Search This Blog

Friday, October 05, 2012

அருள்வாக்கு - பழுத்து விழுதல்!

வெள்ளரிப் பழம் மாதிரி விடுபடவேண்டும் என்றால் என்ன? சொல்கிறேன். அந்தப் பழம் முற்றிக் கனிந்த பிற்பாடும் மற்ற பழங்கள் மரத்திலிருந்து விழுகிறாற் போல விழுவதில்லை. என்ன காரணமென்றால் அது பழுப்பது, காய்ப்பது எல்லாமே மரத்தில் இல்லை; கொடியில்தான். வெள்ளரி என்பது கொடியே தவிர செடியோ மரமோ இல்லை. அந்தக் கொடியையும் பந்தல் போட்டுப் படரவிடும் வழக்கம் கிடையாது. முழுக்க பூ ஸ்பரிசம் இருந்தால்தான் அந்தக் கொடியின் வளர்ச்சிக்கு நல்லதென்பதால் நிலத்திலேயேதான் படர விடுவது. அதனால் என்னவாகுமென்றால் ஒரு வெள்ளரிக்காய் நன்றாகக் கனிவதும் நிலமட்டத்தில்தான்; உசரக்க ஒரு கிளையிலோ, பந்தலிலோ இல்லை. இப்படிப் பழம் முற்றிக் கனிந்தவுடன் காம்பு தானே இற்றுப் போய்விடும். ஆனாலும் பழம் இருந்த இடத்திலேயேதான் இருக்கும். ஏனென்றால் அதுதான் விழ முடியாமல் நிலமட்டத்திலேயே இருக்கிறதே! கொடி பாட்டுக்குப் படர்ந்து கொண்டே போகும். அப்போது பழம் எந்த இலைப்பாகத்தோடும் காம்போடும் ஒட்டிக் கொண்டிருந்ததோ அவையும் அந்தண்டை நகர்ந்து போய்விடும். அதாவது காம்புதான் இதை விட்டு விலகிற்றே தவிர இது விலகுவது, விடுபடுவது என்ற கார்யத்தைக்கூடப் பண்ணுவதில்லை!
இதே போலத்தான் - ஞானி ஸம்ஸார பந்தத்திலிருந்து விடுபடுவதென்பது. அது ஒரு விருக்ஷம் மாதிரியும், இவன் அதில் முற்றிப் பழுத்து விழுவது மாதிரியும் இல்லை. ஞானத்தில் அவன் பழுத்த பழமான பின்னும் தான் பாட்டுக்கு இருந்தபடியேதான் இருப்பான்.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்.

No comments:

Post a Comment