் இடையில் நடந்த கடல் வணிகத் தொடர்புகள் ஏன் கண்டுகொள்ளாமல் விடப்படுகின்றன என்ற கேள்வி எழுகிறது.

சோழர்களின் கடற்படைத் தொழில்​நுட்பம் எப்படி இருந்தது? அவர்கள் பயன்​படுத்திய கடல் வரைபடங்கள், கப்பல் கட்டும் முறை, மாலுமிகளைத் தயார்செய்யும் விதம், ஏற்றுமதி - இறக்குமதி முறைகள், கடலில் போர் செய்வதற்கு மேற்கொண்ட உத்திகள் யாவும் இன்னும் முறையாக ஆய்வு செய்யப்படவில்லை. சோழர்கள் தங்களது ஆட்சிக் காலத்தில் நடந்த விஷயங்களைக் கல்வெட்டுக்களிலும் தாமிரப் பட்டயங்களிலும் முறையாகப் பதிவுசெய்யக் கூடியவர்கள். அப்படி இருந்தும் அவர்களின் கடல் பயணங்கள் குறித்த ஆதாரங்கள் நமக்குக் குறைவாகத்தான் கிடைத்து இருக்கின்றன. ஒருவேளை, அவை உலகின் கவனம் பெறக்கூடாது என்பதற்காக அழிக்கப்பட்டு விட்டதா என்ற சந்தேகமும் ஏற்படு​கிறது.


சோழர்களின் கடல் வணிகமானது, மூன்று நிலைகளைக்​கொண்டது. தமிழகத்தில் இருந்து முத்துக்கள், நவமணிகள், தந்தம் மற்றும் சந்தனம் உள்ளிட்ட வாசனைப் பொருட்களை ஏற்றிக்​கொண்டு சீனாவுக்குப் போவது. அவற்றை சீனாவில் விற்றுவிட்டு, அங்கிருந்து பட்டுத் துணி, இரும்பு, பீங்கான் பாத்திரங்கள் மற்றும் அலங்காரப் பொருட்களை கொண்டுவருவது. அவற்றை இந்தியாவில் விற்றுவிட்டு மீதி இருப்பதை அரபு நாடுகளுக்கு, குறிப்பாக பாக்தாத் நகர வணிகச் சந்தையில் விற்பதற்காக அரேபிய வணிகர்களிடம் ஒப்படைப்பது. அரேபி​யாவில் இருந்து குதிரைகளைத் தமிழகத்துக்குக் கொண்டுவந்து சோழ மன்னர்களிடம் விற்பது. ஆகவே, சோழர்களின் கடல் பயணத்துக்கு சீனர்களும் அரேபியர்களும் உதவி செய்யவேண்டிய அவசியம் இருந்தது.

1020-ம் ஆண்டு சோழ மன்னர் ராஜேந்திரன் சீனாவுக்கு ஒரு தூதுக் குழுவை அனுப்பி,  சாங் மன்னருடன் நட்புறவு ஏற்படுத்திக் கொண்டான். அதற்காக, சீன அரசனுக்கு ஏராளமான பரிசுகளை அளித்து தூதுக் குழுவை அனுப்பிவைத்தான். அந்தப் பரிசுகளை ஏற்றுக்கொண்ட சீன அரசன், தூதுக் குழுவினருக்குப் பட்டுத் துணிகளைப் பரிசாக அளித்து கௌரவப்படுத்தி இருக்கிறார். அதனால், சீனாவுடன் தொடர்ந்த நல்லுறவு சோழர்களின் கடல் வணிகத்துக்குச் சாதகமாக அமைந்தது. கப்பல் கட்டும் முறையில் சோழர்கள் தனித்துவம் பெற்று இருந்தனர். அதுகுறித்து, சீனக் குறிப்புகள் கூறுகிறபோதும், தமிழகத்தில் நேரடியான கல்வெட்டுச் சான்றுகள் எதையும் காணவில்லை. ஆந்திராவின் நெல்லூர் அருகே உள்ள கிருஷ்ணப்பட்டணத்தில் கண்டறியப்பட்ட கல்வெட்டு ஒன்றில், மரக்கலம், தோணி, படகு, கலவம், வேதி என்ற ஐந்து விதமான கடல் கலங்களைப் பற்றிய விவரங்கள் இருக்கின்றன. அதில் மரக்கலம், தோணி போன்றவை படகைப்போன்று நான்கு மடங்கு பெரியவை என கூறப்பட்டு இருக்கிறது.


