Search This Blog

Sunday, April 22, 2012

எனது இந்தியா! ( உண்ணாவிரத அரசியல் ! ) - எஸ். ராமகிருஷ்ணன்....

ரசியல் காரணங்களுக்காக உண்ணா​விரதம் இருப்பது வேறு எந்த நாட்டை​விடவும் இந்தியாவில்தான் அதிகம். வெள்ளைக்​காரர்களுக்கு எதிராக காந்தி தொடங்கிய உண்ணாவிரதம் முதல், ராணுவ ஒடுக்குமுறைகளுக்கு எதிராக 10 ஆண்டுகளுக்கும் மேலாக மணிப்பூரில் உண்ணாவிரதம் இருக்கும் ஐரோம் ஷர்மிளா வரை எத்தனையோ வலிமையான உண்ணா​விரதங்களை இந்தியா பார்த்து இருக்கிறது.உண்ணாவிரதத்தை கவனஈர்ப்புப் போராட்ட முறையாக மாற்றியதற்குப் பின்னால், சுவாரஸ்யமான வரலாறு இருக்கிறது. ஐரீஷ்காரர்கள்தான் உண்ணா​விரதத்தை வலிமையான எதிர்ப்பு அடையாளமாக மாற்றியவர்கள். அயர்லாந்தில் ஒரு மனிதனுக்கு ஏதாவது அநியாயம் நடந்துவிட்டது என்றால், அதற்குக் காரணமானவரின் வீட்டுக்கு முன் உண்ணா​விரதம் இருப்பது தொன்று தொட்டு நிலவும் பழக்கம். அப்படி உண்ணாவிரதம் இருந்​தால், கட்டாயம் நீதி கிடைத்துவிடும். காரணம், ஐரீஷ்காரர்கள் மனசாட்சிக்கு மிகுந்த மரியாதை கொடுப்பவர்கள். இது, அயர்லாந்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு போராட்ட முறை.பௌத்தம், சமணம், இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் என சகல மதங்களிலும் உண்ணா​நோன்பு என்பது, துறவிகளுக்கான நெறியாகவும், இல்லறத்தோர் குறிப்பிட்ட சில தினங்களில் குறிப்பிட்ட காரணம் கருதி பின்பற்ற வேண்டிய சடங்​காகவும் இருக்கிறது.இது தவிர, 'சல்லேகனம்’ இருந்து உயிர் துறக்க முயலும் சமணத் துறவிகள், திட உணவைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தவிர்த்து, திரவ உணவைக் குடித்து வாழ்ந்து, பிறகு அதையும் துறந்து காற்றைப் புசித்து உடல் மெலிந்து இறந்துபோவார்கள். இப்படி, அறிந்தே உணவை விலக்குவது உயர்ந்த நெறியாகவே இந்திய மரபில் இருந்து இருக்கிறது.

யுவான் சுவாங் இந்தியாவை நோக்கி நடந்து வந்தபோது, கோச்சாங் என்ற நகரை அடைந்தார். அங்கே ஆட்சி செய்த மன்னர் குவென்சி, யுவான் சுவாங்கை வரவேற்று தன்னோடு தங்கவைத்து ராஜ உபசாரம் செய்து இருக்கிறார். இருவரும் பல நாட்கள் கூடிப் பேசி, பல துறைகள் சார்ந்தும் விவாதித்து இருக்கிறார்கள். முடிவில் ஒரு நாள், யுவான் சுவாங் தனது பயணத்தைத் தொடர்வதற்காகக் கிளம்பியபோது, மன்னர் அனுமதிக்க மறுத்து தன்னோடு தங்கி இருந்தே ஆக வேண்டும் எனக் கட்டளை இட்டார். அதை யுவான் சுவாங் மறுக்கவே, அவரைக் கடுமையாகத் தண்டிக்கப்​போவதாக மன்னர் மிரட்டினார். மன்னருக்கு எதிராக யுவான் சுவாங் உண்ணாவிரதம் இருந்தார். நாலாவது நாளில் மயங்கி விழுந்தார். யுவான் சுவாங்கின் பிடிவாதத்தைக் கண்ட மன்னர், அவரது பயணத்துக்கு அனுமதி வழங்கினார். இது நடந்தது 629-ம் ஆண்டு. இதையே அதிகாரப்​பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட முதல் உண்ணா​விரதம் என்று, சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.அதிகாரத்தை எதிர்த்து உண்ணாவிரதம் இருப்பதை முதன்முதலாக தொடங்கியது ரஷ்யாதான். சைபீரியாவில் உள்ள சிறைச்சாலையில் பெண் கைதிகள் மிகவும் கொடுமைப்படுத்தப்படுவதை எதிர்த்து 1888-ம் ஆண்டு கைதிகள் உண்ணாவிரதம் தொடங்கினர். அந்த உண்ணாவிரதத்தை அரசு கண்டுகொள்ளவே இல்லை. உண்ணாவிரதம் இருந்த ஆறு கைதிகள் இறந்துபோனதால் போராட்டம் வலிமை அடைந்தது. அதைத் தொடர்ந்து, கைதிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி சிறை அதிகாரியை இடமாற்றம் செய்ததோடு, அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்தது. அமெரிக்​காவைப் பொறுத்த வரை, 'பெக்கி எடல்சோன்’ என்ற பெண்தான் அரசியல் காரணங்களுக்காக உண்ணாவிரதம் இருந்த முதல் போராளி. அவர், தனது கருத்து உரிமையை அரசு பறிப்பதாகச் சொல்லி அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார். இங்கிலாந்திலும் முதல் உண்ணாவிரதம் இருந்தவர் ஓர் பெண் கைதியே!

