Search This Blog

Saturday, September 08, 2012

ஓ பக்கங்கள் - ஈழத்தமிழர்களின் முதன்மை தேவை என்ன! ஞாநி


இந்தக் கட்டுரையை மிகுந்த மன வருத்தத்துடன் எழுதுகிறேன், இதற்காக ஒரு சிலரின் வசைகளும் அவதூறுகளும் வருமென்ற போதிலும். உண்மைகள் கசக்கும் என்பதற்காக அவற்றைச் சொல்லாமல் இருப்பதற்கில்லை. தமிழ்நாட்டில் கால்பந்து விளையாட வந்த இலங்கைச் சிறுவர்களையும், தேவாலயத் திருவிழாவுக்கு வந்த இலங்கை பக்தர்களையும் துரத்தியடித்த நிகழ்வுகள் நிச்சயம் தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கக்கூடியவை அல்ல.

இலங்கையில் நடந்த யுத்தத்தில் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் காரணம் காட்டி இங்கே இலங்கையைச் சேர்ந்த சிங்களர் வரக் கூடாது என்று போராடுவது அர்த்தமற்றது; அநீதியானது.

போர்க் குற்றங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டியது இலங்கை அரசுதான். இலங்கை மக்கள் அல்ல. இலங்கை அரசின் உச்ச அடையாளமான ராஜபட்சேவையும் அவரது சகாக்கள் கோத்தபாயா, பொன்சேகா முதலியோரையும் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்துவதற்கு வழிகள் என்ன என்றுதான் யோசிக்க வேண்டும்.

அரசையும் பொதுமக்களையும் பிரித்துப் பார்க்கக்கூடத் தெரியாதவர்கள் அரசியல் செய்வதுதான் இந்தச் சிக்கல்களுக்குக் காரணம். பாகிஸ்தான் அரசு பல விதங்களில் இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களைச் செய்வோருக்கு ஆதரவும் தூண்டுதலும் அளித்துவருகிறது என்பதை இந்தியா பல முறை நிரூபித்திருக்கிறது. அதற்காக அந்த அரசின் மீது நடவடிக்கையைக் கோரி வந்திருக்கிறது. ஆனால் அதற்காக பாகிஸ்தானின் சாதாரண மக்களுடன் நாம் விரோதம் பாராட்டுவதில்லை. பல பாகிஸ்தான் நோயாளிகள் சென்னை வரை வந்து மருத்துவச் சிகிச்சை பெற்றுச் செல்கிறார்கள். இதே அணுகுமுறையைத்தான் நாம் இலங்கையின் சிங்கள மக்கள் விஷயத்திலும் பின்பற்றவேண்டும்.

சாதாரண சிங்கள மக்களையும் எதிரியாகத்தான் பார்ப்போம் என்று ஒரு தமிழ்த் தேசிய அமைப்பின் பிரமுகர் தொலைக்காட்சி விவாதத்தில் சொன்னார். காரணம் அவர்கள்தான் ராஜபட்சேவைத் தேர்தலில் ஜெயிக்க வைத்தவர்கள் என்றார். இந்த விசித்திரமான அணுகுமுறையை ஏற்றுக்கொண்டால், தமிழகத்தில் ஊழலின் உச்சங்களான கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் திரும்பத் திரும்ப தேர்தல்களில் தேர்வு செய்யும் தமிழக மக்களை அதற்காகத் தண்டிக்கவேண்டும் என்றாகிவிடும். தேர்தல்களில் மக்கள் வாக்களிப்பது பல அம்சங்களைப் பொறுத்தது.

இந்தியாவில் தமிழ்நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளையும் விளையாட்டு வீரர்களையும் மிரட்டித் திருப்பி அனுப்புபவர்கள், இலங்கையில் நடந்த போரில் இலங்கை அரசுக்கு உடந்தையாக இருந்த இந்திய அரசின் பிரதமரை தமிழ்நாட்டுக்கு வராதே என்று தடுப்பதில்லை. அப்பாவிகளான சுற்றுலாப் பயணிகளை மிரட்டுவது தான் அவர்களுக்கு எளிமையான அரசியல்.

ஜெயலலிதாவும் கருணாநிதியும் தங்கள் அரசியல் போட்டிக்காக ஈழத்தமிழர் பிரச்னையை வழக்கம் போல் மேலும் குழப்புகிறார்கள். ஜெயலலிதா அரசு இலங்கையின் கால்பந்து சிறுவர்களைத் திருப்பி அனுப்பியதும் அவர்கள் விளையாட அரங்கை அளித்த தமிழக அதிகாரியை இடைநீக்கம் செய்ததும் ஒலிம்பிக் மற்றும் சர்வதேச விளையாட்டு ஒப்பந்தங்களுக்கு விரோதமானது.

