Search This Blog

Friday, September 21, 2012

எனது இந்தியா ( காட்டுக்குள் புகுந்த ராணுவம்! ! ) - எஸ். ராமகிருஷ்ணன்....

அதுவரை, பழங்குடி மக்கள் என்றால் கொத்​தடி​மைகள், குரலற்றவர்கள் என்று நினைத்துக்​கொண்டு இருந்த பிரிட்டிஷ் அரசு, இந்த எழுச்சியைக் கண்டு பயந்துபோனது. உடனே இதைத் தடுத்து நிறுத்தாவிட்டால் மற்ற பழங்குடி இனங்களும் இதில் சேர்ந்துவிடுவார்கள் என்று பயந்தது. பிரிகேடியர் ஜெனரல் லியோட் தலைமையில் துப்பாக்கிகள், பீரங்கிகளுடன் ராணுவம் காட்டுக்குள் புகுந்தது. இவர்​களுக்குத் துணையாக நவாப் அனுப்பிய யானைப்படையும் சென்றது.

சந்தால் மக்கள் தேர்ந்த வில்லாளிகள். ஒளிந்து தாக்கும் கெரில்லா போர்முறையைக் கையாளக்கூடியவர்கள். ஆகவே, காட்டுக்குள் சென்று அவர்களைத் தாக்கி வெல்ல முடியாது என்பதை உணர்ந்த பிரிட்டிஷ் படை, காட்டைவிட்டு அவர்களை வெளியே கொண்டு வந்து சண்டையிடத் திட்டமிட்டது. அதற்காக, அவர்களுடைய குடியிருப்புகளை தீவைத்துக் கொளுத்தி யானைகள் உதவியுடன் குடிசைகளைத் துவம்சம் செய்தது.

காட்டைவிட்டு வெளியே வந்த சந்தால் வீரர்களை, பிரிட்டிஷ் படை சுற்றி வளைத்துத் தாக்கியது. ராணுவத்தின் துப்பாக்கிகளுக்கு முன், வில் அம்புகள் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆனாலும், கடைசி சந்தால் இருக்கும் வரை தாங்கள் போரிட்டு மடியப்போவதாக நெஞ்சுரத்துடன் அவர்கள் எதிர்த்துச் சண்டை​யிட்டனர்.

ஆவேசமாகப் போராடிய இவர்களை அடக்க, 7-வது படைப் பிரிவின் துருப்புகளும் 40-வது படைப் பிரிவின் துருப்புகளும் கூடுதலாக வரவழைக்கப்பட்டன. இந்த மோதல், 1855 ஜூலை முதல் 1856 ஜனவரி வரை நடந்தது. ககால்கோன், சூரி, ரகுநாத்பூர் மற்றும் மங்கதோரா ஆகிய இடங்களில் நடந்த போராட்டங்கள், இரும்புக் கரம்கொண்டு ஒடுக்கப்பட்டன. மூர்ஷிதாபாத் நவாப் அனுப்பிய யானைகள், சந்தால் இன மக்களின் கிராமங்களைத் துவம்சம் செய்தன. தொடர்ந்த பீரங்கித் தாக்குதல் மூலமாக காடு பற்றி எரிந்தது. ஓயாத தாக்குதலின் முடிவில் சந்தால் இன எழுச்சி ஒடுக்கப்பட்டது. முர்மு சகோதரர்கள் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வை ஓர் எச்சரிக்கை மணியாக உணர்ந்த பிரிட்டிஷ் அரசு, உடனே ஒரு சட்டத்தை இயற்றியது. அதன்படி, சந்தால் இன மக்கள் வசிக்கும் பகுதியைத் தனி மாவட்டமாகப் பிரித்து அதைத் தன் நேரடிக் கண்காணிப்பில் வைத்துக்கொண்டது. அதே நேரம், ஜமீன்தார்களின் வரி வசூல் செய்யும் உரிமையை மாற்றி பழங்குடி மக்களின் உள்ளூர்த் தலைவரே வரி வசூல் செய்வார் என்ற நடைமுறையும் அமல்படுத்தப்பட்டது.
 சந்தால் இன மக்களின் நீதி பரிபாலனம் மிகக் கடுமையானது. அவர்கள் தங்களுக்கான முறையான சட்டத் திட்டங்களை வகுத்து இருந்தனர். குற்றத்தை விசாரித்து தண்டனை அளிக்கும் பொறுப்பு கிராமத் தலைவனிடம் இருந்தது. சந்தால் மக்களின் எழுச்சிக்குப் பிறகு, அந்த நீதிமுறைகள் பிரிட்​டிஷ் அதி​காரிகளால் ரத்து செய்யப்​பட்டன. குற்றங்களை விசாரிப்​பதற்கு அவர்களுக்கு எனத் தனியாக நீதிமன்றம் அமைக்கப்பட்டது.

சந்தால் மக்களை ஒடுக்கிய சண்டையைப் பற்றி குறிப்பிடும் மேஜர் ஜெர்விஸ், 'சந்தால் இன மக்கள் துப்பாக்கி மற்றும் பீரங்கிகளைக் கண்டு அஞ்சவில்லை. முரசு அடித்துக்கொண்டே அவர்கள் கூட்டமாக வந்து, துப்பாக்கி தங்களைத் துளைக்கட்டும் என்று உறுதியாக நின்றனர். பிரிட்டிஷ் வீரர்களின் துப்பாக்கிகள் அவர்களைக் கொன்று குவித்தபோதும் பின்வாங்கி ஓடவில்லை’ என்கிறார்.

காட்டின் அடி வயிறு வரை புகுந்த ராணுவம், சந்தால் இன மக்களைப் பிடித்து வந்து, கை கால்களில் விலங்கிட்டு ரயில் பாதை அமைக்கும் பணிக்குச் சம்பளம் இல்லாத கூலிகளாகப் பயன்படுத்தியது. நூற்றுக்​கணக்கான சந்தால் மக்களைக் கைது செய்து கப்பலில் ஏற்றி பர்மாவில் உள்ள மாண்டலே சிறையில் அடைத்தனர். நோயுற்று பலர் பர்மா சிறையிலேயே இறந்தனர். இந்த எழுச்சிக்குத் தலைமை வகித்தது சந்தால் மக்கள் என்றபோதும் முண்டா, ஒரான், பாரியா இனத்தைச் சேர்ந்த பழங்குடி மக்களும் இதில் கலந்துகொண்டு போராடினர். ஆனால் பிரிட்டிஷ் அதிகாரிகள், சந்தால் என்று ஒற்றை அடையாளத்துடன் அவர்களைச் சிறையில் அடைத்து ஒடுக்கியது.

1855-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சந்தால் கைதிகளை அடைத்துவைத்திருந்த பாகுல்பூர் சிறையில் காலரா பரவியது. ஒரே வாரத்தில் 52 கைதிகள் இறந்தனர். அடுத்த சில நாட்களில் சாவு இரண்டு மடங்கானது. ஆகவே கைதிகளை எங்கே வைத்திருப்பது எனத் தெரியாமல் திறந்த வெளியில் அடைத்துவைத்தார்கள். அப்படியும் சிறைக்குள் 300 கைதிகள் காலராவால் இறந்துபோனார்கள்.

1835-ம் ஆண்டு ஒரிஸ்ஸாவில் உள்ள கோண்டு இன மக்கள் பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பை எதிர்க்கிறார்கள் என்று அவர்களில் 180 பேரைக் கைதுசெய்து நீதிமன்றத்துக்குக் கொண்டுசென்றது. அவர்களில் 43 பேருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 47 பேர் தீவாந்திரம் விதிக்கப்பட்டு அந்தமானுக்கு நாடு கடத்தப்பட்டார்கள். மீதம் உள்ளவர்கள், சென்னை ராஜதானியில் இருந்த பெல்லாரி, திருச்சி, செங்கல்பட்டு, கஞ்சம் ஆகிய சிறைகளில் அடைக்கப்பட்டார்கள். அப்படி சிறைப்பட்ட கோண்டுகளில் 10 பேர் சிறைக்கு வந்த சில நாட்களிலேயே இறந்துபோயினர்.

சந்தால் எழுச்சியின் தொடக்கம் பழங்குடி மக்களிடம் ஒரு விழிப்பு உணர்வை உருவாக்கியது. அதில் உருவானதுதான் பிர்சா முண்டாவின் போராட்டம். இதுவும் பிரிட்டிஷ் அதிகாரத்துக்கு எதிராக உருவான எழுச்சியே. முண்டா இனத்தைச் சேர்ந்த பிர்சா என்ற 25 வயது இளைஞன் இந்தப் போராட்டத்தை வழிநடத்தினார்.

அடர்ந்த காட்டுக்குள்ளாக
கை தட்டுவது யார் ?
அடர்ந்த காட்டுக்குள்ளாக
பிர்சா கை தட்டுகிறான்.
பிர்சாவின் கை தட்டலை
மான்கள், யானைகள், காட்டெருதுகள்கூட
புரிந்துகொள்கின்றன
மனிதர்களுக்கு மட்டும் அது புரியவேயில்லை
என்ற முண்டா இனப் பாடல் இன்றும் சோட்டா நாகபுரி பகுதியில் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது.
பிர்சா முண்டா, பீகாரில் 1875 நவம்பர் 15-ம் தேதி பிறந்தவர். வறுமையின் காரணமாக மாமா வீட்டில் வளர்க்கப்பட்ட பிர்சா, ஜெர்மனியக் கிறிஸ்துவ நிறுவனத்தின் பள்ளியில் ஆரம்பப் படிப்பைக்  கற்றுக்கொண்டார்.

சோட்டாநாகபுரி பகுதியில் உருவான பழங்குடி இனம் முண்டா, ஆஸ்ட்ரோ ஆசியாடிக் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த முண்டாரி இவர்களின் மொழியாகும். முண்டா இன மக்கள்தொகை இரண்டு மில்லியன். மரங்கள், பறவைகள், காட்டு விலங்குகளின் பெயர்களையே அவர்கள் சிறப்புப் பெயர்களாகச் சூட்டிக்கொள்கிறார்கள். அவர்களின் கடவுள் சிங்போங்கா. அவர் முண்டா மக்களின் சூரியக் கடவுள். முண்டா இன மக்களை நல்வழிப்படுத்துகிறேன் என்று சொல்லி, ஜெசுவிட் சபையைச் சேர்ந்த ஜான் ஹாப்மேன் அவர்களுடன் பழகி பழங்குடியினரை கொஞ்சம் கொஞ்சமாகக்  கிறிஸ்துவமதத்துக்கு மாற்றினார். மேலும் அவர்களின் மரபான பழக்கவழக்கங்கள், அசைவ உணவுமுறை, பலிச் சடங்குகளை தடுத்து நிறுத்தி, அவர்களின்  திருமணமுறையையும் மாற்றி அமைத்தார். கிறிஸ்துவ​மயமாக்கம் காரணமாக முண்டா இன மக்களில் பெரும் பகுதி கிறிஸ்துவர்களாகி தங்களின் பூர்வக் கடவுளான சிங்போங்காவை வழிபடுவதை கைவிட்டு​விட்டார்கள்.

'கிறிஸ்துவ மத மாற்றம் தங்கள் மக்களின் நம்பிக்கை​களை, மரபுகளை ஒடுக்கிவருகிறது. இன்னொரு பக்கம் அரசு தனது கெடுபிடியான நடவடிக்கைகளால் மக்களை இன்னல்படுத்தி வருகிறது. இதில் இருந்து மீட்க கடவுளால் அனுப்பப்பட்ட தூதுவன் நான்’ என்று சொல்லிக்கொண்ட பிர்சா முண்டா, அரசையும் மிஷினரியையும் எதிர்த்து பிரசாரம் செய்யத் துவங்கினார்.

'பழங்குடி மக்களின் நிலங்களை மீட்க வேண்டும், கிறிஸ்துவமயமாவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும், மண்ணின் மைந்தர்களான தங்களை காட்டைவிட்டு விரட்ட நடக்கும் சதியை அனைவரும் ஒன்று கூடி எதிர்க்க வேண்டும்’ என்று பிர்சா அணி திரட்டத் துவங்கினார். இடைத்தரகர்கள், நிலப்பிரபுகள், கிறிஸ்துவ மிஷனரி, பிரிட்டிஷ் அதிகாரம் என்று நான்கு எதிரிகளைக் குறிவைத்து இந்த இயக்கம்  செயல்பட்டது.

1840-ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் உள்ள வனப் பகுதிகள் யாவும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்காக ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தது. அதன்படி இந்திய வனப் பகுதி முழுவதும் பிரிட்டிஷ் ஆட்சிக்குக் கட்டுப்பட்டதாக அறிவிக்கப்பட்டதுடன்  வனவாசிகள் பிரிட்டிஷ் அறிவிக்கும் வரிகளைச் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டார்கள்.

1864-ம் வருடம் இம்பீரியல் வனத் துறை எனத் தனிப் பிரிவு உருவாக்கப்பட்டது. அத்துடன் 1865-ல் இந்திய வனச் சட்டம் ஒன்றினையும் பிரிட்டிஷ் அறிமுகம் செய்தது. 1878-ல் இந்த வனச் சட்டம் இந்தியா முழுவதுமுள்ள வனங்களை ஒரே மைய ஆளுகையின் கீழே கொண்டுவந்தது.

