Search This Blog

Sunday, December 16, 2012

எத்தனால் பெட்ரோல்

வர்த்தகப் பற்றாக்குறை, ரூபாய் மதிப்பு சரிவு, உயரும் பணவீக்கம், வட்டிவிகிதம் அதிகரிப்பு, வளர்ச்சி குறைவது என இப்போதைக்குப் பல பிரச்னைகள் இந்தியாவுக்கு. இந்தப் பிரச்னைகள் அத்தனைக்கும் காரணம், இந்தியா செய்துவரும் அதிகளவு இறக்குமதிதான். இதில் கச்சா எண்ணெய் இறக்குமதி மிக அதிகம். கச்சா எண்ணெய்யை அதிகளவு இறக்குமதி செய்வதில் உலக அளவில் நான்காவது இடத்தில் இருக்கிறது இந்தியா. 1986-ல் ஒரு நாளைக்கு சுமார் மூன்று லட்சம் பேரல்களை இறக்குமதி செய்தோம். ஆனால், அதுவே இப்போது பத்து மடங்குக்கு மேலாக உயர்ந்திருக்கிறது.

 கடந்த சில வருடங்களாகவே இந்தியா ஏற்றுமதி செய்யும் தொகையில் சுமார் 40 சதவிகிதம் அளவு கச்சா எண்ணெய் இறக்குமதிக்கே போய்விடுகிறது. கடந்த 2011-12-ம் ஆண்டு இறக்குமதி மட்டும் 485 பில்லியன் டாலர். இதில் கச்சா எண்ணெய் மட்டும் 160 பில்லியன் டாலர்கள். ஆனால், இந்தியா செய்யும் ஏற்றுமதி வெறும் 300 பில்லியன் டாலர்கள் மட்டுமே. கூட்டிக்கழித்துப் பார்த்தால், கச்சா எண்ணெய் இறக்குமதி என்பது நம் நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் பாதிக்கக்கூடியதாக இருக்கிறது. இந்நிலையில் நாளுக்குநாள் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வரும் சூழ்நிலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி என்பது நிச்சயம் நமக்கு ஒரு பெரும் பிரச்னைதான்.

இந்தச் சூழ்நிலையில் அதன் இறக்குமதியைக் குறைக்கும் ஒரு நடவடிக்கையாக, பெட்ரோலுடன் 5 சதவிகிதம் எத்தனாலைக் கலக்க உத்தரவு பிறப்பித்திருக்கிறது மத்திய அரசு. இதன் மூலம் வருடத்துக்கு சுமார் 100 கோடி லிட்டர் பெட்ரோல் பயன்பாடு குறையும். தவிர, இந்தியாவில் எத்தனால் உற்பத்தி நிறைய இருக்கிறது. (கடந்த நிதி ஆண்டில் 220 கோடி லிட்டர் எத்தனால் உற்பத்தியானது!)

2009-ம் ஆண்டே இதற்கான முடிவு எடுக்கப்பட்டாலும் இப்போதுதான் மத்திய அரசு கட்டாயமாக்கி இருக்கிறது. இதன் காரணமாக 15 சதவிகிதம் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் கார்பன் மோனாக்ஸைடு வெளியிடப்படுவதும் குறையும். ஏற்கெனவே சில மாநிலங்களில் 2 சதவிகிதம் அளவுக்கு எத்தனால் கலக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் இந்த உத்தரவு காரணமாக இனி அனைத்து மாநிலங்களிலும் கடந்த டிசம்பர் 1-ம் தேதியில் இருந்து 5 சதவிகித எத்தனாலைக் கலக்க வழி பிறந்திருக்கிறது.

இதன் காரணமாக இந்தியாவின் இறக்குமதி கொஞ்சம் குறைய வாய்ப்பு இருக்கிறது. என்றாலும், இந்தியாவில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் எண்ணம் குறைந்துகொண்டே வருகிறது. இதைத் தடுப்பது அவசியம். இல்லை எனில், பெட்ரோலில் எத்தனாலைக் கலக்கும் விகிதம் தொடர்ந்து அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்படலாம். வருமுன் காப்போம்!



No comments:

Post a Comment