இன்னொரு பக்கம் நூற்றுக்கணக்கான தமிழர்கள், வணிகத்துக்காகவும், சுற்றுலாவுக்காகவும் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குப் போய் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இங்கே வரும் சிங்கள சிறுவர்களைத் திருப்பி அனுப்பும் ஜெயலலிதாவால், இங்கிருக்கும் தமிழர்கள் யாரும் எதற்கும் இலங்கைக்குச் செல்லக்கூடாது என்று தடுத்துவிட முடியுமா? இந்தியாவுக்கும் இலங்கைக்கும் நடக்கும் வர்த்தகத்தில் அங்கிருந்து இறக்குமதியாவதைவிட நான்கு மடங்கு அதிக மதிப்புக்கு இங்கிருந்து ஏற்றுமதி நடக்கிறது. தமிழகத்திலிருந்து கார்களும் பஸ்களும் இலங்கைக்கு ஏற்றுமதியாகின்றன.

சீனா இந்தியாவின் எதிரி நாடு. அதற்கு இலங்கை அரசு பெருமளவில் இடமளித்து வருகிறது. எனவே இலங்கை மக்களும் அதிபரும் இந்தியாவுக்கு வருவதைத் தடுக்க வேண்டும் என்று இன்னொரு தமிழக அரசியல் பிரமுகர் ஒருவர் தொலைக்காட்சியில் பேசினார். சீனா எதிரியா, அல்லது அமெரிக்காவால் நமது எதிரியாக ஆக்கப்படுகிறதா என்பது இன்னொரு ஆய்வுக்குரிய விஷயம். ‘எதிரி’யான சீனாவுடன் இந்தியா பெரும் வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறது. அண்மையில் சீனாவுடன் கூட்டாக ராணுவப் பயிற்சிகளில் கூட ஈடுபட ஒப்பந்தம் போட்டிருக்கிறது. சீன அமைச்சர்கள் இந்தியாவுக்கு வந்து போகிறார்கள்.

உலக அரசியல் என்பது வேறு தளத்தில் செயல்படுவது. மறைமுகப் போர் நடத்தும் நாட்டுடன் கூடப் பேச்சுவார்த்தையும் வர்த்தகக் கலாசார உறவுகளும் துண்டிக்கப்படுவதில்லை. சாதாரண மக்கள் இடையே பரிமாற்றங்கள் எப்போதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கும்; இருக்க வேண்டும். அதுதான் புரிதல் உணர்வை அதிகப்படுத்த உதவும். அரசுகளின் அராஜகங்களை இரு தரப்பு மக்களிடமும் அம்பலப்படுத்த, இரு தரப்பு மக்களிடையேயும் உறவுகள் தேவை.

ராஜபட்சே முதலானோரை அம்பலப்படுத்த நீதியின் முன் நிறுத்த இலங்கை மக்களின் ஆதரவையும் திரட்டுவது அவசியம். ஏற்கெனவே பல சிங்கள மனித உரிமையாளர்கள் பகிரங்கமாகவே ராஜபட்சே அரசை விமர்சித்து வருகிறார்கள். சிங்கள இன வெறியர்களால் எரிக்கப்பட்டு மீண்டும் எழுப்பப்பட்ட யாழ்நூலகத்துக்கு தம் நூல்கள் எல்லாவற்றையும் உயில் எழுதி வைத்திருந்தார் ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் தலைவர் பீட்டர் கெனுமன்.

ஈழத்தமிழர்களுடன் இணக்கத்தை விரும்பும் பல சிங்கள சக்திகள் இருக்கின்றன. தமிழகத்துக்கு வரும் சிங்களச் சுற்றுலாப் பயணிகளை மிரட்டி விரட்டுவது போன்ற செயல்கள் அவர்களை அந்நியப்படுத்தும். அங்குள்ள இனவெறியாளர்களுக்கே இது உதவியாக இருக்கும். எப்படி இந்துத்துவ வெறியர்களும் அல்-உம்மா தீவிரவாதிகளும் ஒருவரையொருவர் வளர்க்க உதவுகிறார்களோ அதுதான் நடக்கும். இடையில் சிக்கி சாதாரண மக்களே வீணாக அழிவர். உணர்ச்சிவசப்பட்டு சாதாரண மக்களைத் துரத்துவது ஈழத்தமிழருக்கும் உதவாது; இங்குள்ள தமிழருக்கும் உதவாது.

ஈழத்தமிழர் பிரச்னைக்குத் தீர்வு வேண்டுமென்றால் முதலில் கருணாநிதி ஜெயலலிதா முதலானோரின் உள்ளூர் அரசியலிலிருந்து இந்தப் பிரச்னை பிரிக்கப்பட வேண்டும்.

இன்று ஈழத்தமிழர்களின் முதன்மை தேவை என்ன?

உடனடியான மறுவாழ்வு, கல்வி, வேலைவாப்புகள். அடுத்த கட்டமாக சமமான அரசியல் உரிமைகள். இவை நிகழவேண்டுமானால் இந்திய அரசு உள்ளிட்ட பல நாட்டு அரசுகள் இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டும். இந்திய அரசைத் தெளிவான நிலை எடுக்க செய நிர்ப்பந்திக்கத்தான் தமிழக அரசியல் சக்திகள் முயற்சிக்க வேண்டும். சுற்றுலாப் பயணி களைத் துரத்துவது எந்த விதத்திலும் இந்திய அரசின் மீது நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தாது.
ராஜபட்சே இந்தியாவுக்கு வருவதைத் தடுத்துவிடுவதாலோ ரத்துச் செய்துவிடுவதாலோ ஈழத்தமிழர்களின் பிரச்னைக்குத் தீர்வு வரப்போவதில்லை. ஒரு பக்கம் நம் எதிர்ப்பையும் விமர்சனத்தையும் தெரிவித்தபடியே மறுபக்கம் சர்வதேசப் பின்னணியிலான பேச்சு வார்த்தைகள் மூலம் காய் நகர்த்துவது தான் உலக அரசியலின் வழிமுறை. ராஜபட்சேவுக்கு நம் கண்டனத்தைத் தெரிவிக்க கறுப்புக் கொடியும் காட்டவேண்டும். மன்மோகனுடன் பேசும்போது ஈழத் தமிழருக்கான அரசியல் உரிமைக்கான நடவடிக்கை பற்றி அழுத்தத்தையும் தரவேண்டும். இதுதான் யதார்த்த அரசியல்.

தங்கள் சக்தியை சாதாரண மக்களைத் துன்புறுத்துவதில் செலவழிக்காமல், ஆக்க பூர்வமாகச் செய்ய இங்கேயே நிறைய வேலைகள் இருக்கின்றன. சுமார் முப்பதாண்டுகளாகத் தமிழ்நாட்டில் இருக்கும் ஈழத்தமிழர்களின் அகதி முகாம்களைப் போர் முடியும்வரை எட்டிக்கூடப் பார்க்காமல் இருந்தவர்கள் எல்லாம் இப்போதாவது அவற்றில் கூடுதல் கவனம் செலுத்தலாம். மத்தியப்பிரதேசம் போய் ராஜபட்சேவுக்குக் கறுப்புக்கொடி காட்டத் தயாராக இருப்போர், செங்கல்பட்டிலும் பூந்தமல்லியிலும் சிறப்பு முகாம் என்ற தவறான பெயரில் குற்றச்சாட்டோ விசாரணையோ இன்றி இருபது வருடங்களாகச் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் கறுப்புக் கொடி காட்ட இதுவரை முற்படாதது ஏன்?

ஈழத்தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காண தமிழக அரசியல்வாதிகள் உண்மையிலேயே உதவ நினைத்தால், ஜெயலலிதா, கருணாநிதி, வைகோ, ராமதாஸ், திருமாவளவன், நெடுமாறன்... எல்லாரும் தங்கள் ஈகோக்களை கழற்றி வைத்துவிட்டு, ஒரு முறையேனும் நேரில் சந்தித்து உட்கார்ந்து கூடிப் பேசி தாங்கள் ஒருமித்த குரலில் சொல்வது என்ன என்பதை தில்லிக்குத் தெரிவிக்க முன் வரட்டும்; வரமாட்டார்கள். காவிரி, முல்லைப் பெரியாறு, ஈழத்தமிழர் பிரச்னை எல்லாமே அவர்களுடைய உள்ளூர் அரசியலுக்கான தீனிகளே; அசல் அக்கறைகள் அல்ல.

மறுபடியும் ஆயுதப் போராட்டம், இன்னாரு யுத்தம், அதில் வென்று தனி ஈழம் அமைத்தல் என்பவை சிலருக்குச் சுகமான கனவுகளாக இருக்கலாம். ஆனால் முப்பதாண்டுகளாக வலியிலும் மரணத்துள்ளும் வாழ்ந்து எஞ்சிப் பிழைத்திருக்கும் மனங்களுக்குத் தேவைப்படுவது சுயகௌரவமும் சுயசார்பும் உள்ள ஒரு வாழ்க்கை. அதை சாதிக்கத் தேவைப்படுவது தெளிவான, நிதானமான, பொறுப்பான அரசியல் முயற்சிகள்தான். கொடுமைகளைக் கண்டு உணர்ச்சிவசப்படும் மனம் நிச்சயம் வேண்டும். ஆனால் அந்த மனம் விரும்பும் தீர்வுகளைப் பெற அறிவார்ந்த அரசியல் மட்டுமே உதவும்.




No comments:

Post a Comment