Search This Blog

Monday, July 16, 2012

ஜெயிக்கப் பிறந்தவன் ’லவ் ஆல்’ ஃபெடரர்!

‘உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர்’ என்கிறார் டைகர் வுட்ஸ். ‘ரோஜர் ஃபெடரரால் என்னுடைய எல்லா சாதனைகளும் முறியடிக்கப்பட்டு விட்டதில் சந்தோஷம்’ என்கிறார் சாம் பிராஸ். ‘ஆடுகளத்தில் அவருக்கு நிகரான ஒரு போட்டியாளரைப் பார்க்கமுடியாது,’ டென்னிஸ் வரலாற்றில், ‘ஃபெடரருக்கு இணையான ஒரு வீரரில்லை’ என்கிறார்கள் சக போட்டியாளர்களான நடாலும் ஜோகோவிச்சும். ‘ஃபெடரரால் அமெரிக்க டென்னிஸுக்குத் தலைவலி. இவரை எதிர்கொள்ள அமெரிக்கர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்’ என்று ஒப்புக் கொள்கிறார் அகாஸி.
ஆனால், இரண்டு வாரங்களுக்கு முன்பு ஃபெடரரால் விம்பிள்டனையும் நெ.1 ரேங்கிங் கையும் மீண்டும் கைப்பற்ற முடியும் என்று எத்தனை பேர் நினைத்தார்கள்? ஏழு விம்பிள்டன் போட்டியை வென்ற சாம்பிராஸின் சாதனையை ஃபெடரர் சமன் செய்வார் என்று உங்களில் எத்தனை பேர் அவருக்கு ஆதரவளித்தீர்கள்? இரண்டே வாரத்தில் தம் மீதான விமர்சனங்களையும் அவநம்பிக்கைகளையும் உடைத்தெறிந்திருக்கிறார் ஃபெடரர். மீண்டுமொரு முறை நடாலிடமோ அல்லது ஜோகோவிச்சிடமோ தோற்று விடுவார் என்று நம்பிக் கொண்டிருந்த நேரத்தில், விம்பிள்டனை வென்று சாதனை படைத்திருக்கிறார். ‘இவர் பீலே, முஹமது அலிக்கு நிகரான வர்’ என்று அவரிடம் தோற்றுப் போன முர்ரே சொல்லியதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
டென்னிஸை விடவும் உடல் உழைப்பைக் கோருகிற விளையாட்டு எதுவும் இல்லை. இப்படியொரு கடுமையான விளையாட்டில், 2003ல் ஆரம்பித்தது ஃபெடரரின் வேட்டை. 2009 வரை மளமளவென்று கிராண்ட்ஸ்லாம்களை அள்ளிக்குவித்தார். இடையில் நடால் கடுமையான போட்டியைக் கொடுத்தாலும் ஃபெடரர் வெகுவாக சமாளித்து வந்தார். திடீரென்று, ஜோகோவிச்சின் வளர்ச்சி விஸ்வரூபம் எடுக்க, ஃபெடரரின் பாடு திண்டாட்டமானது. 2010ல் ஆஸ்திரேலிய ஓபனை மட்டுமே வெல்ல முடிந்தது. அடுத்த இரண்டரை வருடங்களுக்கு நடாலும் ஜோகோவிச்சும் ஃபெடரருக்குத் தண்ணிகாட்டி விட்டார்கள். ஜோகோவிச், முதல் ரேங்கிங்கைக் கைப்பற்றி, கடும் சவாலை உருவாக்கினார். ஃபெடரரின் கதை முடிந்தது என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், இந்த வருட பிரெஞ்சு ஓபனில், இறுதிப் போட்டிவரை முன்னேறினார் ஃபெடரர். அப்போதுதான் ஃபெடரரின் ரசிகர்களுக்கு நம்பிக்கை துளிர்த்தது.
கற்பனையில் எந்தத் தோல்விகளையும் தாங்கிக் கொள்கிற சக்தியுள்ளவர்களாகக் கருதப்படும் விளையாட்டு வீரர்கள், உண்மையில் சங்கடங்களை எதிர்கொள்கிற போதுதான் எவ்வளவு வலுக்குறைவானவர்கள் என்று தெரியவரும். ஃபெடரர் இதற்கு முற்றிலும் நேர்மாறானவர். 25, 26 வயதுள்ள ஜோகோவிச்சும் நடாலும், 30 வயது ஃபெடரரைப் பின்னுக்குத் தள்ளியபோதெல்லாம் சோர்ந்து போகாமல், கடுமையாக எதிர்த்து நின்றதன் பலன், விம்பிள்டனில் கிடைத்தது. ஃபெடரரின் டென்னிஸ் வாழ்க்கை எப்படி 2003ல் விம்பிள்டனில் தொடங்கியதோ அதே போல இப்போதும் விம்பிள்டனில்தான் திருப்பு முனை ஏற்பட்டுள்ளது.
முரேவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், மேட்ச் பாயின்டை வென்றபிறகு அப்படியே கீழே விழுந்து அழுதார் ஃபெடரர். அரங்கத்தில் ஆயிரக் கணக்கான பேர், டி.வி.யில் கோடிக்கணக்கான பார்வையாளர்கள். ஆனால், ஃபெடரர் வெட்கப்படவில்லை. உடைந்து அழுதார். இரண்டரை வருடங்களாகப் பட்ட அவமானங்களையெல்லாம் கண்ணீராக வெளியேற்றினார்.
ஃபெடரர் ஜெயிக்கும்போது யாருக்குமே பொறாமை ஏற்படாது. எந்த ஒரு சாதனைக்கும் தகுதியான நபராக தம்மை மாற்றிக் கொண்டதால் உண்டான மரியாதை அது. ஃபெடரருக்கு இது 17-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம். சாம்ப்ராஸ், இங்கிலாந்தின் வில்லியம் ரென்ஷா ஆகியோர் தலா 7 முறை விம்பிள்டனை வென்றுள்ளார்கள். அவர்களின் சாதனையையும் ஃபெடரர் சமன் செய்ததோடு 286 வாரங்கள் முதலிடத்தில் இருந்து சாம்பிராஸின் சாதனையையும் சமன் செய்திருக்கிறார். விம்பிள்டனை வென்றதால் கிடைத்த 10 கோடி ரூபாய் பரிசுத் தொகையை விடவும் தம் கௌரவத்தை மீட்டதுதான் ஃபெடரரின் மிகப்பெரிய சந்தோஷமாக இருக்கும்.
ஃபெடரர் விம்பிள்டனை வென்றாலும் முர்ரேவுக்கு பெரும் ஆதரவு இருந்தது. இறுதி ஆட்டத்தில் முர்ரே தோற்றபோது, மைதானத்தில் ஆங்கிலேயர் அனைவரும் துக்கப்பட்டனர். தோல்வியிலும் மக்கள் மனத்தைக் கவர்ந்தவர் முர்ரே.
ச.ந.கண்ணன்

No comments:

Post a Comment