Search This Blog

Tuesday, April 10, 2012

விக்கலை நிறுத்த என்ன செய்வது?


சாதாரணமாக நாம் சுவாசிக்கும் போது காற்றை உள் இழுக்கிறோமல்லவா? அப்போது மார்புத்தசைகள் விரிகின்றன. மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில் சுவாசப்பைகளை ஒட்டி உள்ள உதரவிதானமும் விரிகிறது. உடனே, தொண்டையில் உள்ள குரல் நாண்கள் திறக்கின்றன. இப்போது மார்புக்குள் காற்றின் அழுத்தம் குறைகிறது. அதேநேரம் மார்புக்குள் காற்று எளிதில் செல்ல அதிக இடம் கிடைக்கிறது. இதனால், நாம் சுவாசிக்கும் காற்று, திறந்த குரல்நாண்கள் வழியாக தங்கு தடையின்றி சுவாசப்பைகளுக்குள் நுழைந்துவிடுகிறது. இது இயல்பாக நிகழும் சுவாச நிகழ்வு.சில நேரங்களில், மார்புப் பகுதியில் உள்ள நரம்புகள் உதரவிதானத்தைத் தூண்டினால், அது தன்னிச்சையாகச் சுருங்கி விரியும். அப்போது குரல்நாண்கள் சரியாகத் திறப்பதில்லை.அந்த மாதிரி நேரங்களில் நாம் சுவாசிக்கும் காற்று தொண்டையில் உள்ள குறுகிய இடைவெளி வழியாக சுவாசப்பைகளுக்குள் நுழைய வேண்டியிருக்கிறது. அப்போது அந்தக் காற்று, புல்லாங்குழலில் காற்று தடைபடும்போது இசையொலி உண்டாவதைப் போல, தொண்டையில் ‘விக்..’ என்று ஒரு வினோத ஒலியை எழுப்புகிறது. இதுதான் ‘விக்கல்’.

என்ன காரணம்?  

விக்கல் வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவசர அவசரமாக உணவு சாப்பிடுவது, அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவது, மிகச் சூடாகச் சாப்பிடுவது, தேவையான அளவுக்குத் தண்ணீர் அருந்தாதது போன்றவை முக்கியக் காரணங்கள். அடுத்து, புரதச் சத்துள்ள உணவுகளைக் குறைத்துச் சாப்பிடுதல், கொழுப்புச் சத்துள்ள உணவுகளை அதிகமாகச் சாப்பிடுதல் போன்ற காரணங்களாலும் விக்கல் வரலாம்.

சிலருக்கு மனநோய் காரணமாகவும் விக்கல் வரும். இதற்கு ‘ஹிஸ்டிரிக்கல் விக்கல்’ என்று பெயர். பொதுவாக பள்ளிக்கு அல்லது தேர்வுக்குப் பயப்படும் குழந்தைகளுக்கு இந்த வகை விக்கல் வரும். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், இந்த விக்கல் உள்ள குழந்தைகள் தூங்கினால் விக்கல் நின்று விடும். கண் விழித்ததும் விக்கல் தொடங்கிவிடும். இவையெல்லாம் சாதாரண காரணங்கள். இதனால் அவ்வளவாக பாதிப்பு ஏற்படுவதில்லை.

ஒருவருக்கு இரண்டு மூன்று நாள்களுக்கு மேல் விக்கல் தொடருமானால், அது ஆபத்தான அறிகுறி என்று எடுத்துக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, சிறுநீரகம் பழுதாகி ரத்தத்தில் யூரியா அளவு அதிகரிக்கும்போது விக்கல் வரும். இதுபோல் உதரவிதானத்தில் நோய்த்தொற்று, இரைப்பைப் புண், இரைப்பைப் புற்றுநோய், கல்லீரல் கோளாறு, நுரையீரல் நோய்த்தொற்று, குடலடைப்பு, மூளைக்காய்ச்சல், பெரினிக் நரம்புவாதம், சர்க்கரை நோய் முற்றிய நிலை, மாரடைப்பு போன்ற காரணங்களாலும் விக்கல் வரும். 

என்ன முதலுதவி?

அடிப்படை நோய் எதுவும் இல்லாமல் ஒருவருக்கு விக்கல் உண்டானால், அதை நிறுத்துவது எளிது. அவருடைய ரத்தத்தில் கரியமிலவாயுவின் அளவை அதிகரித்தால் போதும், விக்கல் நின்றுவிடும். அதற்கு என்ன செய்வது?

விக்கலால் அவதிப்படும் நபரை நாற்காலியில் அமைதியாக அமரச் செய்யுங்கள். அவரை மூச்சை நன்றாக உள் இழுக்கச் சொல்லுங்கள். பிறகு, மூச்சை நன்றாக அடக்கிக்கொள்ளச் சொல்லுங்கள். 20 எண்ணும் வரை மூச்சை வெளியில் விட வேண்டாம். பிறகுதான் மூச்சை வெளியில் விட வேண்டும். இவ்வாறு 5 முறை செய்தால் விக்கல் நின்றுவிடும். 

