Search This Blog

Sunday, October 28, 2012

சோலார் பவர் மானியம் - குழப்பங்கள் தீருமா?


அணு மின்சாரம், அனல் மின்சாரம், நீர், காற்றாலை என அத்தனையையும் தாண்டி மின்சாரத்தின் தேவை அதிகரித்தே வருகிறது. இந்த நிலையில் இன்றைக்கு எல்லோரது கவனத்தையும் பெற்றிருக்கிறது சோலார் பவர் எனப்படும் சூரிய சக்தி. சிறிய அளவில் சூரிய சக்தியை பயன்படுத்திய காலம் மாறி, இப்போது வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தில் பெரும்பகுதியை நம் வீட்டிலேயே உருவாக்கிக் கொள்கிற அளவுக்கு வளர்ந்திருக்கிறது சோலார் பவர் திட்டங்கள். இந்த திட்டங்களுக்கு அரசு பல வகையிலும் ஊக்குவிப்பதோடு, அவற்றுக்கு கணிசமான மானியமும் தந்து வருகிறது. இதை சரியாகப் பயன்படுத்திக்கொண்டாலே நம் பட்ஜெட்டுக்குள் சோலார் பவர் யூனிட்டுகளை அமைக்க முடியும் என்கிறார்கள் இந்த துறை சார்ந்த நிபுணர்கள்.

''மாற்று எரிசக்திக்கு என மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாக துறைகளை ஏற்படுத்தி, அவற்றை ஊக்குவித்து வருகின்றன. சோலார் பவர் திட்டங்களுக்கான மானியங்களும் இந்த துறைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், சோலார் பவர் தயாரிப்புகளுக்கு என்று தனித்தனியாக மானியம் எதுவும் தரப்படுவதில்லை. நிறுவனங்கள் தயாரித்து தரும் திட்டங்களுக்கு ஏற்பவே மானியங்களை அளித்து வருகிறோம். இதன்படி அந்தந்த நிறுவனங்களின் தயாரிப்புகளை வாங்குபவர்கள் மானியம் போக மீதித் தொகையைச் செலுத்தினால் மட்டுமே போதுமானது.  தரத்திற்கு ஏற்ப ஒவ்வொரு நிறுவனமும் ஒரு விலை நிர்ணயித்திருக்கும். தமிழ்நாடு மாற்று எரிசக்தி முகமையால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாக இருந்தால் மானியம்போக மீதி தொகையை மட்டும் வசூலிப்பார்கள். அனுமதி வாங்கப்படாத நிறுவனத்தின் மூலம் சோலார் உபகரணங்கள் பொருத்திக்கொண்டாலும் நீங்கள் நேரடியாக மானியத்தை வாங்கிக்கொள்ள முடியும்.'' என்றார். பொதுவாக அனைத்து வகையான சோலார் திட்டங்களுக்கும் சுமார் 30 சதவிகிதம் வரை மானியங்கள் கிடைக்கிறது. ஆனால், நாம் அதிகமாகப் பயன்படுத்தும் இரண்டு திட்டங்களுக்கு கூடுதலாக மானியம் தரப்படுகின்றன. அவை...

சோலார் வாட்டர் ஹீட்டர்!

இதில் தட்டையான பிளேட் வடிவிலான வாட்டர் ஹீட்டர், குழாய் வடிவிலான வாட்டர் ஹீட்டர் என இரண்டு திட்டம் இருக்கிறது. தினசரி 100 லிட்டர் என்ற அளவில் 1.5 ச.மீ அளவில் உள்ள குழாய் வடிவ ஹீட்டர் 15,000 ரூபாயும், 2 ச.மீ அளவில் உள்ள தட்டையான வாட்டர் ஹீட்டர் 22,000 ரூபாய் எனவும் அரசு விலை நிர்ணயித்துள்ளது.

மலைப்பிரதேசங்கள், கிராமப் பகுதிகள் மற்றும் தீவுப் பகுதிகளில் சோலார் திட்டங்கள் அமைக்கும்போது 15-லிருந்து 20 சதவிகிதம் விலையை அதிகரித்துக் கொள்ளலாம் என அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது. எனவே, சிறப்பு மானியமாக 60 சதவிகிதம் வரை பெற முடியும்.  

இன்னொரு வகையில் குழாய் வடிவ ஹீட்டருக்கு 1 ச.மீட்டருக்கு 3,000 ரூபாயும், தட்டை வடிவ ஹீட்டருக்கு 1 ச.மீட்டருக்கு 3,300 ரூபாயும் மானியமாக வழங்கப்படுகிறது. மானியம் பெற்ற தயாரிப்பாளர் தங்களது தயாரிப்புகளுக்கு ஐந்து வருடங்களுக்கு கேரன்டி கொடுக்க வேண்டும். பொருட்களின் தரத்திற்கு ஏற்ப விலை வித்தியாசங்கள் இருக்கலாம். இதுகுறித்த விவரங்களும், மாற்று எரிசக்தி முகமையால் அங்கீகரிக்கப்பட்ட வாட்டர் ஹீட்டர் தயாரிப்பாளர்கள் குறித்த விவரங்களும்  www.solarwaterheater.gov.in. என்ற இணையதள முகவரியில் கிடைக்கும்.

சோலார் பேனல்கள்!

வீட்டுத் தேவைகளுக்கான மின்சாரத்தை சூரிய சக்தி மூலம் எடுத்துத் தரும் போட்டோவோல்டைக் (Photovoltaic)  எனப்படும் சோலார் பேனல்களுக்கு அதிகபட்சமாக 50 சதவிகிதம் வரை மானியம் கிடைக்கிறது. ஜவஹர்லால் நேரு தேசிய சோலார் திட்டம் மூலம் இதற்கான மானியத் தொகை அளிக்கப்படுகிறது. இதன் மூலம் தெருவிளக்குகள், வீட்டுத் தேவைகள், மோட்டார் பம்புகள் போன்றவற்றிற்கு மொத்த தொகையில் 30 சதவிகிதம் மானியம் கிடைக்கிறது. திட்ட மதிப்பைப் பொறுத்து         50 சதவிகிதம் வரை வங்கிக் கடன் அனுமதிக்கப்படுகிறது.

ஒரு கிலோ வாட் முதல் ஐந்து கிலோ வாட் வரை வீட்டு பயன்பாட்டுக்கு பயன்படுத்தலாம் என்றால், இதற்கான சாதனங்களை வாங்கும்போது 1 கிலோ வாட் அமைக்க தரத்திற்கு ஏற்ப இரண்டு லட்சம் முதல் செலவாகும். இதில் 80 ஆயிரம் வரை அரசு மானியம் கிடைக்கிறது. மோட்டார் பம்புசெட்டுகள், அலுவலகங்கள் போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்கிறபோது மானியத்தோடு வங்கிக் கடனும் தரப்படுகிறது. அதாவது, 20 சதவிகித பணத்தை மட்டும் கட்டினால் போதும்,                                            30 சதவிகித மானியம், 50 சதவிகிதம் வங்கிக் கடன் பெற்று சோலார் திட்டத்தை அமைத்துவிட முடியும். மின்சாரத்தைச் சேமித்து வைக்கும் பேட்டரி இல்லாமல் சோலார் திட்டங்களை அமைக்கிறபோது, ஒரு கிலோ வாட்டுக்கு சுமார் 60 ஆயிரம் ரூபாய் வரை செலவு குறையும்.

குழப்பங்கள் தீருமா?

சோலார் மின் உற்பத்தி சாதனங்களை அமைத்துதரும் நிறுவனங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விலையைச் சொல்கின்றன. இது முறைப்படுத்தப்படவில்லை என்பதால் தயாரிப்பு நிறுவனங்கள் சொல்வதுதான் விலையாக இருக்கிறது. திட்டதிற்கான மானியத் தொகையை பெறும் நிறுவனங்கள் அதை உபயோகிப்பாளர்களுக்கு சரியாக வழங்குகிறதா என்கிற விஷயத்திலும் தெளிவு கிடையாது. மானியத் தொகை அறிவிப்புக்கு முன்னர், உபயோகிப்பாளர்களே நேரடியாக சோலார் ஏற்பாடுகளை நிறுவியிருந்தால் மானியம் பெறுவது சிரமமாக இருக்கிறது. 

உபயோகிப்பாளர்கள் மானியத்துக்கான விண்ணப்பத்தை ஆன்லைன் மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும் என்பதும், அக்டோபர் மாதத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்கிற நடைமுறை சிக்கல்களும் உள்ளது. என்றாலும், ஒரு கிலோ வாட் யூனிட் அமைக்க அதிகபட்சமாக 80 ஆயிரம் மானியம்   அனுமதிக்கப்படுகிறது.

மானியத்தை வழங்குவதன் மூலம் கடமை முடிந்துவிட்டதாக அரசு ஒதுங்கிக்கொள்ளாமல், அது ஒழுங்காக மக்களுக்குச் சென்று சேர்கிறதா என்று கவனிப்பதும், தரத்திற்கு ஏற்ப விலையைத் தெளிவாக முறைப்படுத்துவதும் அரசுத் துறையின் கடமை. இதை முறைப்படுத்தவில்லை எனில் மானியக் குழப்பத்திற்கு எப்போதும் தெளிவு கிடைக்காது. 


 
 

No comments:

Post a Comment