Search This Blog

Saturday, November 24, 2012

ஓ பக்கங்கள் - இரண்டு கடிதங்கள்! ஞாநி

கடிதம் 1:


அன்புள்ள கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கும் வணக்கம்.

இதற்கு முன்பு உங்கள் இருவருக்கும் தனித்தனியே கடிதங்கள் எழுதியிருக்கிறேன். இருவருக்குமாக ஒரே கடிதம் எழுதுவது இதுவே முதல்முறை. முந்தைய கடிதங்களை நீங்கள் பொருட்படுத்தாதது போல இதையும் அலட்சியம் செய்வது உங்கள் விருப்பம். எனினும் எழுதுவது என் கடமை.

தீபாவளியை இருவரும் அவரவர் வழியில் கொண்டாடி மகிழ்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். தமிழ்நாடும் எப்படி அன்றைய தினம் கொண்டாடி மகிழ்ந்தது என்பதை கீழ்வரும் செய்திகளிலிருந்து அறிந்து மகிழும்படி கேட்டுக் கொள்கிறேன்.

மயிலாடுதுறை பொறையாறு அருகே இரண்டு காவலர்கள் குடிபோதையில் ஒரு காரை உடைத்து நொறுக்கினார்கள்.

கோவை அருகே குடிபோதையில் ஒரு காவலர் தம்மேல் அதி காரியைக் கண்டபடி திட்டினார்.

தர்மபுரியில் ரோந்துப் பணியில் இருந்த ஒரு காவல் அதிகாரி குடிபோதையில் தள்ளாடினார்.

அரசின் காவலர்கள் இப்படி முன்மாதிரிகளாகக் கொண்டாடும்போது குடிமக்கள் பின்தங்கியிருக்க முடியுமா?

ராயபுரத்தில் குடி போதையில் இருந்த ஒரு கணவன், உடல் சோர்ந்து படுத்திருந்த கர்ப்பிணி மனைவியை எழுப்பி தோசை தரச் சொன்னதும் அவள் உடனே தராததால், கழுத்தை நெரித்துக் கொன்றான். கொருக்குப் பேட்டையில் குடித்துக் கொண்டிருந்த இரு நண்பர்களில் ஒருவன் தரையில் வைத்திருந்த மதுக் கோப்பையைத் தவறுதலாக இடறி அது கொட்டி விட்டதால் எரிச்சலடைந்த மற்றொரு நண்பன் அவனைக் கத்தியால் குத்திக் கொன்றான்.
இவையெல்லாம் ஒன்றுமே இல்லை.

சேலம் ஆத்தூரில் ஐந்து நண்பர்கள் குடித்துவிட்டுப் பெரும் போதையில் இரண்டு பைக்குகளில் தாறுமாறாக சாலையில் சென்றார்கள். அவசர காலத்தில் உயிர்காக்க உதவும் ஆம்புலன்ஸ் வண்டியின் டிரைவரான அரசு ஊழியர் சண்முக சுந்தரம் என்பவர் அதே சாலையில் தன் டூவீலரில் வந்தார். குடிகார இளைஞர்களை நிதானமாக வண்டி ஓட்டும்படி சொன்னார். ஆத்திரமடைந்த ஐவரும், சண்முகசுந்தரத்தை சாலையிலேயே இழுத்துப் போட்டு அடித்து உதைத்துக் கொன்றே விட்டார்கள். அதில் ஒருவன் கல்லூரி மாணவன்! சண்முக சுந்தரத்துக்கு பள்ளிப்படிப்பு படிக்கும் இரு குழந்தைகள் இருக்கிறார்கள். இந்தத் தீபாவளி அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

கடந்த சில வருடங்களாகவே தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் வந்த செய்திகளில் எப்படி பல அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மது குடித்துவிட்டு பள்ளிக்கு வந்து தள்ளாடுகிறார்கள் என்பதை வெளிப்படுத்தின. பள்ளி வளாகத்துக்குள்ளேயே கும்பலாக உட்கார்ந்து படித்துக் கொண்டு அல்ல, குடித்துக் கொண்டு இருந்த மாணவர்களைக் கண்டித்த ஆசிரியரை அவர்கள் தாக்கிய செய்தியையும் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்.

எட்டாம் வகுப்பு வரை படித்தும் தமிழையோ ஆங்கிலத்தையோ எழுத்துக் கூட்டிக் கூடப் படிக்க சிரமப்படும் நிலையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இருப்பதாக ஓர் ஆய்வு ஒரு பக்கமும், 10வது, 11வது வகுப்பு மாணவர்கள் மத்தியிலேயே மது அடிமைத்தனம் உருவாகிவிட்டதாக இன்னொரு ஆய்வும் தெரிவித்ததை நீங்கள் இருவரும் படித்தீர்களா என்று தெரியவில்லை.

மேலே சொன்ன எந்த நிகழ்ச்சியின் போதும் நீங்கள் இருவரும் ஒரு அறிக்கை கூட வெளியிட்டதில்லை. எதெதற்கோ அறிக்கை வெளியிட்டு அறிக்கைப் போரே நடத்துபவர்கள் நீங்கள். தமிழகமே இப்படி மது அடிமைத்தனத்தால் சீரழிவதைப் பற்றி உங்கள் இருவரிடமிருந்தும் ஒரு அறிக்கை கூட வந்ததில்லை. 

ஏனென்றால் இந்தச் சீரழிவுக்குப் பொறுப்பேற்க வேண்டியவர்களே நீங்கள்தான். உங்களில் ஒருவர்தான் 35 வருட காலம் தமிழகத்தில் இருந்த மதுவிலக்கை நீக்கி அடுத்த 40 வருட காலமாக பல தலைமுறைகளுக்கு மதுவைப் பழக்கிக் கொள்ள வழிவகுத்தவர். உங்களில் இன்னொருவர்தான் பள்ளிக் கூடங்களை தனியாரை நடத்த விட்டுவிட்டு, மதுக்கடைகளை அரசாங்கம் நடத்தும் புரட்சியைச் செய்தவர். இதன் விளைவுகளில் ஒரு சிறு துளியைத்தான் மேலே பட்டியலிட்டேன். இன்றைய தமிழகத்தில் 18 வயது முதல் 35 வயது வரையிலான இளைஞர்களில் பாதி பேருக்கு மேல் குடிகாரர்களாகிவிட்டார்கள். தமிழகத்தில் இருக்கும் சுமார் மூன்று கோடி குடும்பங்களில் வீட்டுக்கு ஒரு மது அடிமை இல்லாத குடும்பமே இல்லை என்ற நிலை படுவேகமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. மதுவால் சீரழியும் காவலர்கள் பற்றியோ ஆசிரியர்கள் பற்றியோ வெளியான செய்திகள் ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் இன்னமும் செய்தியாகாமல் தப்பித்துக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான குடிகாரர்கள் இருக்கிறார்கள். ஒரு சமூகத்தில் காவலர்களும் ஆசிரியர்களுமே குடிபோதைக்கு அடிமையானால், அந்தச் சமூகம் இன்னும் எவ்வளவு உள்ளுக்குள்ளேயே அழுகிக் கிடக்கும் என்று யூகிக்கலாம். தினசரி சுமார் 2 கோடி தமிழர்களேனும் மது குடித்து மதி இழப்பதை சாத்தியப் படுத்தியிருக்கிறீர்கள். அதன் விளைவுதான் இன்று தமிழகத்தில் எலெக்ட்ரீஷியன், ஃபிட்டர், வெல்டர், ப்ளம்பர், மெக்கானிக், மேசன் என்று பல துறைகளிலும் மிகக் கடும் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. ஏழைப் பெண்கள் ஏழைமையால் படும் துயரம் போதாதென்று தம் வீட்டு ஆண்களின் போதையால் படும் கூடுதல் துயரம் சொல்லி மாளாது. நேரமிருந்தால் உங்கள் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்களிடமே மனம் விட்டுப் பேசிப் பாருங்கள். குடிப்பழக்கத்தால் சீரழியும் குடும்ப சோகங்களை அவர்கள் கொட்டித் தீர்ப்பார்கள். 

கடந்த இருபது வருடங்களில் நீங்கள் இருவரும் மாறிமாறி ஆட்சி நடத்தியதால் தமிழர்களுக்கு எந்தப் பெரிய லாபமும் ஏற்பட்டுவிடவில்லை. உங்களில் ஒருவர் வீட்டுப் பெண் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் புகார் குற்றச்சாட்டில் சிறைக்குச் சென்றதும், ஒரு பேரன் மோசடி வழக்கில் கைதாக பயந்து மாதக் கணக்கில் தலை மறைவாக ஒளிந்திருப்பதும், உங்களில் மற்றவர் தன் அன்புக்குரிய உடன் பிறவா சகோதரியுடன் சட்ட விரோத சொத்துக் குவிப்பு வழக்கில் வருடக்கணக்கில் நீதிமன்றப் படி ஏறி இறங்கிக் கொண்டிருப்பதும்தான் உங்கள் சாதனைகள். உங்கள் இருவரின் ஆட்சியில் ஏற்பட்ட நன்மைகளுடன் தீமைகளை ஒப்பிட்டு காஸ்ட்- பெனிஃபிட் ரேஷியோ பார்த்தால், தமிழர் பெற்றதை விட இழந்ததே அதிகம்.உங்கள் இருவருக்கும் கொஞ்சமேனும் மனசாட்சி இன்னமும் மீதம் இருக்குமானால், தயவுசெய்து இந்த மது அவலத்துக்கு முற்றுப் புள்ளி வையுங்கள். ‘தமிழினத் தலைவர்’ அவர்களே, தமிழக அரசு பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால், அதை தி.மு.க முழுமையாக ஆதரிக்கும். தி.மு.க ஆட்சிக்கு வந்தாலும் மதுவிலக்கு தொடரும் என்று அறிக்கை வெளியிடுங்கள். ‘புரட்சித் தலைவி’ அவர்களே, ஜனவரி 1 முதல் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்றும் அதை ஆதரிக்கும் தி.மு.க.வுக்கு நன்றி என்றும் அறிவியுங்கள்.இதைச் செயத் தாமதமாகும் ஒவ்வொரு கணமும் தமிழகம், தமிழ் இனம் அவலப் பெருங்குழியில் வீழ்ந்து கொண்டே இருக்கிறது. ஈழத்தமிழர்களை அழிக்கும் பழி சிங்கள ராஜபட்சே மீதானது. ஆனால் இந்தியத் தமிழர்களைக் கத்தியின்றி ரத்தமின்றி மதுக் கோப்பைகளாலேயே அழிக்கும் பழியை நீங்கள் இருவர்தான் சுமக்கப் போகிறீர்கள்.

உங்கள் இருவராலும் தமிழகத்தில் மது விலக்கைக் செயல்படுத்த முடியாதென்றால், ஒரே ஒரு வேண்டுகோள்தான் எனக்கு மீதம் இருக்கிறது. தயவுசெய்து இருவரும் அரசியலை விட்டு வெளியேறுங்கள். அதுவே தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்யக் கூடிய மாபெரும் தொண்டாக இருக்கும்.இன்றிரவு உறங்கப் போகும் முன்பு ஒரு தவறும் செய்யாத ஒரு சண்முகசுந்தரம் நடுத்தெருவில் உங்களால் ஊக்குவிக்கப்பட்ட குடிகாரர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டதை எண்ணிப் பாருங்கள். ஒவ்வொரு இரவிலும் அப்பாவின் கொடூர சாவைப் பற்றி எண்ணி தூக்கம் இழக்கும் அந்தக் குழந்தைகளை எண்ணிப் பாருங்கள். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக பூரண மதுவிலக்கு ஆதரவு அறிக்கையை எழுதி வெளியிட்டு பரிகாரம் தேடுங்கள்.

இன்னும் உங்கள் இருவர் மீதும் எஞ்சியிருக்கும் சொற்ப நம்பிக்கையுடன்,
ஞாநி

கடிதம் 2:

அன்புள்ள மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு,

வணக்கம். தர்மபுரியில் தலித்துகளுக்கு எதிராக நடத்தப்பட்ட அட்டூழியங்களுக்கு உடனடியாகத் தீர்வு தேடும் ஒரு முயற்சியாகவே இதை உங்களுக்கு எழுதுகிறேன்.

ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க ஐ.நா சபை தவறிவிட்டது; அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்று சர்வதேசப் பார்வையுடன் அறிக்கை விடும் நீங்கள் அதற்கு முன் உள்ளூர் பார்வையில் தர்மபுரி தலித்துகளுக்கு நிகழ்ந்த கொடுமைகளுக்கு யார் பொறுப்பு, என்ன பரிகாரம் என்பதைப் பேசியாக வேண்டும்.

தர்மபுரி தலித் கிராமங்களில் தாக்குதல் செய்தவர்கள் எல்லாரும் உங்கள் சொந்தங்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை. தாக்குதலை ஆரம்பித்துவைத்தது ஒரு கலப்புத் திருமணம்தான். கடந்த காலத்தில் தலித் தலைவர் திருமாவளவனுடன் சேர்ந்து சுற்றுப்பயணம் சென்று வன்னியர்களுக்கும் தலித்துகளுக்கும் இடையே இருந்த பகையுணர்வை தணித்த நீங்கள் இப்போது ஏன் அப்படிப்பட்ட ஒரு நடவடிக்கைக்கு முன்வரத் தயங்குகிறீர்கள்?  இந்த சாதி அரசியலால் வன்னியர்கள் அடையப்போகும் நன்மை என்ன? கடந்த காலத்தில் நீங்கள் மாறி மாறி திராவிடக் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்ததாலோ, உங்கள் மகனை மத்தியிலே அமைச்சராக சில வருடம் வைத்திருந்து அழகு பார்த்ததாலோ, வன்னிய சாதியினரின் வாழ்க்கையில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டது என்று விளக்க முடியுமா? உங்கள் அரசியல் பலத்துக்கு வன்னியர்களை பயன்படுத்தப் பார்த்தீர்களே தவிர, அதனால் வன்னியருக்கு விளைந்த நன்மை என்ன? வன்னிய சமுதாயத்தையே குடிகாரர்களாக்கி அழிக்கப் பார்க்கிறார்கள் என்று உங்கள் கட்சிப் பிரமுகர் காடுவெட்டி குரு திராவிடக் கட்சிகள் மீது குற்றச்சாட்டை உங்கள் முன்னிலையிலேயே வைத்தார். சரியான குற்றச்சாட்டுதான். உங்கள் மீது எனக்கு இன்னமும் இருக்கும் நம்பிக்கைக்கும் மதிப்புக்கும் காரணம் நீங்கள் குடியை எதிர்ப்பதும், உங்கள் டி.வி.யில் இன்னும் பிடிவாதமாக வணிக சினிமாவை அனுமதிக்க மறுப்பதும்தான். வன்னியர் மட்டுமல்ல, எல்லா தமிழ் சாதிகளையும் குடி அழிக்கிறது. ஆனால் அதை ஊக்குவித்த திராவிட கட்சிகளுக்கு மாற்று அரசியலாக நீங்கள் முன்வைப்பது என்ன? சாதி அரசியல் தான்.வன்னியர்களை திராவிடக் கட்சிகள் குடிகாரர்களாக்கியது. நீங்களோ வன்முறையாளர் களாய்க்குகிறீர்கள். குடி சீரழிக்கும். சாதிவெறி உயிர் கொல்லி. நீங்கள் அறிந்தோ அறியாமலோ ஊக்குவிக்கும் இந்த சாதி வெறி எதிர் வன்முறையைத் தூண்டினால் எஞ்சுவது அழிவுதான். வன்னியர் பெரிதும் வாழும் ஆற்காடு மாவட்டங்களில் பிரபலமான கூத்து மகாபாரத யுத்தத்தில் இறுதியில் எல்லாரும் அழிந்ததைத்தான் சொல்லிச் சொல்லி எச்சரிக்கிறது. அந்த அழிவை நோக்கி வன்னியரையும் தலித்துகளையும் தள்ளும் சாதி அரசியலைவிட திராவிட அரசியலே மேல் என்றுதான் சிந்திக்கத் தெரிந்த ஒவ்வொரு வன்னியரும் முடிவெடுப்பார்கள்.

சாதி அரசியல் உங்களையும் அடுத்த தேர்தலில் அழித்துவிடும். உங்கள் சொந்தங்களையும் நிரந்தரமாக யுத்த பூமியில் ரத்தம் சிந்தியே வாழச் செய்துவிடும். ஒரு வன்னிய அன்புமணி, மருத்துவம் படித்து நவீன மனிதனாக மாறியதுபோல ஒவ்வொரு வன்னிய இளைஞனும் மாற தேவைப்படுவது தமிழுணர்வும் மானுட நேயமும் தான்.இன்னும் காலம் தாமதமாகி விடவில்லை. இந்த முட்டாள் தனங்களுக்கு நீங்கள் நினைத்தால் இப்போதே முற்றுப்புள்ளி வைக்கலாம். சாதி ஒழிப்புதான் உங்கள் உண்மையான நோக்கம் என்றால், நாயக்கன் கொட்டா கிராமத்து இளவரசனையும் திவ்யாவையும் அழைத்துப் பாராட்டுவிழா நடத்துங்கள். அந்தச் செய்தி ஒவ்வொரு வன்னியர் மனத்திலும் ஒவ்வொரு தலித் மனத்திலும் புதிய வெளிச்சத்தை ஏற்படுத்தும். மறுபடியும் திருமாவை அழைத்துப் பேசுங்கள். இருவருமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லுங்கள். மக்களிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள். எந்த வன்னியர்கள் தாக்குதலைச் செய்தார்களோ அவர்களைக் கொண்டே இடித்த வீடுகளைக் கட்டிக் கொடுக்கச் செய்யுங்கள். பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணப் பணிக்கு நீங்கள் முன்னின்று நிதி திரட்டிக் கொடுங்கள். வன்னியராகக் குறுகாமல், தமிழராக நிமிருங்கள். 

இல்லையென்றால், தமிழின் பெயரால், தமிழரின் பெயரால் ஐ.நாவுக்கு அறிவுரை சொல்லும் தகுதியே உங்களுக்கு இல்லாமல் போய்விடும்.
சிந்தியுங்கள்.


அன்புடன்
ஞாநி



2 comments:

  1. உங்கள் துணிச்சலை நான் மிகவும் பாராட்டுகிறேன்.....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  2. நல்ல பதிவு!ஆழ்ந்தகருத்துகள்!!!

    ReplyDelete