இந்தியாவில் உண்ணாவிரதத்தைப் போராட்ட முறையாக்கி வெற்றி பெற்றவர் பகத்சிங். தன்னுடைய சிறை வாழ்வில் 114 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து இருக்கிறார் பகத்சிங். சிறையில் தங்களை அரசியல் கைதிகளாக நடத்த வேண்டும் என உரிமை கோரியும், கைதிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்றும் அவர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். அவருக்கு முன்னோடியாக, சிறைச்சாலைக் கொடுமையை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தவர் பகத்சிங்கின் தோழர் ஜதீந்திரநாத் தாஸ். கல்கத்தாவைச் சேர்ந்த இவர், தனது கல்லூரிக் காலங்களில் ஆங்கிலேய அரசை எதிர்த்து சிறை சென்றார். சிறை அதிகாரி, கைதிகளை மோசமாக நடத்துவதைக் கண்டித்து 20 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். அதைத் தொடர்ந்து, சிறை அதிகாரி மன்னிப்பு கேட்டார். இதை அடுத்தே, உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார். பின்னர், லாகூர் சதி வழக்கில் ஜதீந்திரநாத் தாஸ் கைது செய்யப்பட்டு லாகூர் சிறைச்சாலைக்குக் கொண்டுவரப்பட்டு, பகத்சிங்கோடு அடைக்கப்பட்டார். அந்தச் சிறைச்சாலையின் நிர்வாகம் மிகவும் மோசமாக இருந்தது. கைதிகளுக்குத் தரப்பட்ட உணவில் கரப்பான்பூச்சிகள் செத்துக்கிடந்தன. குடிநீரில் புழுக்கள் நெளிந்தன. வாசிப்பதற்கு புத்தகங்களும் பத்திரிகைகளும் தர மறுத்தனர். ஆகவே, சிறை அதிகாரிகளின் கொடுமையைக் கண்டித்து 1929-ம் ஆண்டு ஜூலை 13-ம் தேதி உண்ணாவிரதம் இருந்தார் பகத்சிங். பாது​கேஸ்வர் தத் உட்பட அவரது தோழர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். அவர்களது கோரிக்கையை ஆங்கிலேய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. பகத்சிங்குக்கு ஆதரவாக நிறையக் கைதிகள் உண்ணாவிரதம் தொடங்கினர். அவர்களைச் சிறைக் காவலர்கள் அடித்துத் துன்புறுத்தினர். இதுகுறித்து, சிறை அதிகாரிகளுக்கும் கவர்னருக்கும் விரிவான கடிதம் எழுதினார் பகத்சிங். அப்படியும் நியாயம் கிடைக்கவே இல்லை. 60 நாட்கள் உண்ணாவிரதத்துக்குப் பிறகு, ஜதீந்திரநாத் தாஸ் உடல்நலிவுற்று சிறைச்சாலையிலேயே இறந்து​போனார். அவரது உடல் கல்கத்தாவுக்கு ரயிலில் கொண்டு செல்லப்பட்டது. ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு, அவருக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்த தனது உண்ணாவிரதத்தால் உடல்நலிவுற்ற பகத்சிங்கையும் அவரது தோழர்களையும் சாப்பிடவைக்க மோசமான வன்முறையைக் கையாண்டது ஆங்கிலேய அரசு. ஆனால், அவர்கள் பணிந்து போகவில்லை. அதன் பிறகு, பகத்சிங்கின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்​பட்டன. உண்ணாவிரதப் போராட்டத்தின் மூலம், உரிமைகளை அடைந்தார் பகத்சிங். இதுதான் உண்ணாவிரத எதிர்ப்பு அரசியலின் தொடக்கப் புள்ளி.பகத்சிங்கின் உண்ணாவிரதம் ஒருவிதம் என்றால், காந்தியின் உண்ணாவிரதம் முற்றிலும் மாறுபட்ட கார​ணங்களும் வழிமுறைகளும்கொண்டது. தொழிலாளர் பிரச்னை முதல், மதக் கலவரத்தைத் தடுப்பதற்காக முனைந்தது வரை பல்வேறு வகையான உண்ணாவிரதப் போராட்டங்களைக் காந்தி நடத்தி இருக்கிறார். காந்தி எழுந்து நடந்தபோது உருவான எழுச்சியைவிட, அவர் உண்ணாவிரதப் படுக்கையில் கிடந்தபோது மக்கள் அடைந்த எழுச்சி மகத்தானது. அவர் உண்ணாவிரதத்தை ஒரு மொழி ஆக்கினார். அதன் மூலம், எளிய மக்களோடு நேரடியாக உரையாடினார். மனசாட்சி உள்ள ஒவ்வோர் இந்தியரும் காந்தியின் உண்ணாவிரதத்துக்குத் தார்மீக ஆதரவு கொடுத்தனர். இந்தியர்களின் கோபத்​தை​விடவும், உண்ணாவிரதத்தைக் கண்டே வெள்ளை அரசு அதிகம் பயந்தது என்கிறார் வரலாற்று ஆசிரியர் எப்.ஏ.மாத்தூர்.பகத்சிங்கின் உண்ணாவிரதம் போல, காந்தியின் உண்ணாவிரதம் ஆங்கிலேய அரசுக்கு எதிரானது அல்ல. மதக் கலவரம், வன்முறை, ஒழுக்க மீறல் போன்ற மக்களின் கொந்தளிப்புக்கு எதிராகவே, காந்தி உண்ணாவிரதத்தை மேற்கொண்டு இருக்​கிறார். காந்தியைப் பொறுத்த வரை அது சத்யாக்கிரகத்தின் ஒரு வழி. தன்னுடைய வாழ்வில் மொத்தம் 17 முறை காந்தி உண்ணாவிரதம் இருந்து இருக்கிறார். தென் ஆப்பிரிக்காவில் இருந்தபோதே அவர், உண்ணாவிரதத்தைக் கடைப்பிடித்து இருக்கிறார்.

பின்னர் அது, செழுமைப்படுத்தப்பட்டு சாத்வீகமான எதிர்ப்பு வடிவம் ஆனது. காந்தியின் உண்ணாவிரதம் நிறையக் கட்டுப்பாடுகள்கொண்டது. ஒருவர் மீது வெறுப்பையோ, கசப்பு உணர்வையோ காட்டுவதற்காக உண்ணாவிரதம் இருக்கக் கூடாது, எதிரியின் மனசாட்சியைத் தொட்டு உலுக்கி உண்மையை உணரச்செய்வதே அதன் முக்கிய நோக்கம். ஆகவே, நியாயமான குறிக்கோள் இல்லாமல் உண்ணாவிரதம் இருக்கக் கூடாது,சுயநலத்துக்காகவோ, சொந்த லாபத்துக்காகவோ உண்ணாவிரதம் இருப்பது மோசமான செயல். அதே நேரம், சாத்தியமே இல்லாத ஒன்றை அடைவதற்காக ஒருபோதும் உண்ணாவிரதம் மேற்கொள்ளக் கூடாது. உண்ணாவிரதத்தை வெற்று அரசியல் நடவடிக்கையாக மாற்றிவிடக் கூடாது என்பதில், காந்தி மிகவும் கவனமாக இருந்தார்.காந்தியின் உண்ணாவிரதங்கள் குறித்து கடுமை​யான வாதப்பிரதிவாதங்கள் நடந்து இருக்கின்றன. அது ஒரு வகையான எமோஷனல் பிளாக்மெயில். மக்களை மிரட்டும் உத்தி என்று எதிர்ப்புக் குரல் எழுந்து இருக்கிறது. உண்ணாவிரதம் என்பது சரியான போராட்ட வழி அல்ல என்று, பெரியாரும் அம்பேத்கரும் நேரடியாகவே கூறியிருக்கிறார்கள்.ஆனால் காந்தி, மன வலிமை ஏற்படுத்தும் செயலாகவே உண்ணாவிரதத்தைக் கருதினார். மக்களைத் திரட்டி ஒருமித்தக் கவனம் கொள்ளவைக்க அதை ஒரு வழிமுறையாகக் கை​யாண்டார். ஆயுதத்தைக்கொண்டு மக்களிடம் மன மாற்றத்தை உருவாக்க முடியாது. அதற்கு எளிய வழி உண்ணாவிரதம் இருப்பதே என்பதை காந்தி நிரூபித்து இருக்கிறார். இந்து - முஸ்லீம் கலவரத்தின்போது, அவர் உண்ணாவிரதம் இருந்து மக்களை ஒன்றுபடுத்தியதுதான் அதற்கான மகத்தான சாட்சி.சுதந்திரத்துக்கு முன், அந்தமான் சிறையில் 16,106 கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். அதில், 5,000-க்கும் மேற்பட்டோர் அரசியல் கைதிகள். அவர்களைத் தனிக்கொட்டடி அமைத்து பிரிக்கத் திட்டமிட்டனர். இதற்காக, பதிமூன்றரை அடி நீளமும் ஏழரை அடி அகலமும்கொண்ட கொட்​டடிகள் அமைக்கப்பட்டன. இந்தக் கொட்டடி, இரும்புக் கதவால் மூடப்பட்டு இருக்கும். அறையினுள் மூன்று அடி நீளமும், ஓர் அடி அகலமும்கொண்ட சிறிய ஜன்னல் அமைக்கப்பட்டு இருந்தது. கொட்டடியில் கைதிகள் விலங்குகளைப் போலத்தான் போல நடத்தப்பட்டனர். அசுத்தமான கழிவறைகள், குடிநீர்த் தட்டுப்பாடு என, கைதிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

விகடன்

No comments:

Post a Comment