Search This Blog

Saturday, February 11, 2012

பி.சி.சி.ஐ. - சஹாரா சர்ச்சை!


சஹாரா நிறுவனத்தால், ஐ.பி.எல். ஏலம் நடப்பதற்குச் சில மணி நேரங்களுக்கு முன் கிளம்பிய பூகம்பம் இன்னும் அடங்கவில்லை. இந்திய கிரிக்கெட்டையே கிடுகிடுக்க வைத்து விட்டார் சஹாரா சேர்மன் சுப்ரதா ராய். துரோகத்துக்கு விளைவுகள் இருக்கும் என்பது சஹாரா தரப்பின் நியாயம். என்ன தான் நடந்தது இருவருக்குமிடையில்?சஹாரா லோகோவைக் கொண்ட சட்டைகளை இந்திய அணியினர் அணியத் தொடங்கியது 2001ல். அதற்கு முன்னால் ஐ.டி.சி. (96 உலகக்கோப்பையின் ஸ்பான் ஸர்), டி.டபிள்யூ.ஐ. போன்ற கம்பெனிகள் தான் இந்திய அணியின் புரவலர்களாக இருந்தன. ஐ.டி.சி., பிசிசிஐக்கு வருடத்துக்கு 15 கோடி அளித்தது. அடுத்து வந்த டி.டபிள்யூ.ஐ 49 சதவிகிதம் கூடுதலாகத் தர முன்வந்தது. ஆனால், திடீரென சஹாராவுக்கும் பி.சி.சி.ஐ.க்கும் இடையே ஒப்பந்தம் உண்டானது. 100 கோடி என்று 3 வருடத்துக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. ஒப்பந்தம், 2005ல் மீண்டும் 4 வருடங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இதற்காக சஹாரா 407 கோடியைக் கொட்டிக் கொடுத்தது. 


சஹாராவையும் இந்திய அணியையும் பிரிக்கமுடியாத நிலை உருவானது.  2010ல் சஹாராவும் ஏர்டெல்லும் கடுமையாகப் போராடியபோதும் 2013 வரைக்குமான ஸ்பான்சர்ஷிப்பை சஹாராவே பெற்றது. இதற்கான தொகை, 550 கோடி. தென் ஆப்பிரிக்காவில் 2003ல் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியின்போது, சஹாரா டி-ஷர்ட்டை அணிந்து விளையாட ஐ.சி.சி. அனுமதி கொடுக்கவில்லை. ஆனாலும், அந்தப் போட்டிகளுக்காகவும் பி.சி.சி.ஐ.க்குப் பணத்தைக் கொடுக்கும் அளவுக்கு உறவு பலமாக இருந்தது. ஐ.பி.எல். அணியை வாங்கியதிலிருந்து தான் சஹாராவுக்கு புதுத் தலைவலிகள் உண்டாகின. 2008லேயே ஐ.பி.எல். அணியை வாங்க முயற்சி செய்து தோற்றுப் போனது சஹாரா. அடுத்ததாக, 2011 ஐ.பி.எல். இடம்பெற்ற புனே அணியை 1700 கோடிக்கு வாங்கியது. எந்த ஒரு நிறுவனமும் இவ்வளவு பணம் கொடுத்து ஐ.பி.எல். அணியை வாங்கியது கிடையாது. அப்போது, ஐ.பி.எல்.-லில் 94 மேட்சுகள் ஆடப்படும் என்று உறுதியளித்த பி.சி.சி.ஐ. 74 போட்டிகளை மட்டுமே நடத்தியதால் மிகவும் கடுப்பானது சஹாரா. மொத்தமுள்ள 10 அணிகளில், புனே அணியால் 9வது இடத்தையே பிடிக்க முடிந்தது. புனே அணியின் கேப்டன் யுவராஜ் சிங்குக்கு ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக அவர் 2012 ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், சென்ற வாரம் நடந்த ஏலத்தில், நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்சத் தொகையான ரூ9.7 கோடியுடன், யுவராஜ் சிங்கின் ஏலத்தொகையையும் சேர்க்க வேண்டும் என்று கோரியது சஹாரா. ஆனால், பி.சி.சி.ஐ. இதற்குச் சம்மதிக்கவில்லை. உடனே, ஏலம் நடக்க இருந்த சில மணி நேரத்துக்கும் முன், இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சர் மற்றும் ஐ.பி.எல். ஏலத்தில் இருந்து விலகுவதாக சஹாரா அறிவித்தது. இதன்மூலம், சஹாரா- பி.சி.சி.ஐ. இடையிலான 11 ஆண்டுகால விளம்பர ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. 

தங்கள் அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களுக்கு இந்த ஐ.பி.எல். சீசனில் விளையாட வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில் அவர்களுக்கான ஊதியம் வழங்கப்படும். இதே போல் சிகிச்சையில் இருக்கும் யுவராஜ் சிங்கின் செலவுகளைத் தாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்றும் சஹாரா அறிவித்துள்ளது. இவ்வளவு வளைந்து கொடுக்கும் எங்களின் நியாயமான கோரிக்கைகள் பலவற்றை பி.சி.சி.ஐ. நிராகரித்ததாலேயே வெளியேறுவதாக சஹாரா தெரிவித்துள்ளது. யுவராஜ் ஏலத் தொகையோடு ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால் எல்லா முன்னணி வீரர்களையும் புனேதான் தேர்ந்தெடுத்திருக்கும். அதேசமயம், யுவராஜ் இல்லாத நிலையில் அவர்களுக்கு உதவ பி.சி.சி.ஐ. முன்வராததும் ஏற்றுக் கொள்ள முடியாது.  எல்லா அணிகளுக்கும் ஒரே விதி முறைகள்தான் என்றாலும் சென்னைக்கு இப்படியொரு நிலைமை நேர்ந்திருந்தாலும் இதே கோரிக்கையைத்தானே வைத்திருக்க முடியும்? இதுபோன்ற சிக்கல்களுக்கு ஒரு தீர்வு முன்பே வரையறுக்கப்படாதது ஏன் என்று புரியவில்லை. சஹாரா இந்திய அணியின் பொருளாதார வசதிக்கு நிறையவே செய்திருக்கிறது. அவர்கள் சலுகைகள் எதிர்பார்ப்பதில் தவறு சொல்லவே முடியாது. புனேவுக்கு நேர்ந்த நிலைமையால் மற்ற ஐ.பி.எல். அணிகள் இப்போது குழப்பத்தில் இருப்பது உண்மை. சஹாராவுடனான பிணக்கு தீர்ந்தால் மட்டுமே ஐ.பி.எல்.-லால் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பமுடியும்.

ச.ந.கண்ணன்

No comments:

Post a Comment