மகாராணி ஆட்சியைத் தூக்கி எறிந்து பழங்குடி மக்கள் ராஜ்ஜியத்தை உருவாக்குவோம் என்ற பிர்சா முண்டாவின் எதிர்ப்புக் குரல் சோட்டாநாகபுரி எங்கும் வேகமாகப் பரவியது. எல்லாப் பழங்குடி மக்களையும் ஒரே குடையின் கீழே கொண்டுவருவதற்கு பிர்சா முயற்சித்தார். பழங்குடி மக்கள் மது அருந்தக்  கூடாது, மாயம் மாந்திரீகம் போன்றவற்றில் ஈடுபடக் கூடாது, தங்கள் வசிப்பிடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று பல சீர்திருத்தக் கருத்துகளை பிர்சா முண்டா பிரசாரம் செய்தார்.

பிர்சா முண்டாவுக்கு ஆதரவு வலுப்படுவதைக் கண்ட பிரிட்டிஷ் அரசு அவரைத் தந்திரமாக சதிசெய்து, ஆகஸ்ட் 23, 1895 அன்று கைதுசெய்தது. இரண்டு ஆண்டுகள் ஜெயில் வாசத்துக்குப் பிறகு 1897-ல் பிர்சா முண்டா விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு 1900-ல் மீண்டும் கைதுசெய்யப்பட்டு ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்ட பிர்சா முண்டா,  ஜூன் 9-ம் தேதி மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவரது சாவுக்கு காலராதான் காரணம் என்றது பிரிட்டிஷ் அரசு. ஆனால் விஷம் கொடுத்துக் கொல்லபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது.

பிர்சா முண்டாவின் சாவு அவரது இயக்கத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தியது. ஆனால், கந்து வட்டிக்காரர்கள், மற்றும் நிலப்பிரபுகள், பழங்குடி மக்களின் நிலத்தை அபகரிப்பதற்கு எதிராக புதிய சட்டம் கொண்டுவர வழிவகை செய்தது. பிர்சா முண்டாவின் எழுச்சியை முதன்மைப்படுத்தி வங்காளத்தின் பிரபல நாவலாசிரியர் மகாஸ்வேதா தேவி 'ஆரண்யேர் அதிகார்’ என்ற நாவலை எழுதியிருக்கிறார். அதில் பிர்சா முண்டா பழங்குடி மக்களின் போராளியாகச் சித்திரிக்கப்படுகிறார்.

* பிர்சா, உன்னைக் கைதுசெய்துவிட்டார்கள்
* பிர்சா, உன் கைகளில் இரும்பு சங்கிலி மாட்டிவிட்டார்கள்
* பிர்சா, உன்னை ராஞ்சி சிறைக்குக் கொண்டுபோகிறார்கள்
* பிர்சா, எந்த மண்ணுக்காக நீ கஷ்டப்பட்டுப் போராடினாயோ அதைப் பிடுங்கிக்கொண்டார்கள்
* பிர்சா, அடுத்த பிறவியெடுத்து நீ பிறந்துவர வேண்டும்
* பிர்சா, உன்னைப் பிரிந்துவிட்டதற்காக வருந்துகிறேன்
- என்று முண்டா இன மக்கள் இன்றும் பாடுகிறார்கள்.

கனடா அரசு தனது தேசத்தில் வாழும் பூர்வக்குடிகளைக் கௌரவிக்கும்விதத்தில் முதல் குடிமக்கள் என்று அவர்களை அழைக்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறது. அவர்கள் வசிக்கும் இடங்களை முதல் தேசம் (first Nation) என அழைக்க வேண்டும் என்றதோடு, எஸ்கிமோ என்ற சொல் பச்சை மாமிசம் சாப்பிடுகின்றவன் என்று தவறான பொருள்கொண்டிருப்பதால் அவர்களை இனிமேல் இனியூட் என்று அழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. இப்படி பழங்குடி மக்களை ஒரு தேசம் பெருமைப்படுத்தி வருகிறது.

ஆனால் இந்தியா, பழங்குடிகளை அடக்கி ஒடுக்கிவருவதோடு கானகத்தைவிட்டு அவர்களை விரட்டி வெளியேற்றத் தீவிர முயற்சி எடுத்துவருகிறது. பழங்குடியினருக்கு எதிராக இன்று நடைபெற்று வரும் ஒடுக்குமுறைகள், வன்கொடுமைகள் யாவும் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் வரலாறு நம்மை ஒருபோதும் மன்னிக்காது.


1 comment:

  1. நல்ல பதிவு.....உங்கள் பகிர்வுக்கு நன்றி......

    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete