Search This Blog

Saturday, October 20, 2012

மலாலா யூசப்சாய் - தாலிபன் அட்டூழியம்


பாகிஸ்தானில் உள்ள வடக்கு வசிரிஸ்தான் பகுதி. அங்குள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கு இயற்கை எழிலுக்குப் புகழ்பெற்றது. அதன் முக்கியமான நகரம் மிங்கோரா.

இந்த மாதம் 15ம் தேதி. குஷாய் பப்ளிக் பள்ளியில் மாணவிகள் பள்ளிப் பேருந்தில் ‘எங்கள் உயிரைக் கொடுத்தாவது தாய்நாட்டைக் காப்போம்’ என்று சிறுமி மலாலா யூசப்சாயும் அவள் தோழிகளும், புஷ்கு மொழியில் உற்சாகமாகவே பாடிக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். திடீரென்று பேருந்து நிறுத்தப்பட்டது. கையில் ஏ.கே.47உடன் முகங்களை மூடிக்கொண்டு மூன்று தாலிபன் தீவிரவாதிகள் பேருந்தில் உள்ளே ஏறினார்கள். 

யார் மலாலா?" என்று கர்ஜித்தார்கள். சிறுமிகள் யாரும் வாயைத் திறக்கவில்லை. பயத்தில் கண்களை மூடிக்கொண்டு, நடுங்கிக்கொண்டு ப்ரேயர் செய்யத் தொடங்கிவிட்டனர். ‘டுமீ’லென்று சத்தம். ‘அல்லா’ என்று கத்திக்கொண்டு மலாலா ரத்தம் பீறிட்டு வழிய சரிந்தாள். ஒரு வெள்ளை ரோஜா ரத்தச் சகதியில் சிவப்பானது. உடனடியாக உள்ளூர் மருத்துவமனை, பெஷாவர் ராணுவ மருத்துவமனை என்று எடுத்துச் செல்லப்பட்ட மலாலா, இப்போது உயர் சிகிச்சை பெறுவதற்காக இங்கிலாந்தின் பர்மிங்காம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறாள். மூளைப் பகுதியில் குண்டுகள் பாய்ந்த நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாள் மலாலா. 

அவளுக்கு ஆதரவாகவும், தாலிபன் பயங்கர வாதிகளுக்கு எதிராகவும், பாகிஸ்தான் முழுவதும், பெண்கள் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் கொந்தளித்துப் போராட்டம் நடத்துகின்றன. பள்ளிச் சிறுமிகள், ‘நாங்கள் ஒவ்வொருவரும் மலாலாவாக உருவாவோம்’ என்று சூளூரைத்து, மலாலா உயிர் பிழைக்க பிரார்த்தனை செய்கிறார்கள். இப்படி பாகிஸ்தான் மக்களின் ஒட்டுமொத்த அனுதாபத்தையும், ஆதரவையும் பெற்ற மலாலா யார்?

2007, 2008ம் ஆண்டு பாகிஸ்தானின் எல்லை மாவட்டங்களில் பயங்கரவாதம் உச்சகட்டத்தில் இருந்தது. ஸ்வாட் பள்ளத்தாக்கு முழுவதும் தாலிபன் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. பாகிஸ்தான் அரசின் சட்டம் எதுவும் அங்கே செயல்படவில்லை. பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர் தாலிபன்கள். பெண்கள் பள்ளிகள் மூடப்பட்டன. பெண்களுக்குச் சமகாலக் கல்வி தேவையில்லை; அவர்கள் வீட்டுக்குள் அடைபட்டு மார்க்கக் கல்வி கற்றால் போதும்’ என்று உத்தரவிட்டனர். 

மலாலா படிக்கும் பள்ளியில் சிறுமிகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து, இறுதியில் பள்ளி மூடப்பட்டது. அவர்களுக்குக் குரல் கொடுக்க யாரும் இல்லை. துப்பாக்கிமுனையில் சுதந்திரம் பறிக்கப்பட்டது. 

தன் படிப்பு முடக்கப்பட்டதால் மனமொடிந்து போனார் மலாலா. தம் மனக்குமுறலை தினக் குறிப்புகளாக எழுதி ‘குல் மகாய்’ என்ற புனை பெயரில் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தார். அப்போது அவருக்கு வயது 11தான். தாலிபன்களின் மதவாத அடக்குமுறை ஆட்சியில் சமூகம் - குறிப்பாக பெண்கள் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தொடர்ந்து எழுதி வந்தார் மலாலா. 

இதன் காரணமாக ஸ்வாட் பகுதி மக்கள் தாலிபன்களால் அனுபவிக்கும் சித்ரவதைகள் உலக மக்களின் கவனத்துக்கு வந்தது. பின்னர் பாகிஸ்தான் ராணுவம் அதிரடி நடவடிக்கை எடுத்து தாலிபன்களை ஒடுக்கியது. மீண்டும் பெண்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டன. சுதந்திரக் காற்றை மக்கள் சுவாசிக்கத் தொடங்கினர்.

மக்கள் எல்லோரும் பயந்து நடுங்கிய நிலையில் தாலிபன்களின் அக்கிரமங்களை உலகுக்கு எடுத்துச் சொன்ன மலாலா, ‘ஸ்வாட்டின் குரல்’ என்று அழைக்கப்பட்டார். சர்வதேசக் குழந்தைகளுக்கான அமைதி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். பாகிஸ்தானின் அறிவார்ந்த, உயர் மற்றும் நடுத்தர மக்களுக்கு மலாலா ‘ஜோன் ஆப் ஆர்க்’காகவே தெரிந்தார். பெண் கல்விக்காக தமது குரலைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வந்தார். 

எனவே, அவரது குரலை அடக்க முடிவு செய்தார்கள் தாலிபன்கள். மீண்டும் ஸ்வாட் பள்ளத்தாக்கில் தாலிபன்கள் தலைதூக்கி யிருப்பதையே இந்தத் தாக்குதல் சம்பவம் காட்டுவதாகச் சொல்கிறார்கள். பாகிஸ்தான் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் பழையபடி ஸ்வாட் பள்ளத்தாக்கு பயங்கர வாதிகள் கையில் போய்விடும் என்ற அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள் மக்கள். 

இந்தியாவுக்கு எதிராக பயங்கர வாதிகளைத் தூண்டிவிடும் பாகிஸ்தான், தமது நாட்டில் கட்டவிழ்த்து விடப்படும் பயங்கரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க முடியாமல் திணறுகிறது. அது போடும் இரட்டை வேடத்தின் விளைவுதான் இது.


இந்தச் சூழலில் பெண் கல்வியைக் குறித்து இஸ்லாம் என்ன சொல்கிறது? என்ற விவாதங்கள் வலம் வருகின்றன.

ப்ரியன்

No comments:

Post a Comment