இன்னொரு வழி இது. ஒரு காகிதப்பையை எடுத்துக்கொண்டு, மூக்கு, வாய் இரண்டும் உள்ளே இருக்கு மாறு இறுக்கிப் பிடித்துக்கொள்ளச் சொல்லுங்கள். இப்போது மூச்சை உள் இழுத்து, அந்தக் காகிதப்பைக்குள் மூச்சை விடச் சொல்லுங்கள். பிறகு அந்தக் காற்றையே மீண்டும் சுவாசிக்கச் சொல்லுங்கள். இவ்வாறு 20 முறை செய்தால் படிப்படியாக ரத்தத்தில் கரிய மில வாயுவின் அளவு அதிகரித்து, பிராணவாயுவின் அளவு குறையும். அப்போது விக்கல் நின்று விடும்.

சிலருக்குத் தண்ணீர் குடித்தால், விக்கல் நின்றுவிடும். ஆரஞ்சுப் பழச்சாறு குடித்தால் விக்கல் நிற்கும். ஏதேனும் ஒரு வகையில் தும்மலை உண்டாக்கினால் விக்கல் நிற்கும். குழந்தைகளுக்குக் ‘கிரைப் வாட்டர்’ கொடுத்தால் விக்கல் நிற்கும்.

ஒருவருக்கு அடிக்கடி விக்கல் ஏற்பட்டாலோ, அதிக நேரம் விக்கல் நீடித்தாலோ மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

புரையேறுதல்:

உணவை உண்ணும்போது, தொண்டையிலிருந்து இறங்கும் உணவு, உணவுக்குழாய்க்குள் செல்வதற்குப் பதிலாக, சுவாசக்குழாய்க்குள் சென்று விடுவதைப் ‘புரையேறுதல்’ என்கிறோம். 

என்ன காரணம்?

அவசர அவசரமாக உணவை விழுங்குவது, பேசிக்கொண்டே உணவு உண்பது, உணவு உண்ணும்போது சிரிப்பது, தும்முவது, உணவுக்குழாய்ப் புற்று நோய், தொண்டை நரம்பு வாதம் போன்ற காரணங்களால் புரையேறும். குழந்தைகளின் உணவுக்குழாயும் சுவாசக்குழாயும் மிகவும் குறுகிய விட்டம் கொண்டதாக இருப்பதால் பட்டாணி, வேர்க்கடலை, சுண்டல் போன்ற சிறிய உணவுப்பொருள்கள்கூட சுவாசக்குழாயை மிக எளிதாக அடைத்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. புரையேறியவுடன் இருமல் வரும். மூச்சுத்திணறும். பேசமுடியாது. முகத்தில் ரத்தம் தேங்கி, முகம் சிவக்கும். நெடு நேரம் மூச்சுவிட சிரமம் ஏற்பட்டால் உடல் நீலநிறமாக மாறும். அப்போது உயிருக்கே ஆபத்து உண்டாகலாம்.

என்ன செய்ய வேண்டும்?

புரையேறியவுடன் அதை வெளியேற்றுவதற்கு நம் உடலில் இயற்கையாகவே ஒரு வழிமுறை உள்ளது. அதுதான் இருமல். இருமும்போது, சுவாசப் பைகளிலிருந்து கிளம்பும் அழுத்தம் நிறைந்த காற்றால், சுவாசக்குழாய்க்குள் சென்ற உணவு உந்தி வெளியே தள்ளப்படும்.

ஆகவே, பாதிக்கப்பட்ட நபரை அழுத்தமாக இருமச் சொல்லுங்கள். சிலமுறை இருமினாலே பெரும்பாலான உணவுப்பொருள்கள் உடனே வெளியேறிவிடும்; மூச்சுத்திணறல் குறைந்து விடும். 

இதில் குறையாவிட்டால், அந்த நபரை நிற்க வைத்து, முதுகை மட்டும் முன்னோக்கி குனியச் சொல்லுங்கள். இப்போது நீங்கள் அவரது இரண்டு தோள்பட்டை எலும்புகளுக்கு இடையில், உங்கள் உள்ளங்கையின் அடிப்பாகத்தால் தொடர்ந்து நான்கைந்து முறை ஓங்கித் தட்டுங்கள். புரையேறிய பொருள் வெளியில் வந்துவிடும்.

இதிலும் அந்தப் பொருள் வெளியேறவில்லையா? அடுத்த முயற்சியில் இறங்குங்கள். அந்த நபரைக் குனியச் சொல்லுங்கள். அவரது பின்புறம் நீங்கள் நின்று கொள்ளுங்கள். உங்கள் இரு கைகளையும் அவரது விலா எலும்புகளுக்குக் கீழாக, வயிற்றுக்கு முன்பாக இணைத்து, உள்நோக்கியும், மேல்புறமாகவும், வலுவாக அழுத்தம் கொடுங்கள். உணவுப் பொருள் வெளியேறும் வரை முதுகில் தட்டுவதையும், வயிற்றில் அழுத்தம் கொடுப்பதையும் மாற்றி மாற்றி செய்யுங்கள். உணவுப்பொருள் வெளியேறிவிடும்.  இதிலும் உணவுப்பொருள் வெளியேறவில்லை என்றால், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள். அங்கு ‘மூச்சுக்குழல் அக நோக்கி’ மூலம் உணவுப்பொருளை வெளியே எடுத்து விடுவார், மருத்துவர்.

டாக்டர் கு.கணேசன்
   


1 comment: