Search This Blog

Friday, September 21, 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு - தடைக்கல்லா... படிக்கல்லா?

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய 6,76,763 பேர்களில் தேர்ச்சி பெற்றவர்கள் வெறும் 2448 பேர்தான் என்ற அதிர்ச்சித் தகவல் மக்களைக் கவலைப்பட வைத்திருக்கிறது. ‘எதற்காகத் தகுதித் தேர்வு குடைச்சல்?’ என்று ஆசிரியர் தரப்பும், ‘மாறும் சூழல்களைச் சமாளிக்க ஆசிரியர்களைத் தயார்ப்படுத்தத்தான்’ என்று எதிர்க் குரலும் எழ... பள்ளிக் கல்வியில் ரொம்பத்தான் குழப்பம் போங்கள்...

2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைமுறைக்கு வந்தது கல்வி உரிமைச் சட்டம். இந்தச் சட்டப் பிரிவு 23(1)படிதான் ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்கிறது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்குத்தான் தகுதித் தேர்வு. குழந்தைகளுக்கு எட்டாம் வகுப்பு வரை அடிப்படைக் கல்வி கற்க உரிமை உண்டு என்கிறது கல்வி உரிமைச் சட்டம். எனவேதான் இப்போதைக்கு எட்டாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு. இப்போது ஆசிரியர்களைக் குடையும் கேள்வி, ‘நாங்கள் ஆசிரியர் வேலைக்கான, பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றுத்தானே பணிக்கு வருகிறோம். அப்புறம் ஏன் தகுதித் தேர்வு?’ என்பது தான்.நம் நாட்டில் தொழில் துறை,வேளாண் துறை ஆகியவற்றின் யதார்த்த நிலையைக் கணக்கில் கொள்ளாமல் கொள்கை வகுத்துக் குளறுபடி செய்யும் அதிகாரவர்க்கமே கல்வித் துறையில் இப்போது ஏற்பட்டிருக்கும் குழப்பத்துக்குக் காரணம்".

21ம் நூற்றாண்டு சவால்களை ஆசிரியர்கள் சந்திக்கும் வகையில், உலகத்தரம் வாய்ந்த கல்விச் சூழலுக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்தவும் இந்தத் தகுதித் தேர்வுகள் அவசியம் என்கிறது மத்திய அரசு. ஆனால் கற்பிக்கும் முறையிலும், புதுசூழலைச் சந்திக்கும் வகையிலும் மாற்றம் வர, ஆசிரியர் பயிற்சிப் பள்ளிப் பாடத் திட்டங்களில் அல்லவா மாற்றம் வரவேண்டும்? அதைச் செய்யாமல் தகுதித் தேர்வு நடத்தினால் எப்படி தேர்ச்சி பெற முடியும்?"இந்தியாவில் பல மாநிலங்களில் தகுதித் தேர்வு நடந்து முடிந்து விட்டதாம். பல வடமாநிலங்களில் ஆசிரியர் பணிக்குத் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை கிடைக்காத நிலையில் பள்ளியிறுதி வகுப்பு படித்தவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அது போன்றவர்களுக்குத் தகுதித் தேர்வு நிச்சயம் தேவை என்கிறார்கள் கல்வியாளர்கள். கல்வி உரிமைச் சட்டப்படி, தகுதித் தேர்வு எழுத குறைந்த பட்ச கல்வித் தகுதியை மாநில அரசுகளே நிர்ணயித்துக் கொள்ளலாம். 2010க்குப் பிறகு அரசுப் பள்ளிகளில் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றாக வேண்டும். அதே போல் அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களும் தேர்ச்சி பெற வேண்டும். இதற்காக அவர்களுக்கு ஐந்தாண்டு கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு விஷயம்தான் புரியவில்லை. இப்போது அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பதவிகளுக்குத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்கப் போகிறார்கள். இந்த அரசு வேலை கிடைக்கும் என்று தான் லட்சக்கணக்கான தனியார் பள்ளி ஆசிரியர்கள் தேர்வு எழுதினார்கள். ஆனால் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணிகள் எவ்வளவு என்ற விவரம் இல்லை. மேலும் தேர்ச்சியின் அடிப்படையில் புதிய மூப்புப்பட்டியல் தயார் செய்யப்பட்டு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டால், ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகத்தில் உள்ள ஆசிரியர் பணிக்கான மூப்புப் பட்டியல் குப்பைத் தொட்டிக்குப் போகுமா? ஏற்கெனவே உள்ள ஆசிரியர்களுக்கு அரசு முறைப்படி பயிற்சிகளைக் கொடுத்துத் தயார் செய்து கால அவகாசம் கொடுத்து, தேர்வு எழுதச் சொல்லலாம். தகுதித் தேர்வுக்கான அரசு பயிற்சி இல்லாததால், தனியார்கள் ‘கைட்’ போட்டும், பயிற்சி நிலையங்கள் நடத்தியும் லட்சக்கணக்கில் சம்பாதித்து விட்டார்கள். இப்போது நடந்த தேர்வில் பெரும்பாலும் பாடங்களில் இருந்துதான் கேள்விகள் கேட்கப்பட்டதே தவிர, கற்பித்தல் முறையில் கேள்விகள் கேட்கப்படவில்லையே,"?

மத்திய அரசின் தேசியக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சி.பி. எஸ்.சி. பள்ளி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை நடத்தியிருக்கிறது. இரண்டு சதவிகிதம்தான் தேர்ச்சி விகிதம். சிலர் தேர்வை எதிர்த்து நீதிமன்றம் போனபோது, ‘தகுதித் தேர்வு தேவை’ என்று சொல்லிவிட்டது. ‘நமது கற்பித்தல் முறை உரையாடலாக மாற வேண்டும். மாணவன் கேள்வி கேட்க ஆசிரியர் பதில் சொல்ல வேண்டும்’ என்கிறார் மறைந்த கல்வியாளர் பவுலோ ப்ராயர். அந்த வகையில் ஆசிரியர்களைத் தயார்ப்படுத்த வேண்டும். ஆனால் இப்போது தகுதித் தேர்வு மூலம் ஆசிரியர்களை மன அழுத்தத்துக்குத் தள்ளி விட்டார்கள். தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோரால் கிண்டல் செய்யப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலை ஆசிரியர்களை மேலும் விரக்தியில் தள்ளும் என்கிறார்கள் கல்வியாளர்கள். அதேசமயம் தகுதித் தேர்வு தேவை என்ற வாதமும் இருக்கிறது.  

எந்த ஒரு பொறுப்பில் இருப்பவர்களுக்கும் தொடர் மதிப்பீடு தேவை. அதிலும் எதிர்காலத் தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர்களுக்குக் கண்டிப்பாகத் தேவை. மாறும் சூழலுக்கேற்ப ஆசிரியர்கள் தங்களைத் தகுதியுள்ளவர்களாக மாற்றிக் கொள்ள வேண்டாமா? ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் தேர்ச்சி பெற்றாயிற்றே என்ற வாதமெல்லாம் சரியல்ல! 

தகுதித் தேர்வின் மூலம் ஆசிரியர்களின் திறமையை மதிப்பீடு செய்யும் முறை மேலை நாடுகளில் உண்டு. அங்கே மாணவர்களே ஆசிரியர்களை மதிப்பீடு செய்கிறார்கள். நமது அமைப்பு முறையில் ஒவ்வொரு துறையின் வளர்ச்சியும் ஒன்றோடொன்று பிணைந்தது. கல்வித் துறையில் நல் மதிப்பீடுகள் அமலாகி சவால்களைச் சந்திக்கும் திறன் வளர்க்கப்பட்டால், ஒட்டுமொத்த சமூகமும் முன்னேறும்"


No comments:

Post a Comment