Search This Blog

Monday, July 02, 2012

எனது இந்தியா! (அல்பெரூனியும் இபின் பதூதாவும் ) - எஸ். ராமகிருஷ்ணன்....


ரலாற்று ஆசிரியனின் பிரதான வேலை கடந்த காலத்தைப் புரிந்துகொள்வது. ஆனால், கடந்த காலத்தின் உண்மைகளைக் கண்டறிவது எளிதானது இல்லை. எது புனைவு எது நிஜம் என்று துல்லியமாகப் பிரிக்க முடியாதபடி இரண்டும் ஒன்று கலந்துவிட்ட நிலையில்... ஆதாரங்களும் அனுமானங்களும் தீவிரத் தேடுதல்களும் மட்டுமே சரித்திரத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள உதவும்!  இன்று சரித்திரச் சாட்சிகளாக இருப்பவை கல்வெட்டுகள் மற்றும் ஏடுகள், பட்டயங்கள் போன்றவற்றில் இருக்கும்  குறிப்புகள்தான். இவை அந்தந்த மன்னர்களால் எழுதப்பட்டும் இருக்கின்றன. சில வேளைகளில் வெளிநாடுகளில் இருந்து வந்த யாத்ரீகர்களாலும் இலக்கியத்தின் வழியாகவும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. உதாரணமாக காளிதாசரின் சாகுந்தலத்தை வாசிக்கும் ஒருவன் அதன் கவித்துவத்துக்கு அப்பால், அன்று நிலவிய இந்தியச் சமூகத்தையும் அதன் பல்வேறு வாழ்வியல்களையும் அறிந்துகொள்ள முடியும். இப்படி, சரித்திரம், கல்வெட்டுகளின் வழியே நேரடியாகவும், இலக்கியத்தின் வழியே மறைமுகமாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டுவருகிறது.

பண்டைய இந்தியாவின் சித்திரங்களை தனது குறிப்புகளின் வழியே நமக்குத் துல்லியமாக உணர்த்துபவர்கள் இந்தியாவுக்கு வருகை புரிந்த மெகஸ்தனிஸ், அல்பெரூனி, இபின்பதூதா, பாஹியான், யுவான்சுவாங் போன்ற வெளிநாட்டு யாத்ரீகர்களே! சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம் உள்ளிட்ட பல முக்கிய மொழிகளைக் கற்றுக்கொண்டு 12 வருடங்கள் இந்தியாவில் வாழ்ந்து வந்த அல்பெரூனி இந்திய வரலாற்றுச் சாட்சிகளில் முக்கியமானவர். அபு ரெஹான் முகமது பின் அகமது அல்பெரூனி எனும் அல்பெரூனி, தற்போது உஸ்பெஸ்கிஸ்தானில் உள்ள கிவா என்ற பகுதியில் கி.பி. 973-ல் பிறந்தவர். வானவியலிலும் கணிதத்திலும் ஆர்வமான அவர் லத்தீன் கிரேக்கம் போன்ற மொழிகளில் விற்பன்னராக இருந்த காரணத்தால், கஜினி முகமதுவின் சபையில் பணியாற்றி இருக்கிறார். கஜினி முகமது இந்தியாவின் மீது படையெடுத்து வந்தபோது, அவரது படையோடு இந்தியாவுக்கு வந்த அல்பெரூனி, கலாசாரத் தூதுவராக இங்கேயே தங்கிக்கொள்ளப்போவதாக மன்னரிடம் அனுமதி பெற்றார். அதைத் தொடர்ந்து இந்திய மொழிகளைக் கற்றுக்கொள்ளத் துவங்கினார்.

சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம் போன்ற மொழிகளைக் கற்றுக்கொண்ட காரணத்தால் வேதமும் உபநிஷத்துகள் மற்றும் இன்றி, அன்று இந்தியாவில் இருந்த கணிதம் மற்றும் வானவியல், தத்துவம் குறித்த முக்கிய நூல்கள் யாவையும் நேரடியாக வாசித்துப் புரிந்துகொண்டதோடு சில முக்கிய நூற்களை அரபியில் மொழியாக்கமும் செய்திருக்கிறார். 40-க்கும் மேற்பட்ட நூற்களை எழுதியுள்ள அல்பெரூனி இந்தியாவில் தான் கண்டறிந்த விஷயங்கள் குறித்து எழுதிய புத்தகம் 'அல்பெரூனியின் இந்தியா’. இந்த நூலில் 10-ம் நூற்றாண்டில் இருந்த இந்திய மக்களின் வாழ்வு அதன் பல்வேறு தளங்களோடு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இன்று வரை பல சரித்திர ஆசிரியர்கள் தங்களது ஆய்வுக்கு மூலப் புத்தகங்களில் ஒன்றாக அல்பெரூனியின் புத்தகத்தையே குறிப்பிடுகிறார்கள்.

கஜினி முகமது இந்தியாவில் இருந்த கோயில்களைக் கொள்ளையிட்டதைப்பற்றி விரிவாகக் குறிப்பிடும் அல்பெரூனி, சற்றே மிகையாக அல்லது அவர் அன்று அறிந்த செய்திகளாக கொள்ளை அடிக்கப்பட்ட செல்வத்தின் மதிப்பைக் குறிப்பிடுகிறார். ஆனால் சோமநாத்பூரின் படையெடுப்பு பற்றி அதிக அளவு விவரங்களை அவரும் பதிவு செய்யவில்லை. அவர் பதிவு செய்திருப்பது சோமநாத்பூர் கொள்ளையில் தங்கமும் வெள்ளியும் கொள்ளையிடப்பட்டது என்ற விவரங்களை மட்டுமே.

வானவியல் மற்றும் கணிதத் துறைகளில் இருந்த கோட்பாடுகள் அவரை மிகவும் கவர்ந்திருக்கின்றன. ஆரியபட்டா, வராகமித்ரா போன்றோரின் அறிவியல் கோட்பாடுகளை அவர் அரபியில் மொழி​யாக்கம் செய்திருக்கிறார். அத்தோடு பதஞ்சலியின் யோக சூத்திரம் அவரை வெகுவாக ஈர்த்த காரணத்தால், அதையும் தனி நூலாக மொழி பெயர்த்​திருக்கிறார்.

அன்றைய இந்திய வாழ்வில் இருந்த சாதிமுறை பற்றிய துல்லியமான விவரங்கள் அல்பெரூனியின் நூலில் காண முடிகிறது. சாதிமுறை மக்களை எப்படி நடத்தியது, எப்படி அடித்தட்டு மக்கள் சாதிரீதியாகப் பிரிக்கப்பட்டு இருந்தார்கள், உயர்சாதிக் கொடுமை எப்படி நடந்ததுபோன்ற விவரங்களை அல்பெரூனி விரிவாக எழுதியிருக்கிறார். அத்தோடு அன்று பெண்கள் எப்படி நடத்தப்பட்டார்கள், கோயில்கள் மற்றும் கட்டடக் கலை எப்படி இருந்தது, தத்துவத்தில் எந்த வகையான போக்குகள் இருந்தன, எதுபோன்ற தண்டனைகள் தரப்பட்டன என்பதுபோன்ற தகவல்களையும் அல்பெரூனியிடம் இருந்து அறிந்து​கொள்ள முடிகிறது.

அல்பெரூனி மீது இரண்டு விதமான விமர்​சனங்கள் இருக்கின்றன. ஒன்று அவர் இந்தியாவைப் பற்றி மிகையாக எழுதியிருக்கிறார் என்பது. மற்றது அவர் இஸ்லாமியர்களைக் கடுமையாக எழுதியிருக்கிறார் என்பது. இரண்டும் இன்றும் வாதப்பிரதிவாதங்களுக்கு உட்பட்டே வருகிறது.

இந்தக் கருத்து மோதல்களை மீறி அல்பெரூனி தனது வாழ்வின் பெரும் பகுதியை பெஷாவர், காஷ்மீர், பனாரஸ் ஆகிய நகரங்களில் வாழ்ந்து சென்ற தேர்ந்த கல்வியாளராகவும் அறிஞராகவும் இருந்திருக்கிறார் என்பதற்கு அவரது குறிப்புகளே சாட்சி.

இவரைப்போலவே இந்தியா குறித்து விரிவாகப் பதிவுசெய்த மற்றொரு பயணி இபின் பதூதா. பத்திரி​கையாளர் சோ இயக்கிய 'துக்ளக்’ திரைப்​படம் இவரை ஒரு முட்டாளைப் போல சித்திரித்துள்ளது. ஆனால், உண்மையில் இவர் தேர்ந்த கல்வியாளர்!

மொராக்கோவில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் 1304-ம் ஆண்டில் ஒரு நீதிபதியின் வீட்டில் பிறந்த அபு அப்துல்லா முகமது இபின் பதூதா, சிறு வயதில் மதக் கல்வியும் அரபி இலக்கணமும் பயின்றார்.

இஸ்லாமிய நெறிகளில் தீவிர ஈடுபாடுகொண்ட குடும்பம் என்பதால், அவரது கவனம் முழுமையும் இறையியல் மீது உருவானது. தனது 20-வது வயதில் மெக்காவுக்குப் புனிதப் பயணம் துவங்கினார். புனிதக் கடமைகளை நிறைவேற்றுவதற்காகத் துவங்கிய இந்தப் பயணம் அப்படியே 44 தேசங்களுக்குத் தொடர்ந்தது. 11 ஆயிரம் நாட்கள்.... 75 ஆயிரம் மைல் நீண்டு செல்லும் இந்தப் பயணம் என்று இபின் பதூதாவுக்கு முதலில் தெரியவில்லை. 20 வயது இளைஞனாக வீட்டில் இருந்து வெளியேறி, 30 வருடங்களுக்குப் பிறகுதான் தன்னுடைய சொந்த ஊர் திரும்பினார். யாத்ரீகனின் மனது திசைகள் அற்றது. அது காற்றைப் போல அலைந்துகொண்டே இருக்கக்கூடியது என்பதற்கு இவரே உதாரணம்!

இபின் பதூதா மெக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் போதே இதுவரை தான் அறியாத நிலப்பரப்புகளையும் பல்வேறு வகையான கலாசாரக் கூறுகளையும் அறிந்துகொள்ளத் துவங்கினார். புனிதப் பயணம் முடிந்து யாத்ரீகர்கள் தங்களது சொந்த ஊருக்குத் திரும்ப... இபின் பதூதாவுக்கு மட்டும் இன்னும் சில காலம் அங்கேயே தங்கி அங்கு வழிபாட்டுக்கு வரும் மக்களைப் பற்றியும் மெக்​காவின் தினசரி வாழ்க்கை பற்றியும் அறிந்து​கொள்ளலாம் என்று தோன்றியது . இதற்காக இரண்டு ஆண்டுகள் அவர் மெக்காவில் தங்கி இருந்து அங்குள்ள கலாசாரக் கூறுகளை நுண்மையாக அறிந்துகொண்டார்.

அப்போது அவருக்கு உலகம் முழுவதும் இருந்த இஸ்லாமிய அரசர்களை நேரில் கண்டு வரவேண்டும் என்ற ஆசை உருவானது. இந்த ஆசையை வெளிக்காட்டிக்கொள்ளாமல் மெக்காவில் தன்னோடு நெருக்கமாக இருந்த வணிகர்கள் மற்றும் கடலோடிகளோடு சேர்ந்துகொண்டு தனது பயணத்தைத் துவக்கினார். ஆறு ஆண்டு காலம் அவர் தொடர்ந்து பயணம் செய்தார். இந்தப் பயணத்தின் நடுவில் பாக்தாத்திலும், மெசபடோனியாவிலும், குபா என்ற பழமையான நகரிலும் சில மாதங்கள் தங்கிச் சென்றார்.

மார்கோ போலோவைப் போன்று நான்கு மடங்கு தூரம் பயணம் செய்த இந்த யாத்ரீகர் ஒவ்வொரு தேசத்தைப் பற்றியும் துல்லியமாகத் தனது நினைவு களைப் பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக பாக்தாத் நகரைப்பற்றி விவரிக்கும்போது அங்கே இருந்த குளியல் அறைகளைப் பற்றியும் பாக்தாத் நகரின் தெருக்கள், அங்காடிகள், இசைக்கூடங்கள், வீதிகள், அங்கு நிலவும் தட்பவெப்பம், உணவு, அங்குள்ள மக்களின் பேச்சு வழக்கு, என்ன வகையான உடை அணிந்திருந்தார்கள், அன்றைய நாணயம் எது, என்ன வகையான மரங்கள் அங்கிருந்தன, எதுபோன்ற கேளிக்கைகளில் மக்களுக்கு விருப்பம் இருந்தது, மக்களின் மதஈடுபாடு... என அனைத்தையும் துல்லியமாகக் குறிப்பிடுகிறார்.

இபின் பதூதா, பாக்தாத் நகரில் உள்ள ஒரு பொதுக் குளியல் அறைக்குள் குளிப்பதற்காக சென்றார். உள்ளே நுழைந்ததும் அவருக்கு மூன்று துண்டுகள் கொடுக்கப்படுகின்றன. ஒன்று அவர் உள்ளே நுழையும்போது தனது உடைகளைக் கழற்றிவிட்டு இடுப்பில் கட்டிக்கொள்வதற்கு. மற்​றொன்று குளித்த பிறகு ஈரத் துண்டுக்கு மாற்றாகக் கட்டிக்கொள்வதற்கு. மூன்றாவது உடலைத் துவட்டிக்கொள்வதற்கு. குளியலை மக்கள் ஒரு கொண்டாட்டமாக மேற்கொண்டனர். இப்படிச் சுத்த​மானதும் சுகாதாரமானதுமான குளியல் முறை நாடெங்கும் ஒரே சீராக இருந்தது என்று இபின் பதூதா தனது பயணக் குறிப்பில் குறிப்பிடுகிறார்.

தனது நீண்ட பயணத்தின் ஒரு பகுதியாக இபின் பதூதா இந்தியாவுக்கும் வருகை தந்தார். முகமது பின் துக்ளக்கின் ஆட்சிக் காலத்தில் இவர் டெல்லிக்கு வருகை புரிந்தபோது துக்ளக் ஒரு உள்நாட்டுக் குழப்பத்தைத் தீர்த்துவைப்பதற்காக தென் பகுதிக்குச் சென்றிருந்தார். ஆனாலும் அவருக்கு ஒரு வெளிநாட்டு யாத்ரீகன் தன்னைக் காண வந்திருப்பது தெரிவிக்கப்பட்ட உடன் 5,000 தினார்கள் வெகுமானம் அளித்து தங்கும் இடமும் சிறப்பு வசதிகளும் செய்து தந்தார்.

சில வாரங்களுக்குள், துக்ளக் டெல்லிக்கு வந்து சேர்ந்த நாளில் அவரிடம் இருந்து இபின் பதூதாவுக்கு அழைப்பு வந்தது. இபின் பதூதா, துக்ளக்கின் விசித்திரமான மனப்போக்கு பற்றியும் குதர்க்கமான சிந்தனை பற்றியும் முன்னதாகவே அறிந்திருந்த காரணத்தால், தங்கத்தால் செய்த பரிசுப் பொருட்களுடன் துக்ளக்கைக் காண்பதற்காகக் காத்திருந்தார். துக்ளக் அவரை அருகில் அழைத்து பெர்சிய மொழியில் பேசிப் பாராட்டினார். ஒவ்வொரு முறை இபின் பதூதாவை அவர் பாராட்டும்போதும் துக்ளக்கின் கையில் இபின் முத்தமிட்டு நன்றி தெரிவிக்க வேண்டி இருந்தது. அந்த ஒரு சந்திப்பில் மட்டும் ஏழு முறை அவரது கையில் தான் முத்தமிட்டதாகவும் அந்த ஒரு நிகழ்ச்சியே துக்ளக்கின் மனப்போக்கைத் துல்லி​யமாக எடுத்துக்காட்டியதாகவும் இபின் பதூதா விவரிக்கிறார்.


No comments:

Post a Comment