Search This Blog

Friday, July 20, 2012

அறிவியல் சாதனை! நாத்திகர் கண்டுபிடித்த கடவுளின் துகள்!



இந்த உலகம் பிறந்தது எனக்காக என மகிழும் நம்மில் சிலருக்குத் தொடர்ந்து எழுந்துகொண்டிருக்கும் ஒரு கேள்வி- இந்த உலகம் எப்படிப் பிறந்தது? யார் படைத்தது?
‘அவர்தான் கடவுள்’ என உலகின் பல மதங்கள் சொல்லுகின்றன. ஆனால் 1370 கோடி ஆண்டுகளுக்கு முன் பிரம்மாண்ட அணுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதி வெடித்த ‘பிங் பேங்க்’ வெடிப்பு நடந்த அந்த வினாடியில் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் அதிவேகத்தில் எல்லா திசைகளிலும் சிதறிய அணுக்கள்தான் நாம் இருக்கும் பூமி, நட்சத்திரங்கள், கோள்கள், வெளிமண்டலம் எல்லாம் நிலைகொண்டன என்கிறது விஞ்ஞானம். பிரபஞ்சம் இப்படி உருவானதாக உலகளவில் விஞ்ஞானிகளால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு தியரி இது. இதன்படி பிரபஞ்சம் சூரியன், சந்திரன், கடல், காற்று, நீங்கள், நான், நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் இந்தக் கல்கி உள்பட எல்லாமே மூலத் துகள்களால் (Elementary Particles) ஆனது.
‘பிரபஞ்சம் உருவாக அடிப்படையாக இருந்தவை 12 வகையான அணுத்துகள்கள். இதில் 11 அணுத்துகள்களை ஒரு முக்கியமான அணு இணைக்கிறது. அந்த ஒரு அணுத்துகளுடன் தொடர்பு கொண்ட பின்னரே மற்ற அணுக்களுக்கு மாஸ் (எடை அல்ல நிறை) கிடைக்கிறது. அதனால்தான் பேரண்டம் உருவாகியிருக்கிறது’ என்கிறது விஞ்ஞானம். விஞ்ஞானிகளுக்குப் புரியாத புதிராக இருந்த அந்த ஒரு அணுத்துகளுக்கு ஹிக்ஸ் போஸான் என பெயரிட்டிருந்தார்கள். பெயருக்குக் காரணம் இதை உலகுக்குச் சொன்ன விஞ்ஞானியின் பெயர் பீட்டர் ஹிக்ஸ். அவர் கையாண்ட கணக்கீட்டு முறையைக் கண்டுபிடித்தவர் இந்திய விஞ்ஞானி சத்யேந்திரநாத் போஸ். இவர் 1920களில் ஆல்பர்ட் ஐன்ஸ்டினுடன் பணியாற்றியவர். அணுத்துகள் ஆராய்ச்சியில் உலக புகழ் பெற்றவர். அவரது பெயரால் அணுச்சிதறல்கள் போஸான்கள் அழைக்கப்படுகின்றன.
(இந்த மாபெரும் மேதை இந்தியாவில் கவனிக்கப்படாமலும் உலகம் மறந்து போனதற்கான காரணமும் அதிலிருக்கும் அரசியலும் தனிக்கதை.)
அப்படியானால் அந்த அணுத்துகள் தான் கடவுளா? என்ற விவாதம் வலுத்துக்கொண்டிருந்ததினால் அது ‘கடவுள் அணுத்துகள்’ என்றே பாப்புலராக அறியப்பட்டது. ஆனால் கடவுளுக்கும் இந்த அணுத்துகளுக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை. ஹிக்ஸ் போஸான் பற்றி இயான் லெடெர்மென் என்ற நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி 1993ல் ஒரு புத்தகம் எழுதினார். சனியன் பிடித்த அணு; இதுதான் பிரபஞ்சத்தின் விடை என்றால் கேள்வி என்ன? (The Goddamn Particle: If the Universe Is the Answer, What Is the Question?') என்று ஒரு புத்தகம் எழுதினார். பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் அதை God Particle என்று மாற்றிவிட்டதால் உலகம் அதை அப்படியே அழைத்தது.
இந்தப் பேரண்டம் உருவாகக் காரணமான மற்ற அணுக்கூறுகளின் எடை அளவை கணக்கில் கொண்டு மீதியிருக்கும் ஒரு மிகச்சிறிய பகுதியான (இம்மியளவு) மூல அணுக்கூறான துகள் ஹிக்ஸ் போஸானின் எடை 125 கிகா எலெக்ட்ரோ வோல்ட்ஸ் என்பதைக் கணக்கிட்டுவிட்டார்கள். அந்த எடையைப் பரிசோதனைகள் மூலம் நிருபித்துவிட்டால் நமக்காகப் பிறந்த இந்த உலகம் எப்படி; எவற்றினால் உருவாயிற்று என அறியமுடியும் என்று அதைத் தேடி அமெரிக்கா உட்பட பல நாடுகள் ஆராய்ச்சியில் இறங்கின. ஆனால், பல ஆயிரம் கோடி செலவழித்த நிலையில் ஹிக்ஸ் போஸானைக் கண்டுபிடிக்க முடியாததால் ஆராய்ச்சியில் இருந்து அமெரிக்கா விலகியது.கண்ணாலும், மைக்ரோஸ்கோப்பிலும் பார்க்கவே முடியாத ஹிக்ஸ் போஸானை நிரூபிக்க ஒரே வழிதான் இருந்தது. அதன் சரியான எடையைக் கண்டுபிடிப்பது. அதற்கு அணுக்களை மோதவிட்டு ஒரு பிரளயத்தை ஏற்படுத்திப் பார்க்கவேண்டும், 20 நாடுகள் இணைந்து உருவாக்கிய ஐரோப்பியக் கூட்டமைப்பு சார்பில் பிரான்ஸ் சுவிட்சர்லாந்து எல்லையில் ஜெனீவா அருகே பூமிக்கு அடியில் 100 மீட்டர் ஆழத்தில் 27 கி.மீ. பரப்பில் வட்ட வடிவ ஆய்வகம் அமைத்து செர்ன் (CERN) 7 விதமான ஆராய்ச்சிகளைச் செய்து கொண்டிருக்கிறது. அதில் ஒன்றாக 10 மில்லியன் டாலர் செலவில் 17 கி.மீ. நீள சுரங்கத்தில் விஞ்ஞானிகள் இரவு பகலாகச் செய்த ஆராய்ச்சியின் ஒரு கட்டம்தான் இந்தச் சிறிய செயற்கைப் பிரளயம்.40 ட்ரில்லியன் (40 லட்சம் கோடி) புரோட்டான்களின் அதிபயங்கர வேகத்தில் மோதச்செய்து வெடித்துச் சிதறிய அணுத் துணைத்துகள்கள், கதிர்வீச்சுகளுக்கு இடையே ஹிக்ஸ் போஸானையும் (அதன் எடையை) கண்டுபிடித்துவிட்டனர். ஹிக்ஸ் போஸானின் எடை ஆராய்ச்சிகளில் கணக்கிட்டிருந்ததுபோலவே மிகச் சரியாக 125.3 கிகா எலெக்ட்ரோ வோல்ட்ஸ் என்ற உண்மைதான் இன்று உலகை உலுக்கிக் கொண்டிருக்கிறது. பிரளயத்தினால் உலகம் அழியும் என்று நம்பும் உலகில் ஒரு செயற்கைப் பிரளயத்தை உருவாக்கிப் பிரபஞ்ச ரகசியத்தை அறியும் மனித முயற்சியின் வெற்றியாக இப்போது ‘கடவுளின் அணுத்துகள்’ கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது.
இது ஏதோ ஒரே நாளில் நிகழ்ந்த அற்புதம் போல், ‘கிட்டத்தட்ட கடவுள்’ ‘கடவுளைக் கண்டுபிடித்துவிட்டார்கள்’ (எப்போது காணாமல் போனார்?) என்றெல்லாம் மீடியாக்கள் சாகஸம் செய்கின்றன. உண்மையில் இது பல ஆண்டுகளாகச் செய்யப்பட்டு வந்த ஓர் ஆராய்ச்சியின் முடிவு. பின் ஏன் இவ்வளவு கலாட்டா என்கிறீர்களா? அணுத்துகள் ஆராய்ச்சியில் ஒரு துகளைப் பரிசோதனை ரீதியாக உருவாக்கி விட்டதாக அறிவிக்க ஐந்து சிக்மா துல்லியம் தேவை (ஐந்து சிக்மா என்பதன் பொருள் 99.999% சரியானது என்பது. அதாவது லட்சத்தில் ஒன்றே ஒன்று மட்டும் பிழையாகலாம்). அந்த நிலையில் நடைபெற்ற பரிசோதனை இப்போது வெற்றியில் முடிந்திருக்கிறது. 3000000க்கும் அதிகமான விஞ்ஞானிகளின் 25 வருட உழைப்பின் பலன்தான் இந்தக் கண்டுபிடிப்பு. இந்தியாவிலிருந்தும் டாடா இன்ஸ்டிட்யூட் அஃப் ஃபண்டமென்டல் ரிசர்ச் (TIFR) உள்ளிட்ட ஆராய்ச்சிக் கூடங்களிலிருந்து பல விஞ்ஞானிகள் CERN ஆராய்ச்சியில் பங்கு கொண்டிருக்கிறார்கள்.
நடராஜர் சிலை வைக்கப்பட்டிருக்கும் இந்த மையத்தின் செய்தித் தொடர்பாளர் பாலோ ஜிபெலினோ இந்த ஆராய்ச்சித் திட்டத்தின் வரலாற்றுத் தந்தையாக இந்தியா விளங்கியது. இந்த சாதனையை அடைய இந்திய விஞ்ஞானிகளின் பங்கு மகத்தானது," என்று சொல்லியிருப்பதால் நாமும் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம். என் வாழ்நாளிலேயே நான் எழுதிய தியரி நிரூபிக்கப்பட்டிருப்பது நம்ப முடியாத ஆச்சர்யம்" எனச் சொல்லும் 83 வயது பீட்டர் ஹிக்ஸ்க்கு இந்த ஆண்டின் நோபல் பரிசு நிச்சயம். ‘கடவுளின் துகளை’ கண்டுபிடித்ததாக அறியப்படும் இவருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது!


3 comments:

  1. விஞ்ஞானத்தையும் விஞ்சிய சக்தி ஒன்று உள்ளது என்பதுதான் உண்மை

    ReplyDelete
  2. அறிவியலை மிஞ்சிய அறிவு இல்லை

    ReplyDelete
  3. அறிவியலை மிஞ்சிய அறிவு இல்லை

    ReplyDelete