Search This Blog

Friday, October 26, 2012

பொன்விழா! - ஓ பக்கங்கள் , ஞாநி


இந்திய - சீனப் போர் நடந்து 50 வருடங்களாகின்றன. இதை நிச்சயம் பொன்விழாவாகக் கொண்டாட முடியாது.

ஆனால் 1962ல் நடந்த இந்த யுத்தம் இந்திய அரசியலில், இந்திய வெளியுறவில் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தியது. ஒற்றைப் பெரும் கட்சியாக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்த யுத்தம் பற்றிய உட்கட்சிக் கருத்து மோதலின் தொடர்ச்சியால், இரண்டாக உடைந்து மார்க்ஸிஸ்ட் கட்சி உதயமாயிற்று. தேர்தல் அரசியலில் நுழைந்தபின்னர் தனித் திராவிட நாடு கோரிக்கையை எப்படி, எப்போது கைவிடுவது என்று தவித்துக் கொண்டிருந்த தி.மு.க.வுக்கும் அண்ணாவுக்கும் இந்த யுத்தம் நல்வாப்பாக அமைந்தது. நேருவின் உலகளாவிய ராஜதந்திர பிம்பம் இந்த யுத்தத்தால் நொறுங்கியது.

உண்மையில் பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்திருக்க வேண்டிய ஒரு பிரச்னையை யுத்தமாக்கி இந்திய - சீன உறவில் நிரந்தர விரிசலை ஏற்படுத்தி வைத்த ‘பெருமை’ இந்திய அரசியல்வாதிகளுக்கும் சீனத் தலைவர்களுக்கும் உரியது.

இன்று இந்த யுத்தம் பற்றிப் பேச இந்தியாவிலும் சரி சீனாவிலும் சரி அரசியல் தலைமைகள் விரும்பவில்லை. ஆனால் இதை நினைவுபடுத்தித் தொடர்ந்து இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பகைமையை நீட்டிப்பதில் அமெரிக்காவுக்கு லாபம் இருக்கிறது. தன்னை முற்றிலும் அமெரிக்காவின் தோழனாக இந்தியா காட்டிக் கொண்டால், அது நிச்சயம் சீன - இந்திய உறவை கடுமையாகப் பாதிக்கும்.

சீனாவுடன் வர்த்தகத்தின் மூலம் தோழமையை வளர்த்துக் கொள்வதுதான் இந்தியாவுக்கு எதிர்காலத்தில் நல்லது. ஸ்ரீலங்கா, பாகிஸ்தான் தலைவலிகளைத் தணிக்க சீனாவுடன் நட்பை உருவாக்குவதுதான் இந்தியாவுக்கு சரியான தீர்வு. தலாலாமாவுக்கு விருந்து வைத்தாலும்கூட, திபெத் விஷயத்தில் இந்தியா, சீனாவின் நிலையையே ஆதரிக்கிறது. அருணாசலப் பிரதேசம் மட்டும்தான் சீனாவுடன் இருக்கும் ஒரே உறுத்தல். இதைப் பேசித் தீர்க்க முடியும். வணிக உறவுகளை பலப்படுத்தினால் இது சாத்தியம்.

இந்தியாவையும் சீனாவையும் பிரித்து வைத்துக் குளிர் காயும் தந்திரத்தைத் தொடர்ந்து அமெரிக்கா பயன்படுத்தும். மன்மோகன் போன்றோர் அதிகாரத்தில் இருக்கும் வரை இந்தச் சூழ்ச்சியிலிருந்து இந்தியா எளிதில் தப்பிக்கும் வாய்ப்பு இல்லை.

No comments:

Post a Comment