Search This Blog

Monday, October 15, 2012

வதேரா


ஹரியானா மாநிலம் குர்கானில் மிக ஆடம்பரமான அடுக்குமாடிக் குடியிருப்பு. ‘மக்னோலியா’. டி.எல்.எஃப். கட்டுமான நிறுவனம் உருவாக்கிய குடியிருப்பு இது. இங்கு ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பின் விலை ஐந்து கோடி. ஏழு அடுக்குமாடிக் குடியிருப்புகளை வாங்குவதற்கு தேவை 35 கோடி. ஆனால், ஐந்தே கோடிக்குக் கொடுத்திருக்கிறதே டி.எல்.எஃப்! இதை விடுங்கள். அதே குர்கானில் மற்றொரு நவீன அடுக்குமாடிக் குடியிருப்பில் பத்தாயிரம் சதுர அடி கொண்ட இரட்டைத்தள வீடு. இதன் சந்தை மதிப்பு 20 கோடி. அட அதிசயம் பாருங்கள்! 89 லட்சத்துக்குக் கொடுத்திருக்கிறதே டி.எல்.எஃப். இதென்ன ஜுஜுபி... இந்தியாவிலே மிகப் பிரபலமான இந்த டி.எல்.எஃப் நிறுவனத்தின் பங்குகளுக்கு மார்க்கெட்டில் என்றுமே தனிக் கவர்ச்சி உண்டு. அந்த நிறுவனத்தின் 750 கோடி பெறுமான பங்குகளை வெறும் 32 கோடிக்குக் கொடுத்திருக்கிறதே டி.எல்.எஃப்! இதெல்லாம் யாருக்குக் கொடுக்கப்பட்டது? டி.எல்.எஃப்பின் தாராள மனத்துக்கும், தயாள குணத்துக்கும் பாத்திரமானவர் தான் ராபர்ட் வதேரா. காங்கிரஸ் தலைவி அன்னை சோனியாவின் மகள் பிரியங்காவின் கணவர். டி.எல்.எஃப். ஏன் வதேராவுக்குக் கனிவு காட்ட வேண்டும்?

இந்தச் சொத்துப் பரிவர்த்தனைகளை அம்பலப்படுத்தி இதுபோன்ற சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியிருப்பவர் அரவிந்த் கேஜரிவால். ‘ஊழலுக்கெதிரான இந்தியா’ அமைப்பின் தலைமை நிர்வாகி. அண்ணா ஹசாரேயிடமிருந்து விடை பெற்று தனி அரசியல் கட்சி தொடங்க முடிவு செய்திருக்கும் அரவிந்த் கிளப்பிவிட்ட இந்தப் புயல் இன்று காங்கிரஸைத் தாக்கியிருக்கிறது. அரசியல் கட்சிக்குப் பெயர் வைக்கும் முன்னரே அதிரடியான விஷயங்களைக் கிளப்பி மக்களை அதிர வைத்திருக்கிறார் கேஜரிவால். நிலக்கரி ஊழலில் கரி பூசிக் கொண்ட காங்கிரஸ், அதை அழிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் நிலையில், சோனியா குடும்பத்தினர் மீது குற்றச்சாட்டுகள் பாய்ந்திருப்பது கண்டு கலங்கி நிற்கிறது கட்சி.எந்தவிதப் பாதுகாப்பு அம்சத்தையும் உள்ளடக்காத வட்டியில்லாத கடனாக 65 கோடி ரூபாய் வதேரா தொடர்புள்ள ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்துக்கு டி.எல்.எஃப். கொடுத்தது ஏன்? குர்கானில் மலிவு விலையில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் வதேராவுக்குக் கொடுக்கப்பட்டதற்குக் காரணம் ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் தில்லியில் நிலங்கள் மலிவு விலைக்குக் கையகப்படுத்தப்பட்டு டி.எல்.எஃப்புக்குக் கொடுக்கப்பட்டிருப்பதுதான். ஹரியானாவில் மட்டும் விவசாய மற்றும், மருத்துவமனைக்கு என்று குறிக்கப்பட்ட 350 ஏக்கர் கைமாறியிருக்கிறது. வதேராவுக்குத் தொடர்புள்ள ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி மற்றும் நார்த் இந்தியா ஐ.டி.பார்க் லிமிடெட் நிறுவனங்கள், இந்த நிலப் பரிவர்த்தனையில் சம்பந்தப்பட்டிருப்பவை. கடந்த நான்கு வருடங்களில் மட்டும் ராபர்ட் வதேரா 300 கோடிக்கும் அதிகமாகச் சொத்து சேர்த்திருக்கிறார். சொத்துக்கள் எப்படி வந்தன? இத்தனைக்கும் தனிநபர் என்ற முறையில் சட்டபூர்வமான வருமானத்திலிருந்து அவர் சொத்துக்களை வாங்கும் அளவுக்கு வசதி கிடையாது. எனவே முழு விசாரணை தேவை" என்று பல ஆவணங்களையும் வெளிப்படுத்தி காங்கிரஸை தடுமாற வைத்திருக்கிறார் கேஜரிவால்.

முதலில் ‘வதேரா தனி நபர். கட்சிக்குத் தொடர்பு கிடையாது’ என்று ஜகா வாங்கிய காங்கிரஸ், பின்னர் சோனியா கட்டளையின் காரணமாக ‘வதேரா மேல் சொல்லப்பட்ட குற்றச்சாட்டின் பின்னணியில் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக சதி இருக்கிறது’ என்று சொல்லியிருக்கிறது. வதேராவோ மறுத்ததுடன் தமக்கு கடந்த சில வருடங்களாகவே நேரம் சரியில்லை என்றும், சகோதரி, சகோதரர், தந்தை என்று நெருங்கிய சொந்தங்கள் இறந்து போனதை தமது டிவிட்டரில் சொல்லிப் புலம்பியிருக்கிறார். கடும் விமர்சனங்கள் காரணமாக தனது முகநூலையும் மூடிவிட்டார் வதேரா. டி.எல்.எஃப். நிறுவனமோ குற்றச்சாட்டுக்களை முழுதாக மறுத்து, 65 கோடியில் 15 கோடி திருப்பிக் கொடுக்கப்பட்டு விட்டதாகவும், மீதம் 50 கோடி நிலம் வாங்க பயன்பட்டதாகவும் சொல்லியிருக்கிறது. சோனியாவின் மருமகன் என்ற முறையில் வதேரா பல சிறப்புச் சலுகைகளை அனுபவித்து வந்திருக்கிறார். விமான நிலையத்தில் இவருக்கு எந்தச் சோதனையும் இல்லாமல் உள்ளே விடுவார்களாம். ப.சிதம்பரம் ‘தனிப்பட்ட நிறுவன விவகாரங்களை விசாரணை செய்ய முடியாது’ என்று பூசி மெழுகிறார்.

இந்த வதேரா விவகாரம் சென்ற வருடமே பா.ஜ.க. தலைவர்களின் கவனத்துக்கு வந்ததாம். ஆனால், பா.ஜ.க. தலைவர்கள் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லையாம்.

பா.ஜ.க. மட்டும் என்ன ஊழல் கறைபடாத புனிதமான கட்சியா? கறுப்புப் பண விவகாரம் குறித்து நாடே பரபரப்பாக விவாதித்துக் கொண்டிருந்த வேளையில் அத்வானி சோனியாவைச் சந்தித்துப் பேசிய பின் அந்த விவகாரத்தைப் பற்றிப் பேசுவதையே பா.ஜ.க. விட்டுவிட்டது. மகாராஷ்ட் ராவில் நீர்ப்பாசனத் துறை ஊழலில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸார் செய்த ஊழலைக் குறித்து, தாம் பேச முடியாது என்று நிதின் கட்கரி எங்கள் இயக்கத்தினரிடமே சொல்லியிருக்கிறார். இவர்களின் ஆதரவை எதிர்பார்த்து நாங்கள் ஊழலை அம்பலப்படுத்தவில்லை. வதேரா விவகாரம் காரணமாக ‘நிலக்கரி’ விவகாரம் அமுங்கிப் போனதாகச் சொல்கிறார்கள். யாரும் எதையும் அமுக்க முடியாது. மக்கள் எதையும் மறக்க மாட்டார்கள். ஊழல் குறித்த பல்வேறு தகவல்கள் தொடர்ந்து எங்களுக்கு வந்தவண்ணம் உள்ளன. வரும் காலத்தில் இன்னமும் பல ஊழல்கள் அம்பலமாகும்" என்கிறார் ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் தமிழ்நாடு ஆர்வலர் சந்திரமோகன். காங்கிரஸுக்குச் சோதனை மேல் சோதனை.

No comments:

Post a Comment