Search This Blog

Wednesday, October 10, 2012

அருள் மழை - பசுமாட்டுக்குப் புல்லைக் கொடுத்து, பாவத்தைப் போக்கிக்கோ!"


பசுமாட்டுக்குப் புல்லைக் கொடுத்து, பாவத்தைப் போக்கிக்கோ!"

ஒரு செல்வந்தர் தனது நண்பர் ஒருவரைத் தனது காரில் அனுப்பித் தனது காரியம்
ஒன்றைச் செய்துவரச் சொல்லிவிட்டு, வெளியூர் சென்றுவிட்டார். நண்பரும்
அவ்வாறே செல்லும்போது, அவர் சென்ற கார் விபத்துக்குள்ளாகி, சிவலோக
ப்ராப்தி அடைந்து விட்டார்.

தன்னால்தான் இப்படி நிகழ்ந்தது என வருந்திய செல்வந்தர், தலைவனை இழந்து
தவித்த அந்தக் குடும்பத்துக்குப் பெருமளவில் நிதியுதவி செய்தார்.
இருந்தும் அவர் மனம் சாந்தி அடையவில்லை. நேராகப் பெரியவாளிடம் வந்து தன்
மனக்குறையைச் சொல்லி அழுதார்.

பொறுமையாக அனைத்தையும் கேட்ட பெரியவா, அவரைப் பார்த்து, ' கார்
விபத்துக்குள்ளானதில் உனது குற்றம் ஏதுமில்லை. அது பகவானால்
நிர்ணயிக்கப்பட்ட விதி. உன் மனஸுல நீ அப்படி எந்த கெட்ட எண்ணத்தையும்
கொள்ளலை. இருந்தும் நீ துக்கப்படறே. இந்த சமுதாயம் உன்னைப் பழிக்கறதேன்னு
வருத்தப்படறே. ஒண்ணு பண்ணு. உடனே கிளம்பிப் போய் ஸேது ஸ்நானம் பண்ணிட்டு
வா. தெனமும் காலைல எழுந்து பசு மாட்டுக்குப் புல் கொடு. சிவதரிசனம்
நித்யமும் பண்ணி, எத்தனை தடவை முடியுமோ, அத்தனை தடவை சிவாலய ப்ரதக்ஷணம்
பண்ணு. தினசரி ஒருவேளை மட்டுமே சாப்பிடு. இதைப் பண்ணினா உன்னோட தோஷம்
நிவர்த்தியாகும்' என அன்புடன் பகர்ந்தார்.

மனத் திருப்தி அடைந்த அந்த செல்வந்தர், பிரஸாதத்தைப் பெற்றுக்கொண்டு,
அங்கிருந்து இன்னமும் நகராமல் நின்று கொண்டிருந்தார். என்ன என்பதுபோல்
பெரியவா அவரைப் பார்த்தார்.

'எல்லாம் பண்ணிடுவேன். ஆனா, இந்தப் பசுமாட்டுக்குப் புல் கொடுக்கறதுதான்
எப்படின்னு பிடிபடலை. நான் நகரத்துல இருக்கேன். பசு மாட்டைப் பார்க்கறதே
அபூர்வம்' என இழுத்தார்.

கருணைக் கடலிடமிருந்து பதில் சட்டென வந்தது. 'அதனாலென்ன? உன்னோட ஊருல
நிச்சயம் ஒரு கோசாலா இருக்குமே. உங்கிட்டதான் கார் இருக்கோன்னோ? அஞ்சு
மணிக்கு எழுந்து காருல கோசாலைக்குப் போயி, அங்கே இருக்கற பசுமாட்டுக்குப்
புல்லைக் கொடுத்துட்டு ஒன்னோட ஜோலியைப் பார்க்கப் போ' என அருளினார்.

மனபாரம் குறைந்த அந்த செல்வந்தர் சாந்தியுடன் இல்லம் திரும்பினார்.

--
ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர 

No comments:

Post a Comment