சோழர்கள் கடற்படையானது முறையாக நிர்வகிக்கப்​பட்டது. அதில் அரசரே முதன்மையானவர். போர்புரியும் வீரர்களைக்கொண்ட குழுவை, கனம் என்று அழைத்தனர். அதற்குத் தலைமை ஏற்பவர் கனாபதி. அதுபோலவே, மண்டலாதிபதி எனப்படுபவர் தலைமையில் 40 கப்பல்கள் இருக்கும். அந்தக் கப்பல்கள் குழுவாகச் சென்று போர்புரியக் கூடியவை. 100 முதல் 150 கப்பல்களைக்கொண்டது ஒரு பிரிவு. ஓர் அணியில் 300 முதல் 500 கப்பல்கள் இருந்தன. சோழர்களின் கடல் வணிகம் பற்றிய தனது கட்டுரையில் ஆய்வாளர் சி.வி.கார்த்திக் நாராயணன் நிறைய தகவல்களைத் தருகிறார். குறிப்பாக பூம்புகார் அழிந்த பிறகு, சோழர்களின் முக்கியத் துறைமுகமாக விளங்கியது நாகப்பட்டினம். வங்கக் கடலில் அரேபிய, பாரசீக மற்றும் சீன வணிகர்களின் வியாபாரப் போட்டியால், தமிழக வணிகர்கள் எதிர்பாராத தாக்குதலையும் கொள்ளையையும் சமாளிக்க வேண்டி இருந்தது. அதை ஒடுக்குவதற்காகவே சோழர்கள் கடல் ஆதிக்கம் செய்ய முயன்றனர். வணிகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக, ரோந்துக் கப்பல்கள் அனுப்பியது, சோழர்களின் கடற்படை.

ராஜேந்திர சோழன் தனது கடற்படையைக்​கொண்டு தென் கிழக்கு ஆசிய நாடுகளை வென்றது குறித்து, கல்வெட்டுக்களும், செப்புப் பட்டயங்​களும் தகவல்கள் கூறுகின்றன. ஆனால், அந்தக் கல்வெட்டுக்களில் கடல் வணிகர்கள் எவ்வாறு கலம் செலுத்திச் சென்றனர் என்ற விவரங்கள் இல்லை.

பல்லவர்கள் காலத்திலேயே கடல் வணிகம் முக்கியமாகக் கவனம் பெறத் தொடங்கியபோதிலும், சோழர்களே கடல் கடந்து சென்று தங்களது ஆதிக்​கத்தை நிலை நாட்டினர். குறிப்பாக, இலங்கையும் மாலத் தீவுகளும் சோழர்களின் கடல் வணிகத்துக்கான முக்கிய மையமாகத் தேவைப்பட்டன. ஆகவே, அதைக் கைப்பற்றியதோடு சிறீவிஜயம் எனப்படும் இப்போதைய இந்தோனேஷியா, மலாய், சுமத்ரா, ஜாவா மற்றும் நிக்கோபார் ஆகிய தீவுகளையும் சோழர்கள் தங்கள் வசப்படுத்திக்கொண்டு, கடல் வணிகத்தை வலிமைப்படுத்தினர். அத்துடன், ஒரிசா மற்றும் வங்க வணிகர்களையும் ஒடுக்கி கடல் வணிகத்தை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது சோழர்களின் பெரிய வெற்றி.

ராஜராஜ சோழனின் கடற் படை இலங்கையை வென்றதை 'திருமகள்...’ என்று தொடங்கும் கி.பி. 993-ம் ஆண்டின் மெய்க்கீர்த்தியால் அறியலாம். இந்தப் படையெடுப்பின்போது, ஈழத்தில் ஆட்சி புரிந்தவன் ஐந்தாம் மகிந்தன். இலங்கையில் ராஜராஜனின் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. ஈழத்தைச் சோழர்கள் கைப்பற்றியதைக் கொண்டாடும்விதமாக தலைநகரை மாற்றியதோடு பொலனருவையில் ஒரு சிவன் கோயில் கட்டினான் ராஜராஜன். ராஜேந்திரன் ஆட்சியின் 14-வது ஆண்டுக் கல்வெட்டுக்களில், முதன்முறையாக கடல் கடந்து கடாரம் வென்ற செய்தி காணப்படுகிறது. இதைத் தெரிவிக்கும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கடலைக் கடந்து திறமையான படையுடன் ராஜேந்திரன் கடாஹ என்னும் பகுதியைக் கைப்பற்றினான் எனச் சுருக்கமாக முடிக்கிறது என்றாலும் இந்தச் சாதனையை தமிழ் மெய்க்கீர்த்தி மிக விரிவாகச் எடுத்துச் சொல்கின்றன. கி.பி. 1025-ம் ஆண்டு, சோழர்களின் கடற்படை சங்கராம விஜயோத்துங்கவர்மன் ஆண்ட ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தில் போரைத் தொடங்கியது. இந்தப் படையெடுப்பின் மூலமும் எவ்விதமான நிலப்பரப்பும் சோழ தேசத்துடன் இணைக்கப்படவில்லை. 


அதற்கு மாறாக, சோழ ஆட்சிக்கு அடங்கி இருப்பதாக ஸ்ரீவிஜயம் அரசு ஒப்பந்தம் செய்துகொண்டு திரை செலுத்தி, மீண்டும் ஆட்சி செய்யத் தொடங்கியது. சோழர்களின் கடற்படை தனித்துவம் மிக்கது. குறிப்பாக, அவர்களது பாய்மரக் கப்பல்களில் உள்ள பாய்கள் சதுரம் மற்றும் நீள்சதுர வடிவங்களில் அமைந்து இருந்தன.

கடல் பயணத்துக்கு மிகவும் இன்றியமையாதது காற்றின் வலிமையை அறிந்துகொள்வது. அத்துடன் புயல், மழையை முன்கூட்டியே அறிந்து அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும். இதற்காக, நட்சத்திரங்களைக்கொண்டு காற்றின் போக்கை​யும் புயல், மழை பற்றியும் சோழர்கள் அறிந்து இருக்கிறார்கள். இதற்காக, மீகான் எனப்படும் கப்பலின் மாலுமி நட்சத்திரங்களின் வரைபடம் ஒன்றை வைத்திருப்பார். அந்த வரைபடத்தின் துணைகொண்டு விண் நோக்கி அவதானித்து நட்சத்திரங்களை அடையாளம் காண வேண்டும். அதை வழிகாட்டியாகக்கொண்டு கடலில் கலம் செலுத்திப் போவதே வழக்கம். கடலோடியான நரசய்யா தமிழர்களின் கடல் வணிகம் பற்றி எழுதிய குறிப்பில், ''மாலுமிகள் நட்சத்திரங்களை அளவிடுவதற்கு விரல் கணக்கைத்தான் பயன்படுத்துவார்கள். ஒற்றை வெள்ளி, எழு வெள்ளி, செம்மீன், உலக்கை வெள்ளி, ஒடக்கல் வெள்ளி, வடமீன் என 56 விதமான வெள்ளிகளின் துணைகொண்டு கடல் பயணம் செய்துள்ளனர். இலுப்பை, புன்னை சிறுதேக்கு கரைமருது போன்ற மரங்களில் இருந்து கப்பல்கள் செய்யப்பட்டன. கப்பல் கட்டுபவர்கள் கம்மியர் என்று அழைக்கப்பட்டனர். அதிராமபட்டினம், கோடியக்கரை, முத்துப்பேட்டை போன்ற ஊர்களில் கப்பல் கட்டும் இடங்கள் இருந்துள்ளன. கடல் அலையின் சீற்றத்தை அறிந்துகொள்வதற்காக மிதப்புப் பலகை ஒன்றை சோழ மாலுமிகள் பயன்படுத்தினர். அந்தப் பலகையின் வேகம் மற்றும் மிதக்கும் நிலையை வைத்து அலைகளின் இயல்பை அறிந்துகொண்டனர்'' எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

2 comments: