Search This Blog

Friday, May 18, 2012

கார்ட்டூனும் கொஞ்சம் கவலைகளும்.... , ஓ பக்கங்கள் - ஞாநி


கார்ட்டூனுக்கு சரியான தமிழ்ச் சொல் இல்லை. கேலிச் சித்திரம் என்று பயன்படுத்தப்படுகிறது. எல்லா கார்ட்டூன்களும் கேலி செய்பவை அல்ல.விளக்கப்படம் என்றும் ஒரு வழக்கு உண்டு. எல்லா கார்ட்டூனும் விளக்கப்படமுமல்ல. கார்ட்டூனை விமர்சனப் படம் என்று ஓரளவு சொல்லலாம். விமர்சனத்தில் கோபம் இருக்கலாம். விரக்தி இருக்கலாம். கேலி இருக்கலாம். கேள்வி இருக்கலாம். இதில் எது வேண்டுமானாலும் இருக்கலாம்.அம்பேத்கர் தொடர்பான கார்ட்டூன் பற்றி எழுந்த சர்ச்சையும் தொடர் நடவடிக்கைகளும் மிகுந்த கவலை தருகின்றன. சில தலித் அமைப்புகளின் தலைவர்கள் எழுப்பிய கண்டனத்தையடுத்து மன்மோகன் அரசு கார்ட்டூனை பாடப் புத்தகத்திலிருந்து நீக்கியதுடன் நிற்காமல் பாடப்புத்தகங்களில் கார்ட்டூன்கள் எதுவுமே இருக்கக்கூடாது என்ற நிலைக்குப் போய்விட்டது.

இந்த விவகாரத்தில் எழுந்துள்ள ஒவ்வொரு அம்சமாகப் பார்க்கலாம். அம்பேத்கர் தலித் தலைவர் என்று தலித்துகள் மட்டும் அவரைச் சொந்தம் கொண்டாடும் நிலை ஏற்படுத்தப்பட்டிருப்பதே எனக்கு வருத்தம் தருகிறது. இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் என்பவர் வெறும் தலித்துகளுக்கான தலைவர் மட்டுமல்ல. அந்தச் சட்டம்தான் நம் சமூகத்தின் பிராமணர்கள் உள்ளிட்ட பல்வேறு சாதியினருக்குமான அடிப்படை மனித உரிமைகளை, சிவில் உரிமைகளை அளித்திருக்கிறது. இன்றுவரை பாதுகாத்து வருகிறது. எனவே அம்பேத்கரை நம் நாட்டின், சமூகத்தின் பொதுத் தலைவராகக் கொண்டாடுவதுதான் நியாயமே ஒழிய அவரை தலித்துகளுக்கு மட்டுமான தலைவராகக் குறுக்குவது தவறானது. இன்றைய சூழலில் நாம் காந்தியை காங்கிரஸ், பி.ஜே.பி. யிடமிருந்து விடுதலை செய்ய வேண்டியிருக்கிறது. பெரியாரை தி.க.விடமிருந்து விடுவிக்க வேண்டியிருக்கிறது. விவேகானந்தரை ஆர்.எஸ்.எஸ்.சிடமிருந்து விடுவிக்க வேண்டியிருக்கிறது. அம்பேத்கரை தலித் தலைவர்களிடமிருந்து விடுதலை செய்ய வேண்டியிருக்கிறது.எனவே கார்ட்டூனிலோ வேறு எங்கேயுமோ அம்பேத்கர் இழிவு செய்யப்பட்டால், அதை நம் மொத்த சமூகமும் கண்டிப்பதும் எதிர்ப்பதும்தான் நடக்கவேண்டும். இதெல்லாம் தலித் சமாசாரமென்று ஒதுக்குவதுதான் சாதியமாகும்.சர்ச்சைக்குரிய கார்ட்டூனில் அம்பேத்கர் என்பதுதான் அடுத்த கேள்வி. இந்த கார்ட் டூனை 1949ல் வரைந்த மறைந்த ஓவியர் சங்கர் இந்தியாவில் அரசியல் கார்ட்டூனின் தந்தை என்று போற்றப்படுபவர். அவர் காந்தி, அம்பேத்கர், வர்ணாசிரமம் பற்றி வரைந்த இன்னொரு கார்ட்டூன் அற்புதமானது. வர்ணாசிரம பீடத்தின் மீது அமர்ந்திருக்கும் கடவுள் சிலையை, தீண்டாமை என்ற தாரைப் பூசுகிறார் எம்.கே.ஆச்சாரியா. அதை காந்தி துடைக்கிறார். அம்பேத்கரோ வர்ணாசிரமம் என்ற பீடத்தை உடைக்க முயற்சிக்கிறார். இவை எல்லாவற்றையும் அன்னிய ஆட்சி வேடிக்கை பார்க்கிறது என்று ஒரு கார்ட்டூனை சங்கர் 30களிலேயே ஹிந்துஸ்தான் டைம்ஸில் வரைந்திருக்கிறார்.

என்.சீ.இ.ஆர்.டி. எனப்படும் தேசியப் பாடநூல் நிறுவனம் வெளியிட்ட பாடப் புத்தகத்தில் இருக்கும் கார்ட்டூன் அரசியல் சட்டம் பற்றிய பாடத்துடன் உள்ளது. இந்தப் பாடத்தில் அரசியல் சட்டம் எப்படிப் பட்ட சமூகத் தடைகளையெல்லாம் மீறி மக்களுக்கு சமத்துவ உரிமைகளை வழங்கும் சிறப்பான சட்டமாக உருவாக்கப்பட்டது என்று விவரிக்கப்பட்டிருக்கிறது. இத்துடன் வெளியிடப் பட்ட கார்ட்டூனில் அரசியல் சட்டம் என்ற நத்தை மீது அதை ஓட்ட முயற்சிக்கும் அம்பேத்கர் கையில் சாட்டையுடன் அதை விரட்டுகிறார். நேரு பின்னால் நின்றபடி தானும் ஒரு சாட்டையுடன் விரட்டுகிறார். பொதுமக்கள் வேடிக்கை பார்க்கிறார்கள்.இந்தக் கார்ட்டூனின் கீழே மாணவர்களுக்கான ஒரு குறிப்பு இருக்கிறது. அரசியல் சட்ட உருவாக்கம் ‘நத்தை வேகத்தில்’ நடந்தது பற்றிய கார்ட்டூனிஸ்டின் பார்வை இது. சட்ட உருவாக்கம் சுமார் மூன்று வருடம் பிடித்தது.இதைத்தான் கார்ட்டூனிஸ்ட் விமர்சிக்கிறாரா? அரசியல் சட்ட நிர்ணய சபை சட்டத்தை உருவாக்க அவ்வளவு காலம் எடுக்கக் காரணம் என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?" என்பதுதான் குறிப்பு.அருகே இருக்கும் கட்டுரையில் அந்தக் காரணங்கள் விவரிக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் புத்தகம் மட்டுமல்ல என்.சீ.இ.ஆர்.டி. உருவாக்கிய இதர பாடப் புத்தகங்களிலும் இவ்வாறு படங்கள் வெளியிட்டு மாணவர்களை பாடக் கட்டுரையில் கூறப்பட்ட விஷயங்களைப் பற்றி சிந்திக்கத் தூண்டும் குறிப்புகள் உள்ளன.என்னைப் பொறுத்தமட்டில் அம்பேத் கரும் சாட்டை கொண்டு நத்தையை விரட்டுகிறார். அவருக்கு உதவியாக நேருவும் விரட்டுகிறார். நத்தை வேகத்துக்குக் காரணம், அரசியல் சட்டத்தின் முற்போக்கான அம்சங்களுக்கு கமிட்டியிலும் சபையிலும் இருந்த பிற்போக்கு சக்திகள் போட்ட முட்டுக்கட்டைகள்தான். இதைப் பற்றி சிந்திக்கத் தூண்டுவதுதான் இந்தக் கார்ட்டூன்; அதே சிந்தனையை மாணவரிடமும் தூண்டத்தான் பாடப் புத்தகத்திலும் போட்டிருக்கிறார்கள் என்றே நான் புரிந்துகொள்கிறேன்.இதே புரிதல்தான் 1949ல் இந்தக் கார்ட்டூனைப் பார்த்திருக்கக்கூடிய நேருவுக்கும் அம்பேத்கருக்கும் கூட இருந்திருக்கும். அவர்களும் அப்போது இதைக் கண்டித்ததில்லை.


இந்தப் பாடப்புத்தகத்தை எழுதியவர்களில் ஒருவரான யோகேந்திர யாதவ் சிறந்த அரசியல் விமர்சகர். ஆய்வாளர். சுமார் 15 வருட காலம் வெவ்வேறு தலித் அமைப்புகளுடன் இணைந்து களத்தில் சமூக நீதிக்கான பணிகளில் ஈடுபட்டவர். புத்தகம் 2006ல் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப் படுவதற்கு முன்பு பல கல்வியாளர்கள், தலித் அறிஞர்கள் குழுக்கள் இதை ஆய்வு செய்தனர். அவர்களும் இதே புரிதலில்தான் இதை ஆட்சேபிக்கவில்லை என்றே நினைக்கிறேன்.ஆனால் 2012 மே மாதத்தில் இதை ஆட்சேபிப்பவர்களின் புரிதல் வேறாக இருக்கிறது.சட்ட தாமதத்துக்குக் காரணம் அம்பேத்கர் என்று அவர் மீது இந்தக் கார்ட்டூன் பழி சுமத்துவதாகவும் அவர் தம் வேலையைச் சரியாகச் செய்யாதவர் போல, அவரை நேரு சாட்டை எடுத்து விரட்டுவது போலவும் அவர்கள் அர்த்தம் கொண்டு இந்தக் கார்ட்டூனையும் அதை வெளியிட்டதையும் கண்டிக்கிறார்கள். ஒருவேளை கார்ட்டூனை அந்தப் புத்தகத்தில் இருக்கும் கட்டுரையோடு தொடர்பு படுத்தாமல் பார்த்தால் அப்படியும் புரிந்து கொள்ளமுடியுமோ என்று கவலையாக இருக்கிறது. கார்ட்டூனை ஆட்சேபிக்கும் பலரும் ( எல்லாரும் அல்ல) அந்தப் பாடப் புத்தகக் கட்டுரையைப் படிக்கவில்லை.உண்மையில் அம்பேத்கருக்கு இழைக்கப்படும் இழிவு, அவமானம், அவமரியாதை, அநீதி என்பவை என்ன? நம் அரசியல் சட்டத்தின் பிரிவுகள் ஒவ்வொரு முறை மீறப்படும்போதும் நாம் அம்பேத்கரை அவமதிக்கிறோம். சட்டத்தை வளைத்து ஸ்பெக்ட்ரம் ஊழல்கள் நடக்கும்போதும் சரி, சட்டத்தை மதிக்காமல் என்கவுண்ட்டர் கொலைகளை காவல் துறை செய்தாலும் சரி, அங்கே இழிவுபடுத்தப் படுவது அற்புதமான அரசியல் சட்டத்தை உருவாக்கித் தந்த அம்பேத்கர்தான். பீஹாரில் 23 தலித்துகளை 21 மேல்சாதியினர் பட்டப்பகலில் பகிரங்கமாக படுகொலை செய்த வழக்கில் 16 வருடங்கள் கழித்து இந்த ஏப்ரலில் பாட்னா உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கும்போது சாட்சியங்கள் போதுமானதாக இல்லாததால் எல்லா குற்றவாளிகளையும் விடுவிக்கிறபோது அம்பேத்கருக்கு அவமரியாதை செய்கிறோம். இந்த இழிவுகளை, இந்த அவமரியாதைகளை நிறுத்துவதுதான் நாம் அம்பேத்கருக்குச் செய்யவேண்டிய மிகப்பெரிய அஞ்சலியும் பாராட்டும்.மற்றபடி சர்ச்சைக்குரிய கார்ட்டூன் அம்பேத்கருக்கு எதிரானது மல்ல, அவரை இழிவு செய்வதும் அல்ல என்பதே என் புரிதல். ஆனால் வேறு புரிதலினால் அது இப்போது ஆட்சேபிக்கப்பட்டு அரசு அதை நீக்க உடனடியாக ஒப்புக் கொண்டுவிட்ட நிலையில், என் கவலை அடுத்த சில அம்சங்கள் பற்றியாகும். சிலருடைய உணர்வுகளுக்கு மதிப்பளித்து அதை நீக்கியது நீக்கியதாகவே இருக்கட்டும்.

ஆனால் இந்தச் சூழலைப் பயன்படுத்தி என்.சீ.இ.ஆர்.டி. புத்தகங்களில் இருக்கும் எல்லா கார்ட்டூன்களையும் எடுத்து விடவேண்டுமென்று அரசியல்வாதிகள் அரசுக்கு நெருக்கடி தர ஆரம்பித்து விட்டார்கள். இது ஆபத்தானது.இறுக்கமாகவும் போரடிப்பதாகவும் இருந்து வந்த பாடப்புத்தகங்களை என்.சீ.இ.ஆர்.டி. இப்போது சுவையானதாகவும் சிந்தனையைத் தூண்டுவதாகவும் மேலும் தேடிப் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துவதாகவும் மாற்ற ஆரம்பித்திருக்கிறது. இதைப் பழையபடி ஆக்கிவிடும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.சர்ச்சைக்குரிய கார்ட்டூன் இருந்த புத்தகம் 11ம் வகுப்பு மாணவர்களுக்கானது. அதாவது அவர்கள் 16 வயதுக்காரர்கள். இன்னும் இரண்டு வருடங்களில் வோட்டுப் போட்டு இந்தியாவின் அரசியலை தீர்மானிக்கும் அதிகாரம் பெறக் கூடியவர்கள். அப்படிப்பட்ட நிலையில் அவர்களுடைய அரசியல், வரலாறு பாட நூல்கள் சிந்தனையைத் தூண்டுவதாகவும் அரசியலின் பல்வேறு வண்ணங்களை அறிமுகம் செய்வதாகவும், மனத்தில் கேள்விகளை எழுப்பி விடை தேடச் செய்வதாகவும் இருப்பதுதான் நியாயம். என்.சீ.இ.ஆர்.டி அதை நோக்கி எடுத்த முயற்சிகள் இப்போதைய கார்ட்டூன் சர்ச்சையினால் முடங்கிவிடக் கூடாது என்பதே என் கவலை. இன்று நேரு, அம்பேத்கர் பற்றிய கார்ட்டூன்களை நூலில் அனுமதித்தால்தான் நாளை அதை சோனியா, ராகுல், அத்வானி, மோடி, கருணாநிதி, ஜெயலலிதாவரை விரிவுபடுத்த இயலும். அப்படிச் செய்யவிடாமல் முடக்குவதற்கு இந்த வாய்ப்பை அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொண்டால், அது தலித்துகள் உட்பட நம் மொத்த சமூகத்துக்குமே பெரும் இழப்பாகும்.

1 comment:

  1. அருமையான விளக்கங்கள். ஞானி, எழுத்து, படிக்க , சிந்திக்க வைக்கிறது.
    நன்றி.

    ReplyDelete