Search This Blog

Wednesday, June 13, 2012

தங்கம் - ஆண்டுக்கு ஆயிரம் டன்

ஒவ்வொரு வருஷமும் அக்ஷய திருதிக்கு தங்கம் வாங்கியவர்களில் எவ்வளவு பேருடைய செல்வம் பன்மடங்கு கூடியது என்பது தெரியாது. ஆனால், நம் மக்களுக்கு தங்கத்தின் மீது உள்ள பிடிப்பை நன்கு தெரிந்து வைத்துக்கொண்டிருக்கிறார்கள் நகைக் கடைக்காரர்கள். 'People's craze for the yellow metal' என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். இதை நிரூபிக்க பல உதாரணங்களைச் சொல்லலாம்.இந்தியாவில் குறிப்பாக தென் மாநிலங்களில் பெண்களுக்கு பெற்றோர்கள் கல்யாணம் நிச்சயிக்கும்போது பிள்ளையின் பெற்றோர்களின் முதல் கேள்வி பெண்ணுக்கு எத்தனை பவுனில் நகை போடுவீர்கள்?" என்பதுதான். சில சமயங்களில் இந்த பவுன் நகைகளின் அளவில் கருத்து ஒற்றுமை இல்லாமல் நின்று போன கல்யாணங்களும் உண்டு. அந்த அளவுக்கு இந்தியக் கல்யாணங்களில் தங்க நகைகளின் ஆதிக்கம் அதிகம். இன்று ஒரு கிராம் (22 காரட்) தங்கத்தின் விலை ரூபாய் 2600க்கும் அதிகம். ஒரு பவுன் (8 கிராம்) சுமார் ரூபாய் 21,000.

தங்கத்தைப் பற்றி சில முக்கியமான புள்ளி விவரங்கள் இதோ... இந்தியாவின் தேவைக்கான தங்கம் ஆண்டுதோறும் சுமார் 900 முதல் 1000 டன் வரை. இதில் இந்தியாவில் தோண்டி எடுக்கப்படும் தங்கம் மிகவும் சிறிய அளவுதான். அதனால் இந்தியாவின் தேவைக்கான, சுமார் 95 விழுக்காடு தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. சென்ற நிதி ஆண்டில் இந்தியா இறக்குமதி செய்த தங்கத்தின் மதிப்பு சுமார் 62 பில்லியன் டாலர். அப்போது ஒரு அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாயின் மதிப்பு - 50 ரூபாய். இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் 3,20,000 கோடி. நமக்கு மிகவும் தேவையான அன்னியச் செலாவணியின் பெரும்பங்கு தங்கம் இறக்குமதிக்குச் செலவழிக்கப்படுகிறது.  இதைப் பற்றி மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி சில தினங்களுக்கு முன்பு தம் கவலையைத் தெரிவித்து, தங்கத்தின் இறக்குமதியை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீது 4 சதவிகித வரிவிதிப்பை அறிவித்தார். அந்தச் சமயத்தில் இன்னொரு முக்கிய தகவலையும் அவர் தெரிவித்தார். இன்று இந்தியக் குடும்பங்களிலுள்ள தங்கத்தின் அளவு சுமார் 18000 முதல் 19000 டன் வரை. தங்க இறக்குமதியின் மீது நிதி மந்திரி ஏற்றிய 4 சதவிகித வரி நாடெங்கும் எதிர்ப்பைக் கிளப்பியது. இந்த எதிர்ப்புக்கு முக்கிய காரணம் நம் மக்களுக்கு தங்கத்தின் மீதுள்ள பற்றும், தங்கத்தை ஒரு சொத்தாகவும் கருதுவதும் தான். 

பல வருஷங்களுக்கு முன்பு ஒவ்வொரு நாட்டின் நாணயத்தின் மதிப்பு அந்த நாட்டின் அரசிடம் உள்ள தங்கத்தின் அளவை (Gold Standard) அடிப்படையாகக் கொண்டது. தற்போது எந்த நாட்டின் நாணய மதிப்பும் தங்கத்தின் இருப்பு அளவை அடிப்படையாகக் கொண்டதில்லை. எனினும் ஒவ்வொரு நாட்டின் நாணயத்தின் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் அரசு வங்கிகள் பல டன் தங்கத்தை இருப்பு வைத்துள்ளன. இன்று இந்திய ரிசர்வ் வங்கியிலுள்ள தங்கத்தின் அளவு 500 டன்னுக்கும் அதிகம்.  1991-ல் இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு மிகவும் மோசமாக இருந்த நிலையில் அப்போது நமது நிதிமந்திரி மன்மோகன் சிங் - 100 டன்னுக்கும் அதிகமாக தங்கத்தை உலக வங்கியில் அடகு வைத்து, தேவையான அன்னியச் செலாவணியைப் பெற்றார். பிற்பாடு நமது நிலை சீரடைந்தபோது அடகு வைத்த தங்கம் திரும்பப் பெறப்பட்டது. இவ்வளவு தூரம் தங்கத்தைப் பற்றி எழுதியதற்கு முக்கிய காரணம் - இந்தியாவின் ஏற்றுமதி - இறக்குமதி நிலுவையில் ஒரு பெரிய தொய்வு ஏற்பட்டிருப்பதுதான். சென்ற நிதி ஆண்டில் நமது ஏற்றுமதி பொருள்களின் மதிப்பு சுமார் 300 - பில்லியன் டாலர் - இறக்குமதியின் மதிப்பு 480 பில்லியன் டாலருக்கும் அதிகம். இந்தத் தொய்வை சரிகட்ட இந்திய அரசு திணறிக் கொண்டிருக்கிறது. எந்த நாட்டினுடைய பொருளாதார ஸ்திரத்தன் மைக்கும் அந்த நாட்டின் அன்னியச் செலாவணியின் வைப்புத் தொகையின் அளவு ஒரு முக்கிய அம்சம். இந்தியாவின் ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகமாகும்போது நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மிகவும் பாதிக்கப்படும். இதை மனத்தில் கொண்டுதான் நமது நிதி மந்திரியும் மற்ற பொருளாதார வல்லுனர்களும் தங்கத்தின் இறக்குமதியை வெகுவாகக் குறைக்கும்படி அரசுக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறார்கள். 

இந்த ஆலோசனை தவறு என்று சொல்ல முடியாது. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்து கொண்டே போகிறது. அதனை இறக்குமதி செய்ய நமக்கு அதிக அளவில் அன்னியச் செலாவணி தேவைப்படுகிறது. நமக்குத் தேவையான எரிபொருளில் சுமார் 80 சதவிகிதம் இறக்குமதி செய்கிறோம். சென்ற நிதி ஆண்டில் நாம் இறக்குமதி செய்த எரி பொருளின் மதிப்பு சுமார் 160 பில்லியன் டாலர். இது நம் நாட்டின் ஏற்றுமதியில் 50 சதவிகிதத்துக்கும் அதிகம். நாட்டின் எதிர் காலப் பொருளாதார வளர்ச்சியையும் ஸ்திரத்தன்மையையும் மனத்திக் கொண்டு தங்கத்தின் மேல் நமக்குள்ள பற்றை - கொஞ்சம் கொஞ்ச மாகக் குறைத்துக் கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது.

